|
|
இன்றிரவு என்னால் எழுத முடியும்
இன்றிரவு என்னால்
மிகச் சோகமான வரிகளை எழுதமுடியும்.
உதாரணத்திற்கு...
விண்மீன் கனக்கும் இரவு
நீலம்பாய்ந்து நடுங்கும்
நட்சத்திரங்கள்
என்று எழுதமுடியும்.
இராக் காற்று
அந்தரத்தில்
பாடித்திரியும்.
இன்றிரவு என்னால்
மிகச் சோகமான வரிகளை
எழுத முடியும்.
நான் அவளை நேசித்தேன்.
அவளும் சமயங்களில்
என்னை நேசித்தாள்.
இது போன்ற
இராப் பொழுதொன்றில்
அவளை கைகளுக்குள்
ஆட்கொண்டிருந்தேன்.
முற்றுப்புள்ளியில்லா
வானத்தின் கீழே அவளை
முத்தமிட்டுக் கொண்டேயிருந்தேன்.
அவள் என்னை நேசித்தாள்
சமயங்களில்
நானும் அவளை நேசித்தேன்.
யார் தான்
அவளது ஆழ விழிகளுக்குள்
காணாமற் போகாதிருக்க முடியும்.
இன்றிரவு என்னால்
மிகச் சோகமான வரிகளை
எழுத முடியும்.
அவளில்லையே என்று உருக!
அவள் இழப்பை உணர!
அவளில்லாமல்
இன்னும் பற்றி எரியும்
இரவைப் புரிந்துகொள்ள!
உயிரை உரசும் கீதம்
பனித்துளியால் உயர்கிறது.
காதலால் அவளைக்
கரம்பற்ற முடியாமற் போனது
பற்றியென்ன?
நட்சத்திர வான்
அவளற்ற நான்.
எல்லாம் இவ்வளவுதான்
தூரத்தில் யாரோ பாடுகிறார்கள்.
தூரத்தில்!
அவளது பிரிவில் என்
ஆத்மா எரிகிறது.
பக்கத்தில்
அவளைக் கொண்டுவர
பார்வை படாத பாடு
படுகிறது.
இதயம் அவளை அலசியும்
என்னுடன் அவள் இல்லை.
அதே இரவு
அதே மரங்களுக்கு
வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் நாமோ
அடையாளம்
மாறிப்போனோம்.
இனியும் அவளை நான்
காதலிக்க முடியாது
என்பது நிச்சயம்.
ஆனால் அவளை
எப்படி நேசித்தேன்!
அவள் மனதை எட்ட
என் குரல்
மாற்றுச்
சவாரிக்கு அலைகிறது.
இன்னொருவனின்
அவள் இன்னொருவனின்
பொருளாகப் போகிறாள்...
என் முத்தங்களுக்கு
முன் பிருந்தது போல்...
அவள் மொழி, அவள் உடல்,
அவள் வசீகரக் கண்கள்.
இனியும் அவளை நான்
சுவாசிக்க முடியாது
என்பது நிச்சயம்,
ஆனால் ஒருவேளை இன்னும்
அவளை
நான் காதலிக்கிறேனா...
காதல் சுருங்கினாலும்
மறப்பது சுலமில்லையே.
இது போன்ற இரவுகளில்
அவளை நான்
அரவணைத்திருந்ததால்
அவள் இழப்பை
என் ஜீவனால்
ஜீரணிக்க முடியவில்லை.
இதுவே அவள் கொடுக்கும்
இறுதி வேதனையாய்
இதுமே அவளுக்கு நான்
இயற்றும்
இறுதிக் கவிதையாய்
இருந்து விட்டுப் போகட்டும்.
|
|