முதல் போணி
அதிகாலை ஆறுமணிக்கு
ஊதுவத்தி கொளுத்தி
கும்பிடப்போன டீக்கடை நாயரிடம்
நான்தான் முதல்போணியா என்றுகேட்டேன்.
இடமும் வலமுமாய் தலையசைத்து
தூர அமர்ந்திருந்தவரை கண்காட்டினார்.
நல்லவேள காசு கொண்டுவர்லே
அதான் கேட்டேன் என்றேன்.
ஒருவேளை அவர் வராதிருந்தால்
இன்னொருவர் வரும்வரை
என்னை காக்கவைத்திருப்பாரோ?
சேச்சே!
சோட்டாணிக்கரை பகவதி அம்மையே
முதல் போணியாக வந்ததாய் பாவித்து
உபசரித்திருந்திருப்பார் என்னை .
ஓசியில் டீக்குடித்து
சிகரெட்டும் பிடித்துவிட்டு
நிம்மதியாய் வெளியேறினேன்.
ஊருக்கு
அவசரமாய்க் கிளம்பி
பாதியில் திரும்பிய வழிமீது
வாசனையோடு
பெரிதாய் பூத்திருக்கிறது ஈரமண்.
வீசும் காற்றில்
தடம் மாறி
விழுகின்றன துளிகள்.
அசையும் இலைகளுள்
எதுதான் தப்பித்தது
நனையாமல்?
வந்த வேலை
முடிந்துவிட்டது.
பொழப்பைக் கெடுத்த மழை
அழகாய்த் திரும்புது ஊருக்கு.
|