|
|
பிரபாகரனும் பின் லாடனும்
ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
கொண்டுவந்த பேரரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன, 15 நாடுகள்
எதிர்த்தன, மலேசியாவுடன் சேர்த்து பிற 8 நாடுகள் வாக்களிக்காமல்
'மௌனவிரதம்' பூண்டன.
இந்திய அரசு அமெரிக்க பேரரணைக்கு ஆதரவாக வாக்களித்தப்போதிலும் இலங்கைக்குச்
சாதகமாக இரு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க வரைவுத் தீர்மானத்தின் மிக முக்கியமான மூன்றாவதுப் பிரிவில்,
பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில்
இலங்கை அரசு ஐ.நா மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணைக்குத்
தோதுபடுத்தும் சட்டரீதியான தொழில்நுட்ப உதவிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
என கட்டாயப்படுத்தி இருந்தது.
இவ்விடயம் இந்திய அரசின் திருத்தங்களுக்குப் பிறகு, போர்க்குற்றங்கள்
தொடர்பான எல்லாவிதமான விசாரணைகளும் இலங்கை அரசுடன் ஆலோசித்தப் பிறகும்
அவர்களின் இசைவுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும் என்பதாக மாற்றம்
கண்டுள்ளது. சுருங்கக் கூறின், குற்றவாளிகளைக் கேட்டு, அவர்களின்
சம்மதத்தின் பெயரில் விசாரணை நடத்தி தண்டனை அளிக்க வேண்டும் என்பதுப் போல்
இந்த திருத்தம் அமைந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாது போரினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த தமிழ்
மக்களுக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகளை கண்காணிக்க வரும் ஐ.நா மனித
உரிமை மன்றத்தினர் இலங்கை அரசின் ஒப்புதழுக்குப் பிறகே நாட்டிற்குள் புக
வேண்டும் எனவும் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்திய அரசு இலங்கைக்கு சாதகமாக கொண்டுவந்த இரு திருத்தங்கள், இலங்கையில்
அப்பாவி தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித
உரிமை அத்துமீறல்களை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வாய்ப்பளிக்கும் நியாயமான
சர்வதேச விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. ஐ.நா தீர்மானத்துக்கு
ஆதரவாக வாக்களித்த இந்தியாவே அந்த தீர்மானம் வலுவின்றி நீர்த்துப்போகவும்
காரணமாகியிருக்கின்றது. இதன் மூலமாக இந்திய அரசு உலகளவில் இலங்கைக்கு
உண்டான தனது மறைமுக
ஆதரவை வெளிகாட்டியுள்ளது.
இந்திய அரசின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கையில் மலேசியாவோ வாக்களிப்பில்
இருந்து விலகி மலேசியத் தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை
இழந்திருக்கிறது. இதன்மூலம், தான் ஒரு இனவாத அரசாங்கமே என நிரூபித்துள்ளது.
மனித நேயம், மனித உரிமைகள் குறித்த அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும்
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை நினைத்து நிச்சயம் துடித்துப்
போவார்கள்.ஆனால் மலேசிய அரசாங்கமோ வாய்மூடி மௌனம் சாதித்துள்ளது.
மலேசியா இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் நடுநிலை வகித்தது மனித
உரிமைக்கு அப்பாற்பட்ட முடிவேயாகும்.
மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க
வேண்டும் என ம.இ.கா கட்சியினர் மகஜர் கொடுத்தப் போதிலும் மலேசியா
அதிலிருந்து பின் வாங்கியது வருத்தத்துக்குறிய விஷயமே. நாட்டில் மூன்றாவது
பெரிய இனமாக தமிழர்கள் மலேசியாவில் வாழும் நிலையில் அரசாங்கம் எடுத்த இந்த
முடிவு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமையையேக் காட்டுகிறது.
ஈழத்தமிழர் பிரச்சனை என்றாலே அவரகள் விடுதலைப்புலிகள் என்ற பார்வையுடன்தான்
பார்க்கப்படுகின்றனரே தவிர மனிதாபிமான அடிப்படையில் அணுகப்படுவதில்லை.
பாரிசான் நேஷனலின் ‘அல்லக்கை’ நாளிதழ், ஈழத்தலைவர் பிரபாகரனின் மரணத்தை ஒரு
'தீவிரவாதியின்' மரணத்தைப் போன்று சித்தரித்து செய்தி வெளியிட்டதை யாராலும்
மறந்திருக்க முடியாது. அதோடு மட்டுமல்லாது பிரபாகரனின் மரணம் இண்ட்ராப்
தலைவர்களுக்கு ஒரு பாடம் எனவும் அந்நாளிதழ் வர்ணித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
வெளியுறவு கொள்கைகளுக்கு உட்பட்டே வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததாக
மலேசியா கூறினால் அது ஒரு அப்பட்டமான பசப்பலே ஆகும்.
பாலஸ்த்தீன், போஸ்னியா போன்ற நாடுகளில் போர் நடக்கும்போது அவர்களுக்கான
மருத்துவ உதவியையும், மீட்புப் பணிக்காக ராணுவத்தையும், உணவுப்
பொருட்களையும் தந்துதவியப் போது எங்கே போனது இந்த வெளியுறவுக் கொள்கை.
இவர்களுக்கு ஒசாமா பின் லாடன் போராளி ஆனால் பிரபாகரன் 'தீவிரவாதி'.
செர்பியா, போஸ்னியா, பாலஸ்தீன மோதல்கள் மட்டுமே இவர்களுக்கு மனித உரிமை
அத்துமீறல்கள். ஈழத்தில் நடந்தது ஒரு 'தீவிரவாதப் போர்' என்பது இவர்களது
கருத்து.
இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு எதிராக அமெரிக்கத் தீர்மானம்
அமைந்துள்ளது எனும் போதிலும் இது ஒரு 'மென்மையான' தீர்மானமே என்பது பலரின்
கருத்தாகும். சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா மனித உரிமை கழகத்தின் தலைவர்
பான் கீ மூன் தலைமையில் மூவர் அடங்கிய குழு இலங்கையில் நடந்த போர்
குற்றங்களும், மனித உரிமை அத்துமீறல்களும், இனப்படுகொலைகளும் உண்மையே என
ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையின் மேல் நடவடிக்கை எடுப்பதே சரியான
நிலைப்பாடாக அமையும்.
இலங்கை இவ்வறிக்கையை முற்றிலும் மறுப்பதாகக் கூறிய காரணத்தால் இவ்வறிக்கை
ஐ.நா சபையில் கிடப்பில் கிடப்பது முக்கிய விஷயமாகும்.
சர்வதேச அரங்கில் இலங்கை தமிழர்களின் பிரச்சனை எடுத்து
செல்லப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே தற்போதைக்கு உலகத்தமிழர்களுக்கு
ஆறுதல் தரும் விஷயமாகும். இந்த பேரரணையின் மூலமாக ராஜபக்சேவின் அரசு
சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதற்கான தண்டனையைப் பெறுமா என்று
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
|
|