முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  என் அப்பா ஓர் இலக்கியவாதி
மொழிபெயர்ப்பு: தினேசுவரி | மலாய் மூலம்: உதயசங்கர். 2004. Babaku Sasterawan
 
 
       
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

அப்பா ஓய்வாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எழுதவில்லை என்றால் நிச்சயம் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார் அல்லது பணித்தாள் எழுதிக்கொண்டிருப்பார். என்னைப் பொருத்தவரை இந்தக் குடும்பத்தில் நானும் தோமியும் கொடுத்து வைத்தவர்கள். அப்பா எழுதும் போது பிள்ளைகள் ஆறு பேருக்கும் ஏன் அம்மாவுக்கும் கூட அப்பாவைத் தொந்தரவு செய்ய தைரியம் வராது. அப்பாவின் வேலை பளுவும் பொறுப்பும் அனைவரும் அறிந்ததே.

மேலும், பெரும்பாலும் அப்பாவைவிட அம்மாவிடமே எல்லா பிள்ளைகளும் தங்களின் உள்ளக்கிடக்கை பகிர்ந்துகொள்ள விருப்பப்படுவர். அப்பா இதற்கெல்லாம் வருத்தப்பட்டதே இல்லை. தன் வேலையின் காரணத்தால், அப்பாவினால் தன் அன்பினை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.

அப்பாவைப் பற்றி சுயசரிதை எழுதப் போகும் ஒருவர் அப்பாவை நேர்காணல் செய்தபோது அவரின் கேள்விக்கு “என் பிள்ளைகளிடத்தில் நான் கொண்டுள்ள அன்பு நான் ஆற்றும் கடமைகளின் மூலம் வெளிப்படும் என்று நம்புகிறேன் ” என்று அப்பா பதில் கூறினார்.

நான் முன்பே சொன்னது போல நானும் தோமியும் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்தான். ஏனெனில் அப்பாவைத் தொந்தரவு செய்ய எப்பொழுதும் எங்களுக்கு அனுமதி உண்டு, அவர் வீட்டு நூலகத்தில் இருக்கும் போது கூட. அதனால் எப்போதும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிமையில் அமர்ந்து எழுதும் அப்பாவின் அருகிலேயே இருப்போம்.

அப்பா பதவி ஓய்வு பெற்றபொழுது, அப்பாவின் மூத்த மகன் அவருக்கு ஒரு சிறு ஏணியைப் பரிசாக வாங்கித்தந்தார். அது வீட்டு நூலகத்தில் புத்தக அடுக்குகளின் மேல்புறத்தில் உள்ள புத்தகங்களை எடுப்பதற்கு இலகுவாக இருந்தது. எப்போதும் அப்பா தன் செல்லமகன் வாங்கிக்கொடுத்த அந்த ஏணியில் அமர்ந்துதான் படிப்பார்.

நானும் தோமியும் இந்தச் சந்தர்ப்பத்தை விட தயாராக இல்லை. எப்போதுமே நாங்களும் அப்பாவின் அருகில் துள்ளிக் குதித்து ஏறுவோம்.

ஒருநாள் காலையில் வீட்டின் வளாகத்தில் நானும் தோமியும் காலை வெயில் படுபடியாக அமர்ந்திருந்த போது, “அப்பாவைப் பற்றி உன்னைச் சொல்ல சொன்னா…நீ என்னதான் சொல்லுவ?” என்று தோமி என்னிடம் கேட்டான். நான் வாயடைத்துப் போனேன். இந்தக் கேள்வியை யாராவது என்னையோ அல்லது தோமியையோ கேட்க நிச்சயமாய் வாய்ப்பில்லை.

ஏற்கனவே அப்பாவின் சுயசரிதையை எழுத வந்த அந்த எழுத்தாளரைப்போல யாராவது அப்பாவைப்பற்றி தெரிந்துகொள்ள வந்தாலும் இந்தக் கேள்வியை அம்மாவிடமோ அல்லது அப்பாவின் பிள்ளைகளிடம்தான் கேட்பார்கள். அல்லது அப்பாவின் நெருங்கிய நண்பர்களிடம்தான் கேட்கக் கூடும்.

நான் எதுவும் பேசாது சிந்தனையில் ஆழ்ந்து புன்னகைப்பதைப் பார்த்த தோமி, “நெனச்சிப்பாரு, யாராவது நம்பள கேட்டா?’ என்று மேலும் தொடர்ந்தான்.

நான் எதையும் சொல்வதற்கு முன்பே, எங்கள் இருவரின் கண்களும் வீட்டின் முன் புறம் மெதுவாக வந்து கொண்டிருந்த ஒரு கார் மீது பதிந்தது. நான் அந்தக் கார் ஓட்டுநரின் முகத்தை உற்று நோக்கினேன்.

‘ஆம்! அவனேதான்’

சீக்கிரம் அப்பாவைக் கூப்பிடு.

நானும் தோமியும் விரைந்து வீட்டினுள் ஓடினோம். அப்பாவைத் தவிர வீட்டில் யாரும் இல்லை. அந்நேரத்தில் வரவேற்பறையில் நாளிதழ் படித்துகொண்டிருந்த அப்பாவும் கார் சத்தத்தைக் கேட்டு அவசர அவசரமாக வாசல் நோக்கி விரைந்து வந்தார். அப்பா சன்னல் வழியே தன் பார்வையைச் செலுத்தினார்.

“அப்பா ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவர் வீடு திரும்பியாகிவிட்டது”

நான் உரக்கக்கூறியது நிச்சயம் அப்பாவிற்குப் புரிந்திருக்காது.

அப்பாவின் முகம் மலர்ந்தது. சட்டை அணியாததால் அவசர அவசரமாகத் தன் அறைக்குச் சென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டின் வெளியே சென்றார். நானும் தோமியும் அவருடன் இணைந்து கொண்டோம்.

“ஆ! அந்தக் கார் அங்கு இல்லை”

அப்பாவின் முகம் வெளுத்துக் காணப்பட்டது. அவர் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டார்.

“அப்பாவைப் பற்றி அறிய யாராவது பேட்டிக்காண வந்தால் இந்நிகழ்வை நான் சொல்ல வேண்டுமா?”

அப்பாவின் மூத்தமகன் எப்படி காணாமல் போனார் என்ற மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தினம் தினம் பலர் தொடர்புக் கொண்டு உங்கள் மகன் எங்கே இருக்கிறார் என்று தெரியும் என சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. குறைந்த பட்சம் சந்தோஷத்தைக் கொடுக்கும் வகையில் எந்தப் பலனும் இல்லை.

இப்பொழுதெல்லாம் அப்பாவின் கவலையான குழப்பமான மனநிலையினூடே நானும் தோமியும் பயணப்பட்டுகொண்டிருக்கிறோம். தன் மகன் காணாமல் போனதிலிருந்து அப்பா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அப்பாவின் வேதனையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்பாவின் அறையில் அவர் எழுதும் போது “இப்ப எங்க எப்படி இருக்கானோ”, என்று அடிக்கடி புலம்புவார். “அப்படி அவன் உயிரோடு இல்லைனா அவன் புதைக்கப்பட்ட இடத்தையாவது காட்டு”.

அப்பா அவரை சூழ்ந்திருக்கும் சோகத்தை மிக சிரமப்பட்டு மறைக்க முயற்சி செய்தார். ஒரு வேளை மற்றவர் ஏமாந்து போயிருக்கலாம். ஆனால் நாங்கள் இருவரும் அறிவோம். எங்களால் அப்பாவின் மனநிலையை நன்கு உணர முடிந்தது.

அப்பா இப்பொழுதெல்லாம் வெளி வேலைகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டார். ஒரு வேளை அடிக்கடி எண்ணத்தில் தோன்றும் மர்மமாய் காணாமல் போன தன் செல்ல மகனின் நினைவுகளைக் குறைப்பதற்காக இருக்கும்.

“தோமி அப்படி உண்மையிலேயே யாராவது வந்து அப்பாவைப் பற்றி உன்னிடம் கேட்டா நீ என்ன சொல்லுவ?” இந்தக் கேள்வியைச் சில வாரங்களுக்கு முன் நான் தோமியிடம் கேட்டேன்.

“கண்டிப்பா இந்தக் குடும்பத்தோடு இருக்குறதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வச்சிருக்கேன் என்பதைச் சொல்லுவேன்” அப்பாவுக்கும் இந்தக் குடும்பத்துல உள்ளவங்களுக்கும் நம்ப செல்லமான பூனைகள் இல்லையா”

“நான் கூட, அப்பா ஒரு இலக்கியவாதி என்பதைப் பெருமையா கருதுறதைச் சொல்லுவேன். வெளியில இருக்கும் மனிதர்கள் எல்லாம் அப்பாவுக்குத் தத்து பிள்ளையா ஆக மாட்டோமானு கனவு காணுறாங்க, இந்த விஷயத்துல நாம் அதிர்ஷ்டசாலிகள்தான்”

ஆனால், அப்பாவைப் பற்றி எங்களை யாராவது கேட்க கூடுமா? எங்களின் மொழியே அவர்களுக்குப் புரியாத பட்சத்தில் எங்களின் கருத்தும் பார்வையும் கேட்கப்படுமா என்ன?

அப்பாவின் மனக்கொந்தளிப்பும் மனநிலையும் எனக்கும் தோமிக்கும் நன்கு புலப்பட்டது. அப்பா வேண்டுமானால் வெளி உலகம் அறியா வண்ணம் மறைத்து விடலாம். அவர் நிம்மதியாக இருப்பதாக நடிக்கலாம். பல வேலைகளில் ஈடுபட்டு அங்கும் இங்கும் செல்லலாம். ஆனால் தன் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் இடமான வீட்டு நூலகத்தில் அப்பா தனிமையில் இருக்கும்போது அவரின் முக மாற்றத்தை அங்கிருக்கும் நானும் தோமியும் மட்டுமே அறிவோம். அவர் அடிமனதில் புதைந்திருக்கும் வேதனையை நாங்கள் மட்டுமே உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.

“என்னை அடக்கம் செய்யும் போதாவது அவன் வருவானா?” ஒருநாள் அப்பாவின் புலம்பலைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். தோமியும்தான். அப்பாவின் முகத்தைக் கேள்வியோடு ஏறிட்டோம். அப்பா கலங்கிய கண்களுடன் எங்களைப் பார்த்தார். ஆனால், உடனே வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுதுவதில் ஈடுபட்டார். எழுத்துலகம் அவரின் கவலையையும் மன உளைச்சலையும் குறைக்க உதவுகிறது போலும்.

உண்மைதான், அப்பா ஒரு சிறந்த இலக்கியவாதி. சிறு கம்பம் முழுவதும் அப்பாவின் புகழ் பரவியிருந்தது. சிறுகம்பத்தில் மட்டுமல்ல நாட்டிலும்கூட. அவர் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அப்பா இடைவிடாது இலக்கியங்களைப் புனைவதில் கைதேர்ந்தவர். அவர் பல நிகழ்வுகளுக்கும் சொற்பொழிவு வழங்குவதற்கும் அடிக்கடி அழைக்கப்படுவார். பல அமைப்புகளுக்கும் உறுப்பினராக அப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவரும் மனிதன் தானே. அப்பா , தந்தையும் கூட. எதார்த்தத்தை நானும் தோமியும் நன்கு உணர்கிறோம். அதனால்தான் இந்த நிலையில் இப்போது அப்பாவை ஒரு இலக்கியவாதியாக அல்லாமல் ஒரு தந்தையாகக் காணவே எங்களால் முடிகிறது.

அப்பா அவரின் பிள்ளைகளின் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளார். அவர்களின் ஆசைகளுக்குத் தடையாக ஒருபோதும் அவர் இருந்ததில்லை. அவர்களிடத்தில் தன் அன்பை நேரடியாக வெளிகாட்டியதில்லைதான், இருந்தும் அவர் அவர்களிடத்தில் அளவுகடந்த அன்பை வைத்துள்ளார் என்பதே உண்மை.

சீக்கிரமாகவே அம்மா பதவி ஓய்வு பெற விருப்பப்பட்டபோது அப்பா அதற்குத் தடை சொல்லவில்லை. பிள்ளைகள் தங்கள் விருப்பம்போல படிப்பையும் தொழிலைத் தேர்வு செய்ததையும் அப்பா தடையேதும் சொல்லவில்லை. அவரின் மூத்தமகன் இசைத்துறையைத் தேர்ந்தெடுத்ததையும் முழுமையாக ஆதரித்தார். அவரின் மகன் அதில் சிறக்க வேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டார்.

ஆனால், பாடகனாக விருப்பப்பட்ட தனது மூத்தமகன் ஒருநாள் வீடு திரும்பாமல் காணாமல் போய்விட்டதை அவரால் நம்பவே முடியவில்லை. எந்த ஒரு தகவலும் இல்லை. செய்தியும் இல்லை. வரும் அறிகுறியும் இல்லை. எந்த ஒரு தடயமும் இல்லை...

“என் இறுதி சடங்கிற்காவது வருவானா?”

நான் தோமியை நோக்கினேன். பிறகு தன் மகன் வாங்கிக் கொடுத்த அந்தச் சிறு ஏணியில் அமர்ந்திருந்த அப்பாவைப் பார்த்தேன். அந்த ஏணி 5 வருடத்திற்கு முன் அப்பா ஓய்வு பெற்றபோது அவரின் மூத்தமகன் பரிசாகக் கொடுத்தது. காணாமல் போவதற்குச் சில நாட்களுக்கு முன் அப்பாவின் செல்லமகன் தான் பாடிய பாடலின் மாதிரியைப் பதிவுசெய்திருந்தான். அப்பாடலின் குறுந்தட்டு அப்பாவின் கையில் இருந்தது.

அப்பா வீட்டை விட்டு வெளியேறியதும் அவர் மக்களுக்குச் சொந்தமாகி விடுகிறார். அப்பாவை இலக்கியவாதியாக, விமர்சகராக, கல்விமானாக, எழுச்சிவாதியாக, எழுத்தாளராகப் பலர் அறிந்துள்ளனர்.

வீட்டுக்குத் திரும்பியவுடன் அப்பா ஒரு கணவனாகவும் தந்தையாகவும் மாறிவிடுகிறார். இருப்பினும் வீட்டு நூலகத்தில் அடைப்பட்டு இலக்கியம் வடிக்கும்போது அவர் அவராகவே இருக்கிறார்.

எனக்கும் தோமிக்கும் மட்டுமே என்ன நடக்கிறது என்று தெரியும். எங்களால் மட்டுமே அந்நேரத்தின் அப்பாவின் மனநிலையை படிக்க முடியும்.

“நம்ப ஏதாவது செய்யனும்” தோமி யோசனை வழங்கினான்.

“உண்மைதான், ஆனால் என்ன செய்வது?”

இறுதியில் யாரும் அறியாத வண்ணம் வெளியே சென்று எந்தத் தகவலும் இன்றி காணாமல் போன அப்பாவின் பிள்ளையைத் தேட முடிவு செய்தோம். சிறு கம்பம் முழுக்கத் தேடினோம். பெரிய பட்டணத்திலும் தேடினோம். அப்பாவின் மகனின் தடயங்களைத் தேடி தேடி அலைந்தோம்.

“நம்ப எல்லா எடத்துலயும் தேடனும். கண்டிப்பா அப்பாவுடைய செல்லப் பிள்ளையை வீட்டுக்குக் கூட்டிட்டு போகனும்”

இரண்டு வாரங்கழித்து நாங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டோம்.

“நாம் வீடு திரும்பனும் நாம இல்லாம கண்டிப்பா அப்பா ஏங்கிப்போயிருப்பாரு”

நாங்கள் அருகில் இல்லாமல் அப்பா நிச்சயம் நிம்மதியிழந்து போயிருப்பார். நாங்கள் இல்லாததால் அவரின் எழுத்து வேலைகள் நிச்சயம் தடைப்பட்டிருக்கும்.

“அய்யோ! ஏன் இவ்வளவு முட்டாளா அப்பாவை விட்டுட்டு வந்தோம்?”

நாங்கள் வீட்டை அடைந்ததும் பல ஜோடி கண்கள் எங்களை வரவேற்றது. அம்மா அழுது கொண்டிருந்தார். அப்பாவின் பிள்ளைகள் அனைவருமே அழுது கொண்டிருந்தனர். அப்பாவை அறிந்திருந்த எழுத்தாளர்களும் அழுது கொண்டிருந்தனர். சிலர் அழாதது போல் நடித்து கொண்டிருப்பதாகப் பட்டது.

நானும் தோமியும் தளர்ந்து போய் அசைவற்று படுத்திருந்த அப்பாவை நெருங்கினோம். அப்பாவின் செல்லமகன் அங்கு இருக்கிறாரா என்று எங்கள் கண்கள் அலைமோதியது. ஆனால் இல்லை.

“அப்பா தீமுவும் தோமியும் வந்துட்டாங்கப்பா” என்று அப்பாவின் மற்றொரு மகன் அழுது கொண்டே கூறினார்.

“ஐயோ, ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டோம். ஏன் அன்பான அப்பாவை விட்டுச்சென்றோம்”

இந்த நேரத்தில் யாராவது ஒரு நிருபர் என்னைக் கேள்வி கேட்கும் விதி இருந்தால் நிச்சயம் அப்பா இலக்கியவாதி மட்டுமல்ல அவர் தந்தையும் கூட என்பேன்.

அன்பு மகனுக்கு அப்பாவின் குறிப்பு: என் உடல் அசார் தொழுகைக்கு முன் அடக்கம் செய்யப்படும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768