முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்... 16
ஏ.தேவராஜன்
 
 
       
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

அந்தக் காலத் தமிழாசிரியரும் வேறு பள்ளியில் பயின்ற அவர்களின் வழித்தோன்றல்களும்

ஒரு காலத்தில் என்ன, இன்றுங்கூட தலைமையாசிரியர்களின் கொண்டிருக்கின்ற தமிழ் உரிமை விவாதிக்கப்பட வேண்டியதாய்தானுள்ளது. இது இன்று நேற்றல்ல, 1800 (1813@1816?) களின் தொடக்கத்தில் நாட்டின் முதல் தமிழ்ப்பள்ளி பினாங்கில் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்தபடி வருகிறது. அவர்களது உணவுத் தட்டுக்கு ஆதாரச் சுருதியாகத் திகழ்கின்ற தமிழை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை ஆய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இன்று பள்ளிகளின் புறத் தோற்றந்தான் மாறியிருக்கிறதே ஒழிய, காலம் விழைகின்ற முனைப்பு அத்துணைத் திருப்திகரமாக இல்லை. பெரும்பாலானவர்களின் அக்குத் தொக்கற்ற போக்கால் தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய கடப்பாட்டை அறியாமலேயே ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். தமிழை முன்வைத்து நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் பங்கு கொள்வதோ, பங்களிப்பதோ இதுவரை கேள்விக்குறியாகவே தென்படுகிறது. தொட்டதெற்கெல்லாம் ஒதுங்கி நடுங்கும் கோழைகளாகவும், பட்டும் படாமலும் பள்ளிப்பணி மட்டுமே தமிழ்க்காப்பு எனும் புரிதல் உள்ளோராகவும், மாதம் முடிந்தால் வைப்பகத்தில் ஊதியத்தை உருவுகின்ற சராசரி கூட்டமாகவும், குடும்ப நலன் ஒன்றே பிரதானம் எனும் தன்னலம் மிக்கவர்களாகவும், கஞ்சப் பிசினாறிகளாகவும் மட்டுமே தென்படுகின்றனர். அரங்கேறிய கசப்புகள் இனிப்பது போல, சொல்லப்படாத உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

தமிழ் மொழி, தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் நாம் சராசரி ஆசிரியர்களாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் நமது ஆதங்கம். தமிழ் பேசப்படுவதும் அதை வெவ்வேறு துறைகளுக்கு நகர்த்தவும் முனைப்புத் தேவைப்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் ஒரு சிலர் செயல்பட்டாலும் அது போதாது என்பதை நடப்பு நிலை கற்பிக்கிறது. அவர்களின் வெளிப்பாடு அர்த்தம் பொதிந்ததாய் அமையவில்லை என்பது முழுச் சதவிகிதம் உண்மை. பள்ளியைத் தாண்டி தமிழ் சார்ந்த பொது மற்றும் அரசியல் விழிப்பு நிகழ்வுகளில் அவர்களின் ஈடுபாடு முனைப்புடன் இருந்திருந்தால், இழந்துவிட்ட பல சந்தர்ப்பங்களையும் உரிமைகளையும் அப்பொழுதே நிறைவேற்றியிருக்க முடியும்.தமிழால் வாழ்வோம்புகின்ற ஆசிரியர்கள், அதிலும் குறிப்பாகத் தலைமையாசிரியர்கள் மத்தியில் இத்தனை காலமாய் நிகழ்ந்தேறிய முரண்பட்ட தமிழ் வாழ்வைக் கேள்வி கேட்கும் வீரிய ஆசிரியத் தலைமையுரை எண்பதுகளில் வெளிப்படையாகவே தெரியத் துவங்கின. அந்தத் தமிழ் உரிமையானது வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டிய ஒரு கூறு என்பதை அநேகமாக அனைத்துப் பெற்றோர்களும் உணர்ந்திருக்கின்றனர். முன்பெல்லாம் தலைமையாசிரியர்களிடமிருந்த அதிகாரத் தோரணையும் அதி அறிவும் மூளை உழைப்பற்ற தோட்டப்புறப் பாமர மக்களைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கையறு நிலையில் வைக்கப்படுவதற்குத் தோதாக இருந்த சூழலை அத்துணை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பள்ளியில் பெயருக்கு மாத்திரமே பெற்றோர் ஆசிரியர் சங்கமாகவும், மற்றெல்லா முடிவுகளையும் தலைமையாசிரியரே தீர்மானிக்கும் காலம் எல்லாம் மலையேறி, தமிழ்ப் பள்ளியை வார்த்தெடுக்கும் முகத்தான் புதிய பெற்றோர்த் தலைமுறை உருவாகியுள்ளது. கொள்கை அடிப்படையில் அதிலும் சில பல முட்டுக்கட்டைகள் இருக்கவே செய்கின்றன. எத்தனையோ சந்தர்ப்பமும் வாய்ப்புகளும் வாசல் தேடி வந்தாலும், அதிகாரம் குறைந்துவிட்டதைப் போல் உணர்கின்ற தலைமையாசிரியர்களால் அடுத்த முன்னெடுப்பை நிகழ்த்த முடிவதில்லை. அவர்களது உணர்வு தமிழ் சார்ந்து இருக்கிறதா, இல்லையா, ஏதேனும் ஒரு உரூபத்தில் வெளிப்படுகிறதா என ஆய்ந்து பார்த்தால் கிணறு வெட்ட பூதம் கிளம்புவதைப் போல் சில கிளைக் கதைகளைச் சொல்கிறார்கள். அதை இன்னொரு கட்டுரையில் பேசலாம்.

தலைமையாசிரியர்களில் இன்று சிலர் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வருவதையும், அவர்களுள் பலர் அவ்வாறு அனுப்புவது கட்டாயத்தின் பேரிலா, சமூகம் பார்க்கிறது என்பதாலா? இந்தக் கேள்வியை மனசாட்சியிடமே விட்டுவிடுவோம்.அன்றையத் தமிழாசிரியர்களில் பலர் மக்களிடமிருந்து விலகி நின்று வாழ்ந்துள்ளனர் என்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு மத்தியில் சாதிய மதில்களும் திடமாக எழுந்துள்ளன என்பதை அண்மையில் அறிய நேரிட்டது. சம்பத்தப்பட்ட ஆசிரியர்கள் இதுகாறும் வெளியில் சொல்லத் தயங்கிய உண்மைகளையும், சாதிய வெறியில் உயர் மட்டத்தில் அமர்ந்துகொண்டு போட்ட தத்தேறி ஆட்டத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டினர். இந்த ஒடுக்குதலில் பாதிப்புற்ற அன்றைய ஆசிரியர்களின் குழந்தைகள் வெற்றி பெற்ற வர்க்கமாக உயர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அன்றைய நிலையில் ஏன் தங்கள் பிள்ளைகளை மலாய்ப் பள்ளிக்கு அனுப்பினார்கள் எனும் வினாவை வயோதிக ஆசிரியர் ஒருவரிடம் அண்மையில் கேட்டுவைத்தேன். மனம் பதபதைப்புக் கொண்டது. அவர் வழங்கிய பதிலை நம்புவதும் மறுப்பதும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். அவர் சொல்கிறார் இப்படி:

“ அந்தக் காலத்துல எஸ்டேட்டுலதான் மேய்க்கிறாங்கன்னா, வாத்தியாரா இருக்கிற எங்களயும் எப்படியெல்லாம் மேய்ச்சானுங்க தெரியுமா தம்பி? நானும் ஒரு வாத்தியார்னு பார்க்காம, அங்குள்ள பெரிய வாத்தியாருங்க சப்பாத்தைத் துடைக்க வாச்சானுங்க! சொன்னா நம்ப மாட்டீங்க! எஸ்டேட்டு மக்களும் நாங்களும் நல்லா இருக்கக்கூடாதுங்கறதுக்காகச் சம்பளத்தைக்கூட கொடுக்காம மறைச்சிருக்காங்க. போயிக் கேட்டாக்கா கக்கூஸ் கழுவுறதுலருந்து கண்டதையும் செய்யச் சொன்னாங்க. மீட்டிங்குல வேணும்னே மட்டமா பேசுறதும் புறங்கூறதும் அடேயப்பா! நெனைச்சாலே மனசு எரியிதுப்பா! அந்த வலி இன்னிக்கி வரைக்கும் மறையில தம்பி. வெளியில பார்த்தாதான் டிப் டாப்பா தெரியிறோம். இதுனாலேயே யாருக்கிட்டேயும் முகங்கொடுத்துப் பேசுறதில. நெஞ்சுக்குள்ள ஒரு வெறி! எங்கள நாங்க நிரூபிக்க வேற வழியே தெரியல. இவங்க கீழ நான் மட்டுமல்ல, எம்புள்ளைங்களும் இருக்கக்கூடாதுங்கிறதுக்காக வேணும்னே மலாய் ஸ்கூலுக்கு அனுப்பினேன். இன்னிக்கி காலம் எப்படி மாறிப் போச்சி பார்த்தியா? நாங்க புள்ளைக் குட்டிகளோட நல்லா இருக்கோம்! நம்மள மிதிச்சவங்கள கடவுள் பார்த்துக்கிட்டுத்தான் இருக்காரு!” என்று சோகம் கவிந்த முகத்துடன்.

இவர் காலத்தில் பணி புரிந்த இன்னோர் ஆசிரியரையும் சந்தித்தேன்.அவர் சொல்கிறார் இப்படி:

“ தேவா, அப்போ நாங்க இருந்தது மலாய்க்காரக் கம்பம். புள்ளைகளும் அங்கேயே இருந்து ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிப் போயிடுச்சுங்க. தமிழ் ஸ்கூலுக்குப் போறியாடான்னு கேட்டா பேய பார்த்த மாதிரி மெரளுறானுங்க. அவனுங்ககூட பழகுன மலாய்க்காரப் பையன்களோடையே ஸ்கூலுக்குப் போகணும்னு அடம் பிடிச்சாங்க. அதோட, எங்க வீட்டுக்குப் பக்கமாகவே மலாய் ஸ்கூலும் இருந்ததனால, அனுப்ப வசதியாப் போச்சு! அப்பெல்லாம் தமிழ் ஸ்கூலுக்குப் போகணும்னா எஸ்டேட்டுக்குத்தான் போகணும். செம்மண் ரோட்டுல குண்டும் குழியுமா ஏழெட்டு மைலுக்குள்ள எப்படித்தான் அஞ்சு புள்ளைகளையும் கொண்டு போறது? ஸ்கூலும் மலாய் ஸ்கூலு மாதிரி இல்லாம கொட்டாய் மாதிரி கெடந்துச்சு. அதான் புள்ளைகள மலாய் ஸ்கூல்ல போட்டேன்! இப்பல்லாம் தமிழ் ஸ்கூல்ல எஸ்டேட்டுல இருந்த மாதிரியா இருக்கு? டவுன்ல வசதியா இருக்கு. இப்ப உள்ள சூழ்நிலைக்கு நான் புள்ளைகள தமிழ் ஸ்கூல்லதான் போடுவேன்”, என்றார் சாசுவதமாக.அவரது பேச்சு நகைச்சுவையாகப் பட்டது எனக்கு. அவருக்குப் பேரப்பிள்ளைகள் ஏழெட்டுப் பேர். ஆனால் யாருமே தமிழ்ப்பள்ளியின் பக்கம் தலைவைத்திருக்கவில்லை.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம். என்னையும் உடன்பிறப்பையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள் எங்கள் குடும்பத்தில். எங்கள் எல்லோரையும் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்பி வைத்த அப்பா, கடைசித் தம்பியை மட்டும், பதினைந்து மைல் தொலைவில் உள்ள மலாய்ப்பள்ளியில் வேண்டுமென்றே சென்று பெயரைப் பதிந்துவிட்டு, அதே நாள் காலை ஒன்பது மணியளவில் பதிந்த பெயரைக் கொண்டு வந்து தோட்டத்திலிருந்த தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியரிடம் காண்பித்தார்.

“என்னையா, பையனைப் போயி மலாய் ஸ்கூல்ல போட்டிருக்கே?!” என வியப்பும் கோபமும் கலந்தவாறு கேட்க, அதற்கு என் அப்பா, “ ஆமாங்கையா.உங்க பையன்க மூனு பேரையும்,ரெண்டு பொண்ணுங்களையும் அதே ஸ்கூல்லதான் பார்த்தேன்யா. இப்ப கணக்குப் புரியுதா?” என்றார். அப்பொழுது நான் நான்காம் ஆண்டில் பயின்றுகொண்டிருந்தேன். தலைமையாசிரியரின் அறை என் வகுப்புக்குப் பக்கந்தான் உள்ளது. நாடகத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. கூடவே அப்பாவின் துணிச்சலைக் கண்டு பெருமிதமும் பொங்கியது! அப்பாவும் நிரம்பப் படித்திருந்தார். ஆனால், ஆசிரியர்ப் பணிக்குச் செல்வதை ஏனோ வெறுத்திருந்தார்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768