முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 41
மே 2012

  நேர்காணல்:
பாரிசான் அரசாங்கம் தலையிட மறுத்தால் அடுத்து எதிர்க்கட்சிதான்!
 
 
       
நேர்காணல்:

பாரிசான் அரசாங்கம் தலையிட மறுத்தால் அடுத்து எதிர்க்கட்சிதான்!



திரை விவாதம்:


கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்
கே. பாலமுருகன்


கவிதைத்தொட‌ர்

இனியவளின் குறிப்புகள்... 2
பூங்குழலி வீரன்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

எம். ராஜா

சம்பு

இரா.சரவண தீர்த்தா

ந. பெரியசாமி

ஷம்மி முத்துவேல்


கடந்த சில வாரங்களாகப் பத்திரிகைகளின் முதன்மைச் செய்திகளில் ஆஸ்ட்ரோ வானவில்லில் உள்ளூர் தயாரிப்புகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்ற போராட்டங்கள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. ஆங்காங்கு மிக மெல்லிய குமுறலாய் இருந்த குரல்கள் ஒன்றிணைந்து 'MICCAF' (Malaysian Indian Creative Content Action Force) எனும் அமைப்பின் மூலம் போரட்டத்தை இப்போது முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் MICCAF அமைப்பின் நோக்கம் குறித்து அறிந்து கொள்ள அதன் உறுப்பினர்கள் திரு. என். எஸ். கிருஷ்ணா (இயக்குனர் & தயாரிப்பாளர்) மற்றும் திரு. சஞ்சை குமார் பெருமாள் (இயக்குனர்) ஆகியோரை சந்தித்தோம்.


கேள்வி: எங்கிருந்து ஆரம்பித்தது உங்களின் இந்தப் போராட்டம்? திடீரென தொடங்கியது போல உள்ளது.

என். எஸ். கிருஷ்ணா: இல்லை. 2009லேயே எங்கள் போராட்டம் தொடங்கிவிட்டது. அப்போது சோமா அரங்கத்தில் 'தமிழ் அலை' என்ற பெயரில் நாங்கள் சந்திப்பு நடத்தினோம். அப்போது எங்கள் முக்கியமான நோக்கம் 'தொலைக்காட்சி' 3ன் (TV3) இந்தியக் கலை புறக்கணிப்பின் போக்கு குறித்து பேசுவதாய் இருந்தது. பல ஆண்டுகள் ஆனப்பின்பும் அத்தொலைக்காட்சி ஏன் தமிழ்க்கலைஞர்களை கொண்டாடப்படும் ஆளுமைகளாக மாற்ற முடியவில்லை என்ற கேள்வியே எங்களுக்கு இருந்தது. மலாய்க்கலைஞர்களில் 'செவ் வான்' (Chef Wan) அல்லது 'அப்துல் நவாவி' (Abdul Nawawi) போன்று தமிழர்கள் மத்தியில் உருவாக்க முடியவில்லை. வேறு துறையில் இருக்கும் ஒருவரை பிரபலங்களாக மாற்ற தொலைக்காட்சியால் முடியும். ஆனால், தமிழர்களுக்கு அது நடக்கவே இல்லை.

கேள்வி: இந்தச் சந்திப்பு என்ன விளைவை ஏற்படுத்தியது?

என். எஸ். கிருஷ்ணா: நமக்கான களம் ஒன்று வேண்டும் என முடிவெடுத்தோம். தனி அலைவரிசை இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்ற எண்ணம் அப்போதே உருவானது. அந்தக் காலக்கட்டத்திலேயே நான் டாக்டர் ராஜாமணியைச் சந்தித்தேன். நாடகங்களை மட்டும்தான் மலேசிய தமிழர்கள் பார்ப்பார்கள் என்றில்லை; தகவல் சார்ந்த நிகழ்சிகளுக்கு இடம் தரலாமே என வாதிட்டேன். அவர் உடனே என்னை ஒரு செயல்திட்டத்தைக் கொடுக்கச் சொன்னார். கொடுத்த ஒரு மாதத்தில் எனக்கு 'வெற்றிக்கொடி கட்டு' எனும் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கேள்வி: கேட்டால் வாய்ப்பு கிடைக்கின்றதுதானே... பின் ஏன் போராட்டம்?

என். எஸ். கிருஷ்ணா: இன்னும் எத்தனை காலத்திற்குக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருப்பது. நான் ஒருவன் கேட்டதால் கிடைத்தது. எனக்கு ஓரளவு அணுகும் விதம் தெரிந்தது. எல்லோருக்கும் அது கிடைக்குமா அல்லது தெரியுமா? இன்னமும் நாம் இந்த நாட்டில் எல்லாவற்றையும் கெஞ்சிதான் பெற வேண்டுமா? போராட்டம் என்பது எனக்கானதல்ல... வெளியில் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் ஏராளமான கலைஞர்களுக்கு. வாய்ப்புகள் திறந்துவிடப்பட வேண்டும்.

கேள்வி: கடந்த வருடம் (2011) நிறைய உள்ளூர் தமிழ் நாடகங்களை இயக்க ஆஸ்ட்ரோ வாய்ப்பளித்துள்ளதே?

என். எஸ். கிருஷ்ணா: அதுவே ஒரு நாடகம்தான். பலருக்கு அதில் உள்ள அரசியல் புரிவதே இல்லை. 'தமிழ் அலை' உருவாகி உள்ளூர் கலைஞர்கள் குறித்து பேச ஆரம்பித்தப்பின்தான் அந்த நாடகங்களை இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இரண்டு பாகத்துக்கு 50,000 ரிங்கிட் கொடுத்தார்கள். அதாவது ஒரு பாகத்துக்கு 25,000 ரிங்கிட். 26 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளிலும் முழு ஸ்கிரிப்டையும் கேட்டார்கள். உலகத்தில் எங்கும் நடக்காத அநியாயம் இது. ஸ்கிரிப்ட் என்பது முழு கதை. அது ஒருவரின் கடுமையான உழைப்பு. அதை வைத்து முழு படமே இயக்கிவிடலாம். பொதுவாக கதை சுருக்கம்தான் கேட்பார்கள். ஸ்கிரிப்டை இரு மொழிகளில் உருவாக்கவே 4,000 ரிங்கிட் வரை செலவாகும். அவ்வாறு செலவு செய்தப்பின் வாய்ப்புக்கிடைக்காமல் போன நிறுவனங்கள் உண்டு.

கேள்வி: இம்முறையாவது (2012) இந்நிலை மாறியதா?

என். எஸ். கிருஷ்ணா: நாங்கள் இதுதொடர்பாக ஆட்சேபம் தெரிவித்தப்பின் டாக்டர் ராஜாமணி அடுத்த முறை மாற்றுவதாகச் சொன்னார். ஆனால், இம்முறை நடந்தது வேறொரு அநியாயம். 5 எபிஸோட்டுகளுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் கொடுத்திருக்கிறார்கள். அதாவது ஒரு எபிஸோட்டுக்கு 20,000 ரிங்கிட். இப்பணத்தை வைத்துக்கொண்டு ஒரு நல்ல படைப்பைத் தரமுடியாது. வெளியில் உள்ளவர்களுக்கு ஆஸ்ட்ரோ ஒரு லட்சம் ரிங்கிட் கொடுத்துள்ளது என்ற தகவல் மட்டுமே தெரியும். அதன் சிக்கல் தெரியாது. தரமற்ற படைப்பை மலேசியக் கலைஞர்கள் வழங்க வேண்டும் என்பதே நிர்வாகத்தினரின் திட்டம். அப்போதுதானே மலேசிய கலைஞர்கள் தரமற்றவர்கள் என சொல்ல வசதியாக இருக்கும். அதே போல தமிழில் இம்முறை முழு ஸ்கிரிப்டையும் கேட்டுள்ளனர். எதுவும் மாறுவதாக இல்லை. எனவேதான் இப்போராட்டம். உண்ணாவிரதம் எடுக்க முற்பட்ட பின்பே அரசியல், ஊடகப் பார்வையை குவிக்க முடிந்தது.

கேள்வி: நாடகம் தயாரிக்க உங்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காததால்தான் இந்த போராட்டம் நடப்பதாகக் கருத்து நிலவுகிறதே.

என். எஸ். கிருஷ்ணா: எங்கள் எட்டுப்பேரில் இளம் இயக்குநரான சஞ்சை குமார் பெருமாள் மட்டுமே இம்முறை பங்கெடுக்க முயன்றார். மற்ற யாருமே இம்முறை பங்கெடுக்கவில்லை. ஒரு நாடகத்துக்காக நாங்கள் இந்தப் போராட்டம் செய்வதாகச் சொல்பவர்கள் எத்தனை கீழான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என யோசித்துப்பாருங்கள். அறிமுகம் இல்லாதக் காலத்திலேயே எனக்கு ஆஸ்ட்ரோவில் வாய்ப்பு இருந்த போது, இப்போது கேட்டால் கிடைக்காதா என்ன? எங்கள் போராட்டம் நாடகத்துக்காக மட்டும் அல்ல. அதன் நோக்கம் விரிந்தது.

கேள்வி: பிற இனங்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுள்ளதா?

என். எஸ். கிருஷ்ணா: அவர்களுக்கு இந்தப் பிரச்சனையே இல்லை. மலாய்க்காரர்களுக்கு எக்கச்சக்கமான அலைவரிசைகள் ஆஸ்ட்ரோவில் உண்டு. அதே போல சீனர்களுக்கும் தனியாக அலைவரிசை இருப்பதோடு சீனாவிலிருந்து தரவிறக்கம் செய்யும் அலைவரிசையிலும் மலேசியப் படைப்புகளை இடையிடையே இடம்பெறுகின்றன. நமக்கு அப்படியா? முழுக்க முழுக்க சன் டிவி, மக்கள் டிவி, ஆதித்யா என விளம்பரங்கள் மட்டும் மாற்றப்பட்டு ஒலியேறுகின்றன. ஒரு மலாய் அல்லது சீன கலைஞன் ஒரு நாடகத்தில் நடித்துவிட்டு அடுத்த இயக்கத்தில் நடிக்கச்செல்லும் அளவுக்கு அவர்கள் துறை பரபரப்பாக உள்ளது. நம் இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் எப்போது தீபாவளியும் பொங்கலும் வரும் என காத்திருக்கும் நிலைதான் இன்றும் தொடர்கிறது.

கேள்வி: ஏன் உங்கள் எதிர்ப்பை ஆர்.டி.எம்மிடம் காட்டவில்லை?

என். எஸ். கிருஷ்ணா: ஆர்.டி.எம்மில் இருப்பதே இரண்டு அலைவரிசைகள்தான். அதில் நமக்கு ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் தருகின்றனர். ஆஸ்ட்ரோவில் இருப்பது 100 அலைவரிசைகள். அதில் இந்திய அலைவரிசைகள் மொத்தம் 8. அந்த எட்டில் ஒன்றை மலேசியக் கலைஞர்களுக்குக் கேட்கிறோம். இதில் என்ன தவறு?

கேள்வி: முறையான சந்திப்பை டாக்டர் ராஜாமணியுடன் ஏற்படுத்தலாமே...

என். எஸ். கிருஷ்ணா: அதற்கு அவர் தயாராக இல்லை. நாடாளுமன்றம் வரை நமது பிரச்சனை எடுத்துச்செல்லப்பட்டபோதுதான் சிலர் மூலம் தூது அனுப்பினார். மீண்டும் 26 நிறுவனங்களுக்கு நாடகங்கள் இயக்க வாய்ப்பு வழங்குவதாகச் சொன்னார். நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு எலும்புத்துண்டு வேண்டாம். எங்கள் உரிமை வேண்டும். இதற்கிடையில் நான் வெளிநாட்டில் இருக்கும்போது டத்தின் இந்திராணி மூலமாக எங்கள் குழுவினர் டாக்டர் ராஜாணியுடன் ஒரு சந்திப்பை நடத்தினர். அப்போதே அவர் 26 நிறுவனங்களுக்கு நாடகங்களை வழங்கத் தயாராக இருந்தார். ஒரு வாரத்தில் அவரால் 26 நிறுவனங்களுக்குத் நாடகங்கள் தயாரிக்க வாய்ப்பு தர முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதென்றால் அவரால் இன்னும் அதிகமாக உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்தானே. சண்டை போட்டால்தான் பிச்சை கிடைக்கும் நிலை இனியும் கலைஞனுக்கு வேண்டாம். நமக்குத் தனி அலைவரிசை வேண்டும்.

கேள்வி: உங்கள் போராட்டக் குழுவில் சிலர் ஏற்கனவே தமிழக நடிகர்களை இங்கு அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அப்படியிருக்க, அவர்களே அதற்கு எதிர்ப்பாக உங்கள் குழுவில் இருப்பது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தாதா?

என். எஸ். கிருஷ்ணா: இதை நான் மறுக்கவில்லை. ஆனால் மாற்றம் யாரிடம் வேண்டுமானாலும் நிகழலாம் இல்லையா? ஒரு விநியோகிப்பாளராக அவர்கள் செய்வதை தவறு சொல்ல முடியாது. ஆனால், மலேசிய கலைஞர்களை இனி வளர்க்க வேண்டும் எனும் அடிப்படையில் அவர்கள் இப்போது இணைந்துள்ளார்கள். ஒரு போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் உதிரியாகப் பார்த்து விமர்சிப்பதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. போராட்டத்தின் நோக்கம் உண்மையாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். மேலும், நம் உள்ளூர் படைப்புகளை எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல நம்முடன் இன்று இருக்கும் விநியோகஸ்தர்களின் அனுபவம் உதவும் என்று நம்புகிறோம்.

கேள்வி: ஓர் அலைவரிசையை முழுமையாகக் கேட்பதும் பேராசை என்ற விமர்சனமும் உண்டு.

என். எஸ். கிருஷ்ணா: நிச்சயமாக இல்லை. இன்று இத்துறையிலேயே படித்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களுக்கான இடம் என்ன? எங்கே அவர்களை வைக்கப்போகிறோம்? சம்பந்தமே இல்லாத துறைகளில் அவர்களைத் திணிப்பதுதான் சரியா? நம்மிடையே திறமையானவர்கள் உண்டு. களம்தான் இல்லை. இதில் வெள்ளித்திரையும் உள்ளூர் அலைவரிசை என்கிறார்கள். என்ன கொடுமை இது. முழுக்க தமிழ்ப்படங்களைப் போடும் அது எவ்வாறு உள்ளூர் சேனலாக முடியும்? அதிலும் வாரம் குறைந்தது 2 உள்ளூர் திரைப்படம் ஒளிபரப்பாக போராடிவருகிறோம்.

கேள்வி: ஒரு ரசிகனாக எனக்கும் பல உள்ளூர் படைப்புகள் ஏமாற்றம் தருகின்றன. தமிழக சினிமா குப்பைகளைப் பார்த்தே இங்கும் படம் எடுக்கிறார்கள். அப்படியிருக்க, தனி அலைவரிசை கிடைத்து என்ன மாற்றம் நிகழப்போகிறது?

சஞ்சை குமார் பெருமாள்: நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. தொடக்ககால மலேசிய இயக்குநர்கள் தமிழ்ப்பட தாக்கத்தில் அவ்வாறான படங்களை இயக்கினர். இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்கள் உலக சினிமா அறிவுடன் இத்துறையில் நுழைகின்றனர். இந்நாட்டின் அசலான வாழ்வு அவர்களுக்குத் தெரிகிறது. சில இளம் இயக்குநர்களுக்குச் சிந்தனை அடிமைத்தனம் உண்டு. அதை உடைக்கவே அண்மையில்கூட இளம் இயக்குநர்களிடையே ஒரு பட்டறை நடத்தினோம். உத்திகள் ஒரு புறம் இருக்க, அசலான கதையை எவ்வாறு உருவாக்குவதென கலந்துரையாடல் செய்தோம். இது தொடரும்.

கேள்வி: டாக்டர் ராஜாமணி அப்பதவியை விட்டு போய்விட்டால், எல்லா சிக்கலும் தீருமா? புதிதாக வருபவர்கள் மீண்டும் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது எப்படி நிச்சயம்?

என். எஸ். கிருஷ்ணா: டாக்டர் ராஜாமணி வெளியேறிவிட்டால் எல்லாம் முடிந்துவிடாது. எங்கள் இயக்கத்தில் நோக்கம் விரிவானது என நான் முன்பே சொன்னேன். மலேசியக் கலைஞர்களுக்கு எப்போதெல்லாம் முடக்கம் வருகிறதோ எங்கள் செயல்பாடு அப்போதெல்லாம் தொடரும். அதன் தேவை இந்நாட்டில் உண்டென கருதுகிறோம். இந்த 17 வருட காலக்கட்டத்தில் ஆஸ்ட்ரோ செய்த உள்ளூர் தமிழ் படைப்புகள் எதுவும் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, நிகழ்ச்சி தரமில்லை. மற்றது அவர்களுக்கு வெளிநாட்டில் விற்பனை செய்ய விருப்பம் இல்லை. நம் நாட்டில் 'மானாட மயிலாட', 'ஜோடி நம்பர் 1' போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது ஏன் தமிழ் நாட்டில் ஆட்டம் நூறு வகை நிகழ்ச்சியைப் பார்க்க மாட்டார்களா? அப்படிப்பார்க்கும் போது வெளியில் இருக்கும் பல கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளார்களே... இதன் மூலம் ஒரு உண்மை புலனாகிறது. டாக்டர் ராஜாமணிக்கு உள்ளூர் படைப்புகளை வெளிநாட்டுக்குக் கொண்டுச் செல்ல தெரியவில்லை. அப்படியானால் அவர் பதவி விலகுவதுதானே நியாயம். வெளியில் உள்ள திறமையானவர்கள் உள்ளே வரட்டும்.

கேள்வி: டாக்டர் ராஜாமணி நினைத்தால் தனி அலைவரிசை கிடைக்க வாய்ப்புண்டா? அவருக்கு மேல் பலர் இருக்கிறார்களே. அப்படியிருக்க அவர்தான் காரணம் என்பது எவ்வகை நியாயம்?

என். எஸ். கிருஷ்ணா: ஆமாம் இருக்கிறார்கள். ஆனால், அவருக்கு மேல் உள்ளவர்களுக்கு அவர் மலேசிய கலைஞர்களைப் பற்றி எவ்வாறு சித்திரம் கொடுத்திருக்கிறார் என்பதை ஆராய வேண்டும். மலேசிய படைப்புகள் தரமற்றவை எனச் சொல்லியே அவர் நம்மை புறக்கணித்துள்ளார். இதன் அரசியலை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். டாக்டர் ராஜாமணி ஆஸ்ட்ரோவுக்கு லாபம் காட்ட விரும்புகிறார். அதன் அடிப்படையில் எங்கெல்லாம் பணத்தைச் சிக்கனம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார். அதற்காக ஏற்கனவே ஒளிபரப்பாகும் தமிழக நாடகங்களை குறைந்த விலைக்கு வாங்கி இங்கு அது ஒளிபரப்பப்படுகிறது. இதன் மூலம் நிர்வாகத்தில் அவருக்கு நல்ல பெயர். நல்ல சம்பாத்தியம். ஆனால் உள்ளூர் கலைஞர்கள் பிழைப்பில் மண். தனது சுயநலத்துக்காக டாக்டர் ராஜாமணியின் செயல்பாடே இந்த இம்சைக்குக் காரணம். நமது தேவைகள் அரசிடம் இருந்து கிடைக்காவிட்டால் அதை கேட்டுதராத அரசியல்வாதிகளிடம் எதிர்ப்புக்காட்டுகிறோம் அல்லவா? அதுபோலதான் இதுவும்.

கேள்வி: அவரிடம் திறமை இல்லை என்கிறீர்கள்?

என். எஸ். கிருஷ்ணா: நிச்சயமாக. உள்ளூர் நிகழ்ச்சிகளை லாபகரமாக நடத்த முடியும். அவருக்கு அந்த நிர்வாகத்திறன் இல்லை. மலாய் தயாரிப்புகளை விற்பதற்கான வெளி மிகக் குறைவு. இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் புருணை மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது. நமக்கு அவ்வாறு இல்லை. உள்ளூர் இந்திய தயாரிப்புகளை இந்தியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளைத் தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்கும் எடுத்து செல்ல முடியும். தமிழர்கள் உலகம் முழுக்க பரந்து உள்ளனர். ஆனால் அந்த வியாபார சந்தையை ஏற்படுத்த இவர்கள் என்ன செய்தார்கள்? நிர்வாகத்தில் உள்ளவர்களின் வேலை அதுதானே. அதை செய்யாதவர்கள் நிர்வாகத் திறன் அற்றவர்கள். நிர்வாகத்திற்கும் தொழிலாளிக்கும் சம லாபம் ஈட்டித்தருபவனே நல்ல நிர்வாகி. நிர்வாகத்திற்கு மட்டும் அல்ல. மலேசிய கலைஞர்கள் திறமையற்றவர்கள் எனச்சொல்லும் டாக்டர் ராஜாமணிக்குக் காட்ட தி.எச்.ஆர்.ராகாவே (THR Raaga) நல்ல உதாரணம். இன்றைக்கு அதன் நேயர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்கு காரணம் அதன் அறிவிப்பாளர்கள். உள்ளூர் கலைஞர்களால் ஊடகத்தை சுவாரசியமாக வழிநடத்த முடியும் என்பதற்கு அவர்களே சிறந்த உதாரணம்.

கேள்வி: ஒரு தனியார் நிர்வாகத்திடம் இந்தப் பரிந்துரையை வைப்பது சரிதானா?

சஞ்சை குமார் பெருமாள்: சுரண்டுபவன் யாராக இருந்தால் என்ன? எதிர்க்க வேண்டியது நம் கடமையல்லவா. ஆஸ்ட்ரோ முழுக்க தனியார் நிறுவனம் இல்லை. இதில் 30% பங்கு 'காசானா நெஷனல்' (Kazanah National) எனும் அரசாங்க நிறுவனத்துக்கு சொந்தமானது. அப்படியிருக்கும்போது அரசாங்க திட்டப்படி உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மற்றொன்று வானவில் அலைவரிசை உள்ளூர் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. TV3 குழுமத்திடமும் (Media Prima) நாம் வாய்ப்பு கேட்கிறோம். ஆஸ்ட்ரோவிடமும் கேட்கிறோம். உள்ளூர் இந்திய படைப்புகளை மக்களிடம் தொடர்ந்து கொண்டு சென்று ரசனை மாற்றத்தை ஏற்படுத்த நமக்கு களம் தேவைப்படுகிறது. 'செனாரியோ' (Senario) என்ற மலாய் தொடர் தொலைக்காட்சியில் பிரபலமானவுடன் சினிமாவாக மாற்றம் கண்டது. இப்போது உள்ளூர் இந்திய தயாரிப்புகளுக்கு தனி அலைவரிசை வழங்கப்பட்டால், குறுகிய காலத்தில் (ஏறக்குறைய 3-5 வருடங்களுக்குள்) நம்மால் வெற்றிகரமான உள்ளூர் சினிமாக்களை தயாரிக்க முடியும். அவற்றை வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும்.

கேள்வி: கலைஞர்களுக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டுள்ளதே...

என். எஸ். கிருஷ்ணா: எங்குதான் பிளவுகள் இல்லை. எலும்புத்துண்டைப் போட்டால் கௌவ்விக்கொண்டு ஓடும் நாய்கள் இருக்கும் வரை பிளவுகளும் பிரிவுகளும் இருக்கும். மற்றொன்று முன்பு நாம் இந்தியன் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை பட்டோம். இப்போது ஐந்தாவது தலைமுறையில் இருக்கும் நாம் மலேசியர்கள் என்ற அடையாளத்தை ஆள ஊன்ற வேண்டியுள்ளது. அந்த அடையாளம் எல்லா ரீதியிலும் வெளிப்பட வேண்டும். கலையிலும்.

கேள்வி: இந்திய தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டு, மலேசிய அடையாளத்தை நுணுக்கமாக பதிவு செய்யும் உள்ளூர் படைப்புகள் அதிகம் இல்லையே.

சஞ்சை குமார் பெருமாள்: தொடர்ச்சியாக ஒரு கலை வெளிபாடு நடக்கும் போதே இதுபோன்ற மாற்றங்கள் சாத்தியம். ஆனால் அதற்கான தளம் இல்லாதபோது எவ்வாறு மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றம் நிகழவே களம் கேட்கிறோம். மலாய் கலைத்துறை வளர்ச்சியே இதற்குத் தக்கச் சான்று. முன்புள்ள மலாய் கலைத்துறைக்கும் இப்போதைக்கும் எத்தனை வளர்ச்சி. அதே போல சிங்கை வசந்தம் தொலைக்காட்சி. 2 மணி நேர அலைவரிசையாக தொடங்கி, இப்போது ஏறக்குறைய 12 மணி நேரம் வரை படைப்புகள் ஒளிப்பரப்படுகின்றன. அவற்றில் நிறைய சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்படும் படைப்புகள். அவர்கள் கலைத்துறை வளர்ச்சியும் அபரிமிதமானது. இருப்பினும், களம் கிடைத்தவுடன் உடனே நீங்கள் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. 80 வருடமாக இருக்கும் தமிழ் திரை உலகிலேயே குப்பைகள் வருகின்றன. தமிழகத்தில் தயாரிக்கப்படும் மொத்த படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவே மலேசியா வருகின்றன. இந்நிலை ஹாலிவுட்டிலும் உண்டு. உண்மையான கலை என்பது இந்தக் குப்பைகளுக்கு மத்தியில் உருவாகி மெல்ல மேலே வரும். அதுதான் அதன் தன்மை.

கேள்வி: அரசியல் ரீதியான எதிர்ப்பு அல்லது ஆதரவு எப்படி உள்ளது?

என். எஸ். கிருஷ்ணா: ஆதரவு உண்டு. முதுகைத் தட்டுகிறார்கள். அது எங்களுக்குப் போதாது. இது வெறும் உரிமை போராட்டம் அல்ல. இந்தியர்களின் பொருளாதாரப் பிரச்சனை. இது சாத்தியமாவதன் மூலம் தமிழுக்கு பொருளாதார ரீதியிலும் அந்தஸ்தும் கிடைக்கிறது. தமிழ்ப்பள்ளியில் பயிலும் ஒருவன் ஏன் ஒரு வசனகர்த்தாவாகவோ திரைக்கதை ஆசிரியராகவோ தன்னுடைய எதிர்காலத்தை வகுக்க முடியாது? நன்கு தமிழ் எழுத, பேச, படிக்க தெரிந்தவர்களுக்கு இதன் மூலம் விரிவான வேலைவாய்ப்புகள் உருவாகும். அறிவிப்பாளர் தொடங்கி பாடல் ஆசிரியர்வரை எத்தனை எத்தனை வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. இதில் கட்சி ரீதியான திணிப்புகளைச் செய்யக்கூடாது. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. பொது மக்கள் நன்மைக்காக கட்சி பேதம் பாராமல் அனைவரும் இதில் அக்கறை காட்ட வேண்டும்.

கேள்வி: அரசாங்கம் இந்த பிரச்சனையை கண்டும் காணாமல் இருக்கிறதே?

என். எஸ். கிருஷ்ணா: நாங்கள் இன்னும் இந்த அரசை நம்புவதால்தான் முறையாக அவர்களை அணுகி வருகிறோம். அவர்கள் மூலம் மலேசிய இந்தியக் கலைஞர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். ஒருவேளை அவர்கள் மூலம் தீர்வு கிடைக்கவில்லையென்றால் எதிர்க்கட்சி மூலம் எங்கள் பிரச்சனையை முன்னெடுக்கத் தயங்க மாட்டோம். ஏற்கனே சில அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், நாங்கள் அரசு இதில் தலையிட்டு சீக்கிரம் தீர்வு காணுமென காத்திருக்கிறோம். இலங்கை தமிழர் கலைத்துறையை தமிழகம் இப்படிதான் எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டும் குமுதம் விலையைக் குறைத்து விற்றும் அழித்தது. நாம் அதற்கு இனியும் இடம்தரக்கூடாது. அதற்கு அரசாங்க ஆதரவும் வேண்டும்.

கேள்வி: அப்போதும் இது சாத்தியப்படாவிட்டால்?

என். எஸ். கிருஷ்ணா: உதயகுமார் எனும் மனிதனின் ஆதங்கத்துக்கு அரசும், அரசியல்வாதிகளும் காது கொடுக்காததால் ஹிண்ட்ராப் பேரணி உருவானது. எங்கள் குரலுக்கு அரசு காதுகொடுக்காவிட்டால் பிற இன கலைஞர்களோடு இணைந்து 'Parti Seniman Malaysia' எனும் கட்சியும் உருவாகலாம். வேறு வழியில்லை. எங்கள் உரிமைக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள் மௌனம் சாதிக்கும் போது நாங்களே அதை கையிலெடுக்க வேண்டியுள்ளது. இதனால் நாங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரும். ஆனால் வருங்கால கலைஞர்களுக்காவது விடிவு பிறக்கும்.

கேள்வி: பொறுப்பாகச் செயல்பட வேண்டிய நம் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?

என். எஸ். கிருஷ்ணா: ம.இ.கா. தலைவர் டத்தோ பழனிவேலுவைச் சந்தித்த போது 'கலை, கலாச்சாரம் போன்ற பிரச்சனைகளைக் கவனிக்க எனக்கு நேரம் இல்லை. அதற்கான பிரிவு உண்டு, அவர்கள் பார்த்துகொள்வார்கள்' எனத்தான் பேச்சையே ஆரம்பித்தார். தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் பிரச்சனைகளை செவிமடுக்க அவர்களுக்கு நேரம் இல்லை. வேறு வழியே இல்லையென்றால் அடுத்த வழி எதிர்க்கட்சிதான்.

சந்திப்பு : ம. நவீன் & சிவா பெரியண்ணன்

நன்றி : தினக்குரல்

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768