|
|
என் வாழ்வில் நான் குழந்தைகளுக்கு வழங்கியிருக்கும் இடம் மிக முக்கியமானது.
எனது வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் அவர்கள் ஏராளமான பதிவுகளை
ஏற்படுத்தி சென்றிருக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவள் என் அண்ணனின்
5 வயது மகள் இனியவள். மிக குறைந்த வார்த்தைகளோடு இயங்கும் அவளது உலகத்தில்
எப்போதும் எனக்கு ஈர்ப்புகள் அதிகம். அவளோடு எனக்கு கிடைத்த சில ஈர்ப்புகளை
பதிவாக்க முனைந்து பல முறை தோற்றுப் போயிருக்கிறேன். பதிவாக்க முடிந்த
சிலதை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு 5
இனியவளின் மெளனம் எப்போதும்
உறுத்தியபடியே
இருக்கும்
அவளது இயல்பு நிலை
மெளனத்திற்கு இடமளிப்பதில்லை
கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும்
வார்த்தைகளை ஒளித்துவிட்டு
அவள் மெளனத்திற்குள் புதைந்து கொள்வாள்.
அம்மாவின் ஏச்சுகள்
அக்காவின் அடி
தான் கேட்டதை வாங்கித் தராத ஏக்கம்
காயத்தின் வலி என
அவளது மெளனம் ஏதாவதொன்றை வார்த்தைகள் தொலைத்து
பேசிக் கொண்டிருக்கும்
மெளனத்திற்கான காரணத்தை பெறுவது
உங்களுக்குக் களைப்பேற் படுத்தலாம்
காரணத்திற்கான நிவாரணத்தினை மட்டும் நொடிகளின்
உங்களால் வழங்கிவிட முடியும்
அம்மாவைப் உடனே அழைத்து ஏசுவதாகவும்
அக்காவுக்கு அடி போடுவதாகவும்
கேட்ட பொருளை நாளையே வாங்கிக் தருவதாகவும்
தூங்கி எழுந்தப்பின் காயங்கள்
ஆறிவிடலாம் என
வழங்கும் உறுதிமொழிகளில்
மெளனம் விடைபெற்றுக் கொள்ளும்
குழந்தைகளின் மெளனத்திரைகளை
அவிழ்க்க முயல்வது உங்களுக்கும் களிப்பேற்படுத்தலாம்
அவை காயங்கள் ஏதுமின்றி இருக்க
வேண்டும் என்கிற வரையறை பின்பற்றப்படும் வரை.
குறிப்பு 6
ஒரு ஊரிலே என்றுதான்
கதை சொல்லத் தொடங்குவாள்
இனியவள்...
அவள் கதையில் எப்போதுமே
விலங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிந்தபடி
இருக்கும்.
கோழிகளைப் பற்றிச் சொன்னாலும்
அம்மா கோழி
அதன் சின்ன சின்ன குஞ்சுகள்
எப்போதும் கத்தியபடியே இருக்கும் ஒரு பெரிய சேவல்
என அவளது
கதைகள் விரிந்தபடியே இருக்கும்...
உங்கள் கற்பனைக்கெட்டாத கிளைக்கதைகளையும்
திரும்புமுனைகளையும்
சந்திக்கும் உங்களுக்கு என்ன
முயன்றாலும்
கதைகளின் முடிவுகளை மட்டும் நெருங்கி விடவே
முடியாது
அப்புறம்
அப்புறம் என நீளும்
கதைகள் அவளுக்கே களைப்பை ஏற்படுத்தி விடுகிற
பொழுது
தண்ணீர் குடித்து வருவதாக சொல்லி
சுவர்கள் தோரும் எதிரொலிக்கும்
ஒரு சிரிப்பை தந்தபடி உங்களை விட்டகழ்வாள்...
முடிவுகளற்ற கதைகளுக்கு
முற்றுப் புள்ளிகள் வைக்கின்றன
குழந்தைகளின் சிரிப்புகள்...
குறிப்பு 7
எனது படுக்கை விசாலமானது.
மூன்று பேர் நேராகவும்
நான்கு பேர் குறுக்வெட்டாகவும்
தாராளமாக படுத்தெழும்பலாம்
வீடு திரும்பும் சில வேளைகளில்
படுக்கையின் மீது வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் பொம்மைகளும்
திறந்தபடி கிடக்கும் புத்தகங்களுமாக என் படுக்கையறை
இரைச்சல் மிகுந்திருப்பதாய் தோன்றும்.
விளையாட்டின் பகுதியாகவே அதுவும்
இருக்கலாம் என்பதாக
பொம்மைகளை ஒரு புறத்தே ஒதுக்கிவிட்டு
உறங்கிப் போவேன்
பொம்மைகளுக்கு அவள் வகுப்பெடுப்பதை
தற்செயலாக ஒருநாள் கண்டுகொண்டது தொடங்கி
அவளது
மாணவர்களுக்கு மதிப்புக் கொடுக்க தொடங்கியிருந்தேன்.
என் அறைச் சுவரை
வெண்பலகையாக்கி நாள்தோரும் அவள்
நடத்தும் வகுப்புகளின் சுவாரஸ்யங்கள்
கூடியபடியே இருக்கின்றன.
இரவின் இடையில் எப்போது
கண்விழித்தாலும்
நிமிர்ந்தபடியே இருக்கும் பொம்மைகளையும்
கையில் பிரம்போடு
வகுப்பெடுக்கும் இனியவளையும் இப்பொழுதெல்லாம் தவிர்த்துவிட முடிவதில்லை.
குறிப்பு 8
சற்று நேரங்கழித்தே
வீடு திரும்பியிருந்த என்னை
அண்ணியின் கலவர முகம் வரவேற்றது
பள்ளியில் சேர்த்து
2 மாதமாகிறது
அவள் ஒருத்தரோடும் கதைப்பதில்லையாம்
நாங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னார்களாம்
சரிபடுத்தலாம் என்றவாறு
அறையினுள் நுழைகிறேன்.
மெத்தையில் படுத்தவாறே ஒரு மான்குட்டிக்கு
வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள்
இது என்ன என்பதற்கு “மான்துட்டி” என்றாள்
மழலைமொழி மாறாத அவளிடம் ஆங்கிலம், கணிதம், தமிழ் என
அளவின்றி திணிப்பது துன்பத்தை தந்தது.
அவள் வகுப்பில் எத்தனை பேர் என்றேன்
19 என்று உடனடியாக பதில் வந்தது.
நண்பர்களின் பெயர்களை சொல்லச் சொன்னேன்.
கெளதம், அர்சிந்தா, அர்சிட்டி என சொல்லிக் கொண்டிருந்தாள்
அவளுக்கு எல்லாரையும் தெரிந்திருக்கிறது
நண்பர்களோடு என்ன கதைப்பீர்கள் என்றேன்
வெறும் மெளனம் மட்டுமே பதிலாய் வந்தது
ஏன் கதைக்க மாட்டீர்களாக என்றேன்
இல்லை என்பதன் அடையாளமாய் தலையாட்டினாள்
“அவையள் கதைப்பது விளங்கவில்லை” என்றபடி
மான்குட்டிக்கு வண்ணம் தீட்டுவதில் முனைந்திருந்தாள்
எப்போதும் போல் அல்லாமல்
அன்று என் அறையில் மான்குட்டி ஒன்று
புல் மேய்ந்தபடி இருந்தது.
|
|