|
|
நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை
மீறிய வாழ்வு!
டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு
சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். "சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக
இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின்
பற்றுகிறீர்கள்... ஏன்?" என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு
பதிலைச் சொன்னார். "சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில்
இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. 'எல்லாம்
சிவம்' எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை."
'புயலிலே ஒரு தோணி'யில் மிக முக்கியமான பகுதி அதில் நடக்கும் விவாதங்கள்.
அதில், ப.சிங்காரம் பின்வருமாறு எழுதியிருப்பார். "கற்பனையின்றேல்
வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல்
குடும்ப வாழ்க்கை - அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது? அடிப்படை
அறிவின் வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு அறிவுக்கும்
வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவின் போக்கில் சென்றால் குழப்பமும்
அதன் விளைவாக அழிவுமே கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு - அது அறிவுக்கு
வரம்பு."
ஜெயபாரதி சொல்வதும் சிங்காரம் சொல்வதும் ஒரு வகையில் ஒன்றுதான். அறிவுக்கான
வரம்பு. அதுவே நிலையான சில தீர்ப்புகளை வரைகிறது. பொதுவான நன்மைகளையோ
பாதுகாப்பான வளையங்களையோ ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு காலத்திலும் கழித்தும்
கூட்டியும் சமூக குழுக்களிடையே இந்தக் கற்பனைகள் சட்டமாகின்றன. அதுவே
கடைப்பிடிக்க வேண்டிய கர்மமாகின்றன. அதை மீறுவது குற்றமாகிறது.
குற்றத்திற்குத் தண்டனை கிடைக்கிறது. பின்னர் அக்கற்பனையை ஏற்காதவனை
கற்பனையில் வாழும் சமூகம் ஒதுக்கிவைக்கவும் செய்கிறது. இவ்வாறு
சமூகத்துக்கிடையிலான கற்பனைகளில் கலந்துள்ள நம்பிக்கைகள் நீக்கப்பட்டு
உலகம் மொத்தத்துக்குமான அறங்கள் உருவாகின்றன. அவை மக்கள் மனங்களில் காலா
காலத்துக்கும் விதைக்கப்படுகின்றன.
ஆனால் இந்த அறங்களும் நிலையானதல்ல. போர்கள் மூலமும் மரண தண்டனை மூலமும்
கொலைகள் நியாயமாக்கப்படுகின்றன. வரிகள் மூலம் சுரண்டல்
நியாயமாக்கப்படுகின்றது. இயற்கையை நாசம் செய்வது மேம்பாட்டிற்காக
நியாயமாக்கப்படுகின்றது. விஞ்ஞானத்திற்காக மிருகவதை நியாயமாக்கப்படுகிறது.
விளம்பரங்கள் மூலம் பொய்கள் நியாயமாக்கப்படுகின்றன. இன்னும் யோசித்தால்
திருட்டு, வல்லுறவு, கொள்ளை என அனைத்துமே இன்னொரு தருணத்தில் வேறொரு
உருவமும் பெயரும் எடுத்து நியாயமாக்கப்படுவது நிதர்சனம்.
இந்தக் கற்பனைகளை பெரும்பாலும் அதிகாரம் உள்ளவர்களுக்குச் சாதகமானதாக
இயங்குவதைக் காணலாம். இங்கு அதிகாரம் என்பதும் காலத்துக்குக் காலம்
மாறுபடுகின்றது. படைபலத்தால், பொருளாதார நிலையால், கல்விச்சூழலால்
இவ்வதிகாரம் கட்டமைக்கப்படுகிறது. இதை இன்னும் நுணுகி சென்று ஆராய்ந்தால்
இனக்குழுக்கள், சமூக அந்தஸ்த்து என பிரிந்து அதில் ஒரு சாராருக்குச்
சாதகமாகச் செயல்படுகிறது. இன்னும் அதில் ஆழ்ந்து நோக்கினால் ஆண் - பெண்,
சுமங்கலி - விதவை, அதிகாரி - வேலைக்காரன் என மிக சிறு குழுக்களுக்கு
மத்தியில் நியாயங்கள் பிரிந்துள்ளன . ஆனால், நாம் இங்கு மீண்டும் மீண்டும்
நியாயம் என்பது அதிகாரம் உள்ளவர்களின் நியாயம். அதிகாரம் உள்ளவர்கள்
தங்களுக்குப் பாதுகாப்பானதாக ஆக்கிக்கொண்ட ஒரு வாழ்கை ஒழுங்கு. அல்லது
ஒழுங்கு எனும் கற்பனை. இந்தக் கற்பனைகளை எல்லா காலத்திலும்
களைத்துப்போடுவது அசலான வாழ்வும் அதில் உள்ள மாற்று ஒழுங்கு மட்டுமே.
இலக்கியங்களில் இந்த அசலான வாழ்வு வெளிப்படுத்தும் முறையை இயல்புவாதம்
(naturalism) எனவும் புலன்களால் காணமுடியாத ஆழ்மனம் மட்டுமே அறியும்
யதார்த்தத்தை மீயதார்த்தவாதம் (surrealism) எனவும் விமர்சகர்கள்
சொல்வதுண்டு. நான் சந்தித்த வரை தமிழ் இலக்கிய வாசகர்கள் பலரும் வாழ்வின்
யதார்த்தத்தை விரும்பாமல்தான் இருக்கின்றனர். அல்லது அவர்கள் வாழ்வின்
இயல்பாக மேற்சொன்ன கற்பனைகளை நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாசிப்பு
லட்சியங்களை நோக்கியுள்ளது. வாழ்வின் உன்னதங்களாக அவர்கள் கருதுபவைகளை
பகரும் ஒன்றே இலக்கியமாகிவிடுகின்றது. ஓர் அசலான வாழ்வின் யதார்த்தம்
இலக்கியமாவதால் என்ன பெரிய நன்மை என்பது போன்ற கேள்விகளே எஞ்சியிருக்கக்
காண்கிறேன்.
உதாரணமாக ஷோபா சக்தியின் 'ம்' நாவலைச் சொல்லலாம். மலேசியாவிலும்
தமிழகத்திலும் நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் அது குறித்த எதிர்மறையான
கருத்துகள் வருவதையே காண்கிறேன். அந்த நாவலை அவர்கள் புரிந்து கொண்ட
சுருக்கம் 'மகளை அப்பன் கற்பமாக்கிட்டான்.' அந்த நாவல் குறித்து மேலும்
விவாதிக்கும் தருணம் "அப்படினா நீ மகள அப்பன் கற்பமாக்குறத ஏத்துக்குறியா?"
என்ற அசட்டுத்தனமான கேள்வி வரும். நாம் "இல்லை" என்றால் "அப்படினா இது
எப்படி நல்ல நாவலாகும்" என்பார்கள். "ஆம்" என்றால் முடிந்தது கதை. நாம்
அதோடு மனித வர்க்கத்திலேயே இணைக்கப்பட மாட்டோம். உண்மையில் அது சரியா
இல்லையா என்பதல்ல கேள்வி . நேசகுமரன் போல ஒருவன் வாழ்வை மரணங்களுக்கு
மத்தியில் கடந்து வந்திருந்தால், அதன் வழி நெடுகிலும் பயமும், குற்ற
உணர்ச்சியும் ஊறும் நத்தையின் வெள்ளி பிசுபிசுப்பாய் அடையாளமிட்டே
இணைந்திருந்தால் அவன் மனநிலை என்ன? எஞ்சிய வாழ்வை அவன் எதை கொண்டு சமன்
செய்யப் போகிறான். சிதிலமடைந்த அவன் மனம் வாழ்வின் அறமாக எதை
ஏற்றுக்கொள்ளும்? ஆனால் செறிவூட்டப்பட்ட கனவுகளுக்கு ஏங்கும் வாசக மனம் இதை
ஏற்காது. "இந்தப் படைப்பால் எனக்கு விளையப்போவது ஒன்றும் இல்லை" என
சுறுக்கமாக ஒரு முடிவை வைத்திருக்கும். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் சொன்னது
நினைவுக்கு வருகிறது. 'இயல்புவாதம் உண்மையில் சற்று முதிர்ந்த மனம்
கொண்டவர்களுக்கான அழகியல்.'
0 0 0
கே.பாலமுருகனின் 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' ஓர் இயல்புவாத நாவலே.
ஆனால் அவர் அதில் அசலான வாழ்வை மட்டும் பேசாமல், ஆழ்மனம் கொண்டிருக்கும்
இன்னொரு நியாயத்தையும் பேசுகிறார். கனவுகள் கொண்டுள்ள படிமங்களால் பயத்தை,
பாதுகாப்பின்மையை, வன்முறையை நாவலெங்கும் படரவிடுகிறார். இதன் மூலம்
மீயதார்த்தவாதமாகவும் இந்நாவல் இன்னொரு பரிணாமத்தைக் கொண்டுள்ளது.
சுவாரசியமற்ற வரண்ட முழு நிஜங்களால் ஆன வாழ்வு ஒரு புறமும்; உணர்ச்சிகள்
மிகுந்த கனவுகளால் ஆன வாழ்வு மறுபுறமும் என இந்நாவல் பிண்ணி
புனையப்பட்டுள்ளது.
கே.பாலமுருகனின் இலக்கியச் செயல்பாட்டை என்னால் இரண்டு காலக்கட்டங்களாகவே
பார்க்க முடிகின்றது. முதலாவது வல்லினத்துக்கு முன் மற்றது
வல்லினத்துக்குப் பின். பாலமுருகன் 2002 கவிதை புனைவதிலிருந்து தன்
இலக்கியச் செயல்பாட்டைத் தொடங்குகிறார். 2004 அவரது புனைகதை முயற்சி
தொடங்குகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரி அவருக்கு சிறந்த இலக்கியக் களமாக
இருக்க உதவியவர் அதில் விரிவுரைஞராகப் பணியாற்றும் தமிழ்மாறன். வல்லினம்
தொடங்கும் வரை நான் பாலமுருகன் என்பவரை அறிந்திருக்கவில்லை. ஒரு சமயம்
எழுத்தாளர் சீ.முத்துசாமி அழைத்தார். புதிதாக ஓர் இளைஞர் சிறுகதைகள்
எழுதுவதாகவும் அதை வல்லினத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றார். சிறுகதை
வந்தது. வாசித்ததில் அதன் இறுதி பகுதி தேவையற்றதாகப் பட்டது. அதை
நீக்கிவிட்டதாக பாலமுருகனிடம் தெரிவித்தேன். மறுநாளே சீ.முத்துசாமி அழைத்து
எப்படி அவ்வாறு நீக்கலாம் என கடிந்தார். கதையை அவ்விறுதி பகுதி
நாடகத்தன்மையாக்குவதைச் சுட்டிக்காட்டியதும் சமாதானமானார். இவ்வாறு, 2007ல்
வல்லினத்தில் வந்த பாலமுருகனின் முதல் சிறுகதைதான் 'வலியுறுத்தல்
கடவுள்களின் படுக்கையில்... நான் கேசவன் குன்மா பாதுகாவலர்'.
நீளமான தலைப்பைப் பார்த்ததும் எனக்கு முதலில் அதிர்ச்சியாகவே இருந்தது.
ஆனால் 'பாதுகாவலர்' என விளித்தது அவர் மேல் நம்பிக்கையை ஏற்றியது. தொடர்ந்த
உரையாடலில் பாலமுருகனுக்கும் எனக்கும் ஒரே ஊர் (கெடா); ஒரே வயது; ஒரே
தொழில் என அறிய முடிந்தது. சுங்கைப்பட்டாணியிலிருந்து அதிகாலையில் 5
மணிக்குக் கோலாலம்பூர் வந்தாலும் விழித்திருந்து வீட்டுக்கு ஏற்றிவரும்
அளவில் நட்பு விரைவாக வளர்ந்தது. ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் அவர் மொழி
பயன்பாட்டை நான் விமர்சிக்கத் தொடங்கிய போது சட்டென அது உதிர்ந்து
விழுந்தது. விவாதங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் உக்கிரம் அடைய இருவருமே பேசுவதை
நிறுத்திக்கொண்டோம். ஒருவருட மௌனம்.
ஓர் இலக்கிய வாசகனாக, பாலமுருகனின் சிறுகதைகள் வெறும் உக்திகளை
நம்பியிருந்த காலமாகவே அந்த ஒரு வருடத்தை நான் வர்ணிப்பேன். பாலமுருகனுடன்
எனக்கு 'மொழி அரசியலில்' தொடர்பாக எழுந்த விவாதத்தின் விளைவாக,
கோட்பாடுகளின் மீது அவர் கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தது. குறிப்பாக
'பின்நவீனத்துவம்'. அதன் முழுமையற்ற புரிதலால் பாலமுருகனின் மொழி
முறுக்கிக் கிடந்தது. அவரால் படிமங்களை தொழில் நுட்பமாக உற்பத்தி செய்ய
முடிந்தது. அவர் கதைகளில் வரும் எளிய காட்சியை விளக்க வார்த்தைகள்
ஒன்றோடொன்று சிக்கி திணரின. எல்லா கதைகளும் ஒன்று போலவே காட்சி கொடுத்தன.
அவரது கட்டுரைகளுக்கும் அதுவே நிகழ்ந்தது. 'அரசியல்' என்ற வார்த்தையை
அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார். அ.மார்க்ஸ், பிரேம் ரமேஷ்
போன்றவர்கள், குறிப்பிட்ட அறிவுத்துறைகாக உருவாக்கிய வார்த்தைகள் கவனமின்றி
பாலமுருகனின் கட்டுரைகளில் மிதந்தன.
வேறு யாரைவிடவும் என்னால் பாலமுருகனின் அந்த நிலையை நன்கு உணரமுடியும்.
காரணம் நானும் அத்தகையதொரு மனநிலையில்தான் சிலகாலம் இருந்தேன். வார்த்தைகளை
அடுக்கி விளையாடும் ஒரு காலக்கட்டம் அது. அவ்வாறு அடுக்கி, அது தரும் ஓர்
அர்த்தம் நானே புதிய மொழியைக் கண்டடைந்த கிளர்ச்சியை உருவாக்கும். ஆனால்
அதிலிருந்து சீக்கிரமே மீள சண்முகசிவாவின் விமர்சனம் எனக்கு உதவியது.
'மொழியை இப்படி முறுக்கி அதை ஏன் கஷ்டப்படுத்தனும்' என்பார்.
பாலமுருகனுக்கு அவ்வாறு சொல்ல யாரும் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
இலக்கியத்தில் இயங்கத்தொடங்கும் புதிதில் சிலரது ஆலோசனைகள் சட்டென நம்மை
உதரி மீண்டும் புதிதாகத் தொடங்க உதவுகிறது. விமர்சனம் இல்லாத பாராட்டுகளும்
பரிசுகளும் அந்தக்கனவு நிலையிலிருந்து நம்மை மீட்பதே இல்லை. பாலமுருகனுக்கு
அவ்வசம்பாவிதம் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. எவ்வித இலக்கிய ரசனையும் இல்லாத
பேராசிரியர்களால், அவரது கதைகளுக்குப் புதிய அடையாளங்கள் தரப்பட்டன.
மாலையைப் போட்டே ஒருவனை கொல்ல முயன்றன விமர்சனங்கள்.
தகுந்த இலக்கிய நண்பர்கள் இல்லாதது சிலரை செயலிழக்கச் செய்யும். ஆனால்,
கே.பாலமுருகன் தொடர்ந்து உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தது ஆச்சரியம்.
'அநங்கம்' எனும் சிற்றிதழ் நடத்தினார். 'ஒரு கோப்பை தேனீர்' என்ற
இலக்கியவாதிகளுடனான கலந்துரையாடலை நிகழ்த்தினார். வலைத்தளங்களில்
விவாதங்கள் மூலமாக தொடர்ந்து வாசகர்கள் கவனத்தைத் தன் மீது
குவித்துக்கொண்டே இருந்தார். அது ஓர் ஊக்கம். தனித்திருக்கும் ஒருவனிடம்
அதை காண்பது அரிது. அதன் பின்னர் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் பாலமுருகன்
வல்லினத்துடன் இணையும் போது அவர் மொழியில் இயல்பாகவே மாற்றம் தெரிந்தது.
அன்பும் நட்பும் எப்போதும் தேவையற்ற இறுக்கத்தை தளர்த்திவிடுகின்றன.
பாலமுருகனிடம் மீண்டும் பழைய இயல்பான எழுத்து நடை ஒட்டிக்கொண்டது. அவரது
சிறுகதைகள் இன்னும் கூர்மையானது. மொழி சரளமானது. ஏற்புடைய மாற்றங்களை
ஏற்றுக்கொண்டார். உரையாடலுக்கான சுதந்திரம் பிறந்தது.
கே.பாலமுருகனைப் பற்றிய இவ்வாறான சித்திரத்துடன்தான் நாவலை
படிக்கத்தொடங்கினேன். ஆனால், பாலமுருகன் இந்த நாவலை 2006லேயே
எழுதியிருந்தார். அதாவது கோட்பாடுகள் தொடர்பான குழப்பங்கள் எழாத முன்பு.
அதனாலேயே நாவல் அசலான ஒரு மனநிலையைப் பிரதிபளித்தது. அதுவே முதலில்
இந்நாவலின் பலம்.
0 0 0
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு - நல்வழி
ஒருவகையில் 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' இதைதான் சொல்கிறது.
வரவுக்கு மீறிய செலவு செய்தால் மானம் அழிந்து மதி கெட்டு, திருடன் என்ற
பழிச்சொல்லுக்கு ஆளாகி, அன்பானவர்களும் நம்மை வெறுக்க நேரும். அப்படியானால்
இதை சொல்லிவிட்டு போகலாமே... ஏன் 239 பக்கங்களுக்கு ஒரு நாவல்?
மேலே உள்ள நல்வழி அதற்குமேல் அறிவை செல்ல விடாத ஒரு தீர்ப்பு. 'கடன்
வாங்கினால் துன்பப்படுவாய். எனவே கடன் வாங்காதே'. இதற்கு முந்தைய மலேசியப்
படைப்புகள் பலவும் இந்த தீர்ப்புகளைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. ஏற்கனவே
உள்ள ஒழுக்க நெறிகள், ஏற்கனவே கடைப்பிடிக்கப்படும் குடும்ப அமைப்பு,
ஏற்கனவெ வேரூன்றியுள்ள நம்பிக்கைகள் என அவற்றை வலுப்படுத்தவும் அவற்றோடு
இணங்கி போகவும் மட்டுமே நாவல்கள் உருவாக்கப்பட்டன. மலேசியத் தமிழர்
வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல்கள் ஒரு காலத்தைப் பதிவு
செய்துள்ளதில் முக்கியத்துவம் பெற்றாலும் இருக்கின்ற நம்பிக்கைகளை ஒட்டி
கேள்வி எழுப்பியதில்லை. தோட்ட மக்களின் எழுச்சியையும், போராட்டத்தையும்,
தியாகத்தையும் பேசிக்கொண்டிருந்த காலத்தில் எம்.குமாரனின் 'செம்மண்ணும்
நீலமலர்களும்' நாவலில் மட்டும் போராட்டத்தின் தோல்வியும் அதன் கசப்பும்
பதிவு செய்யப்பட்டிருக்கும். போராட்டம் வெற்றியடைவது ஒரு யதார்த்தம்
என்றால் தோல்வியடைவதும் இன்னொரு யதார்த்தம்.
பாலமுருகன் தீர்ப்புகளைக் கடந்து செல்கிறார். யதார்த்த வாழ்வு எத்தனை
சீரின்மைக்கொண்டது என காட்சிப்படுத்துகிறார். அவ்வகையில் இந்நாவல் வடிவ
ரீதியிலும் உள்ளடக்க ரீதியிலும் மலேசியாவில் புதிய முயற்சி. மலேசிய
நாவல்களின் புதிய பரிணாமத்திற்கு பாலமுருகன் ஒரு தொடக்கம் என்றும்
சொல்லலாம்.
0 0 0
நாவலில் குறைவான கதாபாத்திரங்கள்தான். சீதாம்பரம் - சாரதா எனும் இரு
தம்பதிகள் . அவர்களுக்கு அஞ்சலி , கணேசன், செல்வம், தமிழ்வாணன் என்ற நான்கு
குழந்தைகள். கதை முழுக்க இவர்களைச் சுற்றிதான் நகர்கிறது. மற்ற
பாத்திரங்கள் எல்லாம் வந்து போகிறார்கள்...அவ்வளவே. நாவல் ஒவ்வொரு
கதாபாத்திரங்களின் நினைவிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக முழுமை அடைகிறது.
கடன் கொடுத்தவர்களின் நச்சரிப்பாலும் மிரட்டலாலும் பயந்து சீதாம்பரம் தன்
இளைய மகன் செல்வத்தை நண்பன் வீட்டில் விட்டு விட்டு ஊரை விட்டு ஓடிவிட
முடிவெடுக்கிறான். அவனுக்கு செல்வம் கடைசியாக அழுதது நீங்காத ஓலமாக
எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. இரவில் மூடிக்கிடக்கும் ஒரு நாசி லெமாக்
கடையின் நீள் நார்காலியில் படுத்தபடி தனது இறந்தகாலங்களை யோசிக்கிறான்.
அதே தருணம், தான் வரும்வரை கதவைத் திறக்க வேண்டாம் என சொல்லிச்சென்ற கணவன்
இன்னும் வராததால் மூடிக்கிடக்கும் அறை இருளில், அச்சத்தில் தனித்திருக்கும்
சாரதாவின் சிந்தனையும் இறந்த காலங்களை அசைப்போடுகிறது. அதில் அகன்ற கண்,
பெரிய தலை என குறியும் இல்லாமல் பிறந்த மகன் தமிழ்ச்செல்வனின் நினைவுகள்
மோதுகின்றன. அவனை வளர்க்க இயலாமல் சிரமத்தில் கோலாலம்பூரில் வசிக்கும்
ஒருவரிடம் கொடுத்ததும்; அதனால் ஏற்பட்ட தோட்டத்து வசைகளும் அப்போதும்
காதுக்குள் கேட்கின்றன. மகளின் திருமணத்துக்காகக் கடன் வாங்கியது எவ்வளவு
பெரிய பள்ளத்தில் இழுத்துவிட்டது என வருந்துகிறாள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மகள் அஞ்சலியும் திருமணமாகி ஈப்போவின் நகர வாழ்வோடு
இணங்க முடியாமல் தனது இறந்த காலத்தில் மூழ்குகிறாள். தனது சின்ன வயது
தோட்டத்து வாழ்விலிருந்து தொடங்கும் அவள் எண்ணங்கள் திருமணத்தால் இப்போது
இருளடைந்து விட்டதை எண்ணி அழுகிறாள். அதிகாலையில் சென்று நள்ளிரவில் வரும்
கணவன், எதையும் கண்டுக்கொள்ளாமல் தன் கணவுடனும் பேசாமலும் தனித்திருக்கும்
மாமியார், பட்டும் படாலும் பதில் சொல்லி குடும்பத்துடன் இணையாமல் தனது
காய்கறி தோட்டத்திலேயே குடித்தனமாக இருக்கும் மாமனார் என வாழ்க்கை
மௌனமாகிவிட, செய்ய ஒன்றும் இல்லாத அவள் துணிகளைக் களைத்து களைத்து
மடிக்கிறாள்.
கடன்வாங்கியுள்ள அப்பாவின் கையாளாகாதத் தனத்தால், தனது வாழ்வை தானே
நண்பர்களுடன் தீர்மாணிக்க யாரிடமும் சொல்லாமல் பட்டர்வோர்த்திற்குப்
போய்விடும் கணேசனால் இன்னொரு கோணத்திலிருந்து நாவல் செல்கிறது. எப்படியும்
ஏஜன்ட் மூலமாக சிங்கை சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் அவன்
தற்காலிகமாகத் தங்கியிருக்கும் அந்த வீட்டின் இருள் மீண்டும் அவனது இறந்த
காலத்தைச் சிந்திக்க வைக்கிறது. அதில் அவனுக்கு எதிரி அவன் அப்பா
சீதாம்பரம்தான். தன்னைப் படிக்க விடாமல் ரப்பர் பால் சேகரிக்க காலையிலேயே
எழுப்பி அழைத்துச்செல்லும் அவரை பல்வேறு சூழலில் வெறுக்கிறான். அந்தக்
குடும்பத்தைவிட்டே தணித்திருப்பதுதான் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இவ்வாறு நான்கு நபர்களின் நினைவிலிருந்தும் நிஜத்திலிருந்து உருபெரும்
நாவல் அவரவர் நியாயங்களைப் பேசுகிறது. மகளின் திருமணத்துக்காகப் பெரும்
கடனை சீதாம்பரம் உள்ளூர நியாயப்படுத்துகிறார். வறுமையில் வளர்க்க இயலாத
ஊனமுற்ற குழந்தையை அடுத்தவருக்குக் கொடுத்ததை சாரதாவும் ஏற்றுக்கொண்டே
வாழ்கிறாள். இங்கிருந்தால் இனி முன்னேற்றம் இல்லை என முடிவெடுத்த கணேசன்
வீட்டைவிட்டு ஓடுவதை நியாயப்படுத்துகிறான். எதற்குமே அசையாத, சத்தமற்ற அந்த
வீட்டிலிருந்து மீள, கணவனைவிட்டு விட்டு தன்னைக் காதலிக்கும் ஒரு இளைஞனை
நம்பி கோலாலம்பூர் பேருந்து ஏறும் அஞ்சலியும் தனக்கான நியாயங்களை
வைத்துள்ளாள். இதில் எல்லோரும் வருத்தம் கொண்டிருப்பதாக பாவனை
செய்துக்கொண்டிருந்தாலும், வாழ்வு அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
வீட்டில் இல்லாத கணேசனைத் தேடி நேரமாக்குவதில் இனி ஆகப்போவது ஒன்றும் இல்லை
என முடிவெடுத்த சீதாம்பரம், அவன் வரும்போது வரட்டும் எனும் போக்கில்
மனைவியை அழைத்துக்கொண்டு கோலாலம்பூர் கிழம்புகிறார். சற்றைக்கு முன்
நாசிலெமாக் கடையில் , நண்பனின் வீட்டில் விட்ட இளைய மகனின் அலறல்
சத்தமெல்லாம் அவரை காப்பாற்றிக்கொள்ள தடையாக இல்லை. வாழ்ந்தாக வேண்டும்.
அதற்கு சுமையாக இருக்கும் எதையுமே தூக்கியெறியத் தயாராக இருக்கிறார்.
நியாயம் என்பது ஒன்றல்ல. அது பன்மை தன்மைக்கொண்டது. மொத்தமான பார்வையில்
தீர்மாணிக்கப்படும் நியாயங்களால்தான் தனிமனித நியாயங்கள்
சாகடிக்கப்படுகின்றன. ஒரு திருடனின் நியாயம் என்ன? ஒரு பாலியல்
தொழிலாளியின் நியாயம் என்ன? ஒரு தீவிரவாதியின் நியாயம் என்ன? என ஆராயும்
போது நாம் அவர்களைக் கொண்டாடாத போதும் வெறுக்க முடிவதில்லை. நல்ல
இலக்கியங்கள் மனதை நிபந்தனைகளற்ற அன்பை வழங்கவே தயார் செய்கின்றன. இன்னும்
சொல்லப்போனால், கட்டுப்பாடுகள் கொண்ட கற்பனை கொடுக்கும் அன்பின் உயிர்ப்பை
போலவே அதன் எதிர்நிலையில் நின்று வாழ்வின் அத்தனை சாத்தியங்களையும் ஊடுறுவி
செல்லும் யதார்த்தம் வந்தடையும் இடமும் அதுவாகவே இருக்கிறது. யதார்த்தமும்
கற்பனையும் ஒரு நாணயத்தின் இரு வேறு பக்கங்களோ என்று தோன்றுகிறது.
0 0 0
பொதுவாக இதுபோன்ற நாவல்களை எழுதும்போது காலம் குறித்த குழப்பம் இருக்கும்.
பாலமுருகன் நேர்த்தியாகக் காலங்களைக் கோர்த்துள்ளார். ஒவ்வொருவரின்
சிந்தனையிலும் மீண்டும் மீண்டும் தோட்டமும், தோட்டத்திலிருந்து மாற்றலாகிய
கம்பமும் வெவ்வேறு கோணங்களிலிருந்து காட்சிப்படுகின்றன. இறந்தகால
சிந்தனைகள் யதார்த்த வாழ்வைச் சொல்ல, நிகழ்கால பயங்கள் பெரும் கனவுகளாய்
அவர்களைத் துரத்தி வருகின்றன. அவை ஆழ்மன பயங்கள். அந்த பயங்களை பாலமுருகன்
மிக நுண்மையான படிமங்களாகச் சித்தரித்துள்ளார். நிகழ்காலங்களில் இருளை
எங்கும் அள்ளித்தெளித்துள்ளார்.
ஜெ. பிரான்ஸிஸ் கிருபாவின் 'கன்னி' நாவலிலும் இதுபோன்ற ஆழ் மன பதிவுகள்
இருக்கும். அதை வாசிக்க வாசிக்க மனதில் எங்கோ ஒரு மூலையில் வெளிச்சம்
உருவாகி அவர் ஏற்படுத்தும் படிமத்தில் நிலைகொள்ளாது வரம்பற்ற வெளியில்
திசைதெரியாது படர்ந்து பரவும். அத்தனையும் கவித்துவம். நாவல் என்னை
கவராவிட்டாலும் அவரது மொழி ஒரு கண்ணி. ஆனால், பாலமுருகன் ஏற்படுத்தும்
மனச்சித்திரங்கள் பயமுறுத்துகின்றன. இருக்கின்ற வெளிச்சங்களை
துரத்தியடித்து இருளாக்குகின்றன. பயம் கொள்ளச் செய்கின்றன. பயமும் ஒரு
கண்ணிதான். அதை நாம் விரும்பியே அணுகுகிறோம். விரும்பாதது போல பாவனை
செய்கிறோம். 'ரோலர் கோஸ்டர்' விளையாட பயந்த முகத்துடன் வரிசை நிர்ப்பது
போல.
நாசி லெமாக் கடையில் படுத்துள்ள சீதாம்பரத்தால் தூங்க முடியாதபடி, பல்வேறு
காட்சிகளும் உணர்வுகளும் உசுப்பியபடியே இருக்கின்றன. படுத்திருக்கும் அவர்
காலை செல்வத்தின் கரங்கள் சுரண்டுகின்றன. இறந்து போன அவர் அம்மா, அவரை
பெரட்டுக்குக் கிளம்பச்சொல்கிறார். அஞ்சலி கடைக்குப் பின் புறம் இருக்கும்
சாக்கடையிலிருந்து கூந்தலை நீண்ட கைகளால் சல்லடை செய்தபடி வந்து தனக்குத்
திருமணம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு மீண்டும் சாக்கடைக்குள் சென்று
அமர்ந்துகொள்கிறாள். விளக்குக் கம்பத்தில் அமர்ந்திருக்கும் சீனக்கிழவன்
வட்டிக்குப் பணம் வேண்டுமா என்கிறான். ஆனால் அக்குரல் செட்டிதாத்தாவின்
குரலாக மாறுகிறது.
சாரதாவின் ஆழ்மனம் இன்னும் பயங்கரமான கனவுகளைக் கக்குகிறது. கணவன்
வருகைக்குத் தனிமையில் காத்திருக்கும் அவள் மனதின் பிரதிபளிப்பை
மிகுபுனைவான சித்திரங்களின் மூலம் படிமமாக்குகிறார் பாலமுருகன்.
உடல்குறையுடன் பிறந்த தமிழ்வாணன் திடீரென தோன்றி பயங்கரமாகச் சிரித்தபடி
காற்சட்டையைக் கலட்டி பால் அடையாளம் இல்லாத வெற்றிடத்தைக் காட்டுகிறான்.
பின்னர் நீட்டிய கால்களுக்கிடையில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக கடன்காரர்களின் கழுத்தறுக்கும் வலியால் துடிக்கும்
கணவனில் அலரல் அவளை பதறவைக்கிறது. இவையெல்லாம் இருளிலேயே நிகழ்கின்றன.
பாலமுருகன் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்விருளின் பயங்கரத்தை இவ்வாறு
சித்தரிக்கிறார், 'அவளைச் சூழ்ந்திருக்கு இருக்கும் அடந்த இருள் அவள்
கைகளிலும் சுருண்டு படுத்திருக்கிறது, அஞ்சலியின் மனம் வேறொரு வகையில்
சிதிலமடைந்திருக்கிறது. தனிமையும் சூன்யமும் படர்ந்த அறையில் அவள் தன்
சோகத்தைச் சொல்லி அம்மாவுக்குக் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறாள். ஒவ்வொரு
முறையும் அதை கிழித்து கட்டிலுக்கு அடியில் எறிகிறாள். அடுக்கப்பட்ட
துணிகளை மீண்டும் களைத்து அடுக்குகிறாள். அதன்மூலம் தனது இருப்பை உறுதி
செய்துக்கொள்கிறாள். ஏதாவது ஒரு சத்தத்தைக் கேட்டுவிட முடியுமா என தன்
காதுகளைக் கூர்மையாக்கி ஏங்கி ஏங்கி சூன்யத்தை நிறைத்துக்கொள்கிறாள்.
பின்னர் அவள் மனம் சுயமாக சில சுரண்டும் ஓசைகளை உருவாக்கிக் கொள்கிறது.
பட்டர்வோர்த்தில் இருக்கும் கணேசனும் இருளில்தான் மூழ்கி கிடக்கிறான். உடன்
இருப்பவர்கள் குறித்த எவ்வித அறிமுகமும் இல்லை. அவனது பிரமையில் யாரோ
அவனுடைய தலையை ஓங்கி உதைக்கிறார்கள். அவன் ரப்பர் மரங்களுக்கிடையில்
பறக்கிறான். அவனை பள்ளிக்குக் கொண்டு செல்ல முருகேசு வாத்தியாரும்
மரத்துக்கு மரம் அவனைப்பிடிக்க தாவித் தாவி வருகிறார்.
கடன்பட்டவர்களின் மனநிலையையும் பாதுகாப்பின்மையையும் பாலமுருகன்
ஏற்படுத்தும் கனவுகளால் உணரமுடிகின்றது. குற்ற உணர்வுகளை ஏந்தியிருக்கும்
மனம் சதா ஏதோ ஒரு கற்பனை வடிவத்துடன் போராட வேண்டியுள்ளது. உண்மையில்
இந்தப் பயத்திற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியே நாவல் நெடுகிலும்
ஏற்படுகிறது. சீதாம்பரம் கடன்கொடுத்தவருக்குப் பயப்படுவதை காட்டிலும்
கடனைத் திரும்பத் தர முடியாததை எண்ணியே வருந்துகிறார். அவரை
துன்புறுத்துவது அவர் அற உணர்வு. அல்லது ப.சிங்காரத்தின் மொழியில் சொன்னால்
கற்பனை முடிவு. அதுதான் அவரை தாமதமாக முடிவெடுக்க வைக்கிறது. அவ்வறத்தை
மீறும் ஒரு நெருக்கடி வரும்வரை காத்திருக்கிறது. நியாயத்தை மீறுவதற்கான
நியாயத்தைத் தேடுகிறது.
நாவலின் தொடக்கத்திலேயே சீதாம்பரத்தின் நேர்மையை பாலமுருகன் பல்வேறு
சூழல்கள் மூலம் விளக்குகிறார். வருமானம் குறைந்தாலும் பாலில் நீர் கலக்காத
நேர்மையான தோட்டத்தொழிலாளி அவர். தான் யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டேன் என
பல இடங்களில் நிரூபிக்கவும் செய்கிறார். ஆனால், வாழ்க்கை அவனை
விடுவதாயில்லை. எல்லா மீறல்களையும் செய்தப்பின்பும் அவன் வாழவே
துடிக்கிறான்.
0 0 0
நாவலில் பாலமுருகன் கையாண்டுள்ள மொழி வாசிப்பதற்கு நெருக்கமானது. நாவல்
முழுக்கவே சலனமற்ற மொழியின் மூலமே காட்சிகளை உருவாக்குகிறார். பொதுவாக கெடா
மாநிலத்து மொழியை பலரும் கிண்டல் செய்வதுண்டு. வடக்கில் உள்ளவர்களுக்கென்றே
தனித்த சில வட்டாரச் சொற்கள் உண்டு. பாலமுருகன் அவற்றைத் தாராளமாகப்
பயன்படுத்துகிறார். ஜாமன் கொட்டாய் (கழிப்பறை), மாசி (மாதிரி), ஜாமான்
(பொருள்) என அவை தொடர்கின்றன. வடக்குத் தமிழில் அதிகம் கிண்டலுக்குள்ளாலும்
கொக்கோய் (பலகாரம்) மட்டும் நாவலில் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
அதே போல கதாப்பாத்திரங்களின் தொழிலையும் பாலமுருகன் இயல்பாகவே
சித்தரித்துள்ளார். நானும் கெடாவில் சீனக் கம்பத்தில் வசித்ததால் சாரதா
வீட்டில் இருந்தபடியே செய்யும் கையுரை தயாரிப்பை எளிதாக உள்வாங்க
முடிகிறது. மூட்டை மூட்டையாகத் தொழிற்சாலையிலிருந்து வந்து இறங்கும்
பொருட்களை முழுமைபடுத்தி அனுப்பும் வேலையை நானும் என் அம்மாவுடன் சேர்ந்து
செய்த தினங்கள் நினைவுக்கு வருகின்றன. மெக்னம் எண்களை சுமந்தபடி சீனர்
உணவகங்களில் வளம் வரும் தமிழர்களின் தோற்றம் சீதாம்பரத்தின் மூலம் காண
முடிகின்றது. மேலும் சீனர் வசிக்கும் பகுதிகளில் அதிகம் காண முடிகிற 'டத்தோ
சாமி' குறித்த சித்திரமும் கதை களத்தை உயிர்ப்பிக்கிறது.
செறிவு செய்யப்படாத படைப்பிலக்கியத்தில் உள்ள சில பலவீனங்களும் இந்த
நாவலில் உண்டு. கதாபாத்திரங்கள் பேசி முடித்தப்பின் மீண்டும் வரிகளில்
பாலமுருகன் அதை விளக்க முயல்வது, மலாய் வசனங்களை மீண்டும் தமிழில்
வரிகளாகச் சொல்லிச்செல்வது , போன்றவற்றை ஒழுங்கு செய்தால் வாசிப்புக்குச்
சிறப்பாக இருக்கும். அதே போல உடல்குறையுடன் பிறந்த தமிழ்வாணன் குறித்த
சித்திரமும் மனதில் பதியவில்லை. அவன் மேலோட்டமாக வந்து செல்கிறான்.
விரிவாக்கப்பட வேண்டிய மற்றுமொரு பகுதி கையுறை செய்யும் காட்சி. கடுமையாக
உழைப்பை பிழிந்து குறைந்த கூலி கொடுத்து ஏமாற்றும் தொழிலாகவே இன்றும் அது
உள்ளது. சில சீன முதலாளிகளால் தொழிற்சாலையிலிருந்து குத்தகைக்கு
எடுக்கப்படும் அந்த ரக தொழில்களுக்கு சம்பளம் வழங்குவதில் இன ரீதியான
வேறுபாடுகளும் உண்டு. இந்தச் சுரண்டலை அனுமதித்தே தங்கள் இயலாமையையும்
இல்லாமையையும் மறைக்க நினைக்கும் தமிழ்க் குடும்பங்கள் ஏராளம்.
0 0 0
நாவலை பாலமுருகன் முடித்தவிதமே ஒட்டுமொத்த கதைக்கும் கூடுதல் சக்தியைக்
கொடுக்கிறது. சிதறுண்ட குடும்பத்தினர் மீண்டும் தங்கள் வாழ்வை
அமைத்துக்கொள்ள வெளிசத்தை நோக்கி பறக்கும் விட்டில்கள் போல பெருநகரங்களை
நோக்கிச் செல்கிறார்கள். இப்போது யார் மனதிலும் குற்ற உணர்ச்சி இல்லை.
இன்னும் வாழ்வதற்கான சாத்தியங்கள் உண்டு என்றே நம்புகிறார்கள்.
பட்டணங்களில் அடையாளமற்று சிதறிக்கிடக்கும் மனித கூட்டத்தில் நடமாட்டம்
அவர்களுக்குள் நம்பிக்கை விதைக்கிறது. இந்த வாழ்வை அதன் கற்பனையையும்
கற்பிதங்களையும் கிழித்துக்கொண்டு வாழ்ந்து முடித்துவிடலாம் என
நகர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களில் அவர்களும் கலக்கிறார்கள்.
ஜெயபாரதிக்கும் சிங்காரத்துக்கும் புரியாதது எளிய மனிதர்களான அவர்களுக்குப்
புரிந்துவிடுகிறது.
|
|