|
|
மலை பயணம்
பொழுது முழுவதும் பள்ளி பணிகளிலேயே கழிந்து போனாலும்,
காலும் கையும் சும்மா இருப்பதில்லை எங்களுக்கு. கொஞ்சம் நீண்ட விடுமுறை (3
நாட்கள்) வந்தால் போதும். எங்கே போகலாம் என்ன மூளைக்குள் அரிக்க
தொடங்கிவிடும். பொதுவாகவே நாங்கள் (அதாவது நாங்கள் மூன்று தோழிகள்) இயற்கை
அழகை நாடி தான் செல்வோம். அதிலும் சரவாக் இயற்கை வளம் நிறைந்த மாநிலம்.
எனவே எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வாய்ப்பை
நழுவவிடுவதில்லை. கடலின் நடுவில் அலைகழிக்கப்பட்ட அனுபவத்தினால் கொஞ்ச நாள்
கடல் வாசம் வேண்டாம் என்று ஒத்தி வைத்து விட்டோம். கடலின் ஆக்ரோஷத்தில்
தத்தளித்ததை இப்போது நினைத்தாலும் ஈரக்குலையே நடுங்குகிறது. ஆனாலும்
இயற்கையின் தளை கரங்கள் எங்களை விட்டு அகலுவதாய் இல்லை. சென்ற வருடம்
மலேசிய நாள் (16.9.2011) வெள்ளிக்கிழமையன்று வந்ததால் அடுத்தடுத்து வந்த
பொது விடுமுறையின் சனிக்கிழமையில் காடிங் மலையின் உச்சியை தொடுவதற்குத்
திட்டமிட்டோம். சாதாரணமாக மலாய் மொழியில் ஒரு இணைமொழி உண்டு. வெற்றியடைந்து
விட்டால் காடிங் உச்சியை தொட்டுவதாக சொல்வார்கள். அதாவது sehingga ke
menara gading. அந்த வார்த்தை இந்த மலை உச்சியை குறிப்பிட்டு கூட
இருக்கலாம். அவ்வளவு உயரம். ஆனால் சந்துபோங் மலையின் உயரத்தை விட
குறைவுதான்.
நாங்கள் மூவருமே பெண்கள் என்பதால், மலையேறுவதற்கு வழித்துணையாக எங்களுக்கு
ஆண் துணை தேவைப்பட்டது. எனவே எங்களை போலவே புதிதாய் பள்ளிக்கு மாற்றலாகி
வந்திருந்த ஆண் ஆசிரியரும் அவரின் நண்பரும் அதோடு இன்னொரு பெண் ஆசிரியரும்
வருவதாக இருந்ததால் மூன்றாக இருந்த எங்களின் எண்ணிக்கை ஆறாக கூடியதில்
அனைவருக்குமே மகிழ்ச்சி. அதுவும் எங்கள் குழுவில் ஆண்கள் இருந்தது
நிம்மதியானதாக அனைவருக்குமே பட்டது. ஏற்கனவே மலையேறுவதில் அனுபவமுடய சிலரை
அனுகியதில் தனியாகவோ அல்லது இரண்டு மூன்று பேராக மலையேறுவதை விட கணிசமான
எண்ணிக்கையில் ஏறுவதே பாதுகாப்பானது என தெரிய வந்தது.
பயணத்துக்கு தேவையானதாக ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே எடுத்து கொண்டோம்.
தோளில் மாட்டும் பையே ஒவ்வொருவருக்கும் வசதியாக இருந்தது. அவற்றில்
போத்தலையும் ரொட்டியயும் திணித்து விட்டு பயணத்தை தொடங்கி விட்டோம். காலை 7
மணியளவில் கூச்சிஙிலிருந்து புறப்பட்ட நாங்கள் சரியாக காலை 9 மணிக்கு
காடிங் வன காப்பகத்தை அடைந்தோம். அதன் அலுவலகம் முதன்மை சாலையை விட கொஞ்சம்
உட்புறமாக அமைந்திருந்தது. ஒரு 15 நிமிட தூரம். அங்கே தங்குவதக்கு அனைத்து
வசதிகளும் செய்து தரப்படிருந்தன. எனவெ மாலையில் வருபவர்கள் இரவில் அங்கே
தங்கி மறுநாள் காலையிலேயே மலையேறலாம். நாங்கள் பகலிலேயே பயணத்தை முடிப்பதாக
இருந்ததால் தங்கும் விடுதி எங்களுக்கு தேவை படவில்லை. மலை பயணத்தை
தொடங்கும் முன் எப்போதும் போல அலுவலகத்தில் ஆஜார் போட்டு விட்டு அப்போது
பணியிலிருந்த பணியாளரிடம் சில விஷயங்களை விசாரித்தோம். எங்களை போல் பலரை
அவர் பார்த்திருந்ததால் நாங்கள் கேட்காமலேயே சில விசயங்களை வாய்வழி
செய்தியாக சொன்னார். அவை பின் வருமாறு.
குனோங் காடிங் (Gunung Gading) எனப்படும் இம்மலை லுண்டு (Lundu) மாவட்டத்தை
ஒட்டி அமைந்துள்ளது. காடு படர்ந்த அந்த மலையின் உயரம் கடல்
மட்டத்திலிருந்து 965km. ஆனால் அம்மலையுச்சியை அடைய 4km நடக்க வேண்டும்.
குனோங் காடிங், காடிங் வன காப்பகத்தின் ஒரு பகுதி. காடிங் வன காப்பகம்
குனோங் காடிங் (Gunung Gading), குனோங் பெரீகீ (Gunung Perigi), குனோங்
செபூலோ (Gunung Sebuloh), குனோங் லுண்டு (Gunung Lundu) ஆகிய 4 முக்கிய
மலைகளை உள்ளடக்கிய ஒரு பகுதி. அவற்றில் காடிங் மலை பகுதி மட்டுமே லுண்டு
மாவட்டத்தின் 4106 ஹெக்டர் பரப்பளவை தன்னுள் அடக்கியிருக்கிறது. இதன்
அடிவாரத்தை கூச்சிஙிலிருந்து இரண்டே மணி நேரத்தில் வந்தடையலாம் என சொல்லி
இறுதியாக எங்களில் ஒருவரின் கைத்தொலைபேசி எண்களை வாங்கி கொண்டு மலையேற
எங்களுக்கு வழி விட்டார் அந்த பணியாளர். நுழைவு கட்டணமாக 6 பேருக்கு 50
ரிங்கிட்டை கட்டிவிட்டு எங்களுக்கு தெளிவு செய்ய பட்ட பாதை வழியாக
நடந்தோம்.
பொதுவாகவே மலையேற உடல் ஃபிட் ஆக இருக்க வேண்டும். ஒரு வாரம் முன்னரே இந்த
பயணத்தை திட்டமிட்டு விட்டதால் ஓட்டபயிற்சி, நடைப்பயிற்சி என பள்ளியில்
உடற்கல்வி பாடம் போதிக்கும் போது மாணவர்களுடன் சேர்ந்து நானும் பயிற்சியில்
இருந்தேன்.. அதே போல் என்னோடு மலையேற வந்த நண்பர்களும் ஓரளவு பயிற்சி
எடுத்திருந்தனர். கடந்த பாக்கோ பயணத்தை போலவே இங்கேயும் நடைப்பாதைகளை
வித்தியாசப்படுத்த வர்ணங்கள் அடையாளங்களாக மரத்துக்கு மரம்
பூசப்பட்டிருந்தன. பின்வருவன உச்சியை அடைவதற்கான பாதைகளும், அவற்றின் வர்ண
குறியீடுகளும் அதோடு அதற்கான நேர வரையறைகளும் ஆகும்.
மலையுச்சியை இரண்டு பாகங்களாகவும் மலையுச்சிக்கு பின்னர் இன்னொரு
பாகமாகவும் அம்மலை பிரிக்கப்பட்டிருந்தது. வேகமாக ஏறினால் ஒரே மணி
நேரத்தில் உச்சியை அடைந்து விடலாம். அது அனுபவமுடயவர்களுக்கே பொருந்தும்.
எங்களை போல அனுபவமில்லாதவர்களுக்கு அல்ல. சிறுவயதில் அம்மாவோடு ரப்பர்
காட்டில் மேடுகளும் அதோடு பள்ளி படிக்கும் காலக்கட்டத்தில் செருக் தொக்குன்
(Ceruk Tok'kun) மேடும் ஜுன்ஜோங் (Junjong) மேடும் ஏறிய அனுபவமுண்டு. ஆனால்
அவையாவும் சின்ன சின்ன மேடுகள் தான். அவற்றோடு ஒப்பிடுகையில் இது அவற்றை
போல மூன்று மடங்கு பெரியது.
அடிவாரத்தின் ஆரம்பத்தில் கட்டைகளை வெட்டி வெட்டி படிக்கட்டுகளாக
செய்திருந்தனர். அவை முதல் 100 மீட்டர் தூர அளவே காண முடிந்தது. அதோடு
மரவேர்களும் மண்ணாலான முட்டுகளுமே பிடித்து ஏற ஏதுவாக இருந்தன. இருந்தும்
எனக்கு ஒரு உறுதியான மரக்கிளை தேவைப்பட்டது. நிலத்தில் ஊனி நடக்க.
ஆங்காங்கே பெரிய பெரிய மரங்களும் பூத அளவு மரவேர்களும் புதிய புதிய
செடிகளையும் வாழ்க்கையில் பார்த்திராத வினோத உயிரினங்களையும் கண்டோம்.
ராட்ச மரவட்டை, நீல நிற காளான் அவற்றில் சில. 600 மீட்டர் கடந்த பின்னர்
ஓரிடத்தில் என்னவோ முட்டையாக பழுப்பு நிறத்தில் காணப்பட்டது. அதன் மேல்பாதி
பகுதி மட்டுமே நிலத்தின் புறப்பகுதியில் இருந்தது. மீதி நிலத்தின்
உட்புறத்தில் இருந்ததது. அது என்னவென்று எங்களில் யாருக்குமே தெரிய வில்லை
மீண்டும் கீழே இறங்கும் வரை. அது என்னவென்று பிறகு சொல்கிறேன். மலையின் ஏழு
இடங்களில் நீர்வீழ்ச்சிகள் இருந்தன. முதல் ஆறு நீர்வீழ்ச்சிகளை தவிர்த்து
விட்டோம். ஏழாவது நீர்வீழ்ச்சியை அடையும் போது மணி சரியாக காலை 10.30.
அங்கே எட்டி மட்டும் பார்த்து விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்.
எங்களின் இலக்கு பிற்பகல் இரண்டு மணிக்குள் உச்சியை அடைந்து விட வேண்டும்.
நாங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கும்போதே வேறு சிலரையும் பார்த்தோம். எங்களைப்
போலவே 8 பேர் நிரப்பிய ஓர் ஆசிரியர் குழு மற்றும் அப்பாவும் மகனும் கொண்ட
இன்னொரு குழு. இந்த அப்பா மகன் குழு மேகா ஸ்பீட்டில் ஏறி கொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விட்டார்கள் இருவரும். நாங்கள் ஏழாவது
நீர்வீழ்ச்சியை அடையும் போதே அவர்கள் மலையுச்சியை அடைந்திருப்பார்கள் என
நினைக்கிறேன். மலையேறும் போது நமது உடல் எடை எவ்வாறு அழுத்தம் கொடுக்கும்
என்பதை பௌதீக பாடத்தில் படித்திருப்போம். உயரம் அதிகமாக ஆக ஈர்ப்புந்து
சக்தியும் அதிகரிக்கும். அதாவது Gravitational potential energy = mgh,
m=எடை, g=பூமியின் ஈர்ப்பு வேகம், h=உயரம். இதை படிகட்டுகள் ஏறும்போது
அவ்வளவாக தெரியாது. ஆனால் இன்னும் அதிக உயரமான மலையை ஏறும் போது
அனுபவபூர்வமாகவும் துல்லியமாகவும் உணர்ந்தேன். மேலே ஏற ஏற ஒரு அடிக்கூட
அதிகம் எடுத்து வைக்க முடியாமல் போகும் போதெல்லாம் ஈர்ப்பின் அழுத்தம்
அதீதமாக இருக்கும். ஆனாலும் முடியும் என்று எண்ணியதாலோ என்னவோ மேலும்
முன்னேற முடிந்தது.
எங்களிள் என் தோழி ஒருவள் மிகவும் மெல்லிய உடல்வாகு உடையவள். அவள் மட்டுமே
எங்களை தாண்டி வேகமாக முன்னேறி பின்னர் ஓரிடத்தில் எங்களுக்காக
காத்திருப்பாள். அவ்வளவு அசதியிலும் அவளின் அந்த செயல்பாடு எங்கள்
அனைவருக்கும் நகைச்சுவை ஊட்டக்கூடியதாக இருந்தது. அதோடு மேலும் மேலும் ஏற
அது ஓர் உந்து சக்தியாக செயல்பட்டது. மேலே வானத்தை ஏறிட்டு பார்த்த போது
சூரியனின் ஒளிக்கீற்றுக்கள் மரக்கிளை இலைகளின் ஊடே மண்ணைத் தொட்டு பார்க்க
முயற்சி செய்து கொன்டிருந்தன. அந்த சூழல் இறைவனின் மனோரம்யமான கலாரசனையை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
ஏழாவது நீர்வீழ்ச்சியை தாண்டியதும் 3 மணி நேர நடை போராட்டத்துக்கு பின்னர்
மலையின் உச்சியை அடைந்த போது எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்டு
கொண்டிருந்த கனவுகளில் ஒன்றை நினவாக்கிய பெருமிதம். இடையிடையே ராட்ஷச
மரங்களை ஏறி மிதித்து கீழே விழுந்து வாரியடித்து சருக்கி விழுந்து வந்த
போது ஏற்பட்ட வலிகளும் அனைத்தும் ஒரே கணத்தில் மறைந்து விட்டன. அப்படியே
தரையில் மல்லாக்க படுத்து விட்டேன். எங்களின் கணக்கு தப்ப வில்லை. சரியாக
பிற்பகல் மணி இரண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகில் அப்படியே தரையை அனைத்து
கொன்டிருந்தனர். 5 நிமிடங்கள் எங்களில் யாருக்கும் அசைவு இல்லை. நேரம்
நகர்ந்து கொண்டே இருந்தது...
|
|