முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 41
மே 2012

  விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்... 7
ந. பச்சைபாலன்
 
 
நேர்காணல்:

பாரிசான் அரசாங்கம் தலையிட மறுத்தால் அடுத்து எதிர்க்கட்சிதான்!



திரை விவாதம்:


கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்
கே. பாலமுருகன்


கவிதைத்தொட‌ர்

இனியவளின் குறிப்புகள்... 2
பூங்குழலி வீரன்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

எம். ராஜா

சம்பு

இரா.சரவண தீர்த்தா

ந. பெரியசாமி

ஷம்மி முத்துவேல்


தூக்கம் தொலைத்த இரவுகள்

தூங்காத இரவுகளைச் சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உலகில் கூடி வருகிறதா? தூக்கக் கலக்கத்தோடு வெளிறிய முகங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களைப் பார்க்கும்பொழுது எனக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. பள்ளிக்கூடம் கல்வி பயிலும் இடமாக பலருக்கு இருந்தாலும் சில மாணவர்களுக்குப் ‘பள்ளி’கொள்ளும் இடமாக ஆகிவிடும் அவலத்தை அடிக்கடி காண நேர்கிறது. “தேர்வுக் காலங்களில் விடிய விடியப் படிப்பார்கள். எதிர்காலம் பற்றிய பயம். தேர்வின் தேர்ச்சிதான் வாழ்க்கையையேமுடிவு செய்யப்போகிறது. அதற்குத் தூக்கத்தைத் தியாகம் செய்யத்தானே வேண்டும்” என்று உங்களில் யாராவது சொல்வீர்கள். அப்படி இருந்துவிட்டால் பரவாயில்லையே. இங்கு நிலைமையே வேறு.

காற்பந்துக் காய்ச்சல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாகப் பரவி வருகிறது. அதிலும் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் விடிய விடிய பல நாடுகளின் காற்பந்தாட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யும்போது அவற்றை உயிராய் நேசிக்கும் இளையோர்கள் நிம்மதியாய்த் தூங்க முடியுமா? மென்செஸ்டர் குழுவின் தீவிர ரசிகனான நான் படும்பாடே பெரும்பாடாக இருக்கிறதே! பின்னிரவு நேரங்களில் தூக்கம் தொலைத்த மாணவர்கள் பள்ளியில் மேசையில் தலைசாய்த்து இழந்த தூக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிவிடுகிறார்கள். அவர்களை எழுப்பிவிடுவதும் பாடபோதனைக்குள் ஆற்றுப்படுத்துவதும் ஆசிரியர்களுக்குச் சவால்மிக்கவையாக ஆகிவிட்டன.

“காற்பந்து மட்டுமா காரணம்?” என்று நீங்கள் கேட்கலாம். அதுவும் உண்மைதான். நவீன வாழ்க்கையில்நாம் பெற்ற வசதிகள், அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நம் இயல்பானவாழ்க்கையைப் புரட்டிப்போட்டு விட்டன என்றுதான் சொல்லவேண்டும். பாடப்புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டும் நேரத்தைவிட இணையத்தில் அகப்பக்கங்களைப் புரட்டி ஆர்வத்தோடு உலாவரும் இளையோர்கள் அதிகமாகி வருகிறார்கள். முகநூலில், டுவிட்டரில் ஆழ்ந்துபோய் உப்புக்கும் உதவாத அரட்டையிலும் சினிமாத் தகவல்களிலும் காலங்கழிப்பது பலருக்குத் தித்திப்பாக இருக்கிறது. இணையத்தில் விளையாட்டுத் தளங்களில் களமிறங்கிப் பல மணி நேரம் ஆடிக் களைப்பது பலருக்கு ஆசையாய் இருக்கிறது.

படித்த களைப்பு தீர இணையத்தில் இளைப்பாறலாம். கூடுதல் தகவல்களைத் தேடிப் பயன் பெறலாம். இழக்கும் தூக்கத்திற்கும் அர்த்தமிருக்கும். அதைவிடுத்து, முகநூலில் தங்கள் முகங்களையே தொலைத்தால்? இதுவும் உண்மைதான். தூக்கத்தை இழந்துகொண்டே போனால், முகம் வெளிறிபோய், கண்களின் கீழே கருவளையங்கள் தோன்றி, கண் படலங்களில் தெளிவின்மை ஏற்பட்டு களையான முகத்தை இழக்க நேரலாம் என ஆய்வுகள் மட்டுமல்ல, நேரத்தோடு உண்டு உறங்கிச் சீரான வாழ்க்கை வாழும் எந்த மனிதனும் தன் முகங்காட்டி உறுதி கூறுவான்.

தோட்டப்புறத்தில் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ தூங்காத இரவுகளைச் சந்தித்த அனுபவங்கள் எனக்குண்டு. சரியாக இரவு மணி பதினொன்றுக்குத் தோட்டத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்போது எல்லா விளக்குகளும் கண்களை மூடிக்கொள்ளும். “போதும் நீங்கள் விழித்திருந்தது, தூங்குங்கள்” என தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்குக் கட்டளை இடுவதுபோல் இருக்கும். காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைக்குப் புறப்படும் அவர்களுக்கு ஒருவகையில் அது நன்மையாக இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு படிப்பது, ஏதாவது வேலை முடிப்பது என்றால் மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு எனத் தேட வேண்டியிருக்கும். தேர்வுக்குப் பயின்ற காலங்களில் மெழுகுவர்த்திதான் எனக்கு உற்ற துணையாய் இருந்திருக்கிறது.

படிவம் நான்கில் பயின்றபோது, ஒரு முறை நானும் நண்பன் பார்த்திபனும் எங்கள் தோட்ட வீட்டில் இரவில் பூகோளப்பாடப் புத்தகத்தைப் புரட்டிஅதைப் பற்றிப் பேசிக்கொண்டே இரவெல்லாம் விழித்திருந்தோம். பார்த்திபன் இப்பொழுது கோலாலம்பூரில் காவல்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இரவு மணி எட்டு தொடங்கி மறுநாள் காலை ஐந்து மணிவரை எதையோ சாதிக்கப் போகிற தீவிரத்தோடு படித்தோம். தூங்கியெழுந்தஅம்மா, “என்னடா இது கூத்து? இப்படி தூங்காம என்னத்த படிச்சீங்க?” என வியப்பாகக் கேட்டார். எதற்காக அப்படி விழித்திருந்தோம்? கடந்து போகும் நேரத்தின் தன்மையை உணரவா? தோட்டமே தூங்கும் பின்னிரவு நேரத்தின் அமைதியை ரசிக்கவா? எதற்கு என்பது இன்றுவரை எனக்குப் புரியாத ஒன்றாகவே இருக்கிறது.

அதற்குப் பின், எத்தனையோ தூங்காத இரவுகள். இருதய நோயால் அண்ணனும் மூன்று மாதங்களுக்குப் பிறகு, சாலை விபத்தில் அப்பாவும் இறந்தபொழுது, வீட்டு முன் அறையில் உடலைக் கிடத்திவைத்து உறவுகள் அழுதுகொண்டிருக்க, நான் வாசலின் ஓரம் அமர்ந்து முழங்கால்களில் முகம் புதைத்து விடிய விடிய அழுத கண்ணீர் நாள்கள் இன்னமும் அழியாத காட்சிகளாக மனத்தில் அறையில் தேங்கியிருக்கின்றன. படிவம் ஐந்து முடித்து விடுமுறைக் காலத்தில், ஒரு மாதம் சிமெண்டுத் தொழிற்சாலையில் 24 மணிநேரம் சிப்ட் முறையில் வேலை செய்த அனுபவமும் என்னால் மறக்கமுடியாதது. நாள் முழுதும் தூங்காமல் விழித்திருப்பது ஏதோ இனம்புரியாத ரசனைக்கு உரியதாக அப்பொழுது உணர்ந்திருக்கிறேன். பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் பாடாய்ப்படுத்திய உளவியல் பாடத்தேர்வுக்காகத் தூங்காமல் விடிய விடியப் படித்துவிட்டு முகங்கழுவித் தேர்வெழுதப் போனது ஞாபகத்துக்கு வருகிறது.

எல்லாரும் தூங்கும் இரவு நேரத்தில் தாங்கள் தூங்கமுடியாதபடி சிலர் சபிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ நேர்ந்துவிடுகிறது. பகலில் தூங்கி இரவில் கண்விழித்து சிப்ட் முறையில் வேலை செய்பவர்களைக் காண நேர்ந்தால் எனக்கு இரக்கவுணர்வே மேலிடுகிறது. மருத்துவர்கள், தாதியர்கள், துரித உணவக ஊழியர்கள், இருபத்து நான்கு மணி நேர இயங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் என நாம் தூங்கும் நேரத்தில் நம்மைச் சுற்றித் தூங்காமல் மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பின்னிரவு நேரத்தில் மருத்துவனையின் அவசரப் பிரிவின் ஓய்வு அறையில் மருத்துவர்கள் குட்டித் தூக்கம்போடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? என்னதான் இரவுத் தூக்கத்தைப் பகலில் தூங்கிக் கணக்கைச் சரி செய்துவிட்டாலும் இரவில் இழந்த தூக்கத்தை ஈடுசெய்வது முழுமைபெறாததாகவே இருக்கும்.

நான் வசிக்கும் நகரில் இருபத்து நான்கு மணி நேரம் செயல்படும் ஓர் உணவகத்தின் ஊழியர்கள் தூக்கக் கலக்கத்தோடு இயங்குவதை ஒரு பின்னிரவு நேரத்தில் பார்த்தேன். அதிகாலை நேரங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள்தாம் அங்கு வருவதாக அறிந்தேன். அந்த நேரங்களில் அந்த உணவகம் மூடப்பட்டாலும் முதலாளிக்குப் பெரிய நட்டம் வந்துவிடாது. ஆனால், தமிழகத் தொழிலாளர்களின் அதிகபட்ச உழைப்பை முடிந்தவரை கறந்துவிட நினைப்பவர்களால் அவர்களில் தூக்கத்தின் அருமையை எண்ணிப்பார்க்க முடியுமா?
தூக்கத்தை அதிகம் இழப்பது ஆண்களா? பெண்களா?என்று கேட்டால் பெண்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. குறிப்பாகத் திருமண வாழ்வில் பெண்கள் தூக்கத்தைத் தியாகம் செய்கிறார்கள். ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர் நிம்மதியான தூக்கம் குறைந்துபோகிறது. பகலெல்லாம் தூங்கி, இரவில் அகால நேரத்தில் தூங்காமல் அடம்பிடிக்கும் குழந்தையைக் கவனிப்பது பெண்கள்தாமே! அதனால்தான், ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, காலம் இதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே’ என குழந்தையைத் தாலாட்டித் தூங்கவைக்கும் பாடலிலும் இதை நினைவுபடுத்துகிறார் திரைப்படப்பாடலாசிரியர்.

இரவில் போதிய தூக்கம் இல்லாவிட்டால் அப்படி என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். வழக்கம்போல இதற்கும் நீண்ட நோய்கள் பட்டியலை நீட்டி மருத்துவ ஆய்வாளர்கள் பயமுறுத்துகிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு மணி நேரம் தூக்கம் வேண்டும். இல்லாவிட்டால் நீரிழிவு, இருதய நோய், உடல் பருமன், குடல் புற்று நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உடலில் பிள்ளையார் சுழியிடத் தொடங்குமாம். இரவில் விளக்கு வெளிச்சத்தை எதிர்நோக்கினால், புற்றுநோய் வராமல் தடுக்கும் மெலதொனின் என்ற ஹோர்மோனின் அளவு உடலில் குறைந்துவிடுமாம். மேலும் தூக்கமின்மை சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற இன்னல்களுக்கு நம்மை இட்டுச்செல்லும். எல்லாவற்றுக்கும் மேலாக, குறைந்த நேர தூக்கம் குறைந்த வயதிலே இறப்பை ஏற்படுத்தவும்வாய்ப்பு உண்டு. ஹார்வெட் மருத்துவக் கழகம் 82 000 தாதியர்களிடையே மேற்கொண்ட ஆய்வில் ஆறு மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்குவோரிடையே இறப்புக்குக்கான ஆபத்து அதிகம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இரவில் தூங்க விரும்பாதவர்களை விடுங்கள். தூங்க நினைத்தும் தூக்கம் வராமல் அவதிப்படுவோரின் நிலை இன்னும் மோசம். எளிய மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து, தூக்கத்தை வரவழைக்கப் படாதபாடுபடுகின்றனர். இவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது பகலில் குட்டித்தூக்கம் போட்டுச் சமாளிக்க வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். இவர்களுக்கு இன்னொரு முக்கிய ஆலோசனை, சுவாரிசயம் இல்லாத புத்தகத்தைப் படிக்க வேண்டுமாம். இதற்குப் பிறகும் தூக்கம் வராமலா போய்விடும்?
தூக்கத்தைத் தொலைப்பது மனிதர்கள் மட்டுமல்ல. உலகம் முழுதும் ஊர்களும் நகரங்களும் தூங்காமல் விழித்திருக்கின்றன. பகல் நேரப் பரபரப்பின் தீவிரம் குறையாமல் இரவிலும் மனிதர்கள் துரித உணவகங்களிலும் கேளிக்கை மையங்களிலும் இணைய மையங்களிலும் நிறைந்து வழிகிறார்கள். அவர்களுக்கு வசதியாக இருபத்து நான்கு மணி நேர விற்பனை மையங்கள், கடைகள், உணவகங்கள் திறந்திருக்கின்றன. அதிகாலைப் பொழுதிலும் சாலைகளில் வாகனங்கள் பரபரப்பாய் விரைகின்றன. கண்ணைக் கூசச் செய்யும் வண்ண விளக்குகள் ஒளிசிந்தி யாரையும் தூங்கவிடாமல் விழித்திருக்கச் செய்கின்றன.

பகல் நேரம், திறந்த புத்தகமாக விரிந்து கிடக்கிறது. இரவோ, இரகசியங்களைத் தனக்குள் மறைத்தவாறு மனிதர்களை நோக்கி மாயக் கரங்களை நீட்டுகிறது. தொலைதூரத்து ஊர்களில், கிராமங்களில் நிம்மதியாகத் தூங்கும் மனிதர்களையும் வெளிச்சம் உமிழும் நகரங்கள் விட்டு வைப்பதில்லை. அவர்களுக்கு நவீன வாழ்வின் வசதிகளை, கவர்ச்சியைக் காட்டித் தங்களை நோக்கி இழுக்கின்றன. தூக்கம் தொலைக்கும் வாழ்வுக்குள் அவர்களும் குடிபெயர்ந்து தாமாக வந்து சிக்கிக்கொள்கிறார்கள். தூக்கத்தை இழந்துவிட்டு அவர்கள் எதையெதையோ தேடியலைகிறார்கள். தூக்கமில்லா உலகின் அசுரக் கைகள் அவர்களைச் சுற்றி வளைத்து நெருங்குவதை எப்போதும் அவர்கள் உணர்வதே இல்லை.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768