|
|
13 வது பொதுத்தேர்தலும் இந்திய வாக்காளர்களும்
12-வது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமி அலையே
இன்னும் ஓயாத பட்சத்தில் நாட்டின் 13வது பொதுத்தேர்தல் நெருங்கிக்
கொண்டிருக்கின்றது.
தேர்தல் எப்பொழுது என்ற துல்லியமான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்
பலவிதமான ஆருடங்கள் வெளிவந்த வண்ணமாய் உள்ளன. எது எப்படி இருப்பினும்
பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நிகழ்ந்தாக வேண்டும்.
அரசியல் பதவி நாற்காலியில் இருப்பவருக்கு அதை தற்காத்துக் கொள்ள வேண்டுமே
என்ற பயமும், நாற்காலிக்காக 5 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு அதை தனதாக்கிக்
கொள்ள வேண்டுமே என்ற வேட்கையும் நிரம்பி வழிகின்றது. பதவி வேட்கையின்
மிகுதியால் இன்று அரசியல் தலைவர்கள் மக்களின் முன் 'குட்டிக்கரணம்'
அடிக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
2008 இல் நடந்த 12- வது பொதுத்தேர்தலின் முடிவானது பாரிசான் நேஷனல்
அரசாங்கத்துக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய சறுக்கலை கொண்டு
வந்தது. சீனர் மற்றும் இந்தியர்களின் திசைமாறிய வாக்குகளால் ஆளுங்கட்சியின்
அரசியல் நிலைத்தன்மை ஆட்டம் கண்டது. . சீனர்களும் இந்தியர்களும் அதிகமாக
உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் ஆளுங்கட்சி மண்ணைக்
கவ்வியது. அதையும் தாண்டி வெற்றிப் பெற்ற ஆளும்கட்சி வேட்பாளர்கள் சொற்ப
வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிப் பெற முடிந்தது. ஆளுங்கட்சி
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்ததுடன், 5 மாநிலங்களை
பக்காத்தான் ராக்யாட்டிடம் கோட்டைவிட்டது.
நாட்டில் இனங்களுக்கிடையே நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் வேறுபாடுகள்,
தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்கள், மக்களின் கழுத்தை நெறிக்கும் விலைவாசி
உயர்வுகள், மற்றும் எதிர்கட்சிகளின் தீவிர அரசியல் முன்னெடுப்பு
போன்றவைகளே கடந்த பொதுத்தேர்தலில் பாரிசான் நேஷனலின் சறுக்கலுக்கு காரணமாக
கருதப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாது இண்ட்ராப் இயக்கம் இந்தியர்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகளை எதிர்த்து நடத்திய அமைதிப்பேரணியில் கலந்து கொண்ட
பொதுமக்கள் மீது போலிசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கடுமையாக நடந்து
கொண்டதும் மக்கள் மனதில் பெரும் சீற்றத்தை கொண்டுவந்தது. இந்த
போராட்டத்தின் மூலமாக அமைதியாக இருந்த இந்திய சமுதாயம் விழித்துக்கொண்டது.
மலேசிய அரசியல் என்பது அடிப்படையில் பெரும்பான்மை இனம் மற்றும் எண்ணிக்கை
சார்ந்ததாகும். பெரும்பான்மை இனமே இங்கு ஆளுங்கட்சியை நிர்ணயிப்பதுடன்
அதிகார வர்க்கமாகவும் திகழ்கின்றது. மலேசிய நாட்டின் பெரும்பான்மை இனமான
மலாய்க்காரர்களை அம்னோ கட்சி பிரதிநிதிக்கின்றது. அம்னோ கட்சியானது
ஏறக்குறைய 3.2 மில்லியன் மலாய் உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து
எதிர்கட்சியான பாஸ் கட்சி 1 மில்லியனுக்கும் அதிகமான மலாய் உறுப்பினர்களை
கொண்டுள்ளது.
பாரிசான் நேஷனலின் வெற்றி வாய்ப்புக்கான சாதகத்தை மனதில் கொண்டே
பெரும்பாலான தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. நாடு சுதந்திரம்
அடைந்த 1957 முதல் இந்தியர்கள் பாரிசான் நேஷனல் அரசாங்கத்தின் மேல் 100%
நம்பிக்கை வைத்து வாக்களித்து வந்தார்கள். பல தொகுதிகளில் இந்தியர்களின்
வாக்குகள் வெற்றியை நிர்ணயப்படுத்தும் வாக்குகளாக கருதப்படுகின்றது.
சீனர்கள் மலாய்காரர்களை விட அதிகமாக இருக்கும் தொகுதிகளில் இந்தியர்களின்
வாக்கு பாரிசான் நேஷனலின் வெற்றி வாய்ப்பை சமநிலைப்படுத்துகிறது.
இந்தியர்களின் வாக்குகளைக் காட்டிலும் சீனர்களின் வாக்குகள் பாரிசான்
நேஷனலுக்கு சாதகமற்றதாக கருதப்படுகிறது. புதிய பொருளாதார
கொள்கையினால்(DASAR EKONOMI BARU) நாட்டின் பொருளாதார, அரசியல்
நீரோட்டத்திலிருந்து சீனர்கள் மெல்ல விலகுவதை உணர்ந்தப்படியால்
ஆளுங்கட்சிக்கான அவர்களது ஆதரவு பெருமளவில் குறைந்துள்ளது.. சீனர்களின்
வாக்குகள் பெரும்பாலும் பாரிசான் நேஷனலுக்கு சாதகமாக இல்லாத பட்சத்திலும்
அவர்களின் பொருளாதார பலத்தால் தேர்தல் முடிவுகள் எதாவதொரு வகையில்
அவர்களுக்கு நன்மையையே பயக்கிறது.
மலேசிய நாட்டின் வரலாற்றில் அம்னோவுக்கு அடுத்ததாக 1946இல் உருவான
கட்சிதான் மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா). ஜோன் ஏ திவி முதல் இன்றைய
8-வது தலைவரான டத்தோ ஜி.பழநிவேல் வரை பல ‘சாதனை’ தலைவர்களால்
வழிநடத்தப்படும் கட்சியாகும். அரசியலில் வெற்றி என்பது நிலையில்லாதது
என்பதற்கொப்ப கடந்த பொதுத்தேர்தல் ம.இ.கா வேட்பாளர்களுக்கு பெரும் தோல்வியை
பரிசளித்தது. ம.இ.கா 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 12 சட்ட மன்ற
தொகுதிகளிலும் தோல்வி கண்டது. இத்தோல்வியானது இந்தியர்கள் ம.இ.கா கட்சியின்
மேல் வைத்திருந்த நம்பிக்கையை மேலும் வலுவிலக்க செய்தது.
நாட்டின் மக்கள் தொகையில் இந்தியர்கள் வெறும் 7.3 சதவிகிதம் மட்டுமே
இருந்தாலும் வரும் பொதுத்தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் உள்ள 65 நாடாளுமன்ற
தொகுதிகளில் 60 தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள் முக்கியமானதாக
கருதப்படுகின்றது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 26 நாடாளுமன்றத் தொகுதிகளில்
இந்தியர்களின் வாக்கு விகிதாச்சாரம் 15%க்கும் மேலாக உயர்ந்துள்ளது. மற்ற
30 தொகுதிகளில் 10லிருந்து 20% வரை உயர்ந்துள்ளது. மேற்கண்ட நாடாளுமன்றத்
தொகுதிகள் முறையே சிலாங்கூரில் கோத்தா ராஜா, குவாலா சிலாங்கூர், கிள்ளான்,
குவாலா லங்காட், செப்பாங். ஜோகூரில் லாபீஸ் மற்றும் தெப்ராவ். பேராக்கில்
பாகான் டத்தோ, சுங்கை சிப்புட், தெலுக் இந்தான், தாப்பா, பெருவாஸ் மற்றும்
தைப்பிங். பினாங்கில் பத்து கவான் மற்றும் நிபோங் தெபால். கெடாவில் பாடாங்
செராய் மற்றும் மெர்பொக். நெகிரி செம்பிலானில் தெலுக் கெமாங், ராசா மற்றும்
ரெம்பாவ். இறுதியாக கூட்டரசு பிரதேசத்தில் லெம்பா பந்தாய் மற்றும் பத்து என
இதன் பட்டியல் நீள்கிறது.
பாரிசான் நேஷனலின் வெற்றிக்கு சாதகமாக இருந்த இந்தியர்களின் வாக்குகள்
கடந்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு வெற்றித் தோல்வியை 'நிர்ணயம்' செய்யும்
வாக்குகளாக மாறியுள்ளன. இந்தியர்கள் வரும் தேர்தலில் ‘KING MAKERS’ ஆக
மாறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் வாக்கு எங்களுக்கு
தேவையில்லை எனக்கூறியவர்கள் இன்று நம் மக்களின் நம்பிக்கையை
திரும்பப்பெறுவதற்காக பலவித யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.
வரும் பொதுத்தேர்தலை ஒட்டி ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் தமது தேர்தல்
வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம்,
கோயிலுக்கு மானியம், 100 இந்திய மாணவர்களுக்கு அரசாங்க உபகார சம்பளம், 1000
இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேசனில் இட ஒதுக்கிடு, 60 ஆண்டுகளாக
குடியுரிமை இல்லாமல் போராடியவர்களுக்கு My Daftar மூலமாக 'போகிற காலத்தில்
'குடியுரிமை' என தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகிறார்கள். இந்திய
மக்களை பேருந்து பேருந்தாக ஏற்றி வந்து அரிசி, பால்டின், மீ ஹூன், கோதுமை
மாவு, சார்டின் என வாரி வழங்கும் வள்ளலாக மாறிவருகிறார்கள்.
ஆளுங்கட்சியானது தொடக்க நிலை, இடைநிலைக்கல்விகளை மாணவர்களுக்கு
இலவசமாக்கியுள்ள வேளையில், எதிர்க்கட்சியோ தன் தேர்தல் வாக்குறுதியாக RM 43
பில்லியன் மதிப்புள்ள PTPTN கல்வி கடனுதவியை மாணவர்கள் திருப்பி தர
வேண்டியதில்லை எனக் கூறியுள்ளது. இது போன்ற வாக்குறுதியால் நாடு திவாலாகும்
என ஒரு சாரார் (BN ) கருத்து கூறும் வேளையில் , விரயத்தை கட்டுப்படுத்தி
ஊழலற்ற ஆட்சி செய்தால் ஒரு சில ஆண்டுகளிலேயே இந்த கடன் சுமையை சரி செய்வது
சாத்தியமே என பக்காத்தான் ராக்யாட் உறுதி கூறுகிறது.
600 மில்லியன் கடனுடன் பினாங்கு மாநில அரசை ஏற்றுக் கொண்ட பக்காத்தான்
ராக்யாட் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் நிர்வாகம், 4 ஆண்டுகளில் அந்தக்
கடனை 30 மில்லியனாக குறைத்துள்ளது. சிலாங்கூரில் முதலமைச்சர் காலித்
இப்ராகிம் நிர்வாகமோ செலவுப் போக 1.9 பில்லியனை மாநிலத்தின் கூடுதல் வருமான
உபரியாக பதிவு செய்துள்ளது. மிக அண்மையில் பக்காத்தான் ராக்யாட்,
சிலாங்கூர் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியை மாநாட்டு மண்டபத்துடன்
கூடிய புதிய கட்டிடமாக மிளிர செய்தது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியையும்,
நம்பிக்கையையும் தந்துள்ளது.
ஆளுங்கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரசாங்க தொலைக்காட்சிகள்
வானொலிகள் மற்றும் நாளிதழ்கள் பயன்படும் வேளையில் எதிர்கட்சிகளின் தேர்தல்
நடவடிக்கை மற்றும் மக்களுக்காக அவர்கள் செய்யும் உதவிகள் பற்றிய விவரங்கள்
இருட்டடிப்பு செய்யப்படுகிறது என சில தரப்பினர் குறைப்பட்டுக்
கொள்கின்றனர்.
கடந்த தேர்தலில் இண்ட்ராப் பேரணி ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று வரும்
தேர்தலில் BERSIH 1.0, BERSIH 2.0 மற்றும் BERSIH 3.0 மிகப் பெரிய
தாக்கத்தை தரும் என கருதப்படுகிறது. BERSIH பேரணியானது நியாயமான, ஊழலற்ற
தேர்தல் முறைக்காக டத்தோ அம்பிகா தலைமையில் மூவினமும் இணைந்து நடத்திய
பேரணியாகும். இப்பேரணியானது எந்த அரசியல் கட்சியையும் சார்ந்த பேரணி அல்ல.
மாறாக தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளுக்கு
உட்பட்ட பேரணி என்பதால் இதற்கு பல தரப்பட்ட மக்களிடமிருந்து ஏகோபித்த ஆதரவு
கிடைத்தது.
பொருளாதார துறையில் நிரந்தரமான முதன்மை நிலையில் இருக்கும் சீன சமுதாயமே
எதிர்கால சந்ததியின் நலன் கருதி மாற்றத்தை விரும்பும்பொழுது, பொருளாதாரம்,
அரசியல், மற்றும் கல்வி வாய்ப்பு ஆகியவைகளுக்காக இன்றும் போராடிக்
கொண்டிருக்கும் இந்திய சமுதாயம் வரும் பொதுத்தேர்தலில் சரியான
முடிவெடுப்பது அவசியமாகும்.
ஓட்டு என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை என உணர்ந்து, தேர்தலில்
சரியான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் கடப்பாடு மக்களை சார்ந்ததே ஆகும்.
|
|