|
|
திலீப்குமாரின் ‘கடிதம்’
தொலைத்தொடர்பு வசதிகளற்ற காலத்தில் கடிதங்களே உறவுகளை
வளர்த்துக் கொண்டிருந்தன. கடிதத்தை எழுதுபவரும் அதை பெறுநருக்கும்
இருக்கும் தொடர்பானது எழுத்துக்களால் உருவானது. சில சமயங்களில் நேரில்
பேசும்போது தவிர்க்கப்படுபவனற்றையும் கூட எழுத்துக்கள் எளிதாக பேசி
விடுகின்றன. எழுத்துக்களின் மூலம் உயிர்பெறும் உணர்வுகளும் அதன்வழி
தொடர்ந்து ஏற்படும் புரிந்துணர்வும் உறவுக்கு வலு சேர்ப்பவை. எளிதில்
விரிசல் அடைய முடியாத வலு அது. தொலைத்தொடர்பு அதி முன்னேற்றங்களுக்கு
கடிதங்கள் அடித்தளமாக அமைந்துள்ளன.
‘கடிதங்களில் இருக்கும் எழுத்துகள் மனதைக் காட்டும் கண்ணாடியாக
இருக்கின்றன. எழுத்துக்களின் மூலம் மாசு படராமல் தெளிவாக மனதைக்
காட்சிபடுத்த முடிகின்றது. இணைய வசதிகள் பெருகிவிட்ட போதிலும் கூட
கடிதங்கள் இன்னும் அவ்வப்போது தங்களின் முக்கியத்துவத்தைத்
தெளிவுப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. இதுவரையிலும் எத்தனை கடிதங்கள்
எழுதியிருப்போம்? எத்தனை கடிதங்களை அனுப்பியிருப்போம்? எத்தனை கடிதங்களை
அனுப்பாமலேயே கிழித்துப் போட்டிருப்போம்? இது அவரவருக்கு மட்டுமே தெரிந்த
ரகசியங்கள்.
திலீப்குமாரின் ‘கடிதம்’ என்ற கதையிலும் கடிதத்தின் எழுத்துகள் ஒரு முதிய
மனதை நம் கண்களுக்குத் திறந்து காட்டுகின்றது. ஏழை மிட்டு மாமா பணக்கார
கண்ஷியாம் மாமாவுக்குக் கடிதம் எழுதுகின்றார். வயதாகிவிட்ட மிட்டு
மாமாவுக்குக் கதைசொல்லி கடிதம் எழுத உதவுகின்றார். இம்முறை கடிதத்தில்
மிட்டு மாமா தான் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மரணத்தைப் பற்றியே
அதிகம் பேசுகின்றார். முதுமையினால் உண்டான தன் இயலாமை, பிணி, குடும்பத்தின்
புறக்கணிப்பு, மகன்கள், மருமகள்கள், மரணத்திற்குப் பின்னான அவரது
எதிர்ப்பார்ப்புகள் என அவரது கடிதம் நீள்கின்றது. கடிதத்தின் இறுதியில்
நூறு ரூபாய் அனுப்பி வைக்கும்படியும் கேட்டு கொள்கின்றார். கடிதம் அனுப்பிய
மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின் கண்ஷியாம் மாமா மாரடைப்பில்
இறந்து போய்விட்டதாக தந்தி வருகின்றது. இறப்பதற்கு முன் மிட்டு மாமாவின்
கடிதத்தை அவர் படித்துள்ளதாக தெரிய வருகின்றது. இறப்புக்குச் சென்ற
உறவினர்களும் கடிதத்தைப் படித்துத் திரும்புகின்றனர்.
கதையில் வரும் மிட்டு மாமா கண்ஷியாம் மாமாவுக்குக் கடிதம் எழுதுவதை
வழக்கமாக கொண்டுள்ளார். தன் பொழுதுகளில் சந்திக்கும் மனிதர்கள், குறை
நிறைகள் என பகிர்ந்து கொள்ள அவருக்குச் சக வயதுடைய நம்பிக்கையான துணையொன்று
தேவையாகின்றது. கடிதத்தின் வழி அதைப் பூர்த்தி செய்து கொள்கின்றார்.
புறக்கணிப்பால் ஏற்படும் தனிமையைப் போக்கிக் கொள்ள அவருக்குக் கடிதம்
வழிகோலாகின்றது. மிட்டு மாமாவின் மனக்குவியலைக் கடிதத்தில் படிப்பவர்கள்
முதிய மனதில் தேங்கி நிற்கும் எதிர்ப்பார்ப்புகளைக் கண்டு கொள்ள முடியும்.
அவர் கடிதத்தில் குறிப்பிடும் விஷயங்கள் முதியோர்களை எப்பொழுதும் சுற்றி
இருக்கின்றன. முதிர்ந்த உடலின் அடையாளமென வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்க
தெரிந்த கண்களுக்கு முதிர்ந்த மனம் பற்றிய அக்கறை இருப்பதில்லை.
புறக்கணிக்கப்படும் முதிய மனங்கள் மரணத்தை விடுதலை என எண்ணி
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. மரணம் ஒன்றே தங்களுக்கு நிம்மதி தரும்
மருந்தென கருதி தங்களைத் தயார் படுத்திக் கொள்கின்றனர்.
"போகிறவர்கள் போய்ச்சேர்ந்து விடுவார்கள். ஆனால், இருக்கிறவர்களுக்கு வேறு
வழி இல்லை. அவர்கள் இருந்துதான் ஆக வேண்டும்." கண்ஷியாம் மாமாவின் மரணத்தை
அறிந்து மிட்டு மாமா இவ்வரிகளைக் கூறுகின்றார்.
மரணம் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவதாக மிட்டு மாமா
உணர்கின்றார்.
கதையைப் படிக்கும்போது கண்ஷியாம் மாமா மிட்டு மாமாவின் கடிதத்தைப் படித்து
விட்டது முதல் இறக்கும் வரையிலான குறுகிய காலம் சிந்தனைக்குரியதாக உள்ளது.
கடிதத்தைப் படித்த பின்னர் அவரது மனம் எவ்வாறு உணர்ந்திருக்கும் என்பதே
கேள்வியாக தோன்றி பலவித பதில்களைத் தந்து கொண்டிருக்கின்றது. ஏழையான மிட்டு
மாமா தன் மனக்கிடங்கைக் கடிதத்தில் கொட்டி விடுகின்றார். பணக்காரரான
கண்ஷியாம் மாமாவின் வாழ்விலும் இவ்வாறான மனக்குறைகள் எழுந்திருக்குமோ
அதையெல்லாம் கொட்டிவிட சரியான தருணங்கள் அமையாமலேயே அவரது ஆயுள்
முடிவடைந்துவிட்டதா என அவரது மரணம் எண்ண வைக்கின்றது.
வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்புகள், ஆசைகள், ஏமாற்றங்கள், ரகசியங்கள் என
நம்மையும் அறியாமல் மனதில் ஓரங்களில் பதியப்படுகின்றன. அவை யாவும்
யாருக்கும் அனுப்பப்படாத கடிதங்களாய் மனதிலேயே சேகரிக்கப்பட்டு மரணத்தில்
அழிந்து போகின்றன.
|
|