|
|
நீக்கப்பட்ட மாணவனின் நியாயக் குரல்
இக்கட்டுரைத் தொடர், தமிழ்க் கல்வி சார்ந்தவர்களைப்
பல்வேறு கோணங்களில் இலேசான அலசல் நிலைப்பாட்டில் நகர்ந்து வருவதை வசகர்கள்
அறிவீர்கள் (இதையெல்லாம் படிக்கிறார்களா என்று தெரியவில்லை!). மாணவர்கள்
விடயத்தில் தப்பித்துக்கொள்ளும் ஆசிரியர்கள் அநேகர் உள்ளனர். அதாவது
சொல்லித்தர வேண்டியது நமது கடமை. அதற்குப் பின் நல்லது கெட்டது என்றால்
அஃது அவன் பாடு என்ற புரிதல்தான் ஆசிரியர்களிடத்தில் உண்டு. அதில் ஒருவன்
உயர்ந்த நிலையடைந்தால் இவன் என் மாணவன் எனப் பெருமை கொள்வதும், இன்னொருவன்
சிறைவாசம் சென்றால் அவனைத் தெரியவே தெரியாது அல்லது அப்பொழுதே அப்படித்தான்
எனத் தப்பித்துக்கொள்வதுதான் ஆசிரியர்களின் சாமர்த்தியமாய் இருக்கிறது.
மனசாட்சியுள்ள ஆசிரியர்கள் இதனை ஒப்புவர். சரி, இந்த இரண்டாம் வகையறா
மாணவனைக் கொஞ்சம் ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
இடைநிலைப்பள்ளி வாழ்க்கையே சிக்கல் மிகுந்தது. 13-18 வயது இளங்காளைக்கான
தோற்றப் பொலிவும், உளவியல் மாற்றங்களும் கனவுகளும் ஒன்றாய்ச் சேர்ந்து
அலைக்கழிக்கும் பருவம் அது. பார்க்கப்போனால், இங்குப் பயில்கின்ற அனைத்து
மாணவர்களும் தத்தம் வகையில் பல பிரச்சனைகளைச் சுமந்தபடிதான் பள்ளி வாசலை
மிதிக்கிறார்கள்.
இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர்ப் பணியில் எமது கால்நூற்றாண்டுகால தனிப்பட்ட
கண்ணோட்டத்திலும் நேரடி பட்டறிவென்ற அடிப்படையிலும் இவர்களது
சிக்கல்களுக்கு வரலாற்றுப் பிழைகளும், அவற்றால் வீசியெறியப்பட்ட
எச்சங்களின் வெளிப்பாடுதானோ இவர்கள் என எண்ணத் தோன்றுகிறது. அதோடு இவர்கள்
தெரிந்தோ தெரியாமலோ சார்ந்திருக்கிற சிறுதெய்வ வழிபாட்டின் வன்முறையும்
காரணியாக இருக்கலாமோ எனவும் முடிவெடுக்கத் தோன்றுகிறது.இருநூற்று நாற்பது
ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொந்த
மண்ணிலும் வரலாறு செய்த அழிச்சாட்டிய மோசடியில் தெறித்து
விழுந்துகொண்டிருப்பவைதான் இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கின்ற ஒரு
தலைமுறையென்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. காட்டுக்குள் அமைந்திருக்கிற
கோயிலில் ஆட்டை அறுத்த அதே கரங்களால்தான் வாழ்வாதார ஏமாற்றத்தில்
மனிதனையும் அறுக்கிறார்களோ என்று எண்ணுங்கால் உள்ளம் பகீரென்கிறது.ஆண்டில்
ஒரு நாள் பள்ளிக்கு வராத நாள் என்றால் அது சிறுதெய்வ குறுவிழாவுக்கான
நாளாகவும் இருக்கின்றது. இடையில் அநேக பண்டிகைகளுக்கான சுய விடுப்பு
வேறு!அநேகமாக எல்லாப் பள்ளிகளிலும் மேற்கண்ட சான்றுக்குத் தப்பாத ஐந்து
மாணவர்களாவது ஒவ்வோரண்டும் இருப்பர் என்பது திண்ணம். மொத்தத்தில் ஆயுதப்
புழக்கமும், கூச்சலுந்தான் கோலோச்சியிருக்கும்! இலட்சாதி இலட்ச ஆடுகளின்
சாபமோ என்னவோ தெரியவில்லை!
மேலோட்டமான புரிதலில் நமது கூடியபட்ச மாணவர்களின் கறாரான தோற்றமும்
நெருப்பைக் கக்கும் பார்வையும் எதையோ மனத்தில் வைத்துக்கொண்டு பழி
தீர்ப்பது போல கால்களை அகட்டி-அலசிக்கொண்டு நடப்பதும் அவர்களைப் பற்றிய
எதிர்மறையான அறிதலைப் பிறரிடத்தில் உருவாக்கிவிடுகிறது. பேச்சு மொழியும்
அதற்கே உரிய இனிமையும் அற்றுப் போகி வெகு நாட்களாகிவிட்டன. இந்த உண்மையைச்
சொல்வதன் மூலம் அவர்கள் மத்தியில் மாற்றம் உருவாகும் என்ற கனவெல்லாம்
எனக்குக் கிடையாது.உலகம் தங்களை எங்ஙனம் உருவகப்படுத்தியுள்ளது
என்பதெல்லாம் குறித்து அவர்களுக்குக் கடுகளவும் கவலையுமில்லை; பயமுமில்லை.
பள்ளியே இவர்களுக்கொரு முத்திரை குத்த அதற்கான போராட்டத்தை
முன்னெடுப்பதிலேயே அவர்களின் காலம் கழிகிறது. அந்த முத்திரையைக் கிழிக்க
அவர்கள் கடக்கின்ற துன்பங்களில் ஒன்று அவர்கள் பள்ளியைவிட்டுத் தூக்கி
எறிவதும் அடங்கும்.
நமது மாணவர்களின் சிக்கல்களுக்கான தோற்றுவாய் எங்கே என்றால் அது
குடும்பந்தான். குடும்பத்தின் தோற்றுவாயைத் தோண்டினால் அது முந்தையத்
தலைமுறையைக் காரணம் கூடிக் கொண்டே செல்லும். அறியாமையும் அடிமையினின்று
மீள்வதற்கான வைராக்கியமும் இல்லாது சுய மரியாதையைத் தாரை வார்த்த
எச்சங்களின் சிதறல்கள்தானே இன்றையத் தலைமுறை! கல்வியும் அதற்குரிய
சிலாக்கியங்களும் மண்டிக் கிடந்தும் வாழ்வு குறித்த அச்சம் இல்லாமையால்
தான்தோன்றித்தனத்தில் காலத்தைப் பூங்காவாகக் கற்பனை செய்துகொண்டும்,
படைத்தவன் கஞ்சி ஊற்றுவான் என்றும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்
கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது அதில் சம்பத்தப்பட்ட மாணவன் ஒருவன்
பள்ளியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருந்தான். அந்தக் கடைசி நாளில் என்னை
ஏறெடுத்துங்கூட பார்க்கவில்லை. கடிதம் கிடைத்தவுடன் வெளியிலிருந்து நண்பரை
வரச் சொல்லி மோட்டாரில் பறந்தான். அவன் அநேகமாக அடுத்த கட்டத்தை முடிவு
செய்திருப்பான். பள்ளி ரீதியில் ஏற்கெனவே அவனுக்குப் பல வாய்ப்புகள்
கொடுத்தும் மனவள ஆசிரியரின் மனநெறி விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றை
அம்மாணவன் உள்வாங்கிக்கொண்டவனாக இலன். அல்லது அவனுக்கான தீர்வாக அந்த மனநல
ஊட்டல் அமையவில்லையென்பதுதான் உண்மை. கறுப்பு வெள்ளைக் காகிதத்தில் அவனைப்
பற்றிய ஆவணம் பதிவாகிவிடுகிறது.மற்றப்படி அவனது கோவணத்தைக்கூட மாற்ற
முடியவில்லை இந்தக் காகிதத்தால்!
இரண்டாம் படிவம் வரை நல்ல மாணவன் என்ற பெயரெடுத்தவன். மூன்றாம்
படிவத்திற்கு உயர்ந்தபோது சரீரமும் சாரீரமும் ஒரு சேர மாற்றம் அடைந்தன.
நன்றாய் இயங்கிக்கொண்டிருந்த வீட்டில், தந்தையாரின் கெடுபிடியும் குத்தலான
பேச்சும் அதிகரிக்கவே இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றி, ஒரு தடவை அவன்
சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம் பார்த்து அப்பா அவனை உணவுத் தட்டைக் கொண்டு
பின்புறமாகத் தாக்கித் தகாத வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு ஏசியிருக்கிறார்.
பையனும் சடாரென எழுந்து அப்பாவை அடித்திருக்கிறான். அந்தச் சம்பவத்திற்குப்
பின் அவர் அவனை ஒவ்வொரு நாளும் வார்த்தையாலே கொன்றிருக்கிறார். அப்பாவை
நம்பக்கூடாது அல்லது சிரமம் தரக்கூடாது என முடிவெடுத்துப் பள்ளிக்குத்
தேவையான பணத்தைச் சுயமாய் ஈட்ட வேண்டும் என்ற முனைப்பில் சில தகாத நட்பின்
மூலம் வேலை கிடைக்க, அதைக் கொண்டு சுய தேவைகளையும் வீட்டுத் தேவைகளையும்
கவனித்துக்கொண்டான். இந்தச் செயல்பாடு அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அவனது
வேகத்தையும் மனத்தையும் புரிந்துகொண்ட இன்னொரு வகுப்பு மாணவி அவனது
இணையாகி, பள்ளி வளாகம் அவனுக்கான ஆலோசனைக் களமாக உருவெடுத்தது. இந்த நட்பை
யாரேனும் தவறாக விமர்சிப்பார்களேயானால், அதே பள்ளி வளாகத்துக்குள் அடி உதை!
அவனுக்கான எதிர்மறையான ஆளுமை மற்றப் பிற மாணவர்களின் காவலனாக
மாற்றியிருந்தது.இப்படியாகப் பல வழக்குகள் அவனைக் கட்டொழுங்குப்
பதிவேட்டில் முதன்மைப்படுத்தியிருந்தது.
முன்னதாக ஒரு மாலையில் அவனிடம் பேச்சுக் கொடுத்தபோது ஒன்றை மட்டும்
திரும்பத் திரும்பச் சொன்னான். சாலை நிர்மாணிப்பு ஊழியராக வேலை பார்க்கும்
அப்பாவைக் கைவிடக்கூடாது என்ற கடமையுணர்வும் பாசமும் அவனிடம்
நிரம்பியிருப்பதைக் கண்டேன். வாழ்வின் திட்டங்களைப் பற்றி என்னென்னவோ
பேசினான். இவ்வாண்டு ஐந்தாம் படிவம் முடிந்தவுடன் கல்லூரிக்குச் சென்று
பயிற்சி முடித்து வேலை செய்ய வேண்டுமென்ற இலட்சியப் பிடிப்பு
அவனிடமிருந்தது. இடையில் சின்னச் சின்ன கட்டொழுங்குச் சிக்கல்கள்!
மீசையையும் தாடியையும் மழிக்கச் சொன்னதற்கு மறுப்புத் தெரிவித்தான்.
தாடியும் மீசையும் தனக்கோர் அடையாளத்தை உருவாக்குவதாக அவனுக்குப்படுகிறது.
தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்பதான எதிர்பார்ப்பு; அங்கீகாரம்! பெண்
பிள்ளைகள் இருக்கின்ற இடங்களில் அவனது ஆட்டம் மிகையாகி பல வேளைகளில் உடன்
இருக்கின்ற பொடியன்களும் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாகி அது இன்னொரு
சாராருக்குத் தெரியவர சண்டை சச்சரவுக்கு வழிகோலிவிடுகிறது. அந்தச் சண்டை
பள்ளிக்கு வெளியேயும் நடந்திருக்கிறது.இந்தப் பெண் பிள்ளைகளும் அவனுக்கு
எதிர்ப்புறம் வேண்டுமென்றெ அமர்ந்துகொண்டு உசுப்பேற்றிவிடுகின்றனர்; அது
விபரீதமாகிவிடுகின்றது.
மூன்று மாதங்களுக்கு முன்பே அவன் நீக்கப்பட்டவன்தான். மாநிலக் கல்வி
இலாகாவில் அழாக் குறையாக மேல் முறையீடு செய்து போராடிய பின்பு மீண்டும்
படிக்க வாய்ப்புக் கிட்டியும் அதை அவன் கோட்டைவிட்டிருந்தான்! அவனை அந்தப்
பெண்பிள்ளையத் தவிர வேறு யாரும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. படிப்பு
மண்டைக்கு ஏறாத அந்தப் பெண் பிள்ளைக்கும் வீட்டில் பேய் அடிதான்!
இன்றைய நிலையில் பெற்றோரின் வளர்ப்பு முறையில் அகண்ட சரிவு ஏற்பட்டுள்ளது.
முதலில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன், பெற்றோர்தான்
வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ளவேண்டும் போல் தோன்றுகிறது! பிற
சமூகங்களோடு ஒப்பிடுகையில் பிள்ளைகளைக் கவனிக்கின்ற ஞானமூலம் நமது
பெற்றோர்களுக்கு மிகக் கம்மிதான்! அதற்குப் பின்புலமாகப் பெற்றோரைக் காரணம்
காட்டுவதோடு, நமது வரலாறும் சம்பிரதாயங்களும் செய்த மோசடிகளையும்
கவனத்திற்கொள்ள வேண்டும். ஒரு கொலைக்குப் பின் அதன் நியாயங்களையும்
கருத்தில் வைக்க வேண்டும்.
பள்ளியை விட்டு நீக்கப்பட்டிருந்த அம்மாணவனின் வீட்டை நோக்கி மறுநாள்
போயிருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த என்னை வரவேற்றவன் அவனது தம்பிதான்.
அவனது அப்பா குத்துக்கல்லைப்போல் மெத்திருக்கையில் அமர்ந்திருந்தார்.
மருந்துக்கும் வரவேற்கவில்லை. பண்பாடு செத்துப்போன தலைமைத்துவத்தில் நல்ல
பயிர்ப்புகள் உயிர்க்காது! அவனது அம்மா அன்பொழுக என்னிடம் வந்து பேச்சுக்
கொடுத்தார். பையன் எங்கேயெனக் கேட்டேன். வேலைக்குச் சென்றதாகவும்
இரவில்தான் வீடு திரும்புவதாகவும் கூறினார். அவனை இன்னும் சந்திக்கவில்லை.
நான் மட்டுமல்ல, இந்தச் சமூகமுந்தான்!
|
|