|
|
எந்தையின் நினைவுகளோடு மலேசிய மண்ணில்...
மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் சார்பாகத் தலைநகர்
கோலாலம்பூரில் முனைவர் பெரு.அ.தமிழ்மணி அவர்களின் தலைமையில், விழாக்
குழுவினரின் அன்பான உபசரிப்புடன் சென்ற ஜனவரி 27,28,29 தேதிகளில் நடைபெற்ற
பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் கலந்துகொள்ள நானும் எழுத்தாளர் ஆதவன்
தீட்சண்யாவும் அழைக்கப்பட்டதில் மலேசியாவில் நம்பிக்கையூட்டத்தக்க வகையில்
இன்று உருவாகி வரும் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஒரு முக்கிய
பங்கிருந்தது. தமிழகப் பகுத்தறிவு இயக்கங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும்
மேற்பட்ட முக்கிய தலைவர்கள், பேச்சாளர்கள் மத்தியில் நாங்கள் இருவரும்
கொஞ்சம் பொருத்தமற்றுத்தான் இருந்தோம். என்னுடைய ‘பெரியார்?’ நூலை எனது
முக்கிய எழுத்துகளில் ஒன்று என நம்பிக்கொண்டிருப்பவன் நான். ஆனால் நான்
அழைக்கப்பட்டது அந்த நூல் மூலமாகப் பெரியாரியலுக்குச் சிறியதொரு
பங்களிப்புச் செய்தவன் என்பதற்காக அல்ல. சொல்லப்போனால் அந்தக் குறுநூலைப்
பற்றி அங்கு யாரும் அறிந்திராதிருந்தது ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று
என்றே தோன்றியது.
தமிழகத்திலிருந்து வந்த ‘பெரியாரிஸ்டுகள்’ பலருக்கும் கூட, நாங்களும்
அவர்களோடு அழைக்கப்பட்டிருந்தது ஒரு உறுத்தல்தான். அங்கு நடைபெற்ற 3 நாள்
விழாவில், உரையாற்றிய 30க்கும் மேற்பட்ட பேச்சாளர்களில் என் ஒருவனின்
பேச்சுக்கு மட்டுமே எதிர்வினைகள் இருந்தன. பேச்சுத் தொடர் இடையில்
நிறுத்தப்பட்டு மறுப்புகள் முன்வைக்கப்பட்டன. மறுப்புகளை முன் வைத்தவர்கள்
யாரும் மலேசியத் தமிழர்கள் அல்ல. அவர்கள் என் பேச்சைக் கவனமாகக் கேட்கவே
செய்தனர். எரிச்சலடைந்தவர்கள் இங்கிருந்து வந்த ‘பகுத்தறிவாளர்கள்’தான்.
எனது பேச்சு தமிழகப் பிரதிநிதிகள் மத்தியில் ஒரு சலசலப்பை
ஏற்படுத்தியதற்குக் காரணம் நான் சொன்ன ஒரு கருத்துத்தான். ‘பெரியாரை
வெறுமனே கடவுள் மறுப்பாளர் என்கிற அளவில் சுருக்கி விடாதீர்கள். அவரது மிக
அடிப்படையான நோக்கும் செயற்பாடுகளும் சாதி ஒழிப்பை மையமாக வைத்துத்தான்
அமைந்தன. அதற்குத் தடையாக உள்ள பலகாரணிகளில் ஒன்றாகவே அவர் பார்ப்பனீயம்,
கடவுள் நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டார். நமது ‘பெருமைக்குரிய’ பண்டைய
இலக்கியங்கள், வரலாறு, தேசிய உணர்வு, மொழிப்பற்று ஆகியன குறித்து அவர்
கூறியுள்ள எதிர்க் கலாச்சாரச் சிந்தனைகள் மிக முக்கியமானவை. பெண்ணியம்
குறித்த அவரது சிந்தனைகள் மிகவும் நவீனமானவை’ என நான் வழக்கமாகப் பேசி
வருபவற்றைத்தான் அங்கும் பேசினேன்.
‘கடவுள்’ என்கிற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வேலு பிரபாகரன் எழுந்து
நின்று என் கருத்துக்கு மறுப்பளிக்க வேண்டுமென விழாக் குழுவினரிடம்
கோரினார். அவர்களும் அனுமதித்தனர். சாதி ஒழிப்பைப் பற்றி யார்
வேண்டுமானாலும் பேசிப் புரட்சிப் பட்டம் வாங்கிவிடலாம். கடவுளை
மறுப்பதுதான் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்று. அதைச் செய்வதற்குத்தான்
துணிச்சல் வேண்டும். அதை ஏன் பின்னுக்குத் தள்ளுகிறீர்கள் என்பதே அவரது
வாதத்தின் மையமாக இருந்தது. அடுத்த நாள் உரையாற்றிய விடுதலை ராசேந்திரன்
எனது பேச்சுக்கு விளாவாரியாக மறுப்பளித்தார். சாதி ஒழிப்பை
முன்நிறுத்துவதன் உள்நோக்கம் என்ன என்று கூறிப் பார்வையாளர்களை நோக்கிப்
புன்முறுவலித்தார்.
ஓர் உயரிய நோக்குடன் மிகவும் சிரமப்பட்டு, பெரும் பொருட்செலவுடன்
நடத்தப்பட்ட அந்த மாநாட்டை இந்த விவாதத்தை நோக்கிச் சுருக்க நான்
விரும்பவில்லை. எனினும் விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டதால் பிரபாகரனின்
பேச்சுக்கு மட்டும் மேடை ஏறி பதிலளித்தேன். ஜனவரி 30 அன்று கெப்பாளா
பாத்தாஸ் (Kepala Batas) என்னுமிடத்தில் நடைபெற்ற பெரியார் சிலைத் திறப்பு
விழாவின்போதும் பெரியார் சாதி ஒழிப்பை முதன்மைப்படுத்தி இயங்கியது
குறித்துச் சில சொன்னேன். சாதி ஒழிப்பை யார் வேண்டுமானாலும் பேசிவிட
இயலும், கடவுள் மறுப்பைத்தான் பேசமுடியாது எனப் பிரபாகரன் பேசியதில்
பொருளில்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். கடவுளை யார் வேண்டுமானாலும்
மறுத்துவிட்டுப் போகலாம். அந்தக் கடவுள் வந்து கேட்கப்போவதில்லை.
சாதியைத்தான் நீங்கள் திட்ட இயலாது. ‘கடவுள்’ என்றொரு பகுத்தறிவுச்
சிந்தனையை வெளிப்படுத்தும் படமொன்றை எடுத்தீர்கள்; அது பாராட்டுக்குரியது.
ஆனால் ‘தேவர்’ என்றொரு படத்தை எடுத்துச் சாதி ஆதிக்கத்தை
விமர்சனத்திற்குள்ளாக்கி இருக்க முடியுமா? என்று கேட்டேன். “நான்
நாத்திகனல்லன், தாராளவாதி” என்றெல்லாம் பெரியார் கூறியதையும் சாதி இல்லை என
அரசியல் சட்டத்தைத் திருத்தினால் தனித் தமிழ்நாடு கோரிக்கையை
விட்டுவிடுவேன் என அவர் இந்திராகாந்தியிடம் சுட்டிக் காட்டியதையும்
தொட்டுக் காட்டினேன். சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசினால் ஏன் தமிழ்
நாட்டிலிருந்து வருபவர்களுக்கு இத்தனை கோபம் வருகிறது என்று வினவினேன்.
கெப்பளா பாத்தாஸில் பேசும்போது உயர் சாதியைச் சேர்ந்த பகுத்தறிவாளர் வேலூர்
நாராயணனுக்கும் தாழ்த்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து
அம்மையாருக்கும் இடையில் நடந்த பிரச்சினை ஒன்றில் பெரியார் எடுத்த
நிலைப்பாட்டை விரிவாக விளக்கினேன். ‘எனக்கொரு மகள் இல்லை. இருந்திருந்தால்
ஒரு தாழ்த்தப்பட்டவரின் பிள்ளைக்குத்தான் திருமணம் செய்து தந்திருப்பேன்.
அந்த மகளுக்குச் சுய தேர்வு இருக்க இயலாதா? நீங்கள் யார் அவளுக்கு
மாப்பிள்ளை தேர்வு செய்வது என நீங்கள் கேட்கலாம். அப்படியான ஒரு தேர்வை
அவளே செய்யும் அளவிற்கு அவளை நான் வளர்த்திருப்பேன்’’ என்கிற பொருள்பட அவர்
பேசியிருப்பதையும் சுட்டிக் காட்டினேன்.
மலேசியத் தமிழர்கள் மத்தியில் ஓரளவு என் பேச்சு கவனம் கொள்ளப்பட்டதாகத்தான்
அடுத்தடுத்த நாட்களில் உணர்ந்தேன். தமிழர்கள் எங்கு சென்றாலும் சாதியும்
அவர்களுடன் கூடவே போகும்தானே. ஆனாலும் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும்
உள்ளது போன்ற சாதி இறுக்கம் மலேசியாவில் இல்லை என்றே தோன்றியது. இதன்
பொருள் அங்கு ஓரளவு சாதிச் சமநிலை உள்ளதென்று பொருளல்ல. இங்கிருப்பதுபோல
இல்லை என்றுதான் சொல்ல வந்தேன். இப்படிச் சொல்லலாம். தமிழகத்தில் உள்ளதுபோல
மலேசியாவிலும் ஏற்பாட்டுத் திருமணங்களில் சாதி ஒரு முக்கிய பங்கு
வகிக்கிறது. ஆனால் சாதி மீறிய திருமணங்கள் நடந்துவிடும்போது தமிழகத்தைப்போல
விலக்கி வைத்தல் அல்லது கவுரவக் கொலைகள் என்பதெல்லாம் அங்கில்லை. ஆனாலும்
அங்கும் சாதி இருக்கத்தான் செய்கிறது. 18, 19ம் நூற்றாண்டுகளில் காடாய்க்
கிடந்த மலேசிய நாட்டைத் திருத்தித் தோட்டச் சாகுபடிக்குரியதாக்கும் கடினமான
பணிகளைச் செய்வதற்கு ‘சஞ்சிக் கூலிகளாக’ப் பிரிட்டிஷ் அரசால்
தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள்தான் இன்றைய மலேசியத்
தமிழர்கள். பெரிய அளவில் தாழ்த்தப்பட்டவர்கள், முக்குலத்தோர், கவுண்டர்கள்,
வன்னியர்கள் முதலான சாதியினர் அவர்களில் இருந்தனர். அங்கு அவர்களின்
குடியேற்றம் சாதி நிலைப்பட்டதாகவே அமைந்தது. தோட்டக் குடியிருப்புகளின்
அமைப்பிலும் கூடச் சாதி ஒரு முக்கிய பங்கை வகித்தது என்று ஒருவர் உணவு
இடைவேளையின்போது பகிர்ந்துகொண்டார். மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர்களில்
ஒருவரான கோலாலங்காட் ரெங்கசாமியின் முக்கிய நூல்களில் ஒன்றான ‘லங்காட்
நதிக்கரையில்’ எனும் நாவலின் முதல் அத்தியாயம் ஆங்கிலேயரின் தோட்டத்துக்
கொடுமைகளைப் பொறாத ஒரு தமிழ்க் குடும்பம் தப்பியோடி சீனக் ‘கம்பம்’
(குடியிருப்பு) ஒன்றில் தஞ்சம் புகுவதுடன் தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக
அவரது உறவினர்களும் அங்கு வந்து தோட்டப் பகுதிகளைத் திருத்தி, சில
ஆண்டுகளில் அங்கு ஒரு தமிழ்க் கம்பமே உருவாகிவிடுகிறது. முதல்
அத்தியாயத்திற்கு ரெங்கசாமி அவர்களிட்டிருக்கும் தலைப்பு ”சிவகங்கைச்
சீமை”. இந்தத் தலைப்பொன்றே போதும் அக்குடியிருப்பு எத்தகைய சாதிப்
பின்புலம் கொண்டது எனப் புரிந்து கொள்வதற்கு.
தமிழர்களின் முக்கிய அரசியல் கட்சியாக உள்ள மலேசிய இந்தியக் காங்கிரசும்
சாதி சார்ந்த ஒரு அமைப்பாகத்தான் உள்ளது என்றார் மற்றொருவர். அதில்
முக்குலத்தோரின் ஆதிக்கம் அதிகம் என்பது அவர் கருத்தாக இருந்தது.
புகழ்பெற்ற பத்துமலைக் கோவிலிலும் கூட முக்குலத்தோரின் ஆதிக்கம் அதிகம்
என்றார் இன்னொருவர். மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள ஆதிக்க
மோதலைக் கவுண்டர்களுக்கும் முக்குலத்தோருக்குமான மோதலாகவும் பார்க்கலாம்
எனவும் இன்னொருவர் விளக்கினார். பன்னாட்டுப் பகுத்தறிவாளர் மாநாட்டுக்கு
வந்திருந்தவர்களிடையேகூட சாதி உணர்வு இருந்ததை விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு
ஒன்றும் எனக்குக் கிட்டியது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் வெளி மாநிலம்
ஒன்றிலிருந்து வந்திருந்தார். அவர் என் காதருகில் வந்து மாநாட்டை
நடத்துபவர்கள் குறித்து, “எல்லாம் தலித்துகள்” என ரொம்ப எள்ளலோடு சொன்னதோடு
வேறு சில குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.
கடந்த சில ஆண்டுகளில் சாதிச் சங்கங்கள் வலுவுடன் செயல்படத்
தொடங்கியுள்ளதையும் தமிழ் அமைப்புகள் பலவற்றிலும் முக்குலத்தோர்கள்,
வன்னியர்கள், கவுண்டர்கள் ஆகியோர் ஆதிக்கம் செய்கிற நிலை உள்ளதையும்
புரிந்துகொண்டேன். இத்தகைய பின்னணியில் எனது பேச்சு அங்கு
பொருத்தமுடையதாகத்தான் இருந்திருக்கும் என ஆறுதல் கொண்டேன்.
ஆனால் இந்தச் சாதி வேறுபாடுகள் எல்லாவற்றையும் மீறி அங்கு தாம் ஒரு
ஒடுக்கப்படும் இனம் என்கிற வகையில் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் ஒற்றுமை
வரலாற்று ரீதியாக நிலவுவதை யாரும் மறுத்துவிட இயலாது. காலனியக்
கொடுமைகளினூடான கொத்தடிமை வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்திருந்தபோதிலும்
அதற்குப் பிந்தைய ‘சுதந்திர அரசி’ன் ‘பூமிபுத்திரர்’ கொள்கையினூடாக அங்கே
ஆகக் கீழ்நிலையிலுள்ள இந்தியர்களின் உரிமைகள் பெரிய அளவில்
பாதிப்பிற்குள்ளாயின. மலாய்க்காரர்களைப்போல பூமிபுத்திரர்களாகவும் (62%)
இல்லாது, சீனர்களைப்போல (23%) பொருளாதார ஆதிக்க சக்திகளாகவும் இல்லாது
வாழும் இந்தியர்கள் (7%)- இவர்களில் தமிழர்கள் சுமார் 88%- ஆகக் கீழான
நிலையிலுள்ளனர். நடக்க உள்ள தேர்தலில் கடந்த பல பத்தாண்டுகளாக ஆட்சியிலுள்ள
அம்னோ கட்சியின் ஆட்சியை வீழ்த்துவது என்பதில் எல்லோரும் ஒருமித்த
கருத்துடையவர்களாக உள்ளனர். பூமி புத்திரர்களின் (மலாய்க்காரர்கள்)
வாக்குகள் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் சமமாகப்
பிரிந்தும் சீனர்களின் வாக்குகள் எதிராகவும் உள்ள நிலையில் இந்தியர்களின்
வாக்குகள் தேர்தல் முடிவில் உறுதியான ஒரு பங்காற்றும் என்கிற நம்பிக்கை
எல்லோருக்கும் இருப்பதைக் காண முடிந்தது.
இங்கிருந்து வந்திருந்த ஒரு பகுத்தறிவாளர் தன்னுடைய பேச்சின்போது இந்தச்
சிறிய நாட்டில் 40,000 இந்துக் கோவில்கள் உள்ளதென வியப்புக்காட்டி
தமிழர்களின் மூட நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடினார். பின்னால் பேச வந்த
பலரும் அதை மேற்கோள்காட்டிக் கண்டனங்களைத் தொடர்ந்தனர். தமிழகத்திலிருந்து
வந்திருந்த அனைவரும், தாம் முற்றிலும் வேறுபட்ட ஒரு நாட்டில், மாறுபட்ட ஒரு
கலாச்சாரத்தில் இருக்கிறோம் என்கிற பிரக்ஞையே இன்றி ஏதோ தமிழ்நாட்டின் ஒரு
மாவட்டத் தலைநகரில் இருப்பதுபோலவே பேசினர். நம்முடைய அரசியல் பார்வைகள்,
அரசியல் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உலகத் தமிழர்களின் பிரச்சினை
எல்லாவற்றையும் பார்க்கும் போக்கு நமது தேசியவாதிகளிடையே எந்த அளவிற்கு
வேரூன்றி உள்ளது என நினைத்துக் கொண்டேன். அரசியல், கலாச்சார மற்றும்
குறியீட்டுத் தளங்களில் இந்துக் கோவில்கள் வகிக்கும் பங்கு நாட்டுக்கு நாடு
வேறுபடுகிறது. இந்தியர்கள் என்போரில் சீக்கியர் (2.6%), கிறிஸ்தவர்கள்
(8%), முஸ்லிம்கள் (4%) ஆகியோரின் அளவு மிகக் குறைவு. பெரும்பாலானோர்
இந்துகள்தான் (84.4%). தமிழர்களின் கல்வியில் காலனிய அரசு கிஞ்சித்தும்
கவலை கொள்ளாதிருந்த நிலையில் தாமே அந்தச் சுமையை ஏற்று தமிழ்ப்
பள்ளிக்கூடங்களை உருவாக்கிய காலத்தில் ஆசிரியர்களின் குடிசைகளும், இந்தக்
கோவில்களும்தான் பள்ளிக் கட்டிடங்களாகவும் செயலாற்றியுள்ளன. ‘குடிசைப்
பள்ளிகள்’, ‘கோவில் பள்ளிகள்’ என்று அவை அழைக்கப்பட்டன. தமிழ்க்
குடியிருப்பு ஒன்று உருவாகிறதெனில் அங்கு அவர்கள் எழுப்பும் கோவில் என்பது
வெறும் வழிபாட்டுத் தளம் மட்டுமல்ல. அதுவே அவர்களது அடையாளக்
குறியீடாகவும், ஒருவகையில் பாதுகாப்புச் சின்னமாகவும்கூட அமைந்துவிடுகிறது.
இது வரவேற்கப்பட வேன்டிய ஒன்று என நான் சொல்ல வரவில்லை. ஆனால் நாம் இந்த
எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பூமிபுத்திரர் கொள்கையால் தமிழர்கள் மற்றும் சீனர்களின் உரிமைகள்
மறுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவு இஸ்லாமிய மயமாக்கல்
மேற்கொள்ளப்பட்டபோது இந்து என்கிற அடையாளத்துடன் இந்தியர்கள் எல்லோரும்
ஒருங்கு திரண்டதையும் நாம் இப்படித்தான் விளங்கிக் கொள்ள வேண்டி
இருக்கிறது. 2006ம் ஆண்டில் சிலாங்கூர் மாகாணத்திலுள்ள ஷாஆலம் நகரிலிருந்த
நூறாண்டுக்கும் மேல் பழமையான இந்துக் கோவிலொன்றும், கோலாலம்பூரிலும் அதேபோல
60ஆண்டுப் பழமை மிக்க ஒரு இந்துக் கோவிலின் ஒரு பகுதியும் அரசால்
இடிக்கப்பட்டபோது ‘ஹிண்ட்ராஃப்’ (Hindu Rights Action Force- (இந்து
உரிமைகள் போராட்டக் குழு) என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு மிகப் பெரிய
போராட்டங்கள் பேரணிகள் நடத்தப்பட்டன. அரசு இவ்வியக்கத்தைக் கடுமையாக
ஒடுக்கியது. போராட்டங்கள் பேரணிகள் நடத்தப்பட்டன. அரசு இவ்வியக்கத்தைக்
கடுமையாக ஒடுக்கியது. உதயகுமார், மனோகரன் மலையாளம், வசந்தகுமார், கணபதிராவ்
முதலான அதன் தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது
செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். வேதமூர்த்தி என்பவர் மட்டும்
லண்டனின் தஞ்சம் புகுந்தார். ‘இந்து’ என்கிற அடையாளம் அப்போது இந்தியப்
பாசிசத்தை எதிர்த்துக் கொண்டுள்ள எங்களைப் போன்றோருக்குக் கொஞ்சம்
ஒவ்வாமையை ஏற்படுத்தத்தான் செய்தததெனினும் நேரில் பார்க்கும்போது இதை
இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக விளங்கிக்கொள்ள முடிந்தது. இந்துத் தமிழர்கள்
மட்டுமின்றி நான் சந்தித்த முஸ்லிம் தமிழர்கள், மனித உரிமைச்
செயல்பாட்டாளர்கள், ஏன் கம்யூனிஸ்டுகளும் கூட ஹிண்ட்ராஃபின் அப்
போராட்டத்தை ஆதரித்தும் வரவேற்றும் பேசினர். ஹிண்ட்ராஃபின்
போராட்டத்திற்குப் பின்னரே தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் பெரிதும்
குறைந்தன எனப் பலரும் கூறினர்.
நான் புறப்படுவதற்கு முன் எப்படியாவது இவ்வமைப்பின் தலைவர் உதயகுமாரைப்
பார்த்துவிடலாமென முயற்சித்தேன். நண்பர் நவீன் இது தொடர்பாக எடுத்துக்கொண்ட
முயற்சிகள் பலனளிக்காமல் போயிற்று. அவரைச் சந்தித்திருந்தால் ஒன்றை
நிச்சயம் அவரிடம் கூறி இருப்பேன். “எப்படியிருந்தாலும் அடையாள அரசியல் இரு
பக்கமும் கூரான ஒரு கத்திதான். உங்கள் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்ட
நேரத்தில் நீங்கள் இந்தியா வந்திருந்து ஆதரவு திரட்டியது சரியான
காரியந்தான். ஆனால் நீங்கள் அத்வானியையும் இதர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க
தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டது என்ன நியாயம்? இந்து என்கிற
அடையாளத்தை இரு நாடுகளிலும் ஒன்றாக நாங்கள் எப்படிப் பார்க்கக் கூடாதோ
அதேபோல நீங்களும் அதை அப்படிப் பார்க்கக்கூடாது. இங்கே (இந்தியாவில்) இந்து
என்கிற பெயரில் இயங்கும் கட்சிகள் அனைத்தும் பாசிச அமைப்புகள். அங்கே
(மலேசியாவில்) இந்து என்கிற அடையாளத்தில் இயங்குபவை சிறுபான்மையோரின்
உரிமைகளைக் காப்பதற்காகப் போராடும் இயக்கங்கள். இதை நீங்கள் தயவுசெய்து
கவனத்தில் கொள்ள வேண்டும்.” எனினும் இதைச் சொல்ல எனக்கு வாய்ப்பில்லாமற்
போயிற்று.
உலகெங்கிலும் பன்மைத்துவத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடுவதுதான் இன்று
ஜனநாயக சக்திகளின் முக்கிய பணியாக இருக்கிறது. தமிழர்களுக்கும்
தென்கிழக்காசிய நாடுகளுக்குமான தொடர்பு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கும்
மேற்பட்டது. “முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்” என்கிற சொற்றொடர் நாமறிந்த
ஒன்று. எழுத்தாள நண்பர் பாலமுருகன் என்னையும், ஆதவனையும், ஈழத் தோழர்
தேவாவையும் பூஜாங் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுத்
தலங்களுக்கு அழைத்துச் சென்றது மறக்கமுடியாத ஒர் அனுபவம். இந்தியத்
தொன்மையும், மலேசியத் தொன்மையும் எத்தனை நெருக்கமான தொடர்புடையவை என்பது
நினைக்க நினைக்க வியப்பாக இருந்தது. சொல்லப்போனால் இன்று அங்கு
பெரும்பான்மையாக உள்ள இஸ்லாம் மிகச் சமீபமாகவே அங்கு அறிமுகமானது. பல
தமிழ்ச் சொற்கள் இன்றும் மலாய் மொழியில் அப்படியே பயிலப்படுகின்றன. கடை,
கப்பல், அக்கா…. இப்படி நிறையச் சொல்லலாம்.. குறைந்த பட்சம் மூன்று
இனங்கள், மூன்று மொழிகள், மூன்று கலாச்சாரங்கள் சுமார் இரு
நூற்றாண்டுகளுக்கும் மேலாக அங்கே ஒன்றாக வாழப் பழகிவிட்டன. சென்ற ஆண்டில்
நான் சவூதி போயிருந்தேன். அதுவும் ஒரு முஸ்லிம் நாடுதான். மலேசியாவிலும் 70
சதத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள்தான். ஆனால் மலேசியா அதன்
வரலாற்றினூடாக பிற இரு இனங்களுடன் வாழப் பழகிவிட்ட ஒரு நாடாகவே என்னால்
உணர்ந்து கொள்ள முடிந்தது. மூன்று இனங்களுக்குமான ஆலயங்கள், மூன்று
இனங்களுக்குமான உணவு விடுதிகள் அருகருகே அமைந்திருந்த காட்சிகள் மறக்க
இயலாத ஒன்று. மலாய்க்காரர்களின் கடைகளில் பன்றிக் கறியும், மதுவும் தடை
செய்யப்பட்ட ஒன்று. அருகிலுள்ள சீன உணவு விடுதிகளில் இவை இரண்டும்
எந்நேரமும் உண்ணவும் குடிக்கவும் கிடைக்கும். நான் அங்கிருந்த நட்களில்தான்
புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா நடந்தது. அதற்கென ஒரு நாள் அரசு விடுமுறை
சில மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டுத் திருவிழாக்களின்போது
புனிதத் தலங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்குவார்களே அதேபோல
பதுமலைக் கோவிலுக்கெனச் சிறப்புப் பேருந்துகள் கோலாலம்பூர் நகரெங்கும்
ஓடித்திரிந்தன.
கோலாலம்பூர் ஜலான் கிள்ளான் லாமா பகுதியில் ஒரு ஓட்டலில் நாங்கள்
தங்கியிருந்தோம். ஒரு நாள் இரவு பேச்சுக்கிடையில் ஒரு பியர்
சாப்பிட்டுவிட்டு வரலாம் என நான், தேவா, சிவா பெரியண்ணன் ஆகிய மூவரும்
அருகிலுள்ள சீனக் கடைக்குச் சென்றோம். போகிற வழியில் ஷாமியானா
அமைக்கப்பட்டு ஏகப்பட்ட ஒளி அலங்காரங்கள், வண்ண வண்ண பலூன்கள் சகிதம் மிகப்
பெரிய தேங்காய்க் குவியல்கள் அதில் நிறைக்கப்பட்டிருந்தன. “வேறொன்றுமில்லை.
இன்னுஞ் சிறிது நேரத்தில் முருகன் சிலை ஊர்வலமாக வரும். அப்போது
உடைக்கத்தான் இந்தத் தேங்காய்கள்” என்றார் சிவா. காலையில் தேநீர் அருந்த
அவ்வழியே சென்றபோது தேங்காய்களெல்லாம் உடைக்கப்பட்டு, வெடிகளெல்லாம்
வெடிக்கப்பட்டு அந்தப் பகுதியே சேராய்க்கிடந்தது.
ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் இனம், மொழி, மதம் ஆகியவற்றின் பெயரால் இந்த
ஒற்றுமைகளைச் சிதைக்கப் பார்க்கின்றனர். பூமிபுத்திரர் கொள்கையினூடாக
மலேசியத் தமிழ்மக்கள் இன்று ஒடுக்கப்படுகின்றனர். அவர்களது அடையாளத்தைச்
சிதைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
நான் அங்கு சந்தித்தவர்களில் முக்கியமான ஒருவர் மனித உரிமைப் போராளி திரு
கா.ஆறுமுகம். அரசின் ஊழல்களை எதிர்த்தும் அவரது அமைப்பினர் பல்வேறு
தளங்களில் போராடிக் கொண்டுள்ளனர். தமிழர்களின் வரலாற்றில் மூன்று முக்கிய
கணங்களை அவர் நினைவுகூர்ந்தார். முதலாவது 1923ல் நடைபெற்ற பெரியார் ஈ.வெ.ரா
அவர்களின் முதல் வருகை. தமிழர்கள் மத்தியில் இன உணர்வும், ஒற்றுமையும்,
போராட்ட ஊக்கமும் இந்த வருகையின் மூலம் எங்களுக்குக் கிட்டியது என்றார்
ஆறுமுகம். மலேசியத் திராவிடர் கழகம் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
இரண்டாவது வரலாற்று நிகழ்வாக அவர் குறிப்பிட்டது 1940களில் சுபாஷ் சந்திர
போசின் வருகை. மலேசியாவைத் தளமாகக் கொண்டுதான் அவர் இந்திய தேசிய
இராணுவத்தைக் கட்டமைத்தார். “டில்லி சலோ” என்கிற முழக்கத்துடன் பர்மாவரை
சென்ற அந்த இராணுவத்தில் மலேசியத் தமிழர்கள் பெரும் பங்காற்றினர். உலகையே
ஒரு கொடியின் கீழ் ஆண்ட ஒரு ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துக் களம் கண்டு
உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்கிற தெம்பையும் திராணியையும் போசின் வருகை
தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.
மூன்றாவதாக அவர் குறிப்பிடப்போகும் கணத்தை அறிய மிக்க ஆவலுடன்
காத்திருந்தேன். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைத்து ஜப்பானிய
ஆக்ரமிப்பிற்கு எதிராகவும், ஜப்பானியர்கள் விரட்டப்பட்ட பின்னர் பிரிட்டிஷ்
ஏகாபத்தியத்திற்கு எதிராகவும் ஆயுதப் போராட்டம் ஒன்றை நடத்திய மலேசியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கத்தைத்தான் சொல்லப் போகிறார் என்பது என்
எதிர்பார்ப்பு. எனது மார்க்ஸீய ஈடுபாட்டின்பாற்பட்ட எதிர்பார்ப்பு
மட்டுமல்ல அது. அதில் முக்கிய பங்காற்றியவர்களில் என் தந்தையும் ஒருவர்,
மலேசியப் பயணம் என்றவுடன் அவரது நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நான்
விமானம் ஏறியிருந்தேன். இதுவரை வெளிநாடுகள் சென்றபோதெல்லாம் ஏற்பட்டிராத
ஏதோ ஒரு வகைப் பதட்டமும், துடிப்பும், ஆர்வமும் என்னுள் நிறைந்திருந்தது.
எனது 62 ஆண்டு கால வாழ்வில் நான் சந்தித்த எத்தனையோ மனிதர்களில் என்
மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர்களில் என் தந்தை முக்கியமானவர். அந்தப்
பற்று ஒரு தந்தை என்கிற வகையில் அவர் மீது எனக்கு ஏற்பட்டதல்ல.
சொல்லப்போனால் ஒரு தந்தை என்கிற வகையில் அவர் எனக்கோ என் தம்பி தங்கைகட்கோ
எந்தக்கடமையையும் ஆற்றியதில்லை. கொஞ்சமும் பொறுப்பற்று வாழ்ந்து மிகப்
பெரிய சுமைகளை என் மீது சுமத்திவிட்டுச் சென்றவர் அவர். ஒரு தந்தை என்ற
வகையில் அவரை வெறுப்பதற்கே எனக்குக் காரணங்கள் அதிகம் உள்ளன. ஆனால்
உலகையும் மனிதர்களையும் வேறு விதமாகப் பார்க்க அவர் எனக்குக் கற்றுக்
கொடுத்தார். மனிதர்கள் மீது அளப்பரிய நேசத்தைச் செலுத்துவது எப்படி என்பதை
அவர் என் கண்முன் வாழ்ந்து காட்டினார்.
14 வயதில் பெற்றோரிடமிருந்து பிரிந்து முற்றிலும் ஒரு புதிய நாட்டில் ஒரு
குழந்தைத் தொழிலாளியாக அவர் கால் பதித்த மண், எட்டாம் வகுப்புடன் படிப்பு
முடிந்துபோனபின்பும் உலக அரசியலையும் மார்க்ஸீயத்தையும் அவர் கற்றுத்
தேர்ந்த மண், சிலாங்கூர் மாகாண அகில மலேயத் தொழிற்சங்கத்தின் ஸ்தாபனத்
தலைவராகவும், கட்சிப் பத்திரிகையான ‘ஜனநாயகம்’ இதழின் ஆசிரியராகவும் அவர்
செயல்பட்ட மண், திண்டுக்கல் மாவட்டதிலிருந்து வந்து தோட்டத் தொழிலாளியாக
வாழ்ந்த பழனியப்பனின் அனாதையாக்கப்பட்ட இரு தலித் சிறார்களுக்கும் அவர்
பொறுப்பேற்றுக்கொண்ட மண், தலைக்குப் பத்தாயிரம் வெள்ளி விலை கூறப்பட்டு ஒரு
யுத்தக் கப்பலில் தமிழ் நாட்டிற்குத் தப்பியோடுவதற்குக் காரணமான மண் இது
என்கிற நினைவோடு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கால் பதித்தபோது என்மனம்
மட்டுமன்று என் உடலும் சற்றே குலுங்கியது.
தொடரும்...
|
|