|
|
ஊசி இருக்கும் இடம்கூட - தேவா (ஜெர்மனி)
தேவா ஜெர்மனியில் வாழும் இலங்கையிலிருந்து புலம்
பெயர்ந்த தமிழர். இலக்கியம் கலை என தீர்க்கமான விமர்சனமும் பார்வையும்
உடையவர். சமீபத்தில் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்காக மலேசியா
வந்திருந்தார். ஆதவன் தீட்சாண்யாவுடனும் அ.மார்க்சுடனும் கப்பலா
பத்தாசிலுள்ள ஒரு தமிழர் குடியிருப்பில் நடந்த பெரியார் சிலை
திறப்புவிழாவில்தான் அவரை முதன்முறையாகச் சந்தித்தேன். சினிமா பற்றி
புத்தகம் வெளியிடப் போகிறேன் என்றதும் தேவா கேட்ட முதல் கேள்வி ‘சினிமாவின்
மீது உங்களுக்குள்ள மாற்றுச் சிந்தனை என்ன?’ என்றுதான் இருந்தது. தேவாவுடன்
உரையாடிய நாட்களில் அவருக்கு சமூகத்தின் மீதும் கலையின் மீதும் உள்ள
ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ஈழத்துத் தலித் சிறுகதை
தொகுப்பில் அவருடைய சிறுகதையைப் பார்த்தபோதுதான் அவருக்குள் இருக்கும் ஒரு
சிறுகதையாளனை அடையாளம்காண முடிந்தது.
ஊசி இருக்கும் இடம்கூட
ஜெர்மனி நகர் ஒன்றில் நிகழும் சாதிய தீண்டாமையைப் பற்றிய ஒரு கதை. ஈழப்போர்
தொடர்பாகவும் இலங்கை தமிழர்கள் எதிர்க்கொள்ளும் அரசியம் பிரச்னைகள்
தொடர்பாகவும் ஏற்கனவே தொடரில் குறிப்பிட்டுள்ளேன். தேவா இக்கதையின் மூலம்
முன் வைக்கும் பிரச்னை என்பது வேறு. முற்றிலும் இலங்கை அரசு தமிழர்களைப்
பார்க்கும் விதத்திலிருந்து சற்று மாறுப்பட்டதும்கூட. தான் வாழ்ந்த
மண்ணிலிருந்து போர் காரணமாகத் தப்பியோடி பிறநாடுகளில் பாதுகாப்புக் கருதி
அரசியல் தஞ்சம் அடைந்திருக்கும் ஈழத் தமிழர்கள் அங்கு எப்படி
வாழ்கிறார்கள்? எப்படி நடத்தப்படுகிறார்கள் என எத்தனை பேருக்குத் தெரியும்?
தமிழர்கள் எங்கும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்று பெருமிதத்துடன்
சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். மலேசியாவில் தமிழர் குடியேற்றம் 18ஆம்
நூற்றாண்டுகளில் தொடங்கியது. ஆனால் அப்பொழுது மலேசியா வந்தவர்கள் வணிக
நோக்கத்திற்காகவும் வந்துள்ளனர். பினாங்கில் தஞ்சம் அடைந்து வியாபாரம்
செய்தார்கள். ஆனால், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேசியாவுக்கு வந்த
தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இரப்பர் காட்டில் வேலை செய்வதற்காகவே சஞ்சி
கூலிகளாகக் கொண்டு வரப்பட்டனர்.
இங்கு வந்த தமிழர்கள் பாட்டாளி மக்கள் என்ற அடிப்படையிலேயே கப்பலில்
கொண்டுவரப்பட்டு, தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இருந்தபோதும்
இங்கு ‘மேல்குச்சி’ ‘கீழ்குச்சி’ என்று இரு பிரிவுகள் தோட்டங்களில் அமலில்
இருந்தது. மேல்குச்சி பிரிவில் வந்தவர்களில் உயர் சாதியைச்
சேர்ந்தவர்களும், ‘கீழ்குச்சி’ பிரிவில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களும்
பிரித்துக் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, தமிழர்கள் அவர்களின்
பிறந்த நிலத்திலிருந்து கொண்டு வரப்படும்போது கூடவே அவர்களின் ஆதார
சக்தியான சாதிய வேறுபாட்டு உணர்வையும் சேர்த்து எடுத்து வந்துள்ளார்கள்
என்பது தெரிகிறது. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த சாதிக்காரர்களை
எந்தத் தடையும் இல்லாமல் ஒடுக்குவதற்காகச் செய்து தரப்படும் வசதிகள் இது.
உயர்சாதி தாழ்ந்த சாதி என அவர்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை முன்வைத்து
எளிமையாக இரு தரப்பினரின் உழைப்பையும் சுரண்டி பிழைக்க ஆண்டானுக்கு
அவர்களைப் பிரித்தாளும் திறன் வாய்க்கவே பெற்றிருந்தது.
தேவா இக்கதையில் சொல்ல வரும் பிரச்னையும் இந்தச் சாதிய வேறுபாட்டு
உணர்வுத்தான். இலங்கை தமிழர்கள் போர் காரணமாகப் புலம் பெயர்ந்து அகதிகளாகப்
பிறநாடுகளில் அரசியல் தஞ்சம் அடைந்திருந்தாலும், அடிப்படையில் அவர்களை
விட்டு விலகாமல் இந்தச் சாதிய வெறி இயங்கிக்கொண்டிருக்கிறது. அரசியலால்
பாதிக்கப்பட்டிருப்பினும், மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டிருப்பினும்
தமிழர்களின் ஆழ்மனதில் சாதிய கற்பிதம் விழித்துக்கொண்டே இருப்பதைத் தேவா
சிறுகதையின் வழி சொல்லிச் செல்கிறார்.
ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் அடைந்து ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் அகதிகள்
தங்கும் அறையில் சந்திரன் எதிர்க்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறையும் அதன்பால்
உருவாகும் வன்முறைத்தான் கதை. சந்திரனுடன் அறையில் தங்கியிருக்கும்
தாமோதரனும் சிவசோதியும் கதை முழுக்க அவனை அடித்தும் வசை சொல்லால்
தாக்கியும் வரும் சாதிய வெறிக்கொண்டவர்களாகவே
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தேவா சித்தரித்திருப்பது வெறும்
கதைமாந்தர்களை மட்டுமல்ல, காலம் காலமாக ஒரு கிருமியைப் போல தமிழர்களின்
வாழ்விலும் மனத்திலும் பதிந்துவிட்ட ஓர் உணர்வைத்தான். அது சற்றும் அகலாமல்
ஓர் ஆலமரம் போல வேர்விட்டு படர்ந்துள்ளதை உணர முடிகிறது.
சந்திரன் – அவனுடைய அறை நண்பர்கள்
ஒரே அறையில் தங்கியிருக்கும் நண்பர்கள் கருத்தின் அடிப்படையில்
வேறுப்பட்டிருப்பார்கள், பொருளாதார ரீதியிலான வேறுபாட்டால் பழக்க
வழக்கங்களில் வேறுப்பட்டிருப்பார்கள். இரசனையால் வேறுப்பட்டிருப்பார்கள்.
ஆனால், ஒன்றாக இருக்கிறோம் என்ற உணர்வு ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு ஒரு
கட்டாயமான சமரசத்திற்கு ஆளாகியிருக்கும். பழக்கம் அதை மீறி மனிதக்
கூட்டங்களைச் சிந்திப்பதற்கு அனுமதிக்காது. ஆனால், இக்கதையில் வரும் அறை
நண்பர்கள் சந்திரனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க முடியாமல் இருக்கிறார்கள்.
தாங்கள் சந்தித்திருக்கும் அதே பிரச்னையிலிருந்து தப்பியோடி வந்து
சேர்ந்திருக்கும் ஒருவனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனை அவனுடைய சாதிய
பின்புலத்தில் வைத்து கட்டுப்படுத்துகிறார்கள். அவனின் மீது வெறுப்பைக்
கக்குகிறார்கள். அவர்களுடன் அறையில் ஒன்றாகத் தங்க அவனுக்குத் தகுதியில்லை
எனத் தீர்மானித்துத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்.
பல ஆண்டுகளாக நிலம் சுரண்டப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள்
அவர்களின் நிலத்தின் அடிப்படைவாதங்களை உதற முடியாமல் அகதிகளாகப் போய்ச்
சேர்ந்தாலும் அங்கும் தங்களின் கொடூரமான சாதிய கலாச்சாரப்
பின்பற்றுதல்களையும் சுமந்து செல்கிறார்கள். சந்திரனுக்கும் அப்படியொரு
மனம்தான் செயல்படுகிறது. அவன் அடிக்கப்படும்போதெல்லாம் தான் ஒரு தாழ்ந்த
சாதியைச் சேர்ந்தவன் என்ற உணர்வு மேலும் வலுக்கிறது. சமயலறைக்குள்
சமைத்துக்கொண்டிருந்த சந்திரனை, ‘உனக்கென்னடா நாயே உரிமை இருக்கிறது இங்கே’
எனச் சொல்லி அடித்துவிடுகிறார்கள். காயப்பட்ட சந்திரன் அவர்களின் மீது
தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. அங்கு அவனுக்கு
நியாயம் கிடைத்திருந்தாலும் சந்திரன் ஒரு அகதி என்ற முறையிலேயே
நீதிமன்றத்தால் நடத்தப்படுகிறான். இறுதியாகத் தண்டனை கிடைத்ததும் சிவசோதி
சந்திரனைப் பார்த்து, “எளிய சாதி மக்கள்” என வசைச் சொல்கிறான்.
தமிழனின் அடையாளமற்ற வாழ்வு
தேவா, சாதிய பிரச்னையோடு கதையை நிறுத்திவிடாமல், தமிழன் சொந்த நிலத்திலும்
பிறநிலத்திலும் அடையாளமற்று வாழும் வாழ்க்கையின் கசப்பையும் வலியையும்
சேர்த்தே சொல்லியிருக்கிறார். தேசமாகத் தேசமாக அகதி என்ற ஒரு
கழிவிரக்கத்துடன் மட்டுமே தஞ்சம் அடைந்து வாழும் தமிழன் சொந்த மக்களாலேயே
அவதிக்குள்ளாகும் அலைக்கழிக்கப்படும் அவலம் கதைக்குள்ளிருந்து மூச்சிரைக்க
வெளிவருகிறது. கொல்லப்படுவதற்கும் நசுக்கப்படுவதற்கும் தமிழன்
அனைத்துவிதமான தகுதியும் உடையவன் போல பார்க்கப்படுகிறான். மலேசியாவில்
கல்வி கற்ற ஒரு மலாய்க்காரப் பேராசிரியர், ‘தமிழனையும் பாம்பையும் கண்டால்
முதலில் தமிழனை அடித்துக்கொல்ல வேண்டும்’ எனப் பகிங்கரமாகச் சொல்லிவிட்டு
சொகுசாத்தான் வாழ்ந்து வருகிறார். எந்தத் தேசத்திலும் இப்படி ஒடுக்கப்படும்
மக்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் சுரணையற்று கேட்டும் கேளாததைப் போல
தனக்குக் கிடைத்த எலும்புத் துண்டை வைத்துக் கொண்டு காலம் முழுக்க நக்கிப்
பிழைக்கும் துரோகிகளும் சமூகத்தின் மேல்தட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களே அதிகாரத்திற்குத் துணையாக இருக்கிறார்கள். சொந்த மக்களை ஆள்பவன்
ஆதிக்கம் செய்ய அருகில் அவனுடன் அமர்ந்துகொண்டு அவனுடைய உள்ளாடை வாசத்தை
முகர்ந்துகொண்டிருக்கும் பச்சோந்திகளும் தமிழ் சூழலில் இருப்பதே தமிழ்
மக்களுக்கான சாபமாகும்.
தேவா சந்திரனின் வாயிலாக சிவசோதியையும் தாமோதரனையும் அப்படியொரு
துரோகிகளாகத்தான் பார்க்கிறார். நொந்துபோய் சொந்தங்களையும் நிலத்தையும்
வாழ்வையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு தமிழனைக் குறைந்தபட்சம் ஒரு
மனிதனாகவாவது ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா? அவனுடைய எல்லாம் அடையாளங்களையும்
கட்டம் கட்டமாக அழித்துவிடும் மேலாதிக்கச் சக்திகளிடமிருந்து தப்பி
வந்தால், சொந்த இனத்தாலேயே இன்னொரு அடையாளம் கொடுக்கப்படுகிறது. அதிகார
சக்திகளால் துரத்தப்பட்ட தமிழனுக்கு ஆகக் கடைசியாகக் கொடுக்கப்படும்
தண்டனைத்தான் ‘சாதியம்’.
தேவா சந்திரனின் மூலம் புலம் பெயர்ந்துவிட்ட தமிழனின் உண்மையான எதிரிகளைக்
காட்டிக்கொடுக்கிறார். அவன் அயல்நாட்டுக்காரன் அல்ல. நம்முடன்
தாய்ப்பிள்ளையைப் போல பழகிய நம் நிலத்தைச் சார்ந்தவன் எனத் தேவா சொல்வதில்
கோபமும் நியாய உணர்வும் மேலிடுகின்றன. சந்திரனைப் போல சொந்த நாட்டைவிட்டு
அரசியல் தஞ்சம் புகுந்திருக்கும் தமிழன் எப்படியெல்லாம் தமிழனாலேயே
சாதியின் பெயரால் கொடுமைக்குட்படுத்தப்படுகிறானோ?
|
|