|
|
'சுவாரம்' எனும் மனித உரிமைக் கழகத்தில் தலைவரான கா. ஆறுமுகம் ஒரு
போராட்டவாதியாகவே மலேசிய சூழலில் பலராலும் அறியப்படுபவர். இவர் ஒரு
நிபுணத்துவ பொறியியலாளர் ஆவார். இவர் மேலும் எம்.பி.ஏ. மற்றும்
சட்டத்துறையிலும் பட்டம் பெற்றவர். மணிமன்றம், இ.டபிள்யு.ஆர்.எப், சைல்ட்,
தமிழ் அறவாரியம் போன்றவை இவர் ஈடுபட்டுள்ள சில இயக்கங்களாகும். சிறுபான்மை
சமூகத்தின் தேசிய உரிமை என்பது அந்த சமூகத்தின் அரசியல், பொருளாதார,
பண்பாட்டு வளர்ச்சிகள் நாட்டின் வளர்ச்சியோடு ஒத்திருக்க வேண்டும் என்ற
பிடிப்பை இவர் எழுத்துகளில் காணலாம். 'மார்ச் 8' என்ற கம்போங் மேடான் கலவரத்தை
அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இவரது நூல் அரசால் தடைசெய்யப்பட்டதும்
பின்னர் இவர் அரசுக்கு எதிர்ப்பாக வழக்குத் தொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
'செம்பருத்தி' இதழின் ஆசிரியரான இவரின் மேற்பார்வையில் மாணவர்களுக்கான
'இளந்தளிர்' எனும் இதழும் வெளிவருகிறது. 'பெர்சே 3' க்குப் பிறகு கா.
ஆறுமுகத்தை வல்லினத்துக்காகச் சந்தித்தேன்.
கேள்வி: வாழ்வில் எந்தப் பகுதியில் உங்களைப் பொது வாழ்க்கையில் இணைத்துக்
கொண்டீர்கள்? அதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தனர்?
கா.ஆறுமுகம்: ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு எம்.ஜி.ஆர்
ரசிகன். நல்லவற்றை செய்யனும்; கெட்டது செய்பவர்களை எதிர்க்கனும் எனும் மனம்
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தே எனக்கு உருவானதென நினைக்கிறேன்.
எல்லோரும்தான் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கிறார்கள். எனக்கு அப்படங்களின்
பாதிப்பு சட்டென ஒட்டிக்கொண்டதற்கு அடிப்படையான காரணம் என் தாய்
தந்தையராகத்தான் இருக்க வேண்டும்.
கேள்வி: அவர்களைப் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.
கா.ஆறுமுகம்: என் பெற்றோர்கள் முதலில் கூலிமிலுள்ள புக்கிட் செலாருங்
தோட்டத்தில்தான் வேலை செய்தார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும்
தோட்டத்தொழிலாளர்களைப் பிரட்டுக்கு அழைப்பார்கள். அதில் அன்று வெட்ட
வேண்டிய பகுதிகளை வகுத்துக்கொடுப்பார்கள். ஒவ்வொரு முறையும் என்
அம்மாவுக்கு (பெருமாயி) கஷ்டமான பகுதிகளாகக் கிடைக்குமாம். அதைக் கேட்கப்
போக கங்காணி கடுமையாக அம்மாவைத் திட்டியுள்ளார். அம்மாவும் காண்டாவினால்
கங்காணியைத் தாக்கிவிட்டார். கட்டொழுங்கு இல்லை என எங்கள் குடும்பத்தைத்
தோட்டத்திலிருந்து அனுப்பி விட்டனர். அப்போது நான் பிறக்கவில்லை. ஆனால்,
பின்னாளில் அத்தோட்டத்தை விட்டு எங்கள் குடும்பம் வெளியேறிய வரலாற்றில்
இக்கதை ஒட்டிக்கொண்டிருந்தது.
கேள்வி: அப்பாவைப் பற்றி?
கா.ஆறுமுகம்: அவர் தோட்டக்காரராகப் பணியாற்றியது என் நினைவில் உண்டு.
ஒருமுறை அவரது முதலாளியான வெள்ளைக்காரன் ஏதோ கடுமையாக அப்பாவை (காளிமுத்து)
ஏசிவிட்டான். அப்பாவுக்கு கோபம். கையில் வைத்திருந்த வேலைக்கான பொருட்களை
வீசிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது நாங்கள் சிரமத்தில்தான்
வாழ்ந்து வந்தோம். ஆனால், அப்பா அம்மாவுக்கு சுயமரியாதையே பிரதானமாக
இருந்தது. வேலைக்காகவும் பணத்துக்காகவும் அவர்கள் மரியாதையை இழக்கத் தயாராக
இல்லை. இதுபோன்ற தோட்டப்புற சூழல், அதிகாரத்திடமிருந்து வரும் மிரட்டல்,
தோட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் செய்யப்படும் மின்சாரத்தடை
போன்றவையெல்லாம் 'ஏதோ சரியா நடக்கலையே' என என்னைச் சிந்திக்கத்தூண்டின.
கேள்வி: பார்த்தச் சம்பவங்கள் இருக்க, பள்ளி வாழ்க்கையின் நேரடி அனுபவங்கள்
உங்கள் சிந்தனை மாற்றத்துக்கு எவ்வாறு பங்களித்தன?
கா.ஆறுமுகம்: இடைநிலை பள்ளியில்தான் எனக்கு ஓரளவு உலகம் புரியத்தொடங்கியது
எனலாம். அது ஆங்கிலப்பள்ளி. அங்கு அதிகம் சீனர்களும் தமிழர்களும்
படித்துவந்தனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திய மாணவர்களை 'பறையா'
என்றுதான் திட்டுவார். அவர் பெயர் இங் ஆங் ஓன். படிவம் ஒன்றில் பயின்ற
எனக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் அவ்வாறு கூப்பிடுவதை
அனுமதிக்கக் கூடாதென நான் நண்பர்களிடம் பிரசாரம் செய்தேன். சபைக்கூடல்
முடிந்து நண்பர்கள் யாரையும் வகுப்பறைக்குப் போகவேண்டாம் என தடுத்து
வைத்தேன். அனைவரும் வகுப்புக்குச் சென்றப்பிறகும் நாங்கள் மட்டும் அங்கேயே
நின்று கொண்டிருந்தோம். கடமை மாணவர்கள் எங்களை பள்ளி முதல்வர் முன்
நிறுத்தினார்கள். அவர் காரணம் கேட்டார். எனக்கு அப்போது ஆங்கிலம் தெரியாது.
படிவம் 2 படிக்கும் மாணவனை எனக்கு மொழிப்பெயர்ப்பாளனாக வைத்துக்கொண்டேன்.
"தண்டிப்பதென்றால் என்னை மட்டும் தண்டிக்கட்டும். இந்தக் குற்றத்துக்கு
நான் மட்டுமே காரணம்" என்றேன். முதல்வர் நான் அவ்வாறு செய்வதற்கு என்ன
காரணம் என்றார். "அவர் பறையன் என அழைப்பது பிடிக்கவில்லை" என்றேன்.
அவ்வளவுதான் அவருக்கு வந்தது கோபம். குறுக்கும் நெடுக்கும் பிரம்புடன்
நடக்க ஆரம்பித்தார். மற்ற மாணவர்கள் வகுப்புக்கு அனுப்பப் பட்டனர். நான்
தனியனாக நின்றுக்கொண்டிருந்தேன்.
நான் நெடுநேரமாக சிறுநீரை அடக்கி வைத்திருந்ததால், அப்போது எனக்கிருந்த
பயமெல்லாம் ஒன்றுதான். அடிவிழுந்தால் சிறுநீர் பெய்துவிடக்கூடாது என
கட்டுப்படுத்திவைத்திருந்தேன். ஆனால், நடந்தது வேறு. சற்று நேரத்தில் அவர்
அமைதியானார். என்னைத் தட்டிக்கொடுத்து வகுப்புக்குப் போகச்சொன்னார். அதன்
பின்னர் அவர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவே இல்லை.
கேள்வி: பல்கலைக்கழகத்தில் உங்கள் பரிணாமம் எவ்வாறு அமைந்தது?
கா. ஆறுமுகம்: பல்கலைக்கழகத்திலும் எனக்கொரு பெரிய அதிர்ச்சி
காத்திருந்தது. நான் பொறியியல் மாணவனாக மலாயா பல்கலைக்கழகத்தில் இணைந்தேன்.
அங்கு விசாரித்ததில் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகக்
குறைவாக இருந்தது. ஏன் இந்த நிலை என ஆராயத்தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு
சில உண்மைகள் புரியவந்தது. ஒரு மாணவன் தோட்டப்பள்ளியில் பயில்கிறான்.
பின்னர் அவன் இடைநிலைப்பள்ளியில் படிக்க குறைந்தது 2 கிலோமீட்டர் பயணிக்க
வேண்டியிருக்கும். படிவம் நான்கு மற்றும் ஐந்து படிக்க வேறொரு ஊரில்
இருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அதற்கு ஆறு கிலோ மீட்டர் வரை
பயணிக்க நேரலாம். இந்தச் சிக்கலால் பல தோட்டத்து தொழிலாளர்கள் தங்கள்
பிள்ளைகளை ஒரு காலக்கட்டத்தோடு பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். தோட்டம்
என்பது சமகால வாழ்வோடு பிணைய முடியாத அளவுக்கு தொலைவில் இருந்தது அப்போது.
சிக்கலான இந்த வாழ்க்கை முறையை நான் இன்னும் ஆழமாக ஆராய முடிவெடுத்தேன்.
பலகலைக் கழகத்தில் தமிழ்ப்பேரவையின் கீழ் 'மாணவர் சமூக நலன்' எனும் திட்டம்
இருந்தது. அதன் மூலம் 1982-இல் பகாங் கராக் அருகில் உள்ள சபாய் தோட்டத்தில்
சக நண்பர்களோடு தங்கினேன். அங்கு உள்ள மக்களின் சமகால சிக்கலை ஆராய
அவர்களோடு காலையில் வேலைக்குச் சென்று அவர்களுக்கு உதவி பின் அவர்களோடு
உணவை பகிர்ந்து உண்ணும்போது நான் அவர்களாகவே மாறினேன். ஆனால் என் சக குழு
நண்பர்களுக்கு எனது போக்கு பிடிக்கவில்லை. நாம் அப்படி செய்தால் அவர்கள்
(தோட்டமக்கள்) நம்மை மதிக்க மாட்டார்கள் என்று முடிவெடுத்து என்னை
அக்குழுவிலுருந்து வெளியேறச் சொன்னார்கள். நானும் சரியென்று வெளியேறி
தனியாக
Lancang Division 2 தோட்டதிற்கு சென்று அங்கு எனது சமூக ஆய்வு
பணியைத் தொடர்ந்தேன். வாழ்வென்பது நான் அதுநாள் வரை படித்துக்கொண்டிருந்த
அகிலன் நாவலிலோ பார்த்தசாரதி நாவலிலோ இல்லை என்பது எனக்கு அப்போதுதான்
புரிந்தது. மேலோட்டமாக வாழ்வைக்காட்டும் நாவலிலிருந்து தோட்டத்து மக்களின்
சிக்கல்கள் நுட்பமாக இருந்தன.
எனது நோக்கம் அவர்களுக்கு உதவுவதல்ல; கற்பது. வாழ்வைக் கற்பது. அவர்கள்
வாழ்வை அவர்கள் சூழலில் கற்காமல் உதவ முடியாது. தினமும் கேள்விகள் மூலம்
அவர்களிடம் விடைகளைத் தேடினேன். அது எங்களுக்கு கல்வியாக அமைந்தது. நாள்
சம்பளத்துக்கு ஒப்பந்தக்கூலிகளாக இருந்த அவர்கள் உரிஞ்சப்படுவதை உணர
முடிந்தது. நான் தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகும் எனக்கும்
அவர்களுக்கும் தொடர்பு இருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் அத்தோட்டத்தில்
தோட்டத்தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சில
உரிமைப்போராட்டங்கள் நடந்தன. நிர்வாகம் என்னை உள்ளே செல்ல தடை செய்தது.
ஆனால் மக்கள் தைரியமாக உள்ளே அழைத்துச்சென்றதும் உண்டு.
தனியார் நிலங்களாகத் தோட்டங்கள் இருந்ததால் அரசாங்கத்தின் கிராமப்புற
மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் தோட்டமக்களை வந்தடையாமல் போனது. இதை
எதிர்த்து பத்துமலையிலிருந்து மாரான் வரை 200 கி.மீட்டருக்கு 120
பேரைத்திரட்டி நடந்தே சென்றோம். அதன் மூலம் அரசாங்க கவனத்தை ஈர்க்க
முற்பட்டோம். பல்கலைக்கழக கல்விக்குப் பின்னும் மாணவர் நலனில் அக்கறை கொண்ட
'ஈ.டபிள்யூ. ஆர்.எஃப்' மற்றும் 'சைல்ட்' போன்ற அரசு சாரா இயங்களில்தான்
எனது பணிகள் தொடங்கியது.
கேள்வி: பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்குச் சில சமயங்களில் தடுமாற்றங்கள்
நிகழ்வதுண்டு. அவர்கள் செயல்பாடுகள் குறித்த சுயவிமர்சனம், பல ஆண்டு
முன்னெடுப்புகளிலுக்குப் பின் வரும் குறைவான பலன்கள், இயக்கத்தில்
உள்ளவர்கள் மேல் ஏற்படும் நம்பிக்கையின்மை அல்லது கருத்து வேறுபாடு என
அதற்கு காரணங்களாக அமையலாம். உங்களுக்கு அதுபோன்ற தடுமாற்றங்கள் உண்டா?
கா.ஆறுமுகம்: தடுமாற்றங்கள் எனக்கு இருந்ததில்லை. என்னுடைய ஆய்வை மிக
எளிதாக இப்படி வகுத்துக்கொள்ளலாம். ஒரு பக்கம் சுரண்டப்படுபவர்கள் மற்றொரு
பக்கம் சுரண்டுபவர்கள்; ஒரு பக்கம் உழைக்கும் வர்க்கம் மற்றொரு பக்கம்
உழைக்கும் வர்க்கத்தால் பணம் பண்ணுபவர்கள். நமக்கு தேவை இதில் யார்
சுரண்டுபவர்? யார் சுரண்டப்படுபவர் என்ற அடிப்படையான புரிதல்தான். அது
புரிந்துவிட்டால் நீங்கள் சரியானவரை அடையாளம் கண்டு, இணைந்து இயங்குவதில்
தடை இருக்காது.
கேள்வி: மேற்சொன்ன பதிலின் அடிப்படையில் உங்களிடம் மார்க்ஸிய பின்புலம்
இருப்பதாக அனுமாணிக்கிறேன்.
கா.ஆறுமுகம்: மார்க்ஸியத்தை நான் முழுமையாக அறிந்தவனில்லை. அதன்
கோட்பாட்டின் அடிப்படையில் நான் இயங்கவில்லை. மலேசியாவில் அதன் பின்னணியில்
இயங்குவது சாத்தியமா என்பது கேள்விக்குறி. எதார்த்த சூழலில் மலேசிய
மக்களிடம் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளை முழுமையான அரசியல் அமைப்பு முறை
மாற்றத்தால் சரிசெய்துவிட முடியும் என நான் எண்ணவில்லை. தற்போதைய அரசியல்
நடைமுறையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்களை,
இருக்கின்ற அரசியல் நடைமுறையிலேயே அமுல்படுத்தி வெற்றிகாணலாம். மக்கள் நலன்
கருதிய ஓர் அரசியலமைப்பு முறையை உருவாக்க முடியும். மார்க்ஸியம் சிலருக்கு
சுய அடையாளத்தைக் கொடுத்து மகிழ்ச்சி படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. அதில்
பிடிப்பிருந்தால் தீவிரமாக இருக்க வேண்டும். நான் இன்று வீடு வைத்துள்ளேன்.
மார்க்ஸியம் தனியார் சொத்துடமைகளை ஆதரிப்பதில்லையே; பொது உடமைதான். ஆனால்,
மார்க்ஸிய பரிட்சயம் எனக்கு நடப்பு அரசியலை புரிந்துகொள்ள உதவுகிறது. அது
ஒரு சிந்தனை முறையாக எனக்கு பலம் தருகிறது.
கேள்வி: பெரியாரிய சிந்தனைகள் உங்கள் அரசியல் நகர்ச்சிக்கு எவ்வாறான
தாக்கத்தை ஏற்படுத்தின?
கா.ஆறுமுகம்: இன்று மனித உரிமைகள் குறித்து உலகம் முழுக்க
பேசிக்கொண்டிருக்கிறோம். பெரியார் அது குறித்தெல்லாம் முன்பே
சிந்தித்திருக்கிறார் என்பதுதான் எனது எண்ணம். அவர் தமிழருக்காக மட்டுமல்ல,
உலகம் மொத்தத்துக்குமாகவே சிந்தித்தவர் என்றுதான் தோன்றுகிறது. மனித
உரிமைக்காகப் போராடும் என் போன்றவர்களுக்கு அவர் ஒரு நல்ல முன் உதாரணம்.
கேள்வி: உங்கள் போராட்டங்களை எழுத்து ரீதியிலும் முன்னெடுத்துள்ளீர்கள்.
குறிப்பாக 'மார்ச் 13', மற்றும் 'ஹிண்ட்ராப்' போன்ற நூல்கள் ஒரு சமூக
அவலத்தின் பதிவாக இருந்தது. அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்து கூறுங்கள்.
கா. ஆறுமுகம்: எழுத்து எனது கருத்துக்கான மறு வடிவம்தான். ஆனால் அதன் மூலம்
இரு வகையான நன்மைகளை நான் உணர்கிறேன். ஒன்றாவது, வாசிப்பவர்கள் மத்தியில்
எனது கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடிகிறது . மற்றது, எனது கருத்துகளை
நானே மறு ஆய்வு செய்யவும் எனக்கு என் எழுத்து பயன்படுகிறது. நான்
எழுதுவதில் பிரசுரமாவது 50 சதவிகிதம் மட்டுமே. ஒரு சுயவிமர்சனத்தின்
அடிப்படையில்தான் என் கட்டுரைகள் அமைகின்றன. அது உருவாகும்போது பல்வேறு
நிலையில் நின்று என்னுடனே நான் தர்க்கம் செய்கிறேன். அந்த தர்க்கத்தின்
வழியே என் கட்டுரைகளை வடிக்கிறேன். ஒருவேளை எனது சிந்தனை மொண்ணையானது எனத்
தோன்றினாலோ, நான் கொண்டிருக்கும் கருத்தில் சிறு அளவு எனக்கு சந்தேகம்
ஏற்பட்டாலோ அதை மறு ஆய்வுக்குட்படுத்துகிறேன். அதுவரை அதை பிரசுரிப்பதே
இல்லை. வாசகர்களிடம் ஏற்படும் தாக்கம் குறித்து எனக்குத் தெரியவில்லை.
வாசிப்பும் ஒரு விமர்சன ரீதியில் நடக்க வேண்டும். நான் எழுதியதையெல்லாம்
'சரி' என ஏற்றுக்கொள்ளும் ஒரு வாசகன் எல்லாவற்றையும் கேள்வி இல்லாமல்தான்
ஏற்பான். அதனால் என்ன பயன்? விமர்சன ரீதியில் வாசிப்பவர்களை நான்
சந்தித்தது குறைவு. தீவிரமாக வாசிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற
கவலை எல்லோரையும் போல எனக்கும் உண்டு. வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள
எழுதும் நிலையில்தான் என் போன்றவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதில்
தவறில்லைதான். கனமான விடயங்களை எளிய மொழியில் சொல்ல பழகுதல் நல்லதுதானே.
கேள்வி: கட்டுரைகள் தவிர ஒரு புனைவு எழுத்தாளராகவும் நீங்கள்
இருக்கிறீர்கள். சில சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள். அது குறித்து கூறுங்கள்.
கா. ஆறுமுகம்: நான் அதிக மகிழ்ச்சியாக இருப்பது சிறுகதைகள் எழுதும்
தருணங்களில்தான். எனது மூளை கலைத்துறை சார்ந்ததல்ல. அது முழுக்கவே அறிவியல்
மற்றும் கணிதம் சார்ந்தது. என்னிடம் ஒரு சிக்கலான கணிதத்தைக் கொடுத்தால்
அதற்கு விடையை கண்டுப்பிடிக்க ஆர்வம் காட்டுவேன். என்னிடம் கற்பனைகள்
அதிகம் இல்லை. ஆனால், சிறுகதை எழுதும் போது நான் மகிழ்ச்சியாக
இருப்பதற்குக் காரணம் அது ஒருவகையான உணர்வு நிலையை உண்டாக்கி என்னை
யாதார்த்த நிலைக்கும் தத்துவ அரசியல் கோட்பாடுகளுக்கும் இடையே சிந்திக்க
வைக்கிறது. எனது அரசியல் பிரசாரங்களின் மறுவடிவம்தான் எனது சிறுகதைகள்.
கேள்வி : அரசாங்கத்தை நோக்கி அவ்வப்போது எதிர்ப்புக்குரல் கொடுக்கிறீர்கள்.
நடப்பு அரசாங்கம் நமக்கு எதை செய்யாமல் விட்டது என நினைக்கிறீர்கள்?
கா. ஆறுமுகம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் நாட்டின் வளத்தை
சீரமைத்து, மக்கள் அனைவரும் நல்லதொரு வாழ்க்கைத் தரத்தில் வாழும்படி செய்ய
வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அரசியல்வாதிகள் ஒன்றாய் கூடி நாட்டின்
வளத்தைக் 'கொள்ளையடிக்கும்' சூழல்தானே இங்கு உள்ளது. ஓர் அரசியல்வாதியாவது,
அரசியலில் இறங்குவதற்கும் முன் உள்ள சொத்தின் மதிப்பும் இறங்கியப்பின் உள்ள
சொத்தின் மதிப்பை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்களா? இந்தக்
கொள்ளையடிக்கும் கும்பல், கொள்ளையடித்தப் பணத்தின் பலத்தால் மக்களை பல
வகைகளில் மேய்க்கிறார்கள். நம்மிடம் நீதிமன்றம் உண்டு, காவல் நிலையம்
உண்டு, லஞ்ச ஒழிப்பு இலாக்கா உண்டு, தேர்தல் ஆணையம் உண்டு. இருந்து என்ன
பயன்? எல்லாவற்றிலும் இனவாதமும் லஞ்சமும் புகுந்திருக்கும் பட்சத்தில் எதை
எப்படி இந்நாட்டில் மாற்றி எல்லா இனங்களூம் மேம்பட முடியும்?
நல்ல அரசாங்கம் வேண்டும் என்ற வேட்கை மக்களிடம்தான் உருவாக வேண்டும்.
நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஒரு லஞ்சம் வாங்கிய அரசியல்வாதி பதவியை
விட்டு விளகும் வரை மக்கள் விட மாட்டார்கள். அவர்களின் அரசியல்
விழிப்புணர்வு அப்படி. இங்கு உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிகைகளும்
தொலைக்காட்சிகளுக்கும் கட்டுப்படுத்தப்பட்டு செயல்படுகின்றன. பின்னர்
எப்படி மாற்றம் நிகழும்.
இன அடிப்படையிலான அரசியலும் நமது மிகப்பெரிய பலவீனம். இந்நாட்டில்
அனைத்தையுமே அம்னோ எனும் மலாய்க்காரர்களின் கட்சிதான் தீர்மானிக்கிறது.
நாம் (ம இ கா போன்றவை) அதை எதிர்க்கத் தயாராக இல்லை. சிந்திக்கவும் தயாராக
இல்லை. சிந்திக்க வேண்டியவர்கள் நன்றாக உண்டு கொழுத்து குளிர்சாதன அறையில்
உறங்கி கிடக்கிறார்கள். அம்னோ அரசாங்கமும் நாங்கள் போடுவதை போடுகிறோம்
எனக்கூறி எஞ்சியதை தூக்கிவீசும். நாம் நன்றி விசுவாசத்தோடு வாலாட்டுவோம்.
முதலில் இன ரீதியிலான அரசாங்கமும் அம்னோவின் ஆதிக்கமும் இந்நாட்டில் ஒழிய
வேண்டும். இந்நிலையில் நாம் மக்களைச் சிந்திக்கத் தூண்டவேண்டியுள்ளது.
அதிகாரம் அவர்களை கனவுலகில் வைத்திருக்க முயலும். நாம் அக்கனவை களைக்க
வேண்டும்.
கேள்வி: இப்போது நீங்கள் எந்தக் கட்சியில் அங்கம் வகிக்கிறீர்கள்?
கா.ஆறுமுகம்: எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லை. அப்படி இணைந்தால்
சோசியலிசக் கட்சியில் இணைவது பற்றி யோசிப்பேன். ஆனால், இப்போதைக்கு அந்த
எண்ணம் இல்லை. தேசிய முன்னனி கட்சிக்கு எதிராக இருப்பதால் நான் 'பகாதான்
ரக்யாட்' மற்றும் 'சோசியலிசக் கட்சி' யுடன் இணைந்து செயல்படுகிறேன்.
கட்சியில் உறுப்பினராக இல்லாதது எனக்கு பெரிய சுதந்திரம் தருகிறது.
எதிர்க்கட்சியினரின் பலவீனங்களையும் எடுத்துக்கூற முடிகிறது. ஒரு
போராட்டத்தில் நாம் எந்தத் தரப்பில் நிர்க்கிறோம் என்பது அவசியமானது. நான்
சுரண்டலை எதிர்க்கிறேன். அப்படியாயின் அதை எதிர்ப்பவர்களுடன் இணைந்து
செயல்படுகிறேன். நான் இணைந்திருப்பவர்களிடம் சில குறைபாடுகள் இருந்தாலும்
அதை விமர்சனங்களினூடே இணைந்து இயங்குகிறேன்.
கேள்வி: எதிர்ப்புணர்வு குறித்து கூறினீர்கள். நமது சமுதாயத்தில் அது
நிகழ்கிறதுதான். ஆனால், எப்போதுமே அந்த எதிர்ப்பின் குரல் மிகத் தாமதமாகவே
ஒலிக்கிறது. ஓர் அரசாங்கத்திட்டம் அமுலுக்கு வந்த பின்பே அதன் பின் உள்ள
நோக்கங்களை நாம் ஆராயாமல் இருக்கிறோம். உங்கள் பொது வாழ்வில், நமது இந்த
மெத்தனப்போக்குக்கு என்னதான் காரணம்?
கா.ஆறுமுகம்: மெத்தனப் போக்கு ஒரு பக்கம் இருக்க, ஊடகங்கள்
ஒடுக்கப்படுவதுதான் இதற்கு முக்கியக்காரணமாக நினைக்கிறேன். பொய்களைப்
பிரசுரிக்க அவை தயங்குவதில்லை. இன்னொரு வகையில் மக்களைச் சிந்திக்கவிடாமல்
மேலே இயங்குகிற அதிகார வர்க்கம் நாசுக்காகக் காய்களை நகர்த்துகிறது.
ஆஸ்ட்ரோவில் சீரியல்களைக் குவித்து மக்களை அந்த டென்சனிலேயே
வைத்திருக்கிறது. சீரியலின் வாழ்வே தன் வாழ்வென நம்பும் மக்கள் தங்கள் நிஜ
வாழ்வின் சிக்கல்களை மறந்து மரத்து இருக்கின்றனர். வானொலியைத் திறந்தாலும்
இந்த நிலைதான். இடுப்பை எப்படி சிறிதாக்குவது... எப்படி சிவப்பாவது...
போன்ற விடயங்கள்தான் விளம்பரங்களாக பெருக்கெடுக்கின்றன. 100 ரிங்கிட்
சம்பாதித்தால், அதை செலவளிப்பதற்கான வழிகளையும் நமக்குச் சொல்லித்தரவே
இன்றைய ஊடகங்கள் இந்த நுகர்வு பண்பாட்டை வளர்கின்றன. போட்டித்தன்மையான
பொருள் தேடலும் நம் மத்தியில் மனித நேயத்தையும் இயற்கை சுகத்தையும்
அழித்துவிட்டது. விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்.
கேள்வி: தாங்கள் சுரண்டப்பட்டதை அறிந்து வெளிபட்ட ஹிண்ட்ராப் இயக்கத்தை
நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
கா.ஆறுமுகம்: ஹிண்ட்ராப் ஒருநாள் நடந்த ஒரு நிகழ்வு. அதில் சில பலங்களும்
பலவீனங்களும் உண்டு. நமக்குத்தேவை ஹிண்ட்ராப்பின் பின்னனிதான்.
தொன்னூறுகளில் நிறைய குழுக்கள் தோட்டப்புற போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.
தோட்டத்தொழிலாளிகளின் பிரச்னைகளுக்காகப் போராடினர். பலர் மனதில்
அரசாங்கத்தின் மீது வெறுப்பு இருந்தது. இவ்வாறு நிறைய எதிர்ப்பு குழுகள்
அவ்வப்போது உருவாகி வந்ததை நம்மால் இப்போது நினைத்துப்பார்க்க முடியும்.
இந்தப் போராட்டங்களின் மொத்தத் தொகுப்புதான் நவம்பர் 25. அது கடந்த
தேர்தலில் மாற்றங்கள் நடக்கக் காரணமாக இருந்தது. அதற்கு ஐவர் காரணமாக
இருந்தனர். ஆனால், வரலாற்றில் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் பொங்கி எழும்
நிகழ்வு யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
கேள்வி: உங்கள் போராட்டங்களுக்கு இளைஞர்கள் ஆதரவு எப்படி உள்ளது? உங்களால்
சிந்திக்கும் இளைஞர்களை உருவாக்க முடிந்ததா?
கா.ஆறுமுகம்: நிச்சயமாக. நிறைய பேர் உள்ளனர். அவர்கள் இருப்பதால்தான் நான்
இன்னும் உற்சாகமாக செயல்படுகிறேன்.
கேள்வி: ம.இ.காவின் மீது நிறைய விமர்சனங்கள் நம் எல்லோருக்கும் உண்டு.
ம.இ.காவுக்கு மாற்றாக எதை முன் வைக்கலாம்?
கா.ஆறுமுகம்: மலேசியத் தமிழர்களில் பெரும்பாலோர் ம.இ.காவில்தான்
இருக்கின்றனர். அவர்களில் திறமை உள்ளவர்கள் உண்டு. ஆனால், திறமையானவர்கள்
மேலே வர முடியாமல் தடுக்கப்படுகின்றனர். ம.இ.காவின் ஒவ்வொரு காலத்திலும்
பிரச்னை என்னவென்றால் அதன் தலைமைதுவம்தான். கொள்ளையடிப்பதையும் குடும்ப
அரசியலையும் அமுல்படுத்த நினைக்கும் வரை அக்கட்சியினால் பயன் இல்லை. இன
ரீதியிலான கட்சி என்றாலும், தேர்தலில் மலாய்க்காரர்களின் ஓட்டில்லாமல் ஒரு
தமிழன் வெற்றிபெற இயலாது. வெற்றி பெற்ற ஒருவர் தமிழர் நலன் கருதி சேவை
செய்யவும் முடியாது. மீறினால் அடுத்த முறை மலாய்க்காரர்களின் ஓட்டு
கிடைக்காது. ஆக, வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள தமிழரின் நலத்தைப் பேண
வேண்டிய அவசியம் இல்லாத சூழலில் ம.இ.கா தலைவர்கள் அம்னோவுக்கு அடிமைகளாக
இருப்பதில் ஆச்சரியம் இல்லைதான். மாற்று சிந்தனைக் கொண்ட ம.இ.காவில் உள்ள
இணைஞர்கள்தான் தொடர்ந்து அக்கட்சியில் இயங்குவதா என சிந்தித்து அம்னோ
அதிகாரத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.
கேள்வி: தமிழீழம் சார்ந்தும் இயங்கியிருக்கிறீர்கள். இன்றையத் தமிழீழத்தின்
நிலையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
கா.ஆறுமுகம்: தமிழீழத்தைப் பொறுத்தவரை என்னைக் கவர்ந்ததே தமிழின்
அடிப்படையிலான அரசும், சிந்தனையும்தான். அதையொட்டி வளர்ந்த தமிழர் கலை
கலாச்சாரங்கள். அது முழுமைப் பெற்றிருந்தால் உலகத்தமிழர்களுக்கு அது
கலங்கரைவிளக்கமாக இருந்திருக்கும்.
கேள்வி: அதன் தோல்வி குறித்து கூறுங்கள்.
கா.ஆறுமுகம்: அலெக்சாண்டர், நெப்போலியன், சடாம் உசேன் என உலகில் பல
அரசியல் தலைவர்களும் இறக்கவே செய்கின்றனர். அவர்கள் இயக்கமும்
முடக்கப்படுகிறது. இவையெல்லாம் இடைக்கால நிகழ்வுகள்தான். போராட்டம் என்பது
வேறுவகையிலும் தொடரலாமே.
கேள்வி: கொள்கைகள் சில சமயத்தில் வன்முறையை நியாயப்படுத்துகின்றன.
தமிழீழத்தைப் பெறும் முயற்சியும் அதைதான் செய்தது என கருதுகிறேன். நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?
கா.ஆறுமுகம்: எனக்கு வன்முறை பிடிக்காது. சிலரை ஒழித்தால்தான் என் கொள்கை
வாழும் என்றால் அது தேவையில்லைதான். காரணம் அவர்களுக்கும் ஒரு கொள்கை
இருக்கும். வன்முறை எங்கு நிகழ்கிறது என்பது முக்கியம். நான் ஒரு
பார்வையாளனாக இதில் கருத்து சொல்வது சரியானதில்லை. என் குடும்பம்
கொளுத்தப்படாத நிலையில், மனைவி கற்பழிக்கப்படாத சூழலில், என் பள்ளி நூலகம்
எரிக்கப்படாத சமயத்தில் அதை எல்லாம் அனுபவித்து, ஒடுங்கியவர்களின் மனநிலை
குறித்தும் நியாயம் குறித்தும் நான் கருத்து சொல்லவே முடியாது. ரப்பர்
தோட்ட தொழிலாளியின் வாழ்வை வாழ்ந்து பார்த்த பின்பே அதை மேம்படுத்த ஆலோசனை
சொல்பவன் நான் என முன்பே சொன்னேன். இந்நிலையில் போர்ச்சூழல் குறித்த என்
எண்ணங்கள் முழுமையற்றவை. ஆனால், என் வாசிப்பில் பிரபாகரன் முதலில் போரை
நாடியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அவருக்கு ஒரு சிந்தனைப் போக்கு
இருந்திருக்கிறது. அதில் குரூரங்கள் இல்லை என்றே நம்புகிறேன். அவர் போரை
நோக்கி தள்ளப்பட்டுள்ளார்.
கேள்வி: 'பெர்சே' போராட்டங்களில் நீங்கள் தொடர்ந்து பங்கெடுக்கிறீர்கள்.
அதை முன்னெடுக்கும் அம்பிகா சீனிவாசன் குறித்த உங்கள் மனப்பதிவு என்ன?
கா.ஆறுமுகம்: மிகவும் எளிமையானவர்; தைரியசாலி. தன்மூப்பாக முடிவுகள்
எடுக்காமல் கலந்தாலோசிக்கக் கூடியவர். மலேசியாவுக்குக் கிடைத்த
பொக்கிஷமாகத்தான் பார்க்கிறேன். பெர்சேவுக்கு பின் பல சிக்கல்கள் வந்தாலும்
தன் கொள்கையிலிருந்து வலுவாமல் இருக்கிறார்.
கேள்வி : சிறுபான்மை இனமாக இருக்கும் நம் மத்தியில் உணர்ச்சிதூண்டுதல்
போன்ற பேச்சுகள் அவசியமா? அறிவு நிலையில் நாம் ஏன் உரையாடலைத் தொடங்க
கூடாது. உங்கள் பேச்சுகளும் பல சமயங்களில் அவ்வாறு இருப்பதை நான்
கண்டுள்ளேன்.
கா.ஆறுமுகம்: அறிவு தளத்தில் நின்று பேசும் போது உணர்ச்சிக்கு அங்கு
இடமில்லைதான். இதற்கு மேல் முடியாது எனும் மனநிலை வரும் போது உணர்ச்சி
அங்கே மையமிடுகின்றது. நம்மைச் சுற்றி உள்ள பல நாடுகளில், ஒரு
சிறுபான்மையான இனமான நமக்குக் கிடைத்திருக்கும் சலுகைகள் போல்
அங்குள்ளவர்களுக்கு கிடைப்பதில்லைதான். அவ்வகையில் நாம் ஓரளவு நல்ல
நிலையில்தான் இருக்கிறோம். நம்மிடம் தமிழ்ப்பள்ளிகள் உண்டு. போதுமான
கோயில்கள் உண்டு. ஆனால், ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியில் நாம்
ஏமாற்றப்படுகிறோம். நமது உரிமைகளை போராடிப்பெற உணர்ச்சிவசப்படுவதை விட வேறு
வழிகளும் உண்டுதான்.
கேள்வி: செம்பருத்தி மற்றும் இளந்தளிர் போன்ற இதழ்களுக்கு ஆசிரியராகவும்
இருந்துள்ளீர்கள். அதன் மூலம் எதை செய்ய முனைந்தீர்கள்?
கா.ஆறுமுகம்: நல்ல விமர்சன மற்றும் சிந்தனை உள்ள வாசகர்களை
உருவாக்குவதுதான் நோக்கம். அதன் வழி விழிப்புணர்ச்சியும் உருவாகும்.
கேள்வி: அது சாத்தியமாயிற்றா?
கா.ஆறுமுகம்: தோல்வி என சொல்லலாம். வாசகர்களுக்கு வாசிக்கும் பழக்கும்
இருப்பினும் விமர்சனமும் மாற்றுச் சிந்தனையும் குறைவு.
கேள்வி : இத்தனை ஆண்டு பொதுவாழ்வில் மகிழ்ச்சி கொடுத்த மாற்றம் என எதை
சொல்லலாம்.
கா.ஆறுமுகம்: சிலாங்கூரில் பாரிசான் ஆட்சி கவிழ்ந்தது மகிழ்ச்சியைக்
கொடுத்தது. எப்போதுமான மகிழ்ச்சி, என் நண்பர்கள். நண்பர்கள் இருப்பதுதான்
பொதுவாழ்வை உற்சாகப்படுத்தும். நான் இந்த வாழ்வில் அவர்களோடு சுவாரசியமாக
இயங்குகிறேன். எனக்கு ஆதரவாக என் குடும்பத்தாரும் இருக்கின்றனர். என் தம்பி
உதயசூரியன் மற்றும் மனைவி பிள்ளைகள், என் பொதுவாழ்வில் உடன் வருகின்றனர்.
நான் வாழ்வை எதார்த்தமாகப் பார்க்கிறவன். அதனால் பெரிதாக ஏமாற்றங்கள்
இல்லை.
கேள்வி: பெர்சேவில் உங்கள் பங்களிப்பு என்ன?
கா.ஆறுமுகம்: பெர்சே குழுவில் 12 பேர் இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன்.
நான் சுவாரம் எனும் மனித உரிமைக் கழகத்தில் தலைவராக இருக்கிறேன்.
பெங்காக்கை மையமாகக் கொண்ட 'ஃபோரம் ஆசியா' எனும் அமைப்பில் ஏழு
இயக்குனர்களில் நானும் ஒருவன். அதிலும் சில பொறுப்புகள் உண்டு. அதேபோலதான்
'பெர்சே'வும். அதில் வழங்கப்படும் பொறுப்புகளை நான் முழுமையாக ஏற்று
பணியாற்றுவேன். 'பெர்சே 3' ல் எனது பணி பாதுகாப்பு. நாங்களும் எல்லா தயார்
நிலைகளையும் செய்தோம். ஆனால், எங்களை மீறி சில சிக்கல்களை நடந்துவிட்டன.
தேர்தல் ஆணையம் மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். திருட்டு ஓட்டுகள்
போட்டால் எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்? தேர்தல் ஆணையத்தை மறு
சீரமைப்புச் செய் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதற்கு மக்களைத் திரட்டி
'உன் மீது நம்பிக்கை இல்லை' எனச் சொன்னோம். ஏறக்குறைய 2 லட்சம் பேர் அதில்
கூடினர். ஆனால், அரசாங்கம் இன்னும் கூட்டம் பற்றவில்லை என பொய்க்கணக்கு
சொல்கின்றனர்.
அதெல்லாவற்றையும் விட, நான் சொல்வது ஒன்றுதான். நாம்
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம். நமது ஒவ்வொரு செயல்பாடும் சட்டத்திற்கு
பயந்தது. இதுபோன்ற போராட்டங்களில், அரசாங்க தடைகளையும் மீறி தெருவில்
இறங்கி நடக்கும் 2 மணி நேரத்தில் ஓர் இளைஞன் அனுபவிக்கும் விடுதலை உணர்வு
அவனுக்குள் தான் இந்த நாட்டின் குடிமகன் என்கிற உணர்வு பெருக்கெடுக்கும்.
நாடு நமக்கானது. அரசாங்கம் மாறலாம். நாடு நமதென்பதில் என்ன குழப்பம்.
நேர்காணல் / படங்கள்: ம. நவீன்
|
|