|
|
என் வாழ்வில் நான் குழந்தைகளுக்கு வழங்கியிருக்கும் இடம் மிக முக்கியமானது.
எனது வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் அவர்கள் ஏராளமான பதிவுகளை
ஏற்படுத்தி சென்றிருக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவள் என் அண்ணனின்
5 வயது மகள் இனியவள். மிக குறைந்த வார்த்தைகளோடு இயங்கும் அவளது உலகத்தில்
எப்போதும் எனக்கு ஈர்ப்புகள் அதிகம். அவளோடு எனக்கு கிடைத்த சில ஈர்ப்புகளை
பதிவாக்க முனைந்து பல முறை தோற்றுப் போயிருக்கிறேன். பதிவாக்க முடிந்த
சிலதை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு 9
இப்பொழுதெல்லாம்
அடுத்த நாள் பள்ளிக்கூடம் போவது பற்றிய
கதையோடுதான்
உறங்கிப் போகிறாள் இனியவள்.
ஒருநாள் கூட தவறாமல்
அழுகையோடு மட்டும்தான் விடிந்து கொண்டிருக்கின்றன
அவளது
சூரியன் வரும் பொழுதுகள்..
பள்ளிக் கூடம் இல்லாத நாள்களில்
கதவு திறந்து
தானாக எட்டிப் பார்க்கும்
அவள் முகம் மட்டும் வெளிச்சத்தின் வேர்களை வீடெங்கும்
நிரப்பியபடி இருக்கும்...
விடுமுறைகளில்தான் குழந்தைகள் சிறைகளிலிருந்து விடுதலையாகிறார்கள்...
குறிப்பு 10
குளித்து முடித்து குளத்திலிருந்து
எழுந்து வருகிறாள்
குழந்தை
கரையில் அமர்ந்தபடி
உடலெங்கும் மொய்த்து கொண்டிருக்கும் மீன்களை
பிய்ந்து பிய்ந்து
குளத்தில் எறிகிறாள்.
சின்னக் கைகளில் மணல் துகள்களை
அள்ளியெடுத்து
மீன்களுக்கு இரை போடுகிறாள்
துள்ளி துள்ளி வாய்பிழந்தபடி
இரை தின்கின்றன
மீன்கள்
கரை மணலில் தன் பெயரை எழுதி
கை அசைத்து வீடு திரும்புவரை
பார்த்துக்
கொண்டிருக்கின்றன இரை தின்று கொழுத்த
மீன்கள்.
குறிப்பு 11
ஒரு வெள்ளைத் தாளுடன் அமர்ந்திருந்தாள் இனியவள்
ஒரு நீள் சதுரம்
சில முக்கோணங்களை வரைந்து
விட்டு வீடென்றாள்
வீட்டு பக்கத்தில் பெரியதும் சிறிதுமாக
சிறு புள்ளிகளும் கோடுகளும் வரைந்து
அவை நாங்கள் என்றாள்.
வீட்டுக்கு வெகு தூரத்தே ஒரு புள்ளியையும்
சில கோடுகளையும் வரைந்துவிட்டு
அது அப்பா என்றாள்
மனமதிர்ந்த அந்த பொழுதில்
அவளைத் தவிர்த்துவிட மட்டும்தான் முடிந்தது.
குறிப்பு 12
குழந்தைகளைத் தேடித் தேடி
எப்போதும் திரிந்து கொண்டிருக்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள்
தன்னை தேடி வருவதாகவே
கற்பனை செய்து கொள்ளும்
குழந்தைகளை அவை பயமுறுத்திவிடுகின்றன
சிரிக்க வைக்கின்றன
வீடு முழுக்க குழந்தைகளை ஓட வைத்து
வியர்வை வழிய நிற்க வைக்கின்றன
ஒரு துன்பகரமான நாளில்
செத்துப்போய் எறும்புகள் மொய்த்தபடி
உருவம் இழக்கின்றன...
ஆனாலும்
குழந்தைகளின் கண்களில் சிறியதும் பெரியதுமாய்
வண்ணத்துப்பூச்சிகள் பறந்தபடி மட்டுமே இருக்கின்றன.
|
|