முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 42
ஜூன் 2012

  சுவடுகள் பதியுமொரு பாதை... 18
பூங்குழலி வீரன்
 
 
       
நேர்காணல்:

விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!
கா. ஆறுமுகம்




கட்டுரை:


Bersih - Halau (எதைச் சுத்தப்படுத்துவது எதை விரட்டுவது?)
கே. பாலமுருகன்

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்
ஷம்மிக்கா



சிறுகதை:

மோப்பம்
கே. பாலமுருகன்

மொழிப்பெயர்ப்புச் சிறுகதை : ஆனந்தம்
மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி



கவிதைத்தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்... 3
பூங்குழலி வீரன்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 1
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஏ. தேவராஜன்

ஷம்மி முத்துவேல்

ந. பெரியசாமி

எம். ராஜா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை:

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
அ. பாண்டியன்



அறிவிப்பு:

வல்லினம் வகுப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கலை இலக்கிய விருதுகள் 2011

முள்முருங்கையில் எட்டிப்பார்க்குமொரு தளிர் - லதா

இலங்கையின் நீர்க்கொழும்பில் பிறந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் லதா என்றழைக்கப்படும் கனகலதா கிருஷ்ணசாமி புலம்பெயர் இலங்கை தமிழ்ப்பெண் எழுத்தாளராகவே அறியப்படுகிறார். சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறி விட்டதால் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் என்ற அடையாளமும் இவருக்கு இருக்கிறது. லதா சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலமாக துணையாசிரியராக பணியாற்றி வருகிறார். 2008-ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது லதாவிற்கு நான் கொலை செய்த பெண்கள் என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் மன்றம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதியிலும், தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இந்திய சாகித்திய அகாடெமி வெளியிட்ட தற்காலத் தமிழ் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. லதா தொடர்ந்து சிறுகதைகளும் எழுதி வருகிறார். காதல் இதழ் தொடங்கி இன்றைய வல்லினம் வரை லதா படைப்புகளும் நேர்க்காணல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

லதாவின் கவிதைகளும் சிறுகதைகளும் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல் மற்றும் சரிநிகர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது தீ வெளி நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கிய பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. லதா பல்வேறு தளத்தில் நின்று கொண்டு தனது வீரியமிக்க, தனித்துவமான கவிதைகளை எழுதி வருகிறார்.

அவரின் தாயகம் சார்ந்து அவர் எழுதி இருக்கும் ஒரு சில கவிதைகள் குறித்த பகிர்வினை தொடர்ந்து காண்போம்.

நடந்தவையைக் கடந்தேகும்
மனவேகம் வாகனத்தைத் தாண்டுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகான பயணம்
சாலைக்கும் எனக்கும்

போருக்கு பின்பாக ஒரு காலகட்டத்தில் தன் தாயகம் நோக்கி பயணிக்கும் லதாவின் கவிதை வரிகள் இவை. மிக நீண்ட காலம் தாயகம் திருப்பாத ஏக்கம். தன் கண் முன்னால் கட்டியெழுப்பப்பட்டிருந்த அந்த தாயகத்தின் சிதைவுகள் மட்டும் எஞ்சி நிற்கும் ஒரு காலகட்டத்தில் அதனை நோக்கி பயணித்தல் மரண பயத்தை அளிக்கக் கூடியது. மன வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஒரே சாலையில் பயணிக்கிறது கவிஞரின் மனமும் வாகனமும். பல ஆண்டுகளுக்குப் பிறகான பயணம் என்பது கனத்த வரிகளாக வெளிவருகின்றன. அனைவரது வாழ்வையும் தன் வசதிக்கேற்றவாற மாற்றி வைக்கும் காலம் கவிஞரை தம் தாயகம் நோக்கி பயணிக்க வைத்திருக்கின்றது.

முதல்படியில் நிற்கும்
சீருடைப் பணியாளன்
மே மாதத்திற்குள் நுழைந்து
பீரங்கி, கண்ணிவெடி, எறிகணை, துப்பாக்கி,
ரத்தம், கண்ணீர், பயம் எனத் தொடர்கிறான்.

மிக இளம் வயதிலேயே போர்ச் சூழலுக்கு முகம் கொடுத்து தனது தாயகத்திலேயே அடிக்கடி இடம்பெயர்ந்து அதன் துன்பத்தையும் வடுவையும் தன் தோளிலேயே தூக்கி திரிபவராகத்தான் லதா எனக்குத் தெரிகிறார். இப்போதும் கூட அந்த சீருடைப் பணியாளன் அவரை பயமுறுத்தியபடியேதான் இருக்கிறான். ஒரு பள்ளிச் சிறுமியாய் அவர்களை பார்த்த அந்த மருட்சியையும் தவிப்பையும் இந்த வரிகளிலும் எந்த ஒரு மாற்றமுமின்றி நம்மால் பார்க்க முடிகின்றது. எங்கும் உறைந்துபோகாதபடிக்கு பீரங்கி, கண்ணிவெடி, எறிகணை, துப்பாக்கி, ரத்தம், கண்ணீர், பயம் என் எல்லாமும் அப்படியேதான் இருக்கிறது. வாழ்தலின் பதிவினை மரணத்தைத் தவிர வேறெதைக் கொண்டும் அழித்துவிட முடியாது என்பது மிகத் தெளிவாக நமக்குத் தெரிகின்றது.

ஏங்கிக் கிடக்கிறது சோதனைச் சாவடி
சிங்களத்திற்குக் கீழே
தமிழ்
வழியெங்கும்.

தமிழீழம் உங்களை வரவேற்கிறது என்ற வீரமிக்க வரிகளோடும் மிடுக்கான சீருடை நமது உறவுககோடு ஒரு காலத்தே கலத்துகலத்துக் கிடந்தது தமிழரின் பகுதிகளுக்கு உள்நுழையும் சோதனைச் சாவடி. சிங்கள சோதனை சாவடியைச் தாண்டி தமிழர் பகுதிகளுக்குள் காலடி வைக்கும் அந்த நொடியில் நம் கால் நுனியிலிந்து மேலெழும்பு நம் உடலெங்கும் படர்ந்து கொள்ளும் அந்த சிலிர்ப்பை அவ்வளது எளிதில் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும் வாகனங்கள், வரிசையில் நிற்கும் மக்கள், மிக வேகமாக அவர்களுக்குறிய சோதனைகளை முடித்து புன்சிரிப்போடு வழியனுப்பும் தமிழ்ச்சமூகத்திற்கே இருக்கும் விருந்தோம்பல் என எந்தவொரு மிகைப்படுத்தலும் அற்ற எளிமை அங்கே வாழ்ந்திருந்தது. அதற்கெல்லாம் ஏங்கிய படி வழியெங்கும் வரும் கவிஞரின் வரிகள் அதே உணர்வை நமது உள்ளத்திலும் கிடத்திச் செல்கின்றது.

பாலையில் முளைத்திருந்த
வெள்ளைப் புத்தர்
கார்த்திகைப் பூ
சூடியிருந்தார்.
அவரது மெளனத்தில்
புதைந்திருந்த எனது வன்மம்
பூவின் சுவாலையில்
எரிகிறது.

கார்த்திகைப்பூ தமிழீழத்திற்கு தனித்து மாண்பினைக் கொண்டு வரக் கூடிய பூ என்றுகூட சொல்லலாம். கார்த்திகை மாதத்தில் இப்பூ பூத்துக் குலுங்குவதால் அதற்கு கார்த்திகைப்பூ என்பது காரணப் பெயராகவே அமைந்துவிட்டது. கார்த்தினை மாதத்தில் தமிழர் பகுதிகளில் நடக்கின்ற மாவீரர் நாள் அனுசரிப்புகளுக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள்தோரும் இந்த கார்த்திகைப்பூவே பிரதானமாக இடம்பெறும். அந்த பூவை புத்தருக்கு வைத்து தனது ஆழ்மன வன்மத்தை மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் கவிஞர்.

வாழ்தலையும் அழிதலையும்
முடித்திருந்த பூமிக்கு
வந்திருந்தது பழைய காற்று

ஒரு போர் தின்ற பூமியை எந்த வார்த்தைகள் கொண்டு நீங்கள் வெளிக்கொணர்வீர்கள்? வெற்றி பெற்ற கூட்டத்தைப் பற்றியும் அவர்கள் பெற்ற வெற்றியை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் வெற்றியை தள்ளி வைத்திருக்கும் கூட்டத்திற்கு துரோகமிழைத்தவர்களாக நீங்கள் மாறிப்போகலாம். தோல்வியடைந்தவர்களை பற்றியும் அவர்களின் தோல்வி குறித்து மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் தோல்வி அடைந்ததற்கான காரணத்தைக் கண்டறியயே முடியாமல் போகலாம். ஆக இந்த வெற்றியையும் தோல்வியையும் பதிவு செய்வதற்கு முதலில் நமக்கு வார்த்தைகள் பிடிபட வேண்டும். எதற்காக இந்த வெற்றி ஏன் இந்த தோல்வி என்ற கேள்விகளில் எல்லாம் மிக முழுமையான ஒரு பதிவினை யாராலும் செய்துவிட முடியாது. வாழ்ந்திருந்த ஒரு கூட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு பாரிய அழிப்பிற்கு அங்கு வந்திருந்த அந்த பழைய காற்று நம் கவிஞராகவும் இருக்கலாம்.

கனவுகளைக் கடந்த
வேற்று நிலத்தில்
சாப்பாடு தூக்கம் வேலை
எல்லாமே நேராகிவிட்டதாக
சொல்கிறார்கள்
என்றாலும்
பிறந்த இடம் ஈழம்
என்றதும்
முன்னைக்கிப்போது அதிகம்
மிரள்கிறார்கள்.

பிறப்பு அடையாளத்தை அவ்வளவு எளிதில் யாராலும் துறந்துவிட முடியாது. எப்போதும் ஏதோ ஒரு வடிவத்தில் அது நமது காலையும் கழுத்தையும் சுற்றியபடியே இருக்கும். தமிழகத்தில் பிறந்து இங்கு வந்து வாழும் தமிழர்களது பேச்சு மொழி, பழக்க வழக்கத்திலேயே அவர்கள் இங்கு பிறந்தவர்கள் இல்லை என மிக எளிதாக நாம் விளங்கிக் கொள்ள முடிவதைப் போல்தான் இலங்கை தமிழர்களை மிக எளிதாக எல்லாரும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். புலம்பெயர்ந்து மேலைதேசத்திலோ அல்லது பிற பெரு நகரங்களிலோ தமது சுயம் தொலைத்து தொலைந்து போயிருந்தாலும் அவர்கள் அவர்களது பிறப்பு அடையாளத்தை வைத்தே அறியப்படுகிறார்கள். அந்த அடையாளம் சில வேளை அவர்களை பாதுகாக்கிறது. பலவேளைகளில் அவர்களை மிரட்டிபடியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

துணியோடு உலரும் முள்முருங்கையில்
எட்டிப் பார்க்கிறது ஒரு தளிர்

25 ஆண்டுகளுக்கும் மேலான புலம்பெயர் வாழ்வு இன்றுவரை கவிஞரை நம்பிக்கையோடுதான் வைத்திருக்கிறது என்பதை இந்த முள்முருங்கையின் தளிர் நமக்கு காட்டி நிற்கின்றது.

லதாவின் கவிதைகள் மிக நுட்பமான ஆழ்மன உணர்வுகளை சார்ந்து படைக்கப்படுபவை. மிக மென்மையானவராக அறியப்படும் லதா தனது உணர்வுகளை வன்மையாகவே பதிவு செய்கிறார் எந்தவொரு சமரமுமின்றி.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768