|
|
காடும் வீடும்
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. வானமும் இருட்டி
கொண்டே வந்தது. ஒரு 5 நிமிடங்கள் கழிந்த பின் அப்போதுதான் மீண்டும்
உச்சியிலிருந்து கீழே இறங்க வேண்டும் என்ற பிரக்ஞை வந்தது எங்களுக்கு.
அப்போதே மணி பிற்பகல் இரண்டை தாண்டி 10 நிமிடம். பசியும் கூட கூட்டு
சேர்ந்து கொண்டது. இப்போது ஆரம்பித்து கீழே இறங்கினால்தான்
சாப்பிடமுடியும். எடுத்து வந்த ரொட்டியும் கொஞ்சம்தான் மீதமிருந்தது.
இறங்கி கொண்டு இருக்கும் போதே மழை வந்தால் வழுக்க ஆரம்பிக்கும். ஒதுங்க கூட
இடம் கிடைக்காது. அட்டைகளையும் சமாளிக்க வேண்டும். எனவே அசதியோடு அசதியாக
கீழே இறங்க ஆரம்பித்தோம். மேலே ஏறியதை விட கீழே இறங்குவது கடினமாக
இருந்தது. சரியான காலணியை அணியவில்லையென்றால் கண்டிப்பாக காலின் பெருவிரல்
கண்ணி போய்விடும்.
மலையேறுவதற்கு என்றே குறிப்பிட்ட வகை காலணிகள் இன்றைய சந்தையில்
கிடைக்கின்றன. எல்லா வகையான விளையாட்டுகளுக்கும் உபயோகமாய் இருக்குமே என்று
எண்ணி வாங்கிய காலணி இங்கே எனக்கு மிகவும் துணையாக இருந்தது. ஆனால் என்
தோழி சரியான காலணி அணியாததால் மிகவும் அவஸ்தைப்பட்டாள். மேற்குறிப்பிட்ட
எல்லா பிரச்னைகளிலும் நாங்கள் சிக்கினோம். இறங்கி கொண்டிருக்கும் போதே மழை
லேசாக தூற ஆரம்பித்தது. பாறைகளும் மழைத்துளிகள் பட்டு மெல்ல மெல்ல வழுக்க
ஆரம்பித்தன. வெயிலடிக்கும்போது காய்ந்திருந்த மரப்பட்டைகளும் பாறைகளும்
மழைத்துளிப்பட்டதும் நாங்கள் பிடித்து இறங்கும் போது எங்கள் கரங்களை கறை
செய்ய ஆரம்பித்தன.
மழைத்துளிகள் தீர்த்தத்தை அள்ளி தெளிப்பது போலே அட்டைகளுக்கு இருக்குமோ
என்னவோ, மூலை முடுக்குகளிலிருந்து அட்டைகள் எட்டிப்பார்ப்பது போலவே
இருந்தது. அட்டைகளுக்கு ஒரு குணம் உண்டு. மழைத்துளி பட்டதும் நீட்டி எட்டி
வரும் அட்டைகள் மனித வாசத்தை உணர்ந்தவுடன் இலை தழைகளின் மேலே மெல்லிய கம்பு
போல அப்படியே ஆடாமல் அசையாமல் நிற்கும். நாம் அவசரத்தில் நடந்து போகும்
போது கப்பென்று நம் மேல் தாவி விடும். இது தான் எனக்கு கிலியை
கிளப்பிவிடும். அட்டையை பார்த்ததாலே எட்டடி எட்டி நிர்க்கும் நான் அப்போதைய
சூழலில் அட்டை என் கண்ணுக்குத் தென்பட கூடாதென்று மானசீகமாக இறைவனிடம்
வேண்டி கொண்டேன். அப்படியும் என் கண்ணுக்கு ஒன்றிரண்டு தென்பட்டது போலவே
இருந்தது. கண்கள் சுற்றி முற்றி பார்த்து கொண்டே இருந்தாலும் ஸ்பரிச உணர்வை
‘அக்டிவேட்’ பண்ணி விட்டிருந்தேன். அவ்வளவு பயம்.
அசதி ஒரு பக்கமும் பசி ஒரு பக்கமும் கால் வலி ஒரு பக்கமும் மூன்று
கோணங்களில் நின்று கொண்டு இழு இழு இழுத்து கொண்டிருந்தது. ஏறும் போது
எங்களிடம் இருந்த கலகலப்பு இறங்கும் போது இல்லை. எல்லார் முகத்திலும்
அசதியின் கோடுகள் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தும் அவ்வளவு நேரம்
மூளைக்கும் முண்டி கொண்டிருந்த ஒரு விஷயம் மேலே ஏறும் போது பார்த்த அந்த
பழுப்பு நிற முட்டையான பொருள் என்ன என்பது தான். அந்த ஜந்து என்னவாக
இருக்கும்? ஆடவும் இல்லை அசையவும் இல்லை. எங்களுக்கு அதை தொட்டு பார்க்கும்
தைரியமும் இல்லை. ஆனால் அதை பற்றிய பலவித வாதங்கள் மட்டும் எங்களிடையே
ஊர்ந்து கொண்டிருந்தன. ஆனால் சரியான பதில் கிடைக்க வில்லை.
சரியாக நான்கு மணி நேர நடை போரட்டத்துக்கு பின்னர் மலையின் அடிவாரத்தை
அடைந்தோம். அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஏதோ துரத்தி சென்ற
கனவு குதிரையின் வாலை பிடித்து நிறுத்தியது போல தோன்றியது. மலை என்று
முத்திரை குத்தப்பட்ட மலையை ஏறுவது என்பது எனக்கு அந்நாள் வரை எனக்கு
எட்டாத கனியாகவே இருந்தது. ஆனால் அன்று அது சின்ன விஷயமாக இருந்தாலும்
சாதித்து விட்டேன் என்ற எண்ணமே உயர்ந்தது நின்றது.
அடிவாரத்தில் ஒரு சில மர பலகைகளை செய்து வைத்திருந்தார்கள். கொஞ்ச நேரம்
அமர்ந்து களைப்பாறினால் தேவலை என தோன்றியதால் சிறிது நேரம் அமர்ந்தோம்.
அப்போது தான் அங்கே இருந்த அறிவிப்பு செய்தி பலகை கன்ணில் பட்டது. அவ்வளவு
நேரம் எங்கள் மத்தியில் உலா வந்த வாதத்துக்கு விடையும் கிடைத்தது. மலை
பயணத்தில் நாங்கள் பார்த்த அந்த பழுப்பு முட்டையும் அந்த படத்தில் இருந்த
முட்டை பொருளும் ஒரே மாதிரி இருந்தது. ஊர்ஜீத படுத்த பிடித்த படத்தையும்
ஒரு முறை ஒப்பிட்டு பார்த்து கொண்டோம். அதாவது நாங்கள் பார்த்தது
ரெவ்லீசியா (Rafflisia) என்ற அசைவ செடியின் மொட்டவிழ்ந்த பூவின் மூடிய
தோற்றம். ஒரு வருடத்தில் ஏழாவது மாதத்தில் பூக்கும் அப்பூ நாங்கள் சென்ற
போது பூத்து மீண்டும் மூடிவிட்டிருந்தது. அதாவது எங்களால் காண முடிந்ததே.
அந்த பூவை பற்றிய வாழ்க்கைச்சூழல் பற்றிய விவரங்களை அதில் முழுமையாக காண
முடிந்தது.
படித்து முடித்த பின் இன்னும் அங்கே அவ்வளவு நேரம் உட்கார முடியவில்லை.
வீடு வா வா என்று அழைத்தது. காடு போ போ என்று வழியனுப்பி வைத்தது. காடு
மலைக்கு கை காட்டி விட்டு கூச்சிங் வந்தடைந்தோம் அடுத்த பயணத்தின் பாதை
எங்கே என்று அறியாமல்.
|
|