|
|
சிறு விண்ணப்பம்
எந்தன் கல்லறையில் மலர்களை வைக்கவேண்டாம்
எல்லா மலர்களின் நிறங்களையும்
அவற்றின் இயல்பான மணங்களையும்
மரபணு மூலம் பிறழச்செய்தவன் நான்
எல்லா ஆண்டுகளிலும் என் நினைவு தினத்தன்று
யாருக்கும் உணவளிக்க வேண்டாம்
எல்லா உணவுகளுக்கும் ஊட்டம் கொடுத்து
அவற்றின் இயற்கைச்சுழற்சியை மாற்றியவன் நான்
என் நினைவாக எனது கல்லறையில்
கனிகளை வைத்துப் படையல் செய்யவேண்டாம்
எந்தக்கனியும் இனிச் செடியில் உருவாகுதல் கூடாது என்று
அவற்றை விதையின்றித் தோன்றச்செய்தவன் நான்.
என் பெயரை மறந்தும் கூட பின் வரும் சந்ததியினருக்கோ
அல்லது தெருவுக்கோ வைத்து விடவேண்டாம்
யாருடைய பெயரும் நிலைத்திருக்கவியலாது
அனைவரின் வரலாற்றையும் திரித்து எழுதியவன் நான்.
என் கல்லறையில் எந்த மொழியிலும்
நான் வந்து சென்றதை எழுதிவைக்கவேண்டாம்
சிறு இனங்களைப் பூண்டோடு அழிக்க அமர்ந்து திட்டம் தீட்டி
முதலில் அவர்களின் மொழியை அறவே அழித்தவன் நான்.
எனக்காக யாரும் அழவேண்டாம்
கண்ணிமைகளின் அழகு கூட்ட முயல்களின் இமைகளைக்
கட்டிவைத்து அவற்றின் மீது ஆராய்ச்சி செய்தவன் நான்.
என் கல்லறையில் எந்தச் சிறு விளக்கையும்
ஏற்றி வைக்கவேண்டாம்
இயற்கையின் எண்ணை வளங்களை
ஆதிக்கச்சக்திகள் தமக்குள் கூறு போட்டுக்கொள்ள
அடிப்படைத்திட்டம் தீட்டிக்கொடுத்தவன் நான்.
உயர்த்திப்பிடித்த மதுக்கோப்பையுடன்
என் இறந்த நாளை நினைவு கூரவேண்டாம்
அருந்தும் அத்தனை மதுவிலும் கலப்படம் செய்து
பல குடிகளைக்கெடுத்தவன் நான்
என் உடலை எடுத்துச்செல்ல
மரத்தாலான பெட்டி செய்ய வேண்டாம்
அத்தனை காடுகளையும் அழித்து
நகரச் சுடுகாடுகளைக் கட்டி எழுப்பியவன் நான்.
என் உடலைப்பதப்படுத்திக் காட்சிப்பொருளாகப்
பிறர் பார்வைக்கு வைக்கவேண்டாம்
பல இனங்களை அவற்றின் சுவடின்றி
அழித்தொழித்தவன் நான்
என்னை எரித்துவிட்டு அந்தச்சாம்பலை
எந்த ஆற்றிலும் கரைக்கவேண்டாம்
அத்தனை ஆறுகளையும் மாசுபடுத்தியவன் நான்
என் சாம்பலை எந்த மலையின் மீதும் தெளிக்கவேண்டாம்
அத்தனை மலைகளின் பனியை இன்னும் இறுகச்செய்யும் வகை
பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்தவன் நான்.
நான் இறந்தபின்னும்
இந்தக்கவிதையைப்பிறர் வாசிப்பதை அறிய
உடல் தானம் செய்திருக்கிறேன்
எஞ்சும் உதவாத பாகங்களை
உங்கள் விருப்பப்படி
பிணந்தின்னி வல்லூறுகளுக்குப் படைத்துவிடுங்கள்.
|
|