|
|
என்தங்க மயிலுக்கு
1. மாலை மழையும் மஞ்சள் மலர்களும்
எவர்க்கும் கேட்காமல்
அனற்றினால் ஆறுதலாயிருக்கும்.
வாய்விட்டு அழுதால்
வடிந்தும்விடலாம் விசனம்.
உதட்டோரங்களை இழுத்தும்
வருவதாயில்லை இந்த அழுகை.
வருத்தப்படாதடா தங்கமயிலு!
நாளை மாலைநேரம்
மழைபொழியும்.
சாலையோரம்
மஞ்சள்மலர்களால் நிறையும்.
கேவும் குழந்தையை
கவனந்திருப்பி தூங்கவைக்க
இப்போதைக்கு இதுபோதும்.
நாளை வர
இந்த இரவு கடந்தாக வேண்டும்.
உறக்கத்தில்
விபரீத கனவுகள் வரக்கூடும்.
அலறிஎழுந்து
ஒருதரம் நினைவுகூர்ந்து
தொடர்ந்தும்விடலாம் தூக்கத்தை.
ஆருடம் நாளை
பொய்த்துவிட்டால் என்ன செய்ய?
பாதகமில்லை.
நம்பிக்கை உள்ளவரை
பொய்களுக்குப் பஞ்சமில்லை.
2. தொடரும் இயக்கம்
மடிந்து நிமிர்ந்து
மீண்டும் மடியும்
நகரும் படிக்கட்டுகள் முன்பாக
மிரளும் கண்கள்
தயங்கி நிற்கும் கால்கள்.
பயப்படாதடா தங்கமயிலு!
முதல் அடியை
மிகக் கவனமாக
வைத்துவிடு போதும்.
மறுபடியும் நிமிர்ந்தபடி
தொடரும் இயக்கம்
இன்னோர் இடத்தில்
உனைக்கொண்டுபோய் சேர்க்கும்.
|
|