|
|
பெர்சே 3
நாட்டில் நேர்மையான சுதந்திரமான தேர்தல் முறையை
வேண்டி, வழக்கறிஞர் டத்தோ அம்பிகா மற்றும் அவர்தம் இணைக்குழுவினரின்
தலைமையில் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைப்பெற்ற பெர்சே 3.0 பேரணியில்
250,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டு வரலாறுப் படைத்தனர்.
போலிசார் தலைநகரை சுற்றிப் பல இடங்களில் சாலைத்தடுப்புகளையும், மெர்டேக்கா
சதுக்கத்தின் உட்புறத்தில் நுழைய முடியாத அளவுக்கு முள்வேலியையும்
அமைத்திருந்தப் போதிலும் அதையும் தாண்டி மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டது.
பேரணியில் கலந்து கொண்ட மக்களின் மேல் போலீசார் முரட்டுத்தனமாக
நடந்துகொண்டதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கூட்டத்தைக் கலைக்க
முற்பட்டனர். இதில் பல பொது மக்களும், போலீசாரும் காயமடைந்தனர்.
நடந்து முடிந்த பெர்சே 3.0 பேரணியில் ஏற்பட்ட பொருள் சேதத்துக்காக
அரசாங்கம் டத்தோ அம்பிகா மற்றும் பிற 9 பேருக்கு எதிராக சிவில் வழக்கை
தொடர்ந்துள்ளது. பெர்சே 3.0இன் இன்னொரு இணைத்தலைவரான நாட்டின் மூத்த
இலக்கியவாதி ஏ சமாட் சைட் அவர்களின் பெயர் இப்பட்டியலில் இடம் பெறவில்லை
என்பது முக்கிய விடயமாகும். பெர்சே 3.0 பேரணியின்போது சேதமடைந்த 2 நீர்
பாய்ச்சும் பீரங்கிகள் மற்றும் 15 காவல்துறை வாகனங்களுக்கான இழப்பீடாக
பெர்சே குழு உறுப்பினர்களிடமிருந்து ரி.ம 122,000.00 கோரப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாது தொகை அறிவிக்கப்படாத பொது உடமை சேதங்களுக்கான
இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.
பெர்சே 3.0 பேரணிக்குப் பிறகு டத்தோ அம்பிகாவுக்கு ஒரு சில
தரப்பினரிடமிருந்து நெருக்குதல்கள் அதிகரித்து வருவது தெரிந்ததே. அவர்
வீட்டிற்கு முன் பெர்சே எதிர்ப்பு குழுக்கள் மாட்டிறைச்சி பெர்கர்
விநியோகம், மற்றும் பின்னழகைக் காட்டும் ஆபாச உடற்பயிற்சி என
கோமாளித்தனங்களை செய்து வருகிறது. இதைப் பற்றி பெர்சே 3.0 இன் இணைத்தலைவரான
ஏ சமாட் சைட் அவர்கள் டத்தோ அம்பிகா ஒரு பெண் மற்றும் இஸ்லாம் அல்லாதவர்
என்பதாலேயே அவருக்கு எதிரான மறுட்டல்கள் நடைப்பெறுவதாக கூறினார். "ஒருவேளை
தான் ஆரம்பத்திலிருந்தே பெர்சேவின் தலைவராக இருந்திருந்தால் அம்பிகாவை குறி
வைக்கும் அந்த மிரட்டல்கள் தனக்கு விடுக்கப்பட்டிருக்க மாட்டாது”, என
மலேசியாகினிக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் தனது அரசியல் லாபத்துக்காக எதற்கெடுத்தாலும்
மலாய்க்காரர்களின் நிலைக்கு மருட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு
மக்களின் மனதை திசைத்திருப்புகின்றது எனவும் அவர் குறைப்பட்டுக் கொண்டார்.
டத்தோ அம்பிகாவுக்கு எதிரான மறுட்டல்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனவும்
அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறுவோரின் மேல் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத் தரப்பினரைக் கேட்டுக் கொண்டார்.
மக்கள் தனது ஜனநாயக உரிமையை இழக்காமல் இருப்பதற்கும் நாட்டில் ஜனநாயகம்
நிலைப்பதற்கும் தேர்தல் சீர்த்திருத்தம் மிக அவசியமாகும். டத்தோ
அம்பிகாவின் போராட்டத்தை ஒரு தமிழ்ப்பெண்மணியின் போராட்டம் என்று ஒரு
வட்டத்துக்குள் அடக்குவது அறிவிலித்தனமாகும். இது மலேசிய நாட்டில் ஒரு
வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாகும். இப்போராட்டத்திற்கு மக்கள் கூட்டணி
தனது முழு ஆதரவை வழங்கிவருகிறது எனும் போதிலும், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு
வந்து மீண்டும் நடப்பில் இருக்கும் இதே தேர்தல் தில்லுமுல்லுகளை செய்தால்
அவர்களுக்கு எதிராகவும் நான் பேரணி நடத்த தயங்க மாட்டேன் என்று டத்தோ
அம்பிகா கூறியதன் மூலம் அவரின் தெளிந்த, சீரிய நிலைப்பாடு புலப்படுகிறது.
|
|