|
|
ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’
அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதை ‘யானை
டாக்டர்’. டாக்டர் கே என அறியப்படும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியின்
வாழ்க்கையின் ஒரு சிறுப்பகுதியை இக்கதையில் தந்து மற்ற பகுதிகளையும் உணர
வைக்கின்றார். சிறுப்பகுதியாக இருந்தாலும் டாக்டரின் ஒவ்வொரு செயலும்
வாழ்வியல் கூறுகளைக் கண்டடையும் தருணங்களாக அமைகின்றன. அத்தகைய தருணங்கள்
மனிதரின் சுயத்தன்மைகளை உணர செய்யும் மிக உன்னத வாய்ப்பாகின்றன. மனிதன்
எத்தகைய மனிதத்தன்மையிலிருந்து விலகி வாழ்க்கையைப் பயணிக்கின்றான் என்பதை
அறியும் வைக்கும் பகுதிகள் அவை.
தன் கடமையைச் செவ்வனே செய்யும் டாக்டர் கேவின் வாழ்க்கையில் யானை எனும்
உயிரினம் சுவாசமாய் இருக்கின்றது. இவரது வாழ்க்கையில் மட்டுமல்லாது இவரது
பேச்சிலும் எப்படியாவது யானை நுழைந்துவிடும். அதனாலேயே அவருக்கு யானை
டாக்டர் என்ற பெயரும் உண்டு. மிருகங்களின் மொழியும் உணர்வும் அவருக்குப்
பரிச்சர்யமாக இருக்கின்றன. அதே வேளை மனிதர்களின் உணர்வுகளையும் புரிந்து
கொள்கின்றார். நாம் அவரைப் புரிந்து கொள்ள உதவுகின்றார் கதைசொல்லியாக வரும்
வனத்துறை அதிகாரி.
நமது செயல்களும் சொற்களும் ஆழ்மனதில் மறைந்து கிடக்கும் விஷயங்களால்
உருவானவை. எண்ணம், சொல், செயல் என மூன்றும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால்
மட்டுமே வாழ்க்கையில் பேரின்பமும் திருப்தியும் சாத்தியமாகின்றது.
வாழ்நாளில் இவை மூன்றும் ஒரு சேர கடக்கப்படும் தினங்களே முழுமையடைகின்றன.
இதன்வழி நோக்கும்பொழுது டாக்டர் கே அதை அடைந்து விட்டார் என்றே
தோன்றுகின்றது.
நமக்குக் குமட்டலையும் அருவெருப்பையும் தருபவற்றை சாதாரணமாய் கடந்து
செல்கின்றார் யானை டாக்டர். உதாரணத்திற்கு இவ்வரிகள்,
'எல்லா புழுவும் கைக்குழந்தைதான். நடக்க முடியாது. பறக்க முடியாது.
அதுபாட்டுக்கு தவழ்ந்துண்டு இருக்கறது. அதுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான்,
சாப்புடறது. தின்னுண்டே இருக்கும். சின்னப்புள்ளைங்ககூட அப்டித்தான்…’
புழுக்கள் மீதான அருவெருப்பும் அச்சமும் இன்னும் விலகாமல் ஒட்டிக்
கொண்டிருக்கும் அதே தருணம் இவரால் முடிகின்றதே என டாக்டரின் மீது மரியாதை
உருவெடுக்கின்றது. புழு, பூச்சி முதல் யானையின் உருவ வேற்றுமை உயிரைத் தரம்
பிரிக்கவில்லை. எல்லா உயிரிலும் மிளிரும் இறைத்தன்மைக்கு இது தக்க சான்று.
உயிறற்ற யானையின் உடல் முழுதும் பரவியிருக்கும் புழுக்கள் உயிர் விலகிய
உடல்கள் யாவும் மண்ணோடு மண்ணாய் கலந்து விடும் கூற்றை மனதில்
எழுப்பிவிடுகின்றன. பணம், பதவி, அந்தஸ்து என்பதெல்லாம் உயிர் விலகிய
உடல்களுக்கு அல்ல.
சுற்றுப்பயணத்திற்காக காட்டிற்கு வருபவர்கள் அங்கிருக்கும் விலங்குக்குத்
தரும் தொந்தரவுகளைக் கடுமையாக சாடுபவராக இருந்துள்ளார் டாக்டர். அத்தகைய
தவறுகளைச் செய்பவர்களைக் கண்டிக்கின்றார்; தண்டிக்கின்றார். விலங்குகளின்
உயிர்களுக்கும் உணர்வுகளுக்கும் சமமான மரியாதை மனதை உருக்குகின்றது.
மனிதர்களுக்கிடையிலான நேயம் அழிந்து கொண்டு வரும் சமயத்தில் இத்தகைய
மனிதரின் குணம் வித்தியாசமாகவே காட்சியளிக்கின்றது.
டாக்டர் மிருகங்களுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வது சுயநலமற்ற தூய அன்பினை
நமக்கு வேறுபடுத்திக் காட்டுகின்றது. மிருகங்கள் அவரை அடையாளம் கண்டு
கொண்டு தங்களின் உடல் மொழிகளாலும் ஒலிகளாலும் தங்களின் பிரச்சனைகளை முன்
வைப்பது மிருகங்களுக்குள் எப்போதுமே வற்றாமல் இருக்கும் நன்றி உணர்வையும்
அன்பு பரிமாற்றத்தையும் மேலும் புரிய வைக்கின்றன. மிருகங்களின் அன்பு
பரிமாற்றத்தில் துரோகத்தைக் கொஞ்சம் கூட கலக்க இயலாது. துரோகம், ஏமாற்று,
பொய் என எல்லாவற்றையும் தூர எறியும் வல்லமை இதற்கு உண்டு.
ஒவ்வொரு மிருகமும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களைவிட எஞ்சி நிற்பதாக கதையில்
நகர்ந்து கொண்டிருக்கையில் சிந்தனையில் பாய்ந்த வண்ணம் உள்ளது. யார் மனிதன்
யார் மிருகம் என்ற சந்தேகமும் எழாமலில்லை. ‘நரி இப்டியெல்லாம் பண்ணாதுடா..’
என்ற வார்த்தைகள் அதனுள் ஒளிந்திருக்கும் நிதர்சனத்தை ஞாபகப்படுத்தி கொண்டே
இருக்கின்றன. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்
என்ற எச்சரிக்கையைப் பிறப்பிக்க தோன்றுகின்றது.
காட்டினுள் அவர் நகர்த்திய ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ளதாய் தோன்றி மறைய
காட்டின் வெளியே நாம் நகர்த்தி கொண்டிருக்கும் நாட்கள் ஒவ்வொன்றும்
ஆங்காங்கே தலைக்காட்டி நம்மை கேள்விக்குறிகளாய் பார்க்கின்றன. கதையினுள்
வந்து போகும் மிருகங்களின் தன்மைகள் நிழல்களாய் நம்மை பின் தொடர்கின்றன.
காட்டுக்குள் நுழைந்து யானை டாக்டரைச் சந்தித்துவிட்ட திருப்தி கதையின்
நிறைவில் மனதை நிரப்புகின்றது.
|
|