|
|
அந்தப் பதிநாலு ஆண்டு காலம்
நாங்கள் மாநாட்டு அரங்கை அடைவதற்குள் மாலை
மூன்றாகிவிட்டது. அன்பு வரவேற்புகளுக்கிடையே எனக்குச் சொல்லப்பட்ட சேதி
காலை முதல் காத்தையா என்பவர் காத்திருந்தார் என்பது. உங்கள் அப்பா
இங்கிருந்தவராமே, அவருக்கு உங்கள் அப்பாவைத் தெரியுமாம் எனச் சொன்னபோது
எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அறைக்குக்கூட செல்லாமல் நான் ஆவலோடு தேடியபோது
அவர் அங்கில்லை. மிக்க ஏமாற்றமாகிவிட்டது. முகம் கழுவித் தயாரானவுடன் மதிய
உணவு சாப்பிட்டு வரலாமென நவீன் எங்களை அருகிலுள்ள சீன ரெஸ்டாரன்ட்
ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காத்தையா அங்கு வந்தார். சுமார் 15
ஆண்டுகளுக்கு முன் என்னுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்ததை
நினைவுகூர்ந்தார். நான் மறந்து போயிருந்தேன். மலேசியக் கம்யூனிச இயக்கம்
தொடர்பான ஓர் ஆய்வில் என் தந்தை பற்றிய சில குறிப்புகளை அவர் கேட்டிருந்தது
நினைவுக்கு வந்தது. பிரச்சினை என்னவெனில் துல்லியமாக அப்பா குறித்து
எதையும் சொல்வதற்கு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான்.
அவர் இறந்து (1972) சரியாக நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. அப்போது எனக்கு 22
வயது. அவரது வாழ்வில் அவர் மலேசியாவிலிருந்த அந்த 14 ஆண்டுகளின்
முக்கியத்துவம் குறித்து நான் பெரிதும் அறிந்திருக்கவில்லை. கடுமையான
கண்காணிப்புகள், சோதனைகள் காரணமாக அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த பல
ஆவணங்களையும், தொடர்ந்து தோழர்கள் அனுப்பிக்கொண்டிருந்த கடிதங்கள் மற்றும்
பத்திரிகை நறுக்குகள் ஆகியவற்றில் பெரும்பகுதியை அழித்திருந்தார்.
எஞ்சியவை சிலாங்கூர் மாகாண அகில மலேயத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (PMFTU)
‘ஸ்தாபனத் தலைவரான’ என் தந்தைக்கு அந்தத் தொழிற்சங்கத்தினர் அளித்த
பிரிவுபச்சாரப் பத்திரம் ஒன்று, கவிஞர் டிவி.எஸ் பாரதிமோகன் அளித்த
வாழ்த்துப் பாடல் ஒன்று, சில அரிய புகைப்படங்கள், சில பத்திரிகை நறுக்குகள்
மட்டுமே. அந்த அரிய புகைப்படங்களில் என் தந்தை, தூக்கிலிடப்பட்ட
எஸ்.ஏ.கணபதி, சுட்டுக் கொல்லப்பட்ட பி.வீரசேனன் (மணியம்), மேற்குறித்த
தொழிற்சங்கத்திம் துணைத் தலைவராக இருந்த எஸ்.மோகன், மலேசியக் கம்யூனிஸ்ட்
கட்சியின் துணைத்தலைவராக இருந்த ஆர்.ஜி.பாலன் மற்றும் பெயர் தெரியாத பல
தோழர்களுடன் காட்சியளிப்பார். இன்னொரு பெரிய புகைப்படம் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் சார்பாக அங்கு வந்து சுமார் இரு மாத காலங்கள் கட்சித்
தோழர்களுடன் இருந்தவரும், பின்னாளில் முக்கிய தலைவர்களில் ஒருவராக
விளங்கியவருமான தோழர் கே.டி.கே.தங்கமணி அங்கிருந்து புறப்படும்போது
தோழர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். ‘ஜனநாயகம்’ என்கிற பெயரில் என்
தந்தையின் பொறுப்பில் வெளிவந்த கட்சி இதழ் அலுவலகம் முன்பு சுமார் 50
தோழர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது. நடுநாயகமாக என் தந்தையும்
தங்கமணியும் வீற்றிருப்பார்கள்.
பத்திரிக்கை நறுக்குகளில் முக்கியமான ஒன்று கணபதி தூக்கிலிடப்பட்ட செய்தி.
அதன் இறுதியில் வீரசேனன் முதலியோர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியோடு என்
தந்தை பற்றிய ஒரு குறிப்பும் உண்டு. “இன்னொரு பயங்கரவாதி ராமதாஸ்
இந்தியாவிற்குத் தப்பியோடிவிட்டான். அவனது தலைக்கு பத்தாயிரம் வெள்ளி விலை
கூறித் தேடப்பட்டது தெரிந்ததே. அவனை நாடு கடத்தியுள்ளதாக அரசாங்கம்
அறிவித்துள்ளது” என்கிற பொருளில் அது அமைந்திருக்கும்.
என்னுடைய தந்தை அந்தோணிசாமி மலேசியாவில் ராமதாஸ் என்றே
அறியப்பட்டிருந்தார். அவர் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தவர் என்பதும், ஒரு
குறிப்பிட்ட இடைநிலைச்சாதியைச் சேர்ந்தவர் என்பதும் மலேசியாவில் யாருக்குமே
தெரியாது என்பார். நாடுகடத்தப்பட்டு எங்கள் குடும்பத்துடன் என் அப்பாவின்
இறுதிக் காலம் வரை ஒரே குடும்பமாக வாழ்ந்து மறைந்த அண்ணன் சுப்பையா.
மலேசியா சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து எழுதத் தொடங்கி
இப்படி சுய புராணமாக விரிவதற்காக மன்னியுங்கள். மலேசியா என்றவுடன்
தந்தையின் நினைவுகளிலிருந்து தப்ப இயலவில்லை. தொடங்கிவிட்டேன்; சுருக்கமாக
முடித்து விடுகிறேன். இங்குகூட இதைச் சொல்லாவிட்டால் வேறு எங்குதான்
சொல்லப் போகிறேன்.
அன்றைய விரிந்த தஞ்சை மாவட்டத்தின் கீழத் தஞ்சையிலிருந்த
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவராயினும் தெற்குப் பகுதியான
பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் கள்ளுக் கடைகளை ஏலம்
எடுத்துப் பெரும் வசதிகளுடன் வாழ்ந்தவர் என் தாத்தா. 93 வயது வரை உயிருடன்
இருந்தார். அவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த கடைசி மகன் என் தந்தை
அந்தோணிசாமி. என் தாத்தாவின் 53வது வயதில் பிறந்தவர் என் தந்தை. எஞ்சிய
கடைசிப் பிள்ளையைப் படிக்க வைத்துவிட வேண்டுமென பட்டுக்கோட்டைக்கு
அருகிலுள்ள சரபோஜி மன்னரின் சத்திரம் ஒன்று இன்றும் உள்ள ராஜாமடத்தில்
சத்திரத்துடன் கூடிய ஒரு உறைவிடப் பள்ளியில் என் தந்தையைச்
சேர்த்திருந்தார் தாத்தா.
என்ன நடந்தது என்கிற விவரம் எனக்குத் தெரியாது. ஏதோ ஒரு வழக்கு
விவகாரத்தில் அனைத்துச் சொத்துக்களையும் இழந்த என் தாத்தா
நீதிமன்றத்திலிருந்து நேராக ராஜாமடம் வந்தார். மகனை அழைத்து பெட்டி
படுக்கைகளுடன் தயாராகச் சொன்னார். என்னவென்று தெரியாமல் தந்தையைப் பின்
தொடர்ந்தார் 9ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த 14 வயதே நிரம்பியிருந்த
தனயன். நாகைப்பட்டிணம் துறைமுகத்திற்கு வந்தபோதும் அப்பாவுக்கு ஒன்றும்
விளங்கவில்லை. அப்போதெல்லாம் நாகை துறைமுகத்திலிருந்து பினாங்கிற்கு
குறிப்பிட்ட கால இடைவெளியில் கப்பல்கள் புறப்படும். எஸ்.எஸ். ரஜூலா என்கிற
அத்தகைய கப்பலொன்றின் புறப்பாடு விவரங்களைப் பத்திரிகைகளில் பார்த்த நினைவு
எனக்கும் உள்ளது.
கப்பல் புறப்படும் நேரத்தில் அங்கு நிற்பவர்களில் சிலரை இலவசமாக ஏற்றி
அடைத்துக் கொள்வார்கள். பிழைப்பு நாடிச் செல்பவர்கள் அந்த நேரத்திற்காக
அங்கே காத்திருப்பார்கள். இதற்கு “தரும டிக்கட்” என்று பெயர்.
அப்போதெல்லாம் விசா, பாஸ்போர்ட் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அங்கே
காத்திருந்தவர்களில் தாத்தாவுக்குத் தெரிந்த சிலர் இருந்துள்ளனர். தி.மு.க
தலைவர் டி.ஆர்.பாலுவின் ஊரான வடசேரிக்கருகிலுள்ள கண்ணுகுடி கிராமத்தைச்
சேர்ந்தவர்கள் அவர்கள். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் என்
தந்தையைக் கைபிடித்துக் கொடுத்து, “இவனையும் அழைத்துச் செல்லுங்கள். இனி
நான் படும் கஷ்டங்களை அவன் பார்க்கக் கூடாது” எனச் சொல்லியுள்ளார். வேற்று
சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் கவலைப் படாதீர்கள் என்று சொல்லி
அவர்கள் தந்தையை அழைத்துக் கொண்டு கப்பலேணியை நோக்கிச் சென்றுள்ளனர்.
ஏறுமுன் திரும்பிப் பார்த்தபொழுது தாத்தா குலுங்கிக் குலுங்கி அழுது
கொண்டிருந்ததை அப்பா பலமுறை சொல்லியுள்ளார். அவரால் மறக்க இயலாத ஒரு
காட்சிப் படிமமாக அவருள் அது உறைந்திருக்கும் போல.
1919ல் பிறந்தவர் அப்பா. கப்பலேறும்போது வயது 14. ஆக 1933ம் ஆண்டில் இது
நடந்திருக்க வேண்டும். அடுத்த 14 ஆண்டுகள், அதாவது 1947 தொடக்கத்தில் அவர்
இரண்டாம் உலகப் போரில் சேதமடைந்து, ரிப்பேருக்காகச் சென்று கொண்டிருந்த ஒரு
யுத்தக் கப்பலில் தப்பித்து வந்தார்.
மலேசியத் தமிழர்களின் வாழ்வில் இந்தக் காலகட்டம் மிகவும் நெருக்கடியான
ஒன்று என்பதை மலேசிய வாசகர்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. வலுவான
தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு
குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மலேசியாவைத் தளமாகக் கொண்டு சுபாஷ் சந்திர
போஸ் இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டியபோது அதில் தமிழர்களின் பங்கு
முக்கியமானதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மலேசியாவை வெற்றி
கொண்டு ஆக்ரமித்தபோது (1941- 45) தமிழ் மக்கள் அடைந்த துயரங்களை மூத்த
எழுத்தாளர் ரெங்கசாமி மற்றும் அருண் போன்றோரின் புனைவுகளின் வழியாகவும்
தோட்டத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு நூற்களிலிருந்தும் அறியலாம். ஜப்பானிய
ஆக்ரமிப்பை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒன்றை நடத்திய மலேசியக்
கம்யூனிஸ்ட் கட்சியிலும் (MCP) சீனர்களுடன் தமிழர்களும் ஒரு குறிப்பிட்ட
அளவில் பங்கேற்றனர். ஜப்பானியர்கள் விரட்டப்பட்ட பின்னும் கம்யூனிஸ்டுகள்
தமது ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத்
தொடர்ந்தனர். போசின் இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டாலும் அதில்
முக்கிய பங்காற்றிய கங்காணிகளும் தோட்டத் தொழிலாளர்களும் அகில மலேயத்
தொழிலாளர் கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றினர். சற்றே இராணுவத் தன்மையுடைய
“தொண்டர் படை” ஒன்றை அமைத்து தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடவும்
தொடங்கினர். மலேசிய இந்தியர்கள் குறித்து எழுதியுள்ள ஜானகி ராமன் மாணிக்கம்
போன்ற வரலாற்றாசிரியர்கள் இக்காலகட்டத்தை, “தொழிற்சங்கங்களில் இந்தியர்கள்
மேலாதிக்கம் பெற்ற காலகட்டம்” எனக் குறிப்பிடுகின்றனர்.
கம்யூனிஸ்டுகள் நடத்திய ஆயுதப் போராட்டத்தில் தமிழர்களுக்கும்
பங்கிருந்தபோதும், இதைக் காரணம் காட்டி கிட்டத் தட்ட ஆயிரத்துக்கும்
மேற்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்பட்ட போதும் இந்திய தேசிய இராணுவத்தில்
தமிழர்கள் பெருந் திரளாகப் பங்கேற்ற அளவிற்கு இதில் பங்கு பெறவில்லை. இது
குறித்துப் பின் விரிவாகப் பேசலாம். இந்த ஆயிரம் என்கிற எண்ணிக்கை கூட நான்
ஒரு குத்து மதிப்பாகத்தான் சொல்கிறேன். இது குறித்த சரியான கணக்கிருக்கிறதா
எனத் தெரியவில்லை. ரெங்கசாமியின் நாவலுங்கூட இந்த அம்சத்தைத் தொடவில்லை.
ஆயுதப் போராட்டங்கள் எந்த மக்களுக்காக நடத்தப் படுகிறதோ அந்த மக்களின்
மீதான வன்முறையாகவும் அமைவதே வரலாறு. ஆயுதப் போராட்டத்தின் இந்த எதிர்மறை
அம்சங்கள், அதன் சீனத் தலைமை, பிரிட்டிஷ் மற்றும் தொடர்ந்து வந்த அரசுகளின்
கடுமையான அடக்குமுறை ஆகியன தமிழர்கள் பேரளவில் இதில் பங்கு பெற இயலாமல்
போனதற்கான காரணங்களாக இருக்கலாம்.
1946 தொடங்கித் தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமாயின. கம்யூனிஸ்ட்கள் மீது
கடுமையான அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. ஜூன் 1948ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி
நிலை பின் பல பத்தாண்டுகள் தொடர்ந்தது.
இந்தப் பின்னணியில்தான் குழந்தைத் தொழிலாளியாக வந்த என் தந்தை அடுத்த 14
ஆண்டுகளினூடாக (1933- 1947 தொடக்கம்) ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும்
தேடப்பட்ட கம்யூனிஸ்ட் தீவிரவாதியாகவும் மாறினார். பினாங்கில் இறங்கிய
எங்கள் ஊர்க்காரர்கள் சில நாட்கள் அப்பாவைத் தங்களுடன் வைத்திருந்துள்ளனர்.
14 வயதுச் சிறுவனான போதிலும் அப்பா வாட்ட சாட்டமாக இருப்பார். கொஞ்ச
காலத்திற்குப் பின் சிலாங்கூரிலுள்ள சுரங்கம் ஒன்றில் அவருக்கொரு சிறு வேலை
கிடைத்திருக்கிறது. மலேசியன் கோலெரிஸ் லிமிடெட் (Malaysian Coleries Ltd),
ஜே.ஏ.ரஸ்ஸல் அன்ட் கம்பெனி (J.A.Russel and Company) முதலான மிகப் பெரிய
சுரங்கங்கள், செங்கல் உற்பத்தித் தொழிற்சாலைகள் நிரம்பிய நகரம் ரவாங்.
தலைநகர் கோலாலம்பூரை ஒட்டி இம்மாகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணம் 1940
தொடங்கி தொழிற்சங்க இயக்கங்கள், போராட்டங்கள், கடும் அடக்குமுறைகள்,
இராணுவக் குடியிருப்புகள் ஆகியவற்றின் களமாக விளங்கியது.
காத்தையாவைச் சந்தித்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி, அப்பாவைத்
தெரிந்தவர்கள் யாரையாவது சந்திக்க இயலுமா, அப்பா இருந்த இடங்களுக்கு என்னை
அழைத்துச் செல்வீர்களா என்பதுதான். போகலாம் என அவர் உற்சாகமாகச்
சொன்னபோதிலும் அவர் சொன்ன தகவல்கள் எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தன.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் (ஜன 27) அப்பாவுக்குப் பழக்கமான பத்து
ஆராங் தருமலிங்கம் இறந்து போயிருந்தார், அப்பாவை நன்கு அறிந்திருந்த
சிலாங்கூர் தொழிற்சங்கத் தலைவர் சின்னப்பன் ஓராண்டுக்கு முன்
இறந்துபோயிருந்தார். காத்தையாவுக்கு இப்போது 73 வயது. மனசுக்குள் ஒரு
கணக்குப் போட்டுப் பார்த்தேன். அப்பா ஊருக்குப் புறப்பட்டபோது அவருக்கு 9
அல்லது 10 வயது இருந்திருக்கலாம். அவருங்கூட அப்பாவைப் பற்றிக் கேள்விப்
பட்டவற்றைத்தான் சொல்ல இயலும். என்னுடைய முயற்சி வீண்தான் என்றபோதிலும்
நான் அங்கு போக வேண்டும் என்பதைத் தெரிவித்தபோது அவர் மகிழ்ச்சியோடு
ஏற்றுக் கொண்டார். எனினும் ஊருக்குப் புறப்படுவதற்குச் சில நாட்கள்
முன்னர்தான் அந்த வாய்ப்புக் கிட்டியது. நண்பர்கள் எல்லோரும் புகழ்பெற்ற
பதுமலை முருகன் கோவிலுக்குச் சென்ற நாளில், எனக்கும் பத்துமலை முருகனைப்
பார்க்கும் ஆசை மிக இருந்த போதிலும் காத்தையாவுடன் ரவாங் புறப்பட்டேன்.
காத்தையா எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள பின்னையூரைப் பூர்வீகமாகக்
கொண்டவர், லண்டனில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஏதோ
காரணங்களினால் முனைவர் பட்ட ஆய்வைத் தொடர இயலாமல் பாதியில் மலேசியா
திரும்பியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். தற்போது
கர்ப்பால்சிங் தலைமையில் உள்ள “டெமாக்ரடிக் ஆக்ஷன் கட்சியில்” (Democratic
Action Party) செயல்பட்டு வருகிறார். மலேசியாகினி இணையதளத்தின்
(www.malaysiakini.com) தமிழ்ப் பகுதிக்குப் பொறுப்பாளராக உள்ளார்.
மலேசியாவிலிருந்து வெளி வரும் முக்கிய அரசியல் இதழான செம்பருத்தியிலும்
அவருக்குப் பங்குண்டு. மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் மிக்க பொதுச்
செயலாளரும் தற்போது தாய்லாந்தில் அகதியாக வசித்து வருபவருமான தோழர் சின்
பெங்கை அவர் எடுத்த பேட்டி வெளி வந்திருந்த செம்பருத்தி இதழை (பிப்ரவரி
2010) காத்தையா கொண்டு வந்திருந்தார். கொடுத்த வாக்குறுதியையும், செய்து
கொண்ட ஒப்பந்தத்தையும் மீறி இன்று மலேசிய அரசு அவருக்கு நாடு திரும்ப
அனுமதி மறுக்கிறது. அந்தப் பேட்டியின் இறுதியில் அவர் சின் பெங்கை நோக்கி,
“ஏன் இரகசியமாக நாட்டுக்குள் நுழைய வேண்டும் சின் பெங்? காந்திய வழியில்
பகிரங்கமாக எல்லையைத் தாண்டுங்கள்” என்று கூறியதையும், ‘இந்த எதிர்பாராத
சவாலால் சற்றே அதிர்ச்சியடைந்த சின் பெங் சமாளித்துக் கொண்டு மகிழ்ச்சி
ததும்பிய குரலுடன்’, “இது நல்ல ஆலோசனை நன்றி. நான் அதனைக் கவனத்தில்
கொள்வேன்” என்று பதிலளித்ததையும் ரசித்துப் படித்தவாறே காத்தையாவின் காரில்
அமர்ந்தேன். வயது 73 ஆனபோதிலும் ‘இன்’ பண்ணிய டீ ஷர்ட்டுடன் இளமை ததும்பத்
தோற்றமளிக்கும் காத்தையா ரவாங்கை நோக்கிக் காரை வேகமாகச் செலுத்தினார்.
-தொடரும்
|
|