|
|
இம்மாதத்துடன் ஆதவன் தீட்சண்யாவின் கேள்வி - பதில்
அங்கம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து உற்சாகத்தோடு கேள்விகளுக்கு பதில்
அளித்த அவருக்கு வல்லினம் சார்பாக நன்றி கூறிக்கொள்கிறேன்.
-ஆர்
விஷ்ணு, சென்னை
கேள்வி : திரைப்படங்களில் நீங்கள் வசனம் எழுதும் வாய்ப்பு உண்டா?
அதற்காக ஏதும் முயற்சி செய்துள்ளீர்களா?
பதில் : 2003ல் நான் போபாலிலிருந்து பெங்களூருக்கு
ரயிலில் வரும்போது ராஜேந்திர குமார் / ராஜேந்தர் சிங் என்பவர் எனக்கு
அறிமுகமானார். பஞ்சாபியரான அவர் பெங்களூரிலேயே நிரந்தரமாக தங்கி
கன்னடத்தில் தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பில் உதவி இயக்குநராக
இருந்தார். சினிமா, இலக்கியம் என்று பொதுவாக உரையாடிப் பிரிந்தோம். ரயிலில்
ஏற்படுகிற மற்றுமொரு அறிமுகமாக கருதி நான் அவரை மறந்துவிட்டிருந்தேன்.
ஆனால் அவர் என்னையும், உரையாடலின் போது பகிர்ந்துகொண்ட எனது அன்னையா
சிறுகதையையும் நினைவில் வைத்திருந்திருக்கிறார். நாலைந்துவருடங்கள்
கழித்து, பெங்களூர் தமிழ்ச்சங்கத்திலுள்ள நண்பர் தேனிரா. உதயகுமாரிடம்
விசாரித்து எனது தொலைபேசி எண்ணைப் பெற்று தொடர்பு கொண்டார். இந்த
இடைப்பட்டக் காலத்தில் அவர் கன்னடத்தில் வெற்றிகரமாக ஓடிய பல மெகா
சீரியல்களின் இயக்குனராக மாறிவிட்டிருந்தார். தான் இப்போது
பொருளாதாரரீதியில் வெகுவாக மேம்பட்டிருப்பதாகவும் தன் விருப்பத்திற்காக சில
குறும்படங்களை தயாரிக்கப்போவதாகவும் தெரிவித்த அவர், அன்னையா கதையை
தரமுடியுமா எனக்கேட்டார். ஒப்புக்கொண்டேன்.
முதற்கட்ட பேச்சுவார்த்தைக்காக ஒருநாள் எனது வீட்டுக்கும் வந்தார். அவருடன்
வந்த நண்பர்கள் அந்தக் கதையை விளங்கிக் கொள்ளவே இல்லை. பிதாமகன் வந்த பிறகு
அவர்கள் கண்ணுக்கு வெட்டியான்கள் எல்லாரும் விக்ரமைப் போலவே தெரிவார்கள்
போலிருக்கிறது. எனது கதையில் வருகிற வெட்டியானை பிதாமகன் ரேஞ்சுக்கு
மாற்றிவிட முடியும் என்பதுதான் அவர்களது கருத்தாக இருந்தது. விக்ரம்
வேண்டுமானால் ஒரு ஓட்டலுக்குள் புரோட்டாவை தன்கையாலேயே கொத்தாக அள்ளி
எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் ஒரு வெட்டியானை டீக்கடைக்குள்கூட இந்த
சாதியச்சமூகம் அனுமதிப்பதில்லை என்பதுதான் எதார்த்தம் என்று நான் சொன்ன
பதில் அவர்களுக்கு உவப்பாயில்லை. ராஜேந்திரகுமார் மிகுந்த
தர்மசங்கடத்திற்கு ஆளானார். நண்பர்கள் இல்லாமல் தான் மட்டும் பிறிதொருமுறை
தனியாக வருவதாகச் சொல்லிவிட்டு சென்றார். அதற்குப்பிறகு அவர் வரவில்லை,
நானும் தொடர்புகொள்ளவில்லை.
நண்பர் கமலக்கண்ணன், அன்புத்தம்பி அய்யப்பன் மூலமாக தொடர்புகொண்டு தான்
இயக்கவிருக்கும் படத்திற்கு பாட்டெழுத வேண்டும் என்று கேட்டார். புதியவர்
ஒருவர்தான் எழுதவேண்டும் என்று நீங்கள் விரும்பும்பட்சத்தில்
என்.டி.ராஜ்குமார் என்னைவிடவும் உங்களுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்யக்
கூடியவராக இருப்பார் என்றேன். ஒப்புக்கொண்ட அந்த நண்பர்கள் ஆனாலும் நீங்கள்
ஒரு பாட்டு எழுதவேண்டும் என்றார்கள். அப்போதைக்கு சரி என்று
தலையாட்டிவைத்தேன். ஆனால், வாய்ச்சொல் தலைமேலே என்பது உண்மை தான் போலும்,
ஒப்புக்கொண்டபடி அந்த ஒரு பாடலை எழுதித் தாருங்கள் என்று ஒருநாள்
கமலக்கண்ணன் வந்து நின்றபோது பதறிப்போனேன். அவர் எனக்கான டியூனைக்
கொடுத்துவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகச் சொல்லி
கிளம்பிவிட்டார். மூன்றுநாட்களாக என்காதில் டியூன் மட்டும்தான்
ஒலிக்கிறதேயன்றி மனசில் ஒரு சொல்லும் தோன்றவில்லை. கவிதை எழுதுவது வேறு
பாட்டு எழுதுவது வேறு என்பதைத்தான் அந்த மூன்று நாட்களில்
புரிந்துகொண்டிருந்தேன். கமலக்கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு
விலகியதோடு பாடல் எழுதும் படலம் நிறைவுபெற்றது.
ஆனாலும் அய்யப்பன் அடங்கமாட்டேன் என்கிறார். எப்போது நான் படம் எடுத்தாலும்
நீங்கதாண்ணே வசனம் எழுதணும் என்று அடம் பிடிக்கிறார். பாவம், தான் செய்வது
இன்னதென்று அறியாத இந்த அப்பாவி அய்யப்பனை என்னிடமிருந்து காத்தருளும்
கர்த்தாவே.
(ஃபிரான்சுல கூப்பிட்டாங்க, ஃபின்லாந்துல கேட்டாங்கன்னு சும்மா பீலா
உடறதுக்காக இதை எழுதல, எங்கப்பனான இது மெய்)
கனநாதன், இலங்கை
கேள்வி : இலங்கை எழுத்தாளர்களில் நீங்கள் கவனித்து வாசிக்கும் எழுத்தாளராக
யாரைச் சொல்வீர்கள்?
பதில் : டானியல் தொடங்கி ஷோபாசக்தி ஊடாக
காலக்கிரமமானதொரு பட்டியலை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால்,
இப்போதைக்கு யோ.கர்ணனும், ராகவனும். வெளியேறிப் போய்விடாமல் இலங்கை
மண்ணிலேயே பட்டழிகிற மக்களின் பாடுகளை அதன் வேர்வரைச் சென்று
சொல்கின்றனவாய் உள்ளன இருவரின் கதைகளும். மனிதப்பிறப்பு ஒன்றுதான்
வாழ்வதற்காக இத்தனைத் துன்பங்களை எதிர்கொண்டு போராட வேண்டியிருக்கிறது
என்பதை பேசுவதால் மெலிஞ்சி முத்தனும் முக்கியமானவராய் படுகிறார்.
சிவா
கேள்வி: உலகத் திரைப்படங்கள் குறித்த ஆர்வம் உண்டா? எனக்கு சிலப் படங்களைப்
பரிந்துரைப்பீர்களா?
பதில்: உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். 120
படங்களிலிருந்து 3 படங்களை தேர்வு செய்து வாக்களிக்குமாறு என்னிடம் ஒரு
பட்டியல் தரப்பட்டது. தேடித்தேடிப் பார்த்தால் நான் ஒரேயொரு படத்தைத்தான்
பார்த்திருந்தேன். (அதுவும், ஒரு பயணத்தின்போது பேருந்தில்). கடைசியில்
வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டேன். மாணவப்பருவத்தில்
காலங்கார்த்தால சேலத்துக்கு கிளம்பிப் போய் காலைக்காட்சி தொடங்கி
ரெண்டாவதாட்டம் வரை ஒரேநாளில் நாலு படமும் சிலநாட்களில்
சிறப்புக்காட்சியோடு சேர்த்து ஐந்துபடங்களும் பார்த்துவிட்டுத்
திரும்பிக்கொண்டிருந்த எனக்கு இப்போது இந்தளவில்தான் திரைப்பட ஈடுபாடு
இருக்கிறது என்பது வருத்தமளிக்கவே செய்கிறது. எல்லாப்படங்களையும்
பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை என்றாலும் வித்தியாசமான முயற்சிகளென்று
அறியப்படுகிற குறிப்பிடத்தக்க படங்களையாவது பார்க்கத்தான் வேண்டும் என்று
அப்போது நினைத்துக் கொண்டதையும் முழுமையாக பின்பற்ற முடியவில்லை. மற்றபடி,
அவ்வப்போது குறும்படங்களையும் ஆவணப்படங்களையும், ஒசூரில் குறிஞ்சி ஃபிலிம்
சொசைட்டி திரையிடும் பிறமொழிப் படங்களையும் பார்க்கத் தவறுவதில்லை.
தோழர்.ஆண்ட்டோ எப்போதும் தனது சேகரிப்பிலிருந்து தனிப்பிரியத்தோடு
அனுப்பிவைக்கிற படங்களையும் பார்ப்பதுண்டு. அதுசரி, உலகத்திரைப்படம்
உலகத்திரைப்படம்கிறீங்களே, அப்படீன்னா என்ன? அதை யார் எடுக்குறாங்க, எங்கே
ஓடுது?
மருது
கேள்விகள்:
அ. கட்சியில் இருந்துகொண்டு இலக்கியம் படைப்பது பற்றி மிக லாவகமாக பதில்
கூறி தப்பியுள்ளீர்கள். உங்களால் ஒரு நேர்மையான படைப்பாளியாக நீங்கள்
சார்ந்த கட்சியையும் விமர்சித்து எழுத முடியுமா?
ஆ. கூடங்குளம் அணுமின் நிலையத்தை உங்கள் கட்சி ஆதரிக்கத்தானே செய்தது. (அதை
ஆதரிக்க அந்த விஞ்ஞான முறை ஜெர்மனியில் இருந்து வருகிறது என சில அறிவிளிகள்
சொன்னதாகக் கேள்வி) அப்போதெல்லாம் உங்கள் எதிர்வினை எப்படி இருந்தது.
இ. கட்சியில் இருப்பதால் உங்கள் அரசியல் சாராத விசயங்களுக்கு நீங்கள் மௌனம்
சாதிப்பது உண்டா?
ஈ. அவ்வப்போது சாடைமாடையாக ஜெயமோகனைத் தாக்குகிறீர்கள். அதேபோல
எஸ்.ராவையும். அவர்கள் இலக்கிய ஆற்றம் குறித்து உங்களுக்கு நல்ல
அபிப்பிராயமே இல்லையா?
உ. உங்களைப்போன்ற பலர் அவர்களை வரட்டுத்தனமாகத் தாக்குகிறார்களே தவிர,
அறிவுப்பூர்வமாக இதுவரை விவாதித்தே இல்லை. இந்த பதில்களைப் பாருங்கள்.
பிராமணர்களை வையும் நீங்களும் உங்கள் குழுக்களும், இது போன்று நடு நிலையாக
பதில் கூற முயன்றதுண்டா?
http://www.jeyamohan.in/?p=22431
http://www.jeyamohan.in/?p=21656
http://www.jeyamohan.in/?p=22567
இந்தப் பதில்களில் நீங்கள் காணும் முரண்கள்தான் என்ன? என் கேள்விகள்
உங்களைக் கோவப்படுத்தலாம். ஆனால், தெளிந்த பதில்களை எதிர்ப்பார்க்கிறேன்.
பதில்: என்னை கோபப்படுத்துவதுதான் உங்கள் நோக்கமாக
இருக்கட்டுமே, அதற்காக நான் கோபப்பட்டுவிட வேண்டுமா மருது? அப்படியொன்றும்
நீங்கள் புதிதாக எதையும் கேட்டுவிடவில்லை. ஏற்கனவே பலரும் கேட்டு கேட்டு
புளித்துப்போன கேள்விகளும் அதற்கு சொல்லிசொல்லி சலித்துப்போன பதில்களும்
இங்கு மலிந்து கிடக்கின்றன. ஆனபோதும் என்னிடம் கடந்த மாதம் கேட்கப்பட்ட
கேள்விக்கு என்னளவில் சரியெனப்பட்டதை பதிலாகச் சொல்லியிருக்கிறேன். இதில்
லாவகமாக பதில் கூறி நான் தப்பித்துவிட்டதாக ஒரு குற்றத்தையும்
கண்டுபிடித்திருக்கிறீர்கள் என்பது பாராட்டக்கூடிய அம்சம்தான்.
ஒரு இயக்கத்தில் இருப்பவரின் படைப்பாக்கங்கள், அந்த இயக்கத்தில்
இருப்பதனாலேயே எவ்வாறு பலவீனமாக வெளிப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது அந்த
இயக்கத்தின் அரசியல்தேவைக்காக அவர் தனது படைப்பாக்கத்தை எவ்வாறு
சிதைக்கவும் திரிக்கவும் நேர்ந்திருக்கிறதென்றோ ஒரு விமர்சனத்தை
முன்வைக்கும் பட்சத்தில் அதை பொருட்படுத்தி விவாதிக்கலாம். அதல்லாத எந்தப்
பேச்சும் இலக்கியவாதி எந்த ஒரு இயக்கத்திலும் இருக்கக்கூடாது என்கிற
அரசியலை முன்வைக்கிற தந்திரம்தான்.
எந்தவொரு பிரச்னையின் மீதும் என்னளவில் சரியெனப்படுவதை நான் எப்போதும்
வெளிப்படையாக எழுதிவருகிறேன் என்கிற ஒப்புதல் வாக்குமூலத்தை கேட்டுப்பெறும்
உள்நோக்கம் உங்களுக்கு இல்லாதபட்சத்தில், ஒரு வாசகர் அல்லது சமூகத்தின் ஒரு
அங்கமானவர் என்கிறவகையில் சமூக நடப்புகள்மீது நீங்கள் எந்தளவிற்கு
வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடியவர் என்று நானும் உங்களைக்
கேட்காமல் இந்த இடத்தைக் கடந்து விடலாம். ஆனால், நேர்மை என்கிற சொல்லை
நீங்கள் பயன்படுத்துவதால் நான் கேட்கிறேன், அதற்கு என்ன வரைவிலக்கணம்?
நேர்மை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? யார் பார்வையில் யாருக்கு
நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்? நேர்மை என்பது எனக்கும் உங்களுக்கும்
பொதுவா என்பது போன்ற விசயங்களை தெளிவுபடுத்தினீர்களானால் மேற்கொண்டு
விவாதிக்கலாம்.
நாங்கள் நடத்தி வருகிற புதுவிசை இதழின் 35வது இதழில் விவேக் மான்டீரோ
என்கிற அணுஉலை எதிர்ப்புப் போராளி, அணுசக்திக்கழகத் தலைவர் டாக்டர் அனில்
ககோட்கருக்கு www.dianuke.org வழியே எழுப்பிய கேள்விகளையும், அணுஉலை
எதிர்ப்பின் நியாயத்தை வலியுறுத்தி http://thecolloquium.net வழியே
தெரிவித்த பதில்களையும் தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளோம். அதற்கான
முன்குறிப்பில் ‘‘தாடிக்கொரு சீயக்காய் தலைக்கொரு சீயக்காய் என்பதைப் போலவே
அணுஉலை விசயத்தில் ஊருக்கொரு நிலைபாட்டை மேற்கொள்வதும் அபத்தமானது’’ என்று
குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்/ இனி கவனிப்பீர்கள் என்று
நம்புகிறேன்.
சரி, இப்போது இந்த ஜெயமோகன் விசயத்திற்கு வருவோம்.
கேள்விக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று அவர் உளறிக்கொட்டிக்
கொண்டிருப்பதை படித்தாக வேண்டிய கொடிய தண்டனையை வழங்குமளவுக்கு நான்
உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் மருது? சரி, அவர் உளறியிருப்பதில் அப்படி
என்ன நடுநிலையை நீங்கள் கண்டுவிட்டீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.
இந்தப் பக்கமிருந்து ஒரு கற்பனைப்பெயரில் கேள்விகளை கேட்டுவிட்டு அந்தப்
பக்கம் ஓடிநின்று பதில் சொல்லிவருகிற தனது உத்தியை அவர் வீடியோ கேம்களைப்
பார்த்து காப்பியடித்திருக்கக் கூடும். ஒரே திரைக்குள் எதிரெதிரானவர்களை
நிறுத்தி எல்லோருக்காகவும் தானே விளையாடுகிற அவர் வெற்றி பெறுவதற்கான
பொத்தானை அழுத்துவதற்கே பெரிதும் ஆசைப்படுகிறார். ஆனால் விளையாட்டின்
விதிகள் ஏற்கனவே உள்ளகமாக தீர்மானிக்கப்பட்டிருப்பதால் அவரேதான் தோற்கவும்
வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் 'வெற்றி வெற்றி' என்கிற
ஆரவாரத்தை மட்டுமே விரும்புகிற அவர் அதற்காக எவ்வளவு நெறிபிறழ்வாக ஆடினார்
என்பதை நம் எவரைக்காட்டிலும் அவரேயறிவார். பத்திரிகைகள் நடத்தும்
சிறுகதைப்போட்டிகளில் பரிசை வெல்வதற்காக பல்வேறு பெயர்களில் கதைகளை அனுப்பி
தன்னைத்தானே தோற்கடித்து தன்னைத்தானே வெற்றிபெற வைக்கிற மோசடிகளில்
தொடங்கிய அவரது ஆட்டம் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு வருகிறபோது அவர் எதிரிகளை
வலிந்து உருவாக்குகிறவராக மாறிப்போனார். யாரை/எதைப் பற்றியாவது அபாண்டமாக
எதையாவது சொல்லி அதன்மூலம் கிளம்பும் சர்ச்சைகளின் வழியே தன்பெயரை
முன்னிறுத்திக்கொள்ளும் மலிவான உத்திகளை நம்பியே அவரது பிழைப்பிருக்கிறது.
வாழ்த்தியோ தாழ்த்தியோ தினமும் தன் பெயர் பரவலாக உச்சரிக்கப்படுவதற்காக
பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்துவிட்டு வயிறு வளர்க்கும் அந்தக்
கேவலப்பிறவியிடமிருந்து ஒரேயொரு ஒற்றைவரிகூட உண்மையைப் பேசுவதற்காக
வெளிப்பட்டதில்லை. வரலாற்றையும் நடப்பியல்களையும் திரித்தும் சிதைத்தும்
புனைந்தும் மறைத்தும் வருகிற இந்து பயங்கரவாதிகளின் விரிவான
வேலைத்திட்டத்தின் ஒருபகுதியை அவர் தன் பொறுப்பிலெடுத்து
நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காக இந்தியா என்பது இன்றைய வடிவிலேயே
என்றென்றைக்கும் இருந்ததுபோலவும் அதன் மதமாக இந்துமதமே
வீற்றிருந்ததுபோலவும் இவர் அளந்துவிடுகிற பொய்களைக் கண்டு பொய் என்ற
சொல்லேகூட புலம்பிச் செத்திருக்கும்.
‘‘பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும்
இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர்
பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்ன பின்னரே பேச
வேண்டியிருக்கிறது...’’ என்று ஓரிடத்தில் அலுத்தும் கொள்ளும் இவர் ஒவ்வொரு
முறையும் அப்படியென்ன அடிப்படைத்தகவல்களை சொல்லி விடுகிறார்? உண்மையான
வரலாற்றை இவர் பேசுவதாக இருந்தால் ஏற்கனவே உள்ள ஆய்வுகளையும் தரவுகளையும்
மேற்கோள் காட்டி பேசுவார், அதில் சிலவற்றை நாமும் அறிந்திருக்க
வாய்ப்புண்டு- அவர் சொல்வதை விளங்கிக் கொண்டுவிடலாம். ஆனால் இவர்
பேசவிரும்புவதோ பொய்யும் புனைசுருட்டும். அப்படியானால் அந்த மோசடிக்குத்
தேவையான ‘‘அடிப்படைத்தகவல்களை’’ அவர்தானே சொல்லியாக வேண்டும்? போடுவது
பொய்ப்பந்தல் என்றாலும் அதைத் தாங்கிநிற்பதற்கென்று சில பந்தக்கால்களை
நடத்தானே வேண்டியிருக்கும்? இவர் சொல்லும் அடிப்படைத்தகவல்கள் இந்த
பந்தக்கால் ரகத்திலானவைதான். ஆகவே அவர் சொல்லப்போகிற வரலாற்றுப் பொய்களைத்
தாங்கிக்கொள்ளும் வலுவில் - அந்தப்பொய்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை
உருவாக்கும் வடிவில் அவர் அதைவிடவும் வலுவான ‘‘அடிப்படைப் பொய்களை’’
எடுத்தயெடுப்பில் சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
நிலைமை இவ்வாறிருக்க, ‘பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல்
தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை
நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள்...’’ என்று வாசகர்களை குற்றம்சாட்டி
அலுத்துக்கொள்வது எப்படி சரியாகும்? இவர் புதிதபுதிதாக அவிழ்த்துவிடும்
பொய்களை அப்பாவி வாசகர்கள் எப்படி ஏற்கனவே தெரிந்துவைத்திருக்க முடியும்?
ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல, ஆகவே அவர்களது வேதங்களும்
இந்தியர்களுக்கானது, சிந்துசமவெளி நாகரீகம் என்று ஒன்றும் கிடையாது, இங்கு
இருப்பது சரஸ்வதி நதி நாகரீகம், இந்துமதம் என்பது இந்தியாவின் தொன்மையான
மதம், சமஸ்கிருதம் மேன்மையானது, ஆரிய-திராவிட மோதல் என்பது இங்கு
நடக்கவேயில்லை என்பது போன்ற ‘‘அடிப்படைத்தகவல்களை’’ புதிதாகச்
சொல்வதென்றால் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியிருக்கும். தொல்லியல்
அகழ்வாய்வில் கிடைத்த ஒற்றைக்கொம்புள்ள காளையை குதிரையாக மாற்றிக்காட்டி,
ஹரப்பா நாகரீகத்தை ஆரிய நாகரீகமாக காட்டிட ஒரு கும்பல் கிராபிக்ஸில் செய்த
மோசடியை ஜெயமோகன் எழுத்தில் செய்து வருகிறார். பூமிக்குள் மறைந்துபோன
சரஸ்வதி நதியை மீண்டும் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக செயற்கோள் படம் ஒன்றை எடுத்து
வெளியிட்டு ‘அறிவியல்பூர்வமாக’ மோசடி செய்வதற்கு பா.ஜ.க.ஆட்சி செய்த
முயற்சிக்கு இணையானதுதான் லோதால் பயணம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளும்.
அந்நியர் கருத்துக்களை நம்பக்கூடாது என்று எகிறும் அவர், மிஷல் தனினோ
எழுதிய ‘தி லாஸ்ட் ரிவர்’ என்கிற புத்தகத்தைக் ªகொண்டாடுவதற்கும் இந்த
அரசியலே காரணமாகிறது. (இந்திய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு மாக்ஸ் முல்லர் தன்பெயரையே மோக்ஷ மூலர் என்று மாற்றிக்கொண்டதால் ஒரு வெளிநாட்டு பிராண்ட் ஆய்வாளராக அவரது பெயரை பயன்படுத்துவதில் சங்பரிவாரத்தினருக்கு சங்கடம் ஏதும் வருவதில்லை.)
உண்மைக்கலப்பற்ற இப்படியான அரிய அடிப்படைத்தகவல்களால் உங்களுக்குள்
தகவமைக்கப்படுகிற இந்துப் பெருமித உணர்வின்மீது நின்றுகொண்டுதான் அவர்
மற்றபொய்களை அடுக்கத்தொடங்குகிறார். எனவே அது உங்களுக்கு புதிதாகவும்,
உண்மையை தோண்டியெடுத்துக் காட்டுகிற ஆய்வாகவும் நடுநிலையாகவும்(?)
தோன்றுகிறது போலும். அடிப்படையில் தான் ஒரு இந்து என்கிற உணர்விலிருந்து
அவரிடம் கேள்வி கேட்கும்போதே இசைவான ஒரு மனநிலைக்குள் தோய்ந்து
விடுகிறவர்களுக்கு அவரது கபடமும் சூதும் பிடிபடாமல் போவதில் ஆச்சர்யம்
ஒன்றுமில்லை.
நீங்கள் விதந்தோதி உதாரணம் காட்டியிருக்கும் குறிப்பிட்ட அந்த மூன்று
சுட்டிகளில் அவர் எழுதியிருப்பதும்கூட இப்படி பொய்களின் தொகுப்பாகவே
இருப்பதை முதல் வாசிப்பிலேயே கண்டுணர்ந்துவிட முடியும்.
நாட்டார் தெய்வங்களைப் பற்றிய கேள்வியை எழுப்பிக்கொண்டு பதில் சொல்ல வருகிற
அவர் ‘தமிழ்நாட்டில் ஏராளமான படித்த அடித்தளப் பின்னணி கொண்ட இளைஞர்களிடம்
உள்ள குழப்பம்தான் இது...’ என்று எடுத்தயெடுப்பில் முதல்வரியிலேயே
கொப்பளிக்கின்ற அகங்காரத்தைப் பாருங்கள். அடித்தளப் பின்னணி கொண்ட
இளைஞர்கள் என்றாலே அவர்களிடம் குழப்பமிருக்கும் என்பது எவ்வளவு கொழுப்பேறின
பேச்சு. அத்தோடும் ஓயாமல் அடுத்தும் இழிவுபடுத்துவதைப் பாருங்கள்.
‘இந்தக்குழப்பம் சென்ற பல வருடங்களாக திராவிட இயக்கங்களாலும்
இடதுசாரிகளாலும் வளர்க்கப்படுகிறது’. அதாவது அடித்தள மக்களுக்கென்று சுயமான
சிந்தனைகள் கிடையாது, எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிற அவர்களை திராவிட
இயக்கங்களும் இடதுசாரிகளும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றனர். சரி,
திராவிட இயக்கங்களும் இடதுசாரிகளும் அவ்வாறு செய்வதற்கான காரணம்தான் என்ன?
ரொம்ப சிம்பிள். ‘அவர்களுக்குப்பின்னால் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு
பெரும் நிறுவன வலிமையுடனும் பணபலத்துடனும் செயல்படும் சக்திகள் உள்ளன.
அவர்கள் இந்த ஐயத்தை ஒரு கருத்துநிலையாக மாற்ற முயல்கிறார்கள்...’.
அடித்தளமக்கள், இடதுசாரிகள், திராவிட இயக்கங்கள் ஆகிய இந்துத்துவத்திற்கு
எதிரானவர்கள்மீது இந்த நான்குவரிகளுக்குள்ளேயே எவ்வளவு நஞ்சினை
உமிழ்கிறார்? எளிய மக்களை அவரவர் வாழ்நிலையோடு இணைத்துப் பார்த்து
புரிந்துகொண்டு அவர்களை அணிதிரட்டுவது என்கிற நோக்கில் நா.வானமாமலை
போன்றவர்கள் நாட்டார் வழக்காறுகள்/ தெய்வங்கள் பற்றி மேற்கொண்ட
ஆய்வுவரலாற்றை மறைத்து அது ஏதோ ஜெயபதி என்கிற பாதிரியாரின் அங்கிக்குள்
மறைந்திருந்த பூதம்போலவும் அதை தானே கண்டுபிடித்து அம்பலப்படுத்தி
மந்திரித்து நிறுத்திவிட்டதாகவும் ஜெயமோகன் குதிப்பதில் உண்மை என்பது
துளியேனும் இருக்கிறதா?
இந்தியாவின் இயற்கைவளங்களும் மனிதஆற்றல்களும் தொழிலும் வணிகமும் கல்வியும்
மருத்துவமும் சந்தையும் அந்நியச்சக்திகளால் சூறையாடப்படுவதையெல்லாம்
சுரணையற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும், ஆட்சிக்காலத்தில் இவ்வகையான
அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு தடையற்ற வழிகளை உருவாக்கி கொடுத்தவர்களுமாகிய
ஜெயமோகன் உள்ளிட்ட சங்பரிவாரத்தினரின் பார்வையில் நாட்டார் தெய்வங்கள்
பற்றின ஒரு கருத்தரங்கம் கூட அந்நியச்சதியாகவும் ஊடுருவலாகவும் தெரிகிறது.
காரணம், இவர்களது ஆதாரமாய் இருப்பது இந்த பாழாய்ப்போன மதம் மட்டும்தான்.
அதையும் இழந்துவிட்டால் வயிறு கழுவ என்னதான் செய்வார்கள்?
‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்று அத்வானி உள்ளிட்ட அரைடவுசர் பார்ட்டிகள்
அரற்றி அச்சுறுத்தி நெடுங்காலமாய் அரங்கேற்றிவரும் நாடகத்தைத் தான்
ஜெயமோகன் தன் சொந்த நடிப்பாலும் சூடேற்றும் வசனங்களாலும்
நடத்திக்கொண்டிருக்கிறார். இந்துமதத்தின் கொடுங்கோன்மையிலிருந்து
தப்பிக்கும் மார்க்கமாகவும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகவும் மதம் மாறிப்
போகிறவர்களை அந்நியநிதிக்கு ஆசைப்பட்டு விலைபோய்விட்டதாக சங்பரிவார்
எழுப்பும் குற்றம்சாட்டைத்தான் ஜெயமோகனும் செய்கிறார் என்பதற்கு அவரது
ஒவ்வொரு பதிவிலிருந்தும் சான்றுகளைக் காட்டமுடியும். பார்ப்பன
மேலாதிக்கத்திற்கும் சமஸ்கிருதமயத்திற்கும் இந்துமதத்தின் சாதிமுறைக்கும்
எதிரான ஆய்வுகளையும் இயக்கங்களையும் கருத்தியல்களையும்
செயல்பாட்டாளர்களையும் அந்நிய நிதியின் நச்சுவிளைச்சலாக அவர் தொடர்ந்து
அவதூறு செய்வதற்குப்பின்னே இந்த சங்பரிவாரின் அரசியல்தான் இருக்கிறதேயன்றி
வேறொரு வெங்காயமும் இல்லை. சங்பரிவார் அரசியலை அம்பலப்படுத்துகிற ஆய்வுகள்
ஏதும் நடந்தால் இந்துமதத்திற்கு எதிரான சர்வதேச சதி என்று புலம்புவார்கள்.
இவர்கள் விடுகிற கப்ஸாக்களை வலுப்படுத்தமென்றால் வெறும் வெற்றுத்தாளை
வைத்துக்கொண்டும்கூட அதில் வினோத எழுத்து தெரிவதாக விவாதிக்க
கிளம்புவார்கள். தங்களது சொந்த கைச்சரக்கை கடைவிரிப்பதற்காக, இந்தியாவின்
எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வரலாற்றறிவும் அந்நியர்களால் பிரிவினை
நோக்கில் உருவாக்கப்பட்டதாக நிறுவுவதற்கு அவர்கள் மேற்கொண்டிருக்கின்ற
திட்டங்களின்படிதான் ஜெயமோகன் இயங்குகிறார். ஆனால், இந்துமதம் என்பதையே -
அந்தச்சொல் உட்பட உருவாக்கிக் கொடுத்தவர்களே அன்னியர்கள் தான் என்பதை
வசதியாக மறந்துவிடுகிறார். சிந்துநதியை இந்துநதி என்று உச்சரிப்பதற்கு
பதிலாக பொந்துநதி என்றோ சந்துநதி என்றோ உச்சரித்திருப்பார்களேயானால் இன்று
ஜெயமாகன் பொந்துமதத் தீவிரவாதியாகவோ சந்துமதத் தீவிரவாதியாகவோதான்
இருந்திருப்பார். ஆரியர்களின் வேதமதத்தையும் அதை எதிர்த்து உருவான
வேதமறுப்பு மதங்களையும் இந்துமதம் என்கிற பொது நாமகரணத்தால் அவர்கள்
அழைக்கப்போய்தான் இந்துமதம் என்கிற கலந்துகட்டிய மதம் ஒன்று உருவானது. சோறு
சாறு சோமபானம் சுறாபானம் சொர்க்கத்துக்கான கனெக்ஷன் எல்லாமே வேதங்களில்
இருக்கிறது என்கிற ஆரியப்புளுகை அம்பலப்படுத்தியும் எதிர்த்தும் உருவான
வாழ்வியல் கண்ணோட்டங்களைக் களவாடி ‘இந்து ஞானமரபு’ ‘தத்துவ தரிசனங்கள்’
என்று ஜெயமோகன் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறார். (இந்த
களவாணித்தனத்தைத்தான் இந்துமதத்தின் தனித்தன்மை என்று எண்ணூறு பக்கத்திற்கு
எதையாச்சும் உளறுவாரோ என்றஞ்சி நகர்கிறேன்)
அடுத்து, மதமாற்றம் என்கிற சொல்லே ஏதோ கிறிஸ்தவர்களாலும் இஸ்லாமியர்களாலும்
தான் இங்கு அறிமுகமானதைப்போல பசப்புகிறார் ஜெயமோகன். மன்னர்களை மதம் மாற்றி
குடிமக்களையும் தங்களது கூடாரத்துக்குள் இழுத்துக்கொண்ட ‘புகழ்மிக்க
வரலாறுகள்’ இங்கு ஏற்கனவே உண்டு என்பதை மறந்துவிட்டுப் பார்த்தாலும்கூட,
உலகத்திலேயே மதமாற்றத்தினால் பெரும் ஆதாயம் அடைந்த மதம் என்று ஒன்று
இருக்குமானால் அது இந்துமதம்தான் என்பதே உண்மை. இந்து என்ற சொல்லைக்கூட
வாழ்நாளில் கேள்விப்பட்டிராதவர்களையும், அதை எதிர்ப்பவர்களையும்கூட ஒரு
சட்ட வரையறையைக் காட்டி இந்துவாக மதம் மாற்றி எண்ணிக்கையை பெருக்கிக்கொண்ட
மோசடி மதம் அது. இப்படி மோசடியாக மதம் மாற்றி பெருக்கிக்கொண்ட எண்ணிக்கை
பலத்தை தக்கவைத்துக் கொல்வதற்காகத்தான் மதமாற்ற பீதியை எப்போதும்
பரப்பிக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.
இந்துமதம் யாரையும் மதம் மாற்றுவதில்லை என்கிற ஜெயமோகனின் ஜம்பத்திற்கு
வருவோம். ஏழெட்டுத்தலைமுறைக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய ஒருவர்
இந்துமதத்திற்கு மாறவிரும்புவதாக தெரிவிக்கிற பட்சத்தில் அவரை
ஏற்றுக்கொள்வதற்கு இந்துமதத்தால் முடியுமா? முடியாது. ஏனென்றால் வெறுமனே
ஒரு இந்துவாக அவரை உள்வாங்கிக்கொள்ளவே முடியாது. அவரை ஏதாவதொரு சாதியில்
கொண்டுபோய் அடைக்கவேண்டும். அவர் விரும்புகிற சாதியில் சேர்க்கவும்
முடியாது, அவரை விரும்புகிற சாதியினர் சேர்த்துக் கொள்ளவும் முடியாது.
ஏனென்றால் மாற்றிக்கொள்ள முடியாததாக இருக்கிற சாதிதான் இந்துமதத்தின்
அடிப்படை. இப்படியான ‘அடிப்படைத் தகவல்களை’ மூடிமறைத்து மதமாற்றத்தில்
இந்துக்களுக்கு நம்பிக்கையில்லை என்று போலியாக புளகாங்கிதம் அடைகிறார்
ஜெயமோகன். இந்துமதத்தின் அடிப்படை சாதியம். சாதியத்தின் அடிப்படை
ஏற்றத்தாழ்வு. இந்த ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தவும் பேணிவளர்க்கவும்
ஒவ்வொரு இந்துவும் தன்னியல்பாகவே ஒரு பிரச்சாரகராக செயல்படுகிறார்.
இங்குள்ள குடும்பம், கோயில், கல்விக்கூடங்கள். பாடத்திட்டங்கள், ரானுவம்,
காவல்துறை, நீதிமன்றம், சிறைக்கூடம், மொழி, கலை இலக்கியம், ஊடகம் உள்ளிட்ட
யாவும் இந்த ஏற்றத்தாழ்வை தத்தமது பங்கிற்கு வலுவூட்டும் பிரச்சாரத்தை
மேற்கொண்டுள்ளன. ஆனால் பிரச்சாரகர்கள் யாருமில்லாமலே இந்துமதம்
நீடித்திருப்பதாக தனக்குதானே சபாஷ் போடுகிறார் ஜெயமோகன்.
இதேபோலதான் அவர் சமஸ்கிருதம் பற்றி அளந்துவிடுவதும்கூட. ‘தமிழ்
சம்ஸ்கிருதம் மூலம் ஒட்டுமொத்த இந்தியமரபுடன் உரையாடி வளர்ந்துதான் இன்றைய
வடிவை அடைந்தது. சம்ஸ்கிருதம் இல்லையேல் நமக்கு சிலப்பதிகாரமோ, மணிமேகலையோ,
சீவகசிந்தாமணியோ, கம்பராமாயணமோ இல்லை...’ என்பதான உளறல்களை நிரூபிக்கச்
சொன்னால் நினைவிலிருந்து சொன்னதாக தப்பியோட பார்ப்பார். இப்படியான
அபாண்டங்களை தமிழாய்ந்த அறிஞர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று நாம்
ஆதங்கப்பட்டால் தனக்கெதிராக தமிழறிஞர்களை தூண்டிவிடுவதாக
புலம்பத்தொடங்கிவிடுவார்.
போதும் மருது, ஜெயமோகன் எழுதினாலும் வளவளவென்று வருகிறது, ஜெயமோகனைப் பற்றி
எழுதினாலும் வளவளவென்று வருகிறது. இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.
இறுதியாக...
நவீன், நிறைவாக ஏதாவது சொல்லவேண்டும் என்று கேட்டீர்கள். ஆனால் சட்டென்று
எதுவும் தோன்றவில்லை. அதனாலென்ன, தோன்றும்போது எழுதிக்கொள்ளலாம் என்று
சமாதானமடைகிறேன். என்ன நோக்கத்தில் கேட்கப்பட்டிருந்தாலும் என் பொறுப்பை
உணர்ந்து பதில் சொல்லியிருப்பதாகவே கருதிக் கொள்கிறேன். மலேசியப்பயணம்
பற்றி வந்திருந்த ஒன்றிரண்டு கேள்விகளை நேரமின்மையின் காரண்மாக முன்பு
தவிர்த்திருந்தேன். ஆனால் அதற்கு பதில் சொல்லியிருந்தால் அதுவழியாக
பினாங்கு, சிங்கப்பூர் பயண அனுபவங்களை பகிர்ந்திருக்க முடியும் என்று
இப்போது தோன்றுகிறது. குறிப்பாக சிங்கப்பூரில் புருஷோத்தமன், பாண்டியன்,
ரெ. பாண்டியன், ராம்குமார், விஜயானந்த், மதிப்பிற்குரிய கண்ணபிரான் போன்ற
தோழர்களுடன் உரையாடிக் களித்ததை சொல்லியிருக்க முடியும். பார்ப்போம், உலகம்
சின்னது, மனம் பெரியது. மறுபடி உரையாடாமலா போய்விடுவோம்?
|
|