முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 43
ஜூலை 2012

  நேர்காணல்: தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறும் வெளி!
சரவணன்
 
 
       
பத்தி:

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்
கே. பாலமுருகன்




நேர்காணல்:


தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறும் வெளி!
சரவணன்



சிறுகதை:

சூனியக்காரனின் பூனை
அ. பாண்டியன்

அபராஜிதா என்கிற அர்பு
கணேஷ்



பதிவு:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு
வாணி. பாலசுந்தரம்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 2
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

லீனா மணிமேகலை

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஆறுமுகம் முருகேசன்

லிவிங் ஸ்மைல் வித்யா

ந. பெரியசாமி

எம். ராஜா

பூங்குழலி வீரன்



எதிர்வினை


வல்லினம் வகுப்புகள்


நேர்காணல் இதழ் 5

'புரோ வேரா' (Pro Vera) எனும் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன். 30 வயது இளைஞர். லாபமே வணிகத்தின் குறிக்கோள் என சென்றுக்கொண்டிருக்கும் சூழலில் இயற்கை குறித்தும் சுகாதாரம் குறித்தும் அக்கறைக்கொண்டவர். இவரது தயாரிப்புகளை நன்கு ஆராய்ந்த பின்னர் ஒரு கலந்துரையாடல் செய்ய முடிவெடுத்தேன். பயனீட்டாளர் விழிப்புணர்வு குறித்து எங்கள் உரையாடல் இருந்தது.


கேள்வி: உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

சரவணன்: நான் அறிவியல் பல்கலைக்கழக மாணவன். கெடா மாநிலத்தில் லுனாஸ்தான் என் பிறப்பிடம். எல்லா பெற்றோர்கள் போலவும் என் பெற்றோரும் ஒரு வயதில் நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்ப, அதை நிறைவேற்ற மனமில்லாமல் மனம் போனபடி திரிந்தவன். எனது விரும்பங்கள் எல்லைக்குட்பட்டவை அல்ல. காலையில் வேலைக்குச் சென்று யாரோ ஒருவருக்காக உழைத்துக்கொடுத்து ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் புகுந்துவிடும் மனம் என்னிடம் இல்லை. நான் சின்ன வயதிலிருந்தே இந்த உலகில் எதையாவது விட்டுச்செல்ல விரும்புபவன்.

கேள்வி: பொருளைத் தயாரிப்பதும் விற்பதும்தான் இந்த உலகில் நீங்கள் விட்டுச் செல்வது என நினைக்கிறீர்களா?

சரவணன்: நான் வணிகன் இல்லை. அல்லது இப்படிச் சொல்லலாம். கெட்டிக்கார வணிகன் இல்லை. நான் பயன்படுத்த விரும்பும் தரமான ஒன்றையே மற்றவர்களும் பயன்படுத்த வேண்டும் என விரும்புபவன்.

கேள்வி: நீங்கள் ஒரு வணிகர் இல்லை என்கிறீர்கள். உங்களின் இந்தத் தயாரிப்புகளின் நோக்கம்தான் என்ன?

சரவணன்: நாம் சாப்பிடும் உணவு குறித்து இன்று நாம் சிந்தித்துப் பார்த்துள்ளோமா? வயிற்றில் இறங்கி பசியைப் போக்கினால் அதுதான் உணவு என்ற பரபரப்பான நிலையில்தான் நம் வாழ்க்கை நகர்கிறது. மருந்திடப்பட்ட உணவு, மருந்திடப்பட்ட மாமிசம் என மருந்துகளைத்தான் நாம் உணவு என உட்கொள்கிறோம். என்னைப் பொருத்தவரை அவை மருந்தல்ல; விஷம். நான் வாயில் வைக்கும் ஒவ்வொரு பிடி உணவிலும் என்னை மடியவைக்கும் விஷம் இருப்பதை உணர்ந்தே உண்கிறேன். இது என்னை பல சமயங்களில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கேள்வி: இது ஒருவகையில் உலகம் முழுதும் உள்ள நிலைதானே?

சரவணன்: நாம் அவ்வாறு நம்பவைக்கப் பட்டிருக்கிறோம். அவசர உணவுகளை உண்பது 'ஃபேசன்' போன்றதொரு மனநிலையை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்த ஊடகங்கள் மும்முறம் காட்டுகின்றன. எல்லாமே இன்று எல்லாருக்கும் அவசரமாகத் தேவைப்படுகிறது. பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைப்படுகின்றன, அதிக உற்பத்திக்காகத் தானியங்களில் இரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன, கொழுத்த சதையைக் கொண்டிருக்க கோழி,ஆடு, பன்றி போன்றவைக்கும் மருந்திடப்படுகிறது. மலட்டு உணவுகளை மட்டுமே உண்ணும் ஒரு தலைமுறை இன்று உருவாகி வருகிறது.

கேள்வி: விலகி செல்ல முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கும் நவீன கால அவலம் என இதை சொல்லலாம். இந்த நிலைக்கும் உங்கள் தயாரிப்புகளுக்கும் என்ன சம்பந்தம்?

பதில்: என் வாழ்வின் ஒரு சம்பவம் நடந்தது. தோல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நண்பனைப் பார்க்க பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு பல்வேறு தோல் நோயாளிகளைக் கண்டேன். நோய் என்பது எல்லோருக்கும் வருவதுதான். ஆனால், அந்நோய் கொண்ட ஒருவன் சமூகத்தோடு ஒட்டி வாழ முடியாமல் விலக்கப் படுகிறான். தொடர்ந்து சில நாட்கள் அங்குச் சென்றதில் சில தோல் நோயாளிகளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பதிலிலிருந்து , பலரும் அவர்கள் பயன்படுத்தும் முக அழகு கிரீம், கை கழுவும் சவர்க்காரம் எனத் தொடங்கி பல்வேறு இராசயணம் கலந்த தூய்மைப் படுத்தும் மருந்துகளால் ஏற்பட்ட விளைவு அது என்பதனை அறிந்தேன். ஆனால், அதோடு அதை மறந்துவிட்டேன் எனச் சொல்லலாம். ஆழ் மனதில் பதிந்த எதுவும் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு அகலாதல்லவா? அன்று முதல் நான் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனங்களையும் ஆராய ஆரம்பித்தேன். அறிவியல் பெயர் கொண்ட இரசாயணங்கள் குறித்து அறிந்து கொள்ளத் தொடங்கினேன். ஒவ்வொரு நிறுவனங்களும் தயாரிக்கும் பொருளை ஆராய்ந்த போது அதிர்ச்சியே மிஞ்சியது.

கேள்வி: அது குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்.

பதில்: உதாரணங்களுக்குச் சில பொருட்கள் குறித்து கூறுகிறேன். நாம் பேரங்காடிகளுக்குச் சென்றால் பல வகையான சவர்க்காரங்கள் அடுக்கிவைப்பட்டிருப்பதைப் பார்ப்போம். நாம் அவற்றில் விலைகளை ஒப்பிட்டு ஆராய்கிறோமே தவிர அதில் எழுதப்பட்டுள்ளதை கவனிப்பதில்லை. சில சவர்க்காரங்களில் 'இதில் மிருகக் கொழுப்பு சேர்க்கப்படவில்லை' என்ற அறிவிப்பு இருக்கும். அது போன்ற சவர்க்காரங்கள் சற்று விலை அதிகமாகவும் இருக்கும். இதன் அர்த்தம் எளிமையானது. விலை குறைவான சவர்க்காரங்களில் மலிவாகக் கிடைக்கும் மிருகங்களின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பதுதானே அதன் பொருள் . செம்பனை எண்ணைக்குப் பதிலாக மிருகங்களின் கொழுப்பு சேர்க்கப்படுவது வியாபாரிகளின் கூடுதல் லாபத்துக்காகத்தான்.

மற்றது முக வெளுப்பு கிரீம். நாம் இன்னமும் ஆங்கிலேயர்களுக்கு மனதளவில் அடிமைகளாக இருக்கிறோம் என்பதற்குப் பரபரப்பாக விற்பனையாகும் இந்த கிரீம்களே சாட்சி. வெள்ளை என்பதே உயர்ந்தது என நாம் நம்பவைப்பட்டிருக்கிறோம். இந்த மன நிலையே வியாபாரிகளுக்கு உகந்ததாகிறது. முக வெளுப்புக்காக சேர்க்கப்படும் 'நிறம் நீக்கி' (bleaching)மேல் தோலை தின்கிறது. மேல் தோல் நீக்கப்பட்டால் முகம் வெள்ளையாகத் தெரிவது ஒரு நோய். ஆனால், இந்த நோயைதான் நமது இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்.

இது தவிர்த்து நமது மரபான மனநிலையைத் திருப்தி படுத்தி அதை பணமாக்கவும் பல வியாபாரிகள் மும்முறம் காட்டுவதுண்டு. 'நுரை' வந்தால் அழுக்கு வெளியேறுகின்றது என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், 'நுரை' என்பது 'Formboster' எனும் இரசாயனத்தால் உருவாகின்றது என்பதை எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்? குளிக்கும் போது நுரை வரவேண்டும், வீடு கழுவினால் நுரைவரவேண்டும், மங்கு கழுவினால் நுரைவரவேண்டும். நுரை என்பதே அழுக்கு என நாம் நம்பும் ஒன்றே வியாபாரிகளின் லாபத்தின் ஆதாரம். உண்மையில் அது இரசாயணம் சேர்க்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. பச்சையான ஏமாற்றுத்தனம் இது.

'நாள் முழுதும் உங்களை ஃபிரஷாக வைத்திருக்கும்' என்ற விளம்பரத்தோடு உங்கள் கையில் கிடைக்கும் ஒரு பொருளில் என்ன இரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது என உங்களுக்குத் தெரியுமா? நமது வேர்வையைத் தடுத்து, தோலின் துவாரங்களை அடைத்து, அழுக்கு வெளியேற முடியாமல் வாசனையை மட்டுமே பரப்பும் நோயாளிகளாக அலைவதைதான் இன்றைய முதலாளி வர்க்கம் விரும்புகிறது. ஒரு சவர்க்காரத்தின் நோக்கம் உடல் அழுக்கை நீக்குவதுதானே... ஆனால் போட்டி மிகுந்த இந்த வியாபார உலகில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேவைகளைத் தீர்ப்பதாகக் கூறி எதை எதையோ தருவிக்கின்றனர். நாமும் கேள்விகள் இல்லாமல் வாங்கி பூசிக்கொள்கிறோம்.

கேள்வ: சரி, இந்த நிலையில் உங்கள் பொருட்களை எவ்வாறு வெளியிடுகிறீர்கள்?

சரவணன்: முதலில் என் நோக்கம் பொருட்களை வெளியிடுவதில் இல்லை. ஏற்கனவே சந்தையில் உள்ள பொருட்களின் விலையையும் அதன் தரத்தையும் ஆராய்வதுதான் என் நோக்கம். அந்த வகையில் ஆட்டுப்பால் சவர்க்காரம், பப்பாளி சவர்க்காரம் என விற்பனைக்கு இருக்கும் சவர்க்காரங்கள் போல நான் முதலில் செய்துப்பார்க்கத் தொடங்கினேன். இணையம் மூலமும் புத்தகம் மூலமும் கற்று 50 முறைக்கு மேல் ஆய்வு செய்து சவர்க்காரம் செய்யும் உக்தியை அறிந்தேன். மிகத்தரமான ஓர் ஆட்டுப்பால் சவர்க்காரம் செய்துப்பார்க்க முடிவெடுத்தேன். 1 லிட்டர் எண்ணை, ஆட்டுப்பால் 300 மில்லி லிட்டர் (தண்ணீர் சேர்க்காதது), sodium hydroxide... இவைதான் என் கலவைகள். இவை இல்லாமல் சவர்க்காரம் செய்ய முடியாது. சுமார் 7.00 வெள்ளிக்கு 100 கிராம் எடைக்கொண்ட 15 சவர்க்காரங்களைச் செய்ய முடிந்தது. அப்படியானால் ஒன்றின் விலை ஏறக்குறைய 0.50 சென். இது மிகக் குறைந்த எண்ணிக்கையில் நான் தயாரித்த சவர்க்காரம். பெரிய நிறுவனங்கள் பெரிய அளவில் இதையே உற்பத்தி செய்கின்றன. அப்படியானால் அதன் தயாரிப்பு செலவு இன்னும் குறையும் அல்லவா. ஆனால் விலை... கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்; நான் அதிர்ச்சி அடைந்தது போன்று.

அந்த நிமிடம் என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. முழுக்க முழுக்க தரமான பொருட்களை குறைந்த விலையில் நம்மால் தயாரிக்க முடிகின்ற போது ஏன் தேவையற்ற இராசயனங்களைக் கலந்த பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். எங்குப் பிரச்னை? முதலில் பயனீட்டாளர்கள் விழிப்படைய வேண்டும் என விரும்பினேன். இது குறித்து பலரிடமும் பேசினேன். சரி இரசாயனங்களை சுமந்துள்ள பொருட்களுக்கு மத்தியில் வாடிக்கையாளர்கள் எதைதான் தேர்வு செய்வது என்ற கேள்வி முன் வந்து நின்றது. அது என்னை மேலும் சில பொருட்களைத் தயாரிக்கத் தூண்டியது.

கேள்வி: எவ்வகையான பொருட்கள் நோக்கி உங்கள் கவனம் திரும்பியது?

சரவணன்: முதலில் கை கழுவும் திரவம். நாம் அதிகமாகக் கை கழுவுவது சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்டப் பின். கையைச் சுத்தப்படுத்துவதுதான் நமது நோக்கம். ஆனால், அந்தக் கை கழுவும் திரவத்தில் உண்ணக்கூடாத வர்ணமும் உண்ணக்கூடாத வாசனையும் (non for food) சேர்க்கப்பட்டுள்ளது. இவை கேன்சர் நோயினை உருவாக்கக் கூடியவை. ஆனால், இந்தப் பாதிப்பு உடனே நிகழாததால் மருத்துவர்களால் 'இதனால்தான் ஏற்பட்டது' என நிரூபிக்க முடியாமல் போகிறது. இது உற்பத்தியாளர்களுக்குத் தெரிந்தும் மலிவாக அந்த வர்ணம் கிடைக்கும் காரணத்தால் தயக்கமின்றி உபயோகிக்கின்றனர். நான் தயாரிக்கும் திரவத்தில் வர்ணம் மற்றும் வாசனையை உண்ணக்கூடிய தன்மையைக் கொண்டது. பின் விளைவுகளை ஏற்படுத்தாது என உறுதியளிக்க முடியும். அதே போலத்தான் பாத்திரங்கள் கழுவும் திரவமும். ஆனால், தரையை கழுவும் திரவத்துக்கு நான் 'நிறம் நீக்கி' (bleaching) பயன்படுத்துகிறேன். கிருமி நாசினிகளில் அதிக தரமான மற்றும் விலை கொண்ட 'phenochem' வகையைச் சேர்க்கிறேன். இயற்கையான முறையில் உருவாக்கப்படும் இந்த ரக கிருமி நாசினியால் தோலுக்கு பாதிப்பு ஏற்படாது.

கேள்வி: ஒரு எளிய வாடிக்கையாளன் தான் பயன்படுத்துவது தரமான பொருள்தானா என எவ்வாறு கணிப்பது?

சரவணன்: முதலில் நீங்கள் வாங்கும் பொருளில் என்னென்ன கலவைகள் உள்ளன என்று படித்து புரிந்துகொள்ளுங்கள். அதை கொண்டே அரசு பொருள் தயாரிக்க அனுமதி வழங்குகிறது. நமது பயனீட்டாளர்கள் முதலில் ஒரு பொருளைத் தயாரிக்க அடிப்படையான கலவைகள் என்னென்ன தேவை என அறிந்துகொள்ள வேண்டும். அந்தக் கலவையைத் தவிர்த்து வேறு பொருள்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அவ்வாறு சேர்க்கப்பட்ட அக்கலவையின் தேவை என்ன என்பதை ஆராய வேண்டும். வாசனைக்காகவும் வர்ணத்துக்காகவும் சேர்க்கப்படும் கலவைகள் எத்தகைய தன்மை கொண்டவை என அறிந்த பின்பே அதை வாங்க வேண்டும். கற்றத்தலைமுறையினரிடம் நான் பேசும் போதே அத்தகைய விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாததை எண்ணி வருந்தியுள்ளேன். உலகத்தில் உள்ள அனைத்து அரசியலையும் பேசுபவர்கள் தாங்கள் உடலை ஒட்டும் திரவத்தின் தன்மை குறித்து அக்கறைப் படுவதே இல்லை. சவர்க்காரத்தின் தரத்தைச் சோதிக்க எளிய முறையில் ஒன்றைச் செய்துப்பார்க்கலாம். கத்தியைக் கொண்டு அதை வெட்டும்போது உடைந்தால் அது தரமற்ற சவர்க்காரம். தக்காளிப்பழத்தை வெட்டுவதுபோது இலகுவாக வெட்டினால் தரமானது. அதில் இரசாயனங்களும் குறைவு என்று பொருள். விழிப்புணர்வு என்பது ஏட்டில் மட்டும் இருந்தால் போதுமா? தினசரி வாழ்வில் நாம் அக்கறை பட வேண்டிய விடயங்கள் எவ்வளவோ உண்டு.

கேள்வி: விழிப்புணர் என எதை நீங்கள் சொல்கிறீர்கள்?

சரவணன்: சில ஆண்டுகளுக்கு முன் கேமரன் மலையில் நம் மண்ணுக்கு ஒவ்வாத சில கீரைகள் பயிரிடப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தன. அத்தகைய பயிற்கள் அதிக விலை எனும் காரணத்தினாலேயே அவற்றை பயிரிட்டுள்ளனர். அதற்குப் பின் அம்மண்ணில் வேறு பயிற்களைப் பயிரிட சாத்தியம் இல்லை. மண் மலடானதே மிச்சம். இந்த இயற்கையை நாம் எப்படி மீட்கப் போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதைதான் விட்டுச்செல்லப் போகிறோம்? நாகரீகம் என்றும் பணம்தான் எல்லாம் என்றும் நான் செய்யும் செயல்களை; நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களையும் அவதானிப்பதையே விழிப்புணர்வு என்கிறேன். நாம் அனைவருமே பயனீட்டாளர்கள்தான். ஆனால் கண்மூடித்தனமான அணுகுமுறைகளால் நாம் நம்மையும் அழித்துக்கொண்டு மற்றவர்களையும் அழிப்பது நியாயம் இல்லை. தற்கொலைகளும் கொலைகளும் குற்றமாக்கப்பட்ட உலகில் ஒவ்வொரு நாளும் கண்களின் மறைவில் கொண்டாட்டமாகவே அவை நடந்தேருகின்றன. மேலை நாடுகளின் ஓரளவு அது குறித்த பிரக்ஞை உருவாகி வருகிறது. நமது நாட்டு பள்ளிக்கூடங்களில் வழங்கும் இலவச உணவுகளில் 'பர்க்கர்' இறைச்சியைப் போட அரசே அனுமது தரும்போது எப்படி உருவாகும் பயனீட்டாளர் விழிப்புணர்வு.

கேள்வி: நீங்கள் தயாரிக்கும் பொருள்களை எவ்வாறு விற்பனைக்கு விடுகிறீர்கள்?

சரவணன்: முதலில் என் மனதை ஒரு சராசரி வியாபாரியின் மன நிலையிலிருந்து விலக்கியே வைத்துள்ளேன். லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வியாபாரியிடம் தரத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அவர்களுக்கு இயற்கையின் பால் எவ்வகையான அக்கறையும் இருக்காது. சக உயிர்களின் சேதம் குறித்த கலக்கம் இருக்காது. உண்மையில் இந்த உலகின் அழகும் வனப்பும் வியாபாரிகளின் மனநிலையாலேயே அழிகிறது என நான் சொல்வேன். அதே போல நான் ஒரு சேவையாளனும் அல்ல. நான் இலவசமாக எதையும் வழங்கவில்லை. நான் உண்மையைச் சொல்ல விளைகிறேன். சீனர்கள் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்டு வெளிவராமல் இருக்கும் உண்மைகளை மக்கள் முன் வைக்க எத்தனிக்கிறேன். இதன் மதிப்பு இவ்வளவுதான் எனச் சொல்கிறேன். அதை என் தயாரிப்புகள் மூலம் நிரூபித்துக்காட்டுகிறேன். விளம்பரத்தால் எதையும் விற்கலாம் என கூவிக்கொண்டிருக்கும் வியாபார உலகில் 'விற்பது சக மனிதனுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கட்டும்' என்கிறேன்.

கேள்வி: சரி உங்கள் பொருட்களைப் பெற என்ன செய்யலாம்?

சரவணன்: இது தொடர்பாக நான் பல மொத்த விநியோகிப்பாளர்களையும் சந்தித்து வருகிறேன். பலரும் என் பொருட்களின் விலை அதிகம் கொஞ்சம் தரத்தை குறைத்து விலையை குறைக்கலாம் என்கின்றனர். வணிகத்தை விரிவாக்க ஆலோசனை தருகின்றனர். மகிழ்ச்சிதான். ஆனால், இங்கு அதைவிட நான் கொடுக்கும் தரத்திலேயே பொருட்களை விநியோகிக்க யாரேனும் முன் வந்தால் மகிழ்வேன். வணிகத்துக்காக விலையைக் குறைத்து; விலைக்காகத் தரத்தைக் குறைக்க சம்மதம் இல்லை.

இன்னும் நான் விரிவாக என் பொருட்களை கொண்டு செல்லவில்லை. கெடா, பினாங்கில் மட்டுமே சில இடங்களில் விற்பனையாகின்றன. எனது நோக்கம் பொருளை மட்டுமே கொண்டுச் செல்வதென்றால் துரிதம் காட்டியிருப்பேன். ஆனால், பயனீட்டாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் தலையாய நோக்கம். யாரும் நான் கலக்கும் பொருள்களை சோதித்துப்பார்க்கலாம். இந்த விழிப்புணர்வுடன்தான் வாடிக்கையாளர்கள் என் பொருட்களை வாங்க வேண்டும் என விரும்புகிறேன். ஆர்வம் கொண்ட மொத்த விநியோகிப்பாளர்கள் இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசி: 0162945890

Lot 6, Belakang Balai Polis,
Batu 6 1/2, 09600 Lunas,
Kedah, Malaysia.

நேர்காணல்: ம.நவீன்


மலேசியாவில் வணிகத்துறையில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வல்லினம் அவர்களின் நேர்காணல் மற்றும் பொருட்கள் தொடர்பான விபரங்களை தொடர்ந்து இலவசமாக பதிவிடும். இளைஞர்களை சுயதொழில் நோக்கி நகர்த்தும் முயற்சியாக வல்லினம் இதை மேற்கொள்கிறது. பொருள் / வணிகம் தொடர்பான உடன்பாடு இருந்தால் மட்டுமே வல்லினம் இந்த சலுகையை வழங்கும். எவ்வகையான கட்டணமும் இதற்காக வாங்கப்படாது. - ஆசிரியர் குழு

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768