|
|
இரு குகைகள்
கடந்த
பயணங்கள் கடந்து போய் சில மாதங்கள் ஆன பிறகு மீண்டும் எனது தேடல்
ஆரம்பித்தது. ஆனால் மலைகளில் அல்ல. அதற்கு மாறாக குகைகளுக்குள். சரவாக்
குகைகளின் இயற்கை அழகுக்கு மிகவும் பேர் போனது. சரவாக் முழுவதும்
தேடிப்பார்த்தாலும் எண்ணிலடங்கா குகைகளின் பெயர்களை அடுக்கி கொண்டே
போகலாம். கூச்சிங்கில் எங்கே தேடி பார்த்தாலும் உங்களால் இயற்கையான குகையை
கண்டுப்பிடிக்க முடியாது. ஆனால் கூச்சிங்கை தாண்டி லுண்டு, பாவு என சற்று
தூரமாக பயணித்தால் குகைகளின் அழகை கண்களால் அள்ளி பருகலாம். சரவாக்கில்
மிகப் பெரிய இயற்கை பொக்கிஷம் என சொல்லப்படுவது மூலு குகையும் நியா
குகையும்தான். அவை மனித வரலாற்றின் மறந்து போன தடயங்களை தன்னுள் அடக்கி
வைத்துள்ளன. மூலுவுக்கும் நியாவுக்கும் என்னால் நேரம் பற்றாகுறை காரணமாக
இன்னும் செல்ல முடியவில்லை.
நான்
இங்கே சொல்லப்போவது வேறு இரு குகைகளை பற்றி. குறிப்பாக கூச்சிங் வந்தவர்கள்
இந்த இரு குகைகளை பற்றி கேள்வி பட்டிருப்பார்கள். அவை காற்று குகை மற்றும்
தேவதை குகை. கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா. காற்று குகை மற்றும்
தேவதை குகை என்பது மொழிப்பெயர்ப்புக்காக நானே வைத்த பெயர். இங்கே மலாய்
மொழியிலும் ஆங்கிலத்திலும் அவற்றுக்கு பெயருண்டு. மலாயில் காற்று குகையை
குவா ஆங்கின் (Gua Angin) என்றும் தேவதை குகையை குவா பாரி-பாரி (Gua
Pari-pari) என்றும் அழைப்பர். அதை அப்படியே ஆங்கிலத்தில் வின் கேவ் (Wind
Cave) என்றும் ஃபேரி கேவ் (Fairy Cave) என்பதாக மொழி பெயர்க்கலாம். ஆனாலும்
இங்கே வெளிநாட்டவர்கள் அதிகம் என்பதால் இக்குகைகளுக்கு ஆங்கில பெயர்களே
அதிகம் பயன்பாட்டில் உள்ளது.
எப்போதும் போல நான் எனது நண்பர்களுடன் திட்டமிடாமல் தான் இந்த பயணத்தை
மேற்கொண்டேன். திட்டமில்லை என சொல்ல முடியாது. ஆனால் நாளைக்கு செல்ல
போகிறோம் என்றால் இன்றைய இரவு தான் முடிவு செய்தோம். இது எனக்கு பழக்கமான
பாதை என்பதால் அவ்வளவு கஷ்டமானதாக தெரியவில்லை. கும்பலாக போனால் எவ்வளவு
சுவாரசியமானதாக இருக்குமோ அவ்வளவு குஷியாகவெ இருந்தது, இம்முறை
இப்பயணத்தின் அங்கத்தினர்கள் ஐவர் மட்டுமே. 2 ஆண்கள் 3 பெண்கள். சென்ற முறை
பயணத்தில் இருந்த அனைவருமே இதில் இருந்தனர்; ஒருவரை தவிர. இருப்பினும்
பயணம் நன்றாகவே அமைந்தது.
ஏறக்குறைய
ஒரு மணி நேரத்துக்கு பின் முதலில் நாங்கள் வந்தடைந்தது காற்று குகைக்கு
தான். எல்லாருக்கும் எழுந்த கேள்வி தான் எனக்கும் எழுந்தது. ஏன் இந்த
குகைக்கு காற்று குகை என பெயர் வந்தது? முதலில் எங்களுக்குள்ளே கேள்வி
கேட்டு பார்த்தோம். பதில் கூட பலவாறாக வந்தது. ஆனால் எது நிஜமான பதில்
என்று தெரியவில்லை. என்னதான் பதிலாக இருக்கும் என தெரிந்து கொள்ள காற்று
குகைக்கு செல்லும் வழி வளாகத்தில் அமர்ந்திருந்த பாதுகாவலரிடம் பாதுகாப்பு
கருதி எங்களின் வருகையை பதிவு செய்யும் போது இந்தக் கேள்வியை கேட்டோம்.
எதிர்பார்த்தது போலவே காற்றுக்கும் குகைக்கும் சம்பந்தமுள்ள பதில் தான்
எங்களுக்கு கிடைத்தது.
40 வருடங்களுக்கு முன் பூர்வீக குடியினர் இக்குகையை கண்டடைந்த போது
குகைக்குள் குளிர் காற்றின் அழுத்தம் அதிகமாக இருந்ததாம். அதே நேரத்தில்
காற்று குகைக்குள் வீசும் போது காற்றலைகள் குகை சுவற்றில் பட்டு
பிரதிபலிக்கும் போது ஒரு வித ஓசை எழுமாம். இந்த ஓசை காற்றின் ஓசை தான்
என்று ஆராய்ந்த பின்னரே இதற்கு காற்று குகை என பெயரிட்டனராம். அது
மட்டுமல்ல, அப்போதைய காலக்கட்டத்தில் கடல் மட்டம் உயரமாக இருந்ததால்
குகைக்குள் உட்புகும் காற்றின் அளவு அதிகமாக இருந்தது. எனவே ஓசையும்
அதிகமாக இருந்தது. அதனோடு சேர்ந்து குளிர்சாதன பெட்டிக்கு நிகரான பாகை
இருந்தது. ஆனால் இப்போதைய சிதோஷன மாற்றத்தின் காரணமாக குகைக்குள் ஓசையும்
எழுவது குறைந்து விட்டது; குளிரும் குறைந்து விட்டது. இருப்பினும் காற்றின்
ஓசையை நிதானித்து கேட்டால் அதன் பிரசன்னத்தை செவியுணரலாம். இதை நாங்களும்
உணர்ந்தோம்.
குகைக்குள்
செல்ல கண்டிப்பாக கைவிளக்கு தேவை. கைவிளக்கு இல்லையென்றால் குகைக்குள்
நடப்பது கடினமானதாகிவிடும். இது எங்களுக்கு தெரியாததால் கைவிளக்கை
கொண்டுவரவில்லை. ஆனாலும் குகை கண்காணிப்பாளர்கள் அதற்கு மார்க்கம்
வைத்திருந்தனர். அங்கே ஒரு கைவிளக்கை 3 ரிங்கிட்க்கு இரவல் வாங்கலாம்.
நாங்கள் ஐவர் என்பதால் 15 ரிங்கிட் கொடுத்து 5 கைவிளக்கை இரவல் வாங்கினோம்.
இரவல் வாங்கிய அந்த சின்ன நேர இடைவெளியில் குகைக்குள் வேறு என்ன என்ன
பார்க்கலாம் என்ன வினவிய போது சில வித்தியாசமான தகவல்கள் கிடைத்தன. பல
வகையான அரிய வகை உயிரினங்கள், பாம்பு வகைகள், வௌவால்கள் என இன்னும் நிறைய
பார்க்கலாம் என தெரிய வந்தது.
அன்றைய பொழுது மழை வந்த படியால் பாதை கொஞ்சம் வழுக்கும் என்பதால் நடக்கும்
போது பார்த்து கவனமாக நடக்க சின்ன அறிவுரை வழங்கப்பட்டது. மற்றப்படி வேறு
எந்த தகவலும் எங்களிடம் இல்லை. உள்ளே என்ன தான் இருக்கிறது என்னும் ஆர்வம்
அளவுக்கதிகமாக இருந்தது. அதே நேரத்தில் வேறு ஒரு உலகத்துக்குள் காலடி
எடுத்து வைக்கும் ஒர் உணர்வும் கூடவே இருந்தது. கைவிளக்கின் உதவியோடு
ஐவரும் கலவையான உணர்வோடு காலடி எடுத்து வைத்தோம்.
|
|