|
|
வானொலியும் சினிமாவும்
அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் பகுதிக்குப் போயிருந்தேன். வழக்கமாகத் தமிழ் இதழ்கள் வாங்கும் கடையில் சில இதழ்களை வாங்கிக்கொண்டிருந்தபோது எனக்குத் தெரிந்த
வானொலி அறிவிப்பாளர் வேகமாக ஓடி வந்தார். கடைக்காரரும் அவரைப் பார்த்தவுடன்
அவருக்காக எடுத்து வைத்திருந்த ஒரு சினிமா இதழை எடுத்து நீட்டினார். ஆர்டர்
கொடுத்து வாரந்தோறும் வாங்கிச்செல்லும் இதழ் என்று புரிந்துகொண்டேன். ஒரு
சினிமா இதழைப் படிப்பதோடு வானொலி அறிவிப்பாளர் ஒருவரின் வாசிப்புத் தேவை
தீர்ந்துவிடுமா? இலக்கியம், சமூகம், பொருளாதாரம் இப்படி இன்னபிற
துறைதொடர்பான இதழ்களை, படைப்புகளை இவர் போன்றவர்கள் வாசிப்பார்களா? வானொலி
நேயர்களிடம் சினிமா பற்றி மட்டும்தான் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்களா?
இப்படிப் பல கேள்விகள் எனக்குள் முளைவிடத் தொடங்கின.
என் பதினேழு வயதுவரை வீட்டில் தொலைக்காட்சி இல்லாத சூழலில் வளர்ந்தேன்.
நாளிதழ் கிடைப்பதும் தோட்டச் சூழலில் சிரமம்தான். மயில்வாகனம் கடையில்தான்
நாளிதழ் கிடைக்கும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நாளிதழின் பகுதியைப்
பிரித்து எடுத்துக்கொண்டு அரசியல் பேசி நேரத்தைப் போக்குவார்கள். தேநீரும்
சாம்பாரும் பட்டு அழுக்கான, கசங்கிய நாளிதழுக்காக காத்திருந்த எத்தனையோ
நாள்கள் இன்னும் நினைவில் நிழலாடுகின்றன. என் குடும்பத்தின்
பொழுதுபோக்குக்கும் தகவலுக்கும் வானொலிதான் துணையாக இருந்தது. ரப்பர்
மரக்காட்டுக்கு நடுவே லயங்களில் வாழ்ந்த எங்களுக்கு நாட்டு நடப்பைக்
கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது வானொலிதான். அந்தச் சின்னஞ் சிறு
பெட்டியிலிருந்து ஒலிபரப்பாகும் சினிமா - உள்ளூர் பாடல்கள், மாணவர்
நிகழ்ச்சி, இளைஞர் நிகழ்ச்சி, சமூக, மர்ம, இலக்கிய நாடகங்கள் போன்றவற்றைக்
கூர்ந்து கேட்டு தமிழின் ருசியை நான் ஆழ்ந்து உணர்ந்து அனுபவித்த காலம்
அது.
இன்றைய வாழ்க்கைச் சூழலில், தொழில் நுட்ப வளர்ச்சியில் உருவான பல தகவல்
ஊடகக் கருவிகளுக்கு மத்தியில் வானொலி தன் செல்வாக்கை இழந்து வருவதை உணர
முடிகிறது. தகவலுக்கும் பொழுதுபோக்குக்கும் முக்கியக் கருவியாக இருந்த
நிலைமை மாறி, வானொலி ‘பாட்டு கேட்கும் வெறும் பெட்டியாக’ மாறிவிடும் அவலம்
நேர்ந்துள்ளது.“பிரிக்கமுடியாதது - வானொலியும் சினிமாவும்” என்பது ஊடக
மொழியாக நிலைபெற்றுவிட்டது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதெல்லாம்
பழங்கதை. இன்று எங்கும் சினிமா, எதிலும் சினிமா என்பதுதான் நிகழ்மொழி.
‘எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு’ என்றார் திருவள்ளுவர்.
உலகப் போக்கு எப்படி இருக்கின்றதோ, அந்த உலகத்தோடு பொருந்திய வகையில்
தானும் அதைக் கடைப்பிடித்து நடப்பதே அறிவாகும் என்று அவர் கூறியதால்
சினிமாவையே முதன்மையாய் நினைத்துக் கொண்டாடும் பணியை நமது தமிழ் வானொலி
நிலையங்களும் அதன் அறிவிப்பாளர்களும் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இன்று
வானொலியில் பெரும்பகுதி நிகழ்ச்சிகளில் சினிமா சார்ந்தவையே அதிகம்
இடம்பெறுகின்றன.
அரசாங்கத்தின் குரலாக, ஒரே தமிழ் வானொலியாக மின்னல் எஃபெம் இருந்தபோது
நிலைமை வேறு. சினிமாவை ஓரளவுக்குத் தந்தார்கள். நல்ல தமிழையும் அருமையான
நிகழ்ச்சிகளையும் சிரமப்பட்டுத் தயாரித்தார்கள். அடிக்கடி மக்களை நாடிச்
சென்று சந்திப்புகள் நடத்திப் பதிவுசெய்து ஒலியேற்றினார்கள். தொலைபேசி,
கைப்பேசி இவற்றின் பயன்பாடு மக்களிடையே பரவலானபோது வானொலி நிலயத்திலேயே
முடங்கிக்கொண்டு, அழைப்பவரோடு பேசியே நிகழ்ச்சிகளைப்
படைக்கத்தொடங்கினார்கள். இன்றும் அந்த நிலை தொடருகிறது. தனியார் வானொலி
ஒலியலையான டி.எச்.ஆரின் வருகைக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகியது.
டி.எச்.ஆர் வானொலி ஒலியலை, சினிமா என்கிற மாவில் இளையோருக்காகப்பிசைந்து
செய்யப்பட்ட இனிப்புப் பலகாரம் போன்றது. ‘சினிமா பாட்டுகள் தவிர யாமொன்றும்
அறியோம் பராபரமே’ என்கிற பாணியில் நாள் முழுதும் பாடல்களை ஒலிபரப்பி
இளையோரைத் தன் பக்கம் ஈர்ப்பதில் முனைப்புக் காட்டி வெற்றிப் பெற்றுள்ளது.
தனியார் ஒலியலை என்பதால் அரசின் கட்டுப்பாடுகள், சமூகக் கடப்பாடுகள்
பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் செயல்படுகிறது. பாடல்களின்
இடையிடையே ஒலியேறும் சமூக நல அறிவிப்புகள் மட்டும் அறிவிப்பாளர்களின்
படைப்பாக்கத் திறமையை வெளிப்படுத்துகின்றன. தமிழ்மொழியை விருப்பம்போல்
எப்படியும் பேசலாம் என்ற நிலையை அறிவிப்பாளர்கள் ஏற்படுத்தினார்கள்.
‘எஞ்ஜோ¨லா’ என்ற எடுத்துக்காட்டுச் சொல் போதும். இத்தகைய மொழிப் பயன்பாடு
தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் தொடக்கத்தில் சீற்றத்தை ஏற்படுத்தியது.
பலரும் ஏடுகளில் திட்டித் தீர்த்தார்கள்.
இத்தகைய போக்குகள் கொண்ட டி.எச்.ஆர். ஒலியலையோடு போட்டி போடும் சூழலுக்குத்
தள்ளப்பட்டபோது மின்னல் எ•பெம் ஒலியலை சில சமரசங்கள் செய்யவேண்டியதாயிற்று.
அனுபவமுள்ள, முதிர்ந்த அறிவிப்பாளர்கள் ஒதுங்கிக்கொள்ள அல்லது ஒதுக்கப்பட,
இளம் அறிவிப்பாளர்கள் அறிமுகமானார்கள். இளையோரை ஈர்க்கும் துடிப்பு
அவர்களின் பேச்சில் வெளிப்பட்டது. ஆயினும், பட்டறிவும் பரவலான வாசிப்பு
அனுபவமும் கொண்ட முதிய படைப்பாளிகளின் குரலில் வெளிப்பட்ட ஆளுமை இளையோரில்
சிலரிடம் இல்லாமல் போனது ஏமாற்றத்தைத் தந்தது. பெரும்பாலும் சினிமா சார்ந்த
தகவல்களை இவர்கள் சிரத்தையோடு தந்தார்கள். நடிகர்கள் குரலில் பேசிகூட
அறிவிப்புச் செய்ததைக் கேட்டிருக்கிறேன். இலாபத்தை நோக்கமாகக் கொண்ட
தனியார் வானொலியோடு அரசாங்க வானொலி போட்டியிட வேண்டிய அவசியமென்ன?
ஆண்டுதோறும் வெளியிடப்படும் அதிக நேயரைக் கொண்ட வானொலி நிலையம் என்ற ஆய்வு
குறித்து ஏன் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டும்?
சினிமா நடிகர் அல்லது நடிகைக்குப் பிறந்தநாள் என்றால் தமிழ்நாட்டில்
சொல்லத் தேவையில்லை. ஏடுகளில் வண்ண விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கும்.
ஆங்காங்கே பதாகைகள் தொங்கும். நடிகர்களைக் கொண்டாடும் பண்பாடு இங்கேயும்
பரவி வருகிறது. சிரத்தையோடு வானொலி அறிவிப்பாளர்கள் நடிகை / நடிகரின்
பிறந்தநாள் அறிவிப்பைச் செய்து தங்கள் கடமையை மறக்காமல் செய்துவருகின்றனர்.
மேலும், பாடல்களுக்கு இடையே நடிகை / நடிகர் குறித்த தகவல்களைத் திரட்டித்
தருகின்றனர். நடிகர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டால் ஆகக் கடைசி நிலவரத்தை அவ்வப்போது நேயர்களுக்குத்
தருகிறார்கள். நேயர்கள் எவற்றை விரும்புகிறார்களோ அதைத் தருவதைத் தம்
கடமையாக நினைக்கின்றனர். ஆனால், தமிழுக்காக உழைத்த தமிழறிஞர்கள், தலைவர்கள்
பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை. தங்களுக்கு ஈடுபாடு இல்லாததால்
அதைப்பற்றியெல்லாம் பேசுவதைத் தவிர்த்து விடுகின்றனர்.
ஒரு புதிய சினிமா உள்ளூர் திரையரங்குக்கு வந்துவிட்டால் போதும். அது
குறித்து தங்களால் ஆன மட்டும் தகவல்களைத் தந்து, “படம்
பார்த்துவிட்டீர்களா? என்ன அருமையான படம். பார்த்தவர்கள் எல்லாரும்
பாராட்டுகிறார்கள்” போன்ற பாணியில் பேசி, நேயர்களிடம் குறிப்பிட்ட அந்தப்
படத்தைப் பார்க்காவிட்டால் நட்டம் என்கிற ஏக்கத்தை ஏற்படுத்துவதும் உண்டு.
“உடனே அழையுங்கள்! கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் படம் பார்க்க
இரண்டு டிக்கெட்” என்று கூவிக் கூவி டிக்கெட்டுகளைத் தருகிறார்கள். இது
போன்ற தருணங்களில் இவர்கள் அறிவிப்பார்களா? சினிமா நிறுவனம் நடத்துபவர்களா?
அல்லது சினிமா நிறுவனங்களுக்கு முகவர்களா (ஏஜெண்டுகளா?) என்ற சந்தேகம்
எனக்கு எழுவதுண்டு.
வானொலி ஒலியலைகளில் சினிமாவின் தாக்கம் எத்தகையது என்பதைக் கூர்ந்து
கேட்டாலே புரிந்துவிடும். விளம்பரங்களில் கூட நடிகர்கள் குரலில்
பேசினால்தான் மக்களை விரைவில் சென்றடையும் என்ற மனப்போக்கு வந்துவிட்டது.
“அதிகமா முறுக்கு சுடுற பொம்பளையும் அதிகமா முறுக்கு சாப்பிடுற ஆம்பிளையும்
இதை மறந்ததே இல்லை” ரஜினிகாந்த் குரலில் இடம்பெறும் இந்த விளம்பரம் ஓர்
எடுத்துக்காட்டு. மக்களுக்குத் தன்முனைப்பை ஏற்படுத்தும் உரைகள்,
கருத்துகள் அறவே இல்லையா என நீங்கள் கேட்கலாம். ஏன் இல்லை? நிச்சயமாக
உண்டு. ஆனால், அதுகூட சினிமாவில் விஜய், சூரியா, விக்ரம் போன்ற நடிகர்கள்
பேசிய வசனங்களைப் பதிவுசெய்து இடையிடையே ஒலிபரப்புகிறார்கள். இக்காலத்தில்
எத்தனையோ பேச்சாளர்கள், அறிஞர்கள் இனத்தின் எழுச்சிக்காக, உயர்வுக்காக தம்
கருத்துகளை அரிய செல்வங்களாக வழங்கியுள்ளார்கள். அதையெல்லாம்
தேடியெடுப்பதைவிட அவசரத்துக்கு நடிகர்களை நாடிவிடுகிறார்கள்.
மின்னல் எ•பெம் ஒலியலையில் பயனுள்ள எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒலியேறுகின்றன.
மறுப்பதற்கில்லை. இளைஞர், மகளிர், மாணவர்கள் ஆகியோரை மையமிட்ட நிகழ்ச்சிகள்
குறிப்பிடத்தக்கவை. ஆனால், வாரத்துக்கு ஒரு முறை மட்டும் இலக்கியம்
பேசுவதும், மாணவர்களும் மற்றவர்களும் உறங்கப்போகும் நேரத்தில் தேர்வு
குறித்தும் வாழ்வில் வெற்றிபெற்றவர்கள் குறித்தும் பேசுவதுசரிதானா என
எண்ணிப்பார்க்க வேண்டும்.
டி.எச்.ஆர். வானொலி ஒலியலையில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க
முடியாது.யார் என்ன சொன்னாலும் “எங்கள் வழி தனி வழி” என்று தனக்கான
பாதையில் எப்போதும் போலவே நேயர்களின் அதிலும் குறிப்பாக இளையோரின் ஏகோபித்த
ஆதரவோடு பயணத்தைத் தொடரும். மின்னல் எ•பெம் சமுதாயக் கடப்பாடு உணர்ந்து
சினிமா என்னும் மாயவலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளவேண்டும். சினிமாச்
சங்கதிகளை விரைந்து தரும் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டு நேயர்களுக்குப்
பயன் தரும் நாட்டு நடப்புகளை, உலக நடப்புகளை முயன்று தேடித் தரவேண்டும்.
‘நூல்களை வாசிக்காதவன் தொடர்ந்து எழுத்தாளனாக இயங்க முடியாது. அதுபோல்
வாசிக்காதவனும் சிறந்த அறிவிப்பாளானாக முடியாது’ என்ற வாசகத்தை
அறிவிப்பாளர் ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்திச் செயல்படவேண்டும்.
வாசிப்பதில் எத்தனையோ நன்மையுண்டு. முக்கியமாக பேசுமொழியைச் செம்மை செய்து
கொள்ளலாம். சில அறிவிப்பாளர்கள் கலகலப்பாகப் பேசும் முனைப்பில் பேச்சு
மொழிக்கு இறங்கிவிடும் நிலையைக் கேட்டிருக்கிறேன். ‘வந்து’, ‘வந்திட்டு’
போன்ற அசைச்சொற்கள் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை.
வாசித்தால்தான் பாடல்களுக்கு இடையிடையே சினிமா மட்டும் பேசும்
விபத்திலிருந்து மீண்டு கொஞ்சம் இலக்கியம் பேசலாம்; பொருளாதாரம் பேசலாம்;
சமூகம் பேசலாம்; வாழ்க்கைத் தத்துவத்தைச் சாறு பிழியலாம்; ஆன்மிக நதிகளை
அடையாளம் காட்டலாம்; தமிழின் சுவையைப் பந்தி வைக்கலாம்; அரசியலிலும்
கொஞ்சம் கால் நனைக்கலாம். மிக முக்கியமாக, எந்தக் காலக்கட்டத்தில் நம்
சமூகம் பயணிக்கிறது என்ற தன்னுணர்வோடு அதன் எழுச்சிக்கும் மீட்சிக்கும்
கருத்துலகத்தில் வழிகாட்டும் கூடுதல் பொறுப்புணர்வோடு செயல்படலாம்.
சினிமாவையும் நடிகர்களையும் கொண்டாடும் மிக மோசமான நோயிலிருந்து சமூகத்தை
மீட்டெடுக்கத் தகவல் ஊடகமான வானொலி முன்மாதிரியாகச் செயல்பட முடியும்.
அதற்கு, மரபான நிகழ்ச்சிகளின் பிடியிலிருந்து முதலில் விடுபட வேண்டும்.
விடுபடுவார்களா?
|
|