லீனா மணிமேகலையின் லெஸ்பியன் கவிதைகள்
அதற்குப் பிறகு
1.
இந்த செம்போந்து பறவை ஏன் என் கூண்டில் வந்து முட்டை வைத்தது
பால் சுரப்பியான எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
அக்குளிலும், தொப்புளிலும் மாற்றி மாற்றி வைத்து அடை காத்தேன்.
குஞ்சு பொரிந்து வௌவால் பிறந்தது
அதற்குப் பிறகு
தலைகீழாக நடக்கத் தொடங்கினேன்
இரவில் மட்டுமே கண்கள் ஒளிர்ந்தன
தின்று துப்பிய அத்திப்பழ கொட்டைகளையும், நாவற்பழ விதைகளையும்
என் காதலர்கள் பொறுக்கத் தொடங்கினார்கள்
காடு நிறைத்தது
தவளைகளின் இசை
2.
தனிமை நிர்வாணித்திருந்த என் கையின் பங்குனி மலரைத்
திருடிச் சென்றது நெல்சிட்டு
அது பறந்த வயல்களில் பயிர்கள் மஞ்சள் நிறத்தில் விளைந்தன
மகரந்த சோறுண்டு பிறந்த உயிர்களுக்கு எல்லாம் மூன்று கைகள்
எதிர்வுகளுக்குப் பழகிய குறுக்கு கோடுகள் உறைந்துப் போயின
கணக்குகள் பொய்த்தன
துரோகிகள் என பார்த்த இடத்தில் நெல் சிட்டுகளைச் சுட
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன
அதற்குப் பிறகு செடிகள் பூக்கவே இல்லை
3.
நான் இடலை மரம்
என் பசிய இலைகள் காற்றசைவிற்கே பற்றிக் கொள்ளும்.
எரியும்போதெல்லாம்
வாகையின் செந்நிறப் பூக்களெனப் பறிக்கப் போய் சுட்டுக் கொள்கிறாய்
உன் தீப் புண்களை அறுவாடென நினைத்து கூடடையும் தேனீக்கள்
இலையுதிர் காலத்தில் தேன் பிழிந்துப் பருகத் தருவாய்
புணர்வாய்
அதற்குப் பிறகு
அகல மறுக்கும் குறியை அணிலாக மந்திரித்து
என்னிடமே விட்டுச்செல்வாய்
வரிகளோடி அணில் துளைகளிட்ட என் குருத்தை
இடைச்சி ஒருத்தி தினந்தோறும்
குழலூதி இசைத்துச் செல்கிறாள்
உனக்கு எப்படிச் சொல்வது
அவள் தான் என் புதிய காதலியென்று
அந்தரக் கன்னி
1.
அவள்
அந்தரக்கன்னி
வேரிலும் பழுப்பாள்
இலையிலும் பழுப்பாள்
காயிலும் பழுப்பாள்
கொம்பிலும் பழுப்பாள்
வேடராக வரும்போதெல்லாம்
தேனாக விளைய மாட்டாள்
அவள்
கண்ணைக் குத்தி மீன் பிடிப்பது கடினம்
அவள்
குலவையிடும்போது மட்டும் தான் மழையறுக்க முடியும்
கையேந்தி நிற்கும் நட்சத்திரங்களுக்காக
மலையேற மறுக்கும்
அவள்
துத்திப்பூ சூடி வந்தால்
கொங்கைகளை பெருக்குவாள்
தாயார் விளக்கில் மிளகு திரி போட்டு வைத்தால்
முப்போகம் ப்யிரளப்பாள்
லிங்கம்
அவளின்
பதினோராவது விரல்
நாவற்ற அதன் வாய்க்கும்
வெற்றிலை பூசுவாள்
வேண்டும் போது
கோணக் குச்சியாக்கி
உறுமி கொட்டிக் கொள்வாள்
2.
அவள் குத்தியிருக்கும் பச்சையில்
கிளிகள் உறங்குகின்றன
வரகு அவிக்கும்போதெல்லாம்
அவற்றை எழுப்பி
ஊன் தருவாள்
அவை பறக்கும் திசைகள் தோறும்
முளை பாவ நார் கிளம்பும்
அம்மனுக்கு கால் முளைக்கும்.
அவள்
தலையில்
பூ மணக்க மணக்க
ஊரேகும் காவடி
3.
தாச்சியும் அவள் தான்
காவலாளியும் அவள் தான்
வெள்ளிமலையில் தீயெரிய
முட்ட முட்ட கடலை தின்பாள்
காலாட்டுமணி கையாட்டுமணி
அத்தலு புத்தலு
மக்கா சுக்கான்
பாலு பரங்கி
நட்டம் சுட்டம்
சீ...... சல்..... லே...... டு
ஒரு கல், ஒரு மழை
விண்ணில் என் தோழிகளோடு முயங்கி கொண்டிருந்த காலம்
நிலா மரத்தின் நிழலில் எங்கள் புணர்குறிகளை வரைந்திருந்தோம்
விதைக்கவும் இல்லை அறுக்கவும் இல்லை
மண்ணில் இருந்த அவனுக்கு பொறாமை.
இரண்டு வாய்களாலும் உண்டு களித்திருந்த
அவள்களை அவனால் சகிக்க முடியவில்லை
கல் கொண்டு எறிந்தான்
அதை அன்பென்று கற்பனை செய்துக் கொண்ட நான் பருவம் எய்தினேன்.
மாதம் மழை பொழிந்தேன்
தன் உறுப்பைக் கீறிப் பார்த்தும்
நிலா அவனுக்கு கருணை காட்ட வில்லை.
சூரியனின் புத்திரனாயினும்
அவனால் பருகவே முடியாத வெள்ளத்தை
வாய்க்கால் கட்டி தன் நிலத்தில் பாய்ச்சினான்
காதல் என்றான்
நம்பினேன்
என் தோழிகள் தர முடியாதது என்று சவால் செய்து விந்துறைந்தான்
அவன் விதைகளின் பழுப்பு மணம் ஒரு போதும்
அவளின் நாக்கு தரும் ஆம்பல் பூக்களை ஈடு செய்யவில்லை
சூல் கொண்டேன்
அவனால் கருத்தரிக்க முடியவில்லை என்ற பயம்
மீண்டும் கல் எறிந்தான்
சிசுவை ரத்தப் பெருக்கினேன், அவன் பெயரையும்
முடிவில்லாமல் அதைக் கழுவத் தொடங்கினான் அவன்
சித்திரக்கள்ளி
என் முலைகளைப் பிரித்து வைத்தவளைத்
தேடி கொண்டிருக்கிறேன்
நீ தானா அவள்
உன் இரண்டு கைகளுக்கும் வேலை வேண்டுமென்றா செய்தாய்
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா
இரு குன்றுகளுக்கிடையே தூளி கட்டி விளையாடுவது உன் சிறுவயது கனவு
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?
உன் பிள்ளைக்கு அறிவில்லை,அது பால் அல்ல, தேன் என்று வேறு சொல்கிறாய்
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை, தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி என்று தினம்
ஒரு பெயரிட்டு அழைத்து மயக்குகிறாய்
விரட்டவும் முடியவில்லை
உன் நாக்கின் வெப்பத்திற்கு என் காம்புகள் கருவாச்சி தளிர்கள் போல
துளிர்க்கின்றன.
பல் தடங்கள் இணைத்து நீ வரையும் சித்திரங்கள் பருவந்தோறும் உயிர்
பெறுகின்றன
அவற்றை ஒவ்வொரு நாளும் ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து வாங்கி செல்கிறான்.
நீ கிழித்து வைத்திருக்கும் ரவிக்கைகளை என்னடி செய்வது?
மின்னும் நாக்கு
உப்பும் பனியும்
மின்னும் நாக்கால்
ஸாப்போவின் கவிதையொன்றை
உயிருந்தப் பாதையில் பாய்ச்சி
என்னிலிருந்து
சூறையாற்றைப் பிரித்தெடுக்கும்
உனக்கு
முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப் பரிசாக தருகிறேன்
உன் ஆலிவ இலை விரல் அழுத்தங்களில்
தோல் வெள்ளியாய் காய்கிறது
உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்
மிச்சமில்லாமல் தின்கிறேன்
மன்மதனைப் பலியிட்ட இந்த நாளில்
பறை முழங்குகிறது
நீயும் ரதி நானும் ரதி
(இந்த வருடம் வெளிவரவிருக்கும் லீனா மணிமேகலையின் நான்காவது கவிதை
தொகுப்பான 'அந்தரக் கன்னி'யிலிருந்து...)
Portraits in a polaroid camera by Leena Manimekalai
|