|
|
நித்திரையை உருட்டும் பூனை
தோட்டங்களில் தப்பி முளைத்த
புல்லின் வளர்ச்சியோடிருந்தது
என்னுள்ளும் ஒரு பூனை
திடுமென வெளியேறுகிறது
பிடிக்காதவனை அறிந்து
இல்லம் புகுந்து அழிச்சாட்டியம் செய்கிறது
அவர்களின் நித்திரையை உருட்டிவிடுகிறது
மறந்தோ தவறியோ
ஒரு நாளும் பிடிப்பதில்லை
அவ்வீட்டில் எலியை
அவ்வப்போது நண்பர்களையும்
காயம் ஏற்பட பிறாண்டிவிடுகிறது
தன் கள்ளத் தனங்களால் எனை
கிச்சுகிச்சு மூட்டி
மகிழ்வில் திக்குமுக்காடச் செய்கிறது
பாலின் அளவை அதிகரித்தேன்
வருடிக் கொடுக்கவும் செய்கிறேன்
தற்சமயம் என் விருப்பத்திற்கேற்பவும்
வெளியே சென்று வர
பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
|
|