நிகழ்ந்தவை
இன்று
வலித்த ஏமாற்றங்கள் காயங்கள்.
நெகிழ்ந்த பிரியங்கள் சிலாகிப்புகள்.
ஜன்னலுக்கு வெளியே
விரையும் வாகன இரைச்சல்கள்.
தூக்கம் போர்த்திய இரவு.
விடிந்ததும்-
உதறிய போர்வையில்
சிதறித் தெறிக்கின்றன
நேற்று நிகழ்ந்தவை.
மென்சோகம்
எதைப் பறிகொடுத்தேன்?
தெரியவில்லை.
சுற்றத்திலா? நட்பிலா?
இழந்த செய்தி மறந்துவிட்டேனா?
நினைவில்லை.
யாரேனும் என்னைக் காயப்படுத்திவிட்டார்களோ?
எவரையேனும் நான் சங்கடப்படுத்திவிட்டேனோ?
சரிவர யோசனையில் இல்லை.
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல்
கழுத்தில் கல்லறை கட்டிக்கொள்ளும்
காரணமறியாது வந்து
பின் மறையும்
ஒரு மென்சோகம்.
ஹெல்மெட்
பூட்டிய வண்டியை களவாடி
பார்ட் பார்ட்டாக கழட்டி
திசைக்கு ஒன்றாக விற்றுவிடும்
மாநகரில்-
புறம்நோக்கு கண்ணாடியிலோ
பின்சீட்டில் தொங்கியபடியோ
பெட்ரோல் டாங்க் மீதோ-
பத்திரமாகவே இருக்கிறது
என் தலைக்கவசம்
திருடுபோகாமல்.
திருடப்பட்டால்-
நரக சகா என்றோ
நரகம் சந்திக்கப்பட்டது என்றோ
ஆங்கிலத்தில் மாந்திரீகம் செய்யப்பட்டிருக்குமோ?
உஷ்...
உரக்க வாசிக்காதீர்கள்
காதில் விழப்போகிறது.
உயர்திரு.திருடர்கள்
கொள்கை திருத்தம் செய்துவிடக்க்கூடும்.
|