|
|
மைகார்ட் (My Card)
மைகார்ட் (My Card) என்பது மலேசியாவின் குடியுரிமையைப் பெற்ற மக்களுக்கான விவேக
அடையாள அட்டையாகும். உலகிலேயே முதல் முறையாக செப்டம்பர் 2001-இல் மலேசியா,
மைகாட் எனப்படும் விவேக அடையாள அட்டையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
இவ்விவேக அடையாள அட்டையின் வெளிப்புறத்தில் உரிமையாளரின் பெயர், முகவரி,
புகைப்படம், அடையாள அட்டை எண், பாலினம், மற்றும் உரிமையாளரின் மதம் ஆகியவை
குறிப்பிடப்பட்டிருக்கும் வேளையில், மைகாட்டின் நுண்செயலியான 'மெமொரி
சிப்ஷில்' வங்கி பணப்பட்டுவாடா அட்டை, டோல் சாவடி கட்டண அட்டை, வாகன
ஓட்டுனர் உரிமம், கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன், சுகாதார தகவல்கள் மற்றும்
வெளிநாட்டு கடப்பிதழின் தகவல்கள் ஆகியவை அடங்கியுள்ளது, 'மைகாட்' ஆனது
ஒருவரின் அடையாள அட்டையாக விளங்குவதோடு மட்டுமல்லாது பல்வேறு தரவு மற்றும்
பயன்பாடுகளுக்கு ஒரே அட்டையாக விளங்குவதே அதன் தனி சிறப்பாகும்.
மலேசியாவில் மைகார்ட் எனப்படும் அடையாள அட்டை இல்லாமல் இருக்கும் ஒருவர்,
நாடற்றவராக கருதப்படுவார். அடிப்படை உரிமை, அடிப்படைக் கல்வி, இலவச
மருத்துவம், இலவச பாட புத்தகங்கள் பொருளகங்களில் கணக்கு திறக்க, வேலை தேட,
இபிஎப்/சொக்சோ நன்மைகளை அனுபவிக்க, வீடு, கார் வாங்க, தேர்தலில்
வாக்களிக்க, திருமணத்தைப் பதிவு செய்ய - இப்படி ஒவ்வொன்றுக்கும் மைகார்ட்
அவசியமான ஒன்று. வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட பின்னரும்கூட அது
ஒருவருக்கு தேவைப்படும். மைகார்ட் இன்றி இறந்த ஒருவரை முறையாக புதைக்கவோ,
தகனம் செய்யவோ கூட முடியாது.
அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரமில்லாமல், நாடற்றவர்களாக இருப்போரின்
பிரச்சனையானது மலாய்காரர், சீனர், மற்றும் பூர்வக்குடியினர் என எல்லா இன
மக்களிடையேயும் உள்ளது என்றாலும் மலேசிய இந்திய மக்களிடையே இது பெருமளவில்
நிலவுகின்றது. பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாதப்
பிரச்சனையால் அதிகளவில் படிப்பறிவில்லாத மற்றும் வலுவான பொருளாதார
பின்புலமற்ற மக்களே பாதிக்கப்படுகின்றனர். நாடு சுதந்திரமடைந்து 54
ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் இந்திய சமூகம் அதன் அடிப்படை
பிரச்சனையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய
உண்மையாகும்.
இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரமில்லாத
பிரச்சனைகள் மிகக் கடுமையானவை. நாடற்ற ஒவ்வொரு மலேசிய இந்தியரும் அவர் தம்
குடும்பத்தினரும் இந்நாட்டில் கடுமையான கல்வி, பொருளாதார, சமூகப்
பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
நாடற்ற இந்தியர்களை அடையாளம் காணவும் பதிவு செய்யவும் பிரதமர் துறையும்
உள்துறை அமைச்சும் இணைந்து கூட்டாக நாடு முழுவதும் மைடஃப்தார் இயக்கத்தை
நடத்தின. கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கப்பட்ட மைடப்தார்
இயக்கத்தின் போது பொருத்தமான ஆவணங்கள் இல்லாத15,000 பேரை மட்டுமே கண்டு
பிடிக்க முடிந்ததாக மனிதவள அமைச்சரான டத்தோ சுப்ரமணியம் அவர்கள்
கூறியுள்ளார். அவற்றுள் 9529 விண்ணப்பங்கள் அரசாங்கத்தின் பரிசீலனைக்காக
வரப்பட்டதன் மூலம் 5593 விண்ணப்பங்கள் முழுமையான ஆவணங்களைக் கொண்டிருந்தன.
இந்த எண்ணிக்கையிலிருந்து 4023 பேருக்கு ஒரே ஆண்டில் குடியுரிமை பத்திரம்
வழங்கப்பட்டது. இதனிடையே, மை டப்தார் நடவடிக்கையின்
போது விண்ணப்பம் செய்தவர்களில் 3900 பேரின் விண்ணப்பங்கள் முழுமையான
ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை எனவும் , எனினும் இவர்களின் பிரச்சனை
விரைவில் தீர்வுக்காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது
மலேசியாவில் பிறந்த பலர், சிவப்பு அடையாள அட்டைகளுடன் அல்லாடுகின்ற
வேளையில் இங்குள்ள இந்தோனேசியர்களுக்கும் பங்களாதேசக்காரர்களூக்கும்
குடியுரிமை எளிதாகக் கிடைத்து விடுகிறது. ஆனால், ஆறாவது தலைமுறையைச்
சேர்ந்த இந்திய மலேசியர் பலருக்கும் குடியுரிமை கிடைப்பது குதிரைக் கொம்பாக
உள்ளது. அனைத்து தகுதிகள் இருந்தும் பலரின் விண்ணப்பங்கள் ஆண்டு கணக்கில்
இழுத்தடிக்கப்படுவதால் அல்லது நிராகரிக்கப்பட்டதால் பலர் விரக்தி அடைந்த
நிலையில் மேற்கொண்டு விண்ணப்பிப்பதை நிறுத்திக்கொண்டுள்ளனர்.
சிலர் சரியான வழிகாட்டல் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இம்மக்களுக்கு குடியுரிமை பெறும் தகுதி இருந்தாலும் இவர்களுக்கு நீலநிற
மைகார்ட் வழங்கும் முடிவை உள்துறை அமைச்சர்தான் செய்ய முடியும் எனவும்
கூறப்படுகிறது.
பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாதப் பிரச்சனைக்கு நாம்
முழுமையாக அரசாங்கத்தையும் குறை சொல்ல முடியாது. அடையாள அட்டை மற்றும்
பிறப்புப் பத்திரம் பெறுவதில் மக்களுக்கு உண்டான விழிப்புணர்வு குறைவாக
இருப்பதும் இதற்க்கு ஒரு காரணமாகும். சட்டப்படி முறையான திருமணப் பதிவு
செய்யாமல் இருக்கும் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்புப்
பத்திரம் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். பிறப்பு சம்பந்த்ப்பட்ட
முக்கிய தஸ்தாவேஜுகளை பாதுக்காக்காமல் அலட்சியமாக இருக்கும் பெற்றோர்களால்
அடிப்படைக் கல்வியைக் கூட பெற தகுதியற்றவர்களாக பிள்ளைகள்
அவதியுறுகிறார்கள். திருமணத்தை முறையாக பதிவு செய்தல் மற்றும் உரிய வயதில்
அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் மிக அவசியம் என்பதை நம் மக்கள்
உணரவேண்டும். நமது வருங்கால சந்ததியினரின் நலன் கருதி அடையாள அட்டை மற்றும்
பிறப்புப் பத்திர பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக் காண்பது மிக அவசியமாகும்.
|
|