|
|
ஆர். சூடாமணியின் ‘இணைப்பறவை’
எழுபதுகளின் இறுதியில் திரையேறிய ‘அவர்கள்’ திரைப்படம்
ரயில் பயணத்தில் தொடங்குகின்றது. நாயகி அனுவின் திருமண வாழ்க்கை பயணமும்
ரயில் பயணத்தில் ஆங்காங்கே இணைகின்றது.
அனுவும் பரணியும் காதலித்துக் கொண்டிருக்கும்போது அனுவின் தந்தைக்கு வேலை
மாற்றலாகி வேறு இடத்திற்குச் செல்ல நேர்கின்றது. இருவரின் தொடர்பும்
தடைபட்டு போக அனுவின் அப்பா நோய்வாய்ப்பட்டிருந்த தருவாயில் கருணை
செலுத்துவதாய் நடித்து அனுவை ராமநாதன் மணம் புரிகின்றான். திருமணத்திற்கு
முன்பே அனு தன் முன்னாள் காதலைச் சொல்லிவிடுகின்றாள். அதைப்
பெரிதுபடுத்தாமல் அவளது குணத்தைப் பாராட்டுபவன் திருமணத்திற்குப் பின்னர்
நித்தமும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனுவை அவளது முன்னாள் காதலைச் சொல்லி
சித்திரவதை செய்கின்றான். அவளது திருமண வாழ்க்கை கசந்து கொண்டே
விவாகரத்தில் முடிகின்றது.
வேறோரு ஊருக்குச் சென்று சுயமாக சம்பாதிக்கும் அனுவுக்கு முன்னாள் காதலன்
பரணியைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகின்றது. அவர்கள் இருவரும் மீண்டும்
தங்கள் உறவுக்குப் புத்துயிர் தந்து திருமணத்திற்குத் தயாராகும் தருணத்தில்
அனு வேலை செய்யும் பணியிடத்துக்கே ராமநாதன் மேலாளராக வருகின்றான்.
அவளுக்குத் தன்னால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என உறுதி தருகின்றான்;
அவள் நோயுற்றிருக்கும்போது கவனித்துக் கொள்கிறான்; மாமனாரின் இறந்த
தினத்தில் விரதமெடுக்கிறான்; தான் உதாசீனப்படுத்திய தன் குழந்தைக்கு
அன்பாய் பொருட்கள் வாங்கி தருகின்றான்.
ராமநாதனின் அம்மா அதாவது அனுவின் மாமியார் அனுவிடம் தன்னைக் காட்டிக்
கொள்ளாமல் அவளுடைய வீட்டிலேயே வேலைக்காரியாக சேர்கின்றார் இதற்கிடையில்
பதிவு திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் அனுவின் மனம்
தடுமாற்றமடைகின்றது. தன் மாமியாரே தன் வேலைக்காரியாய் வந்ததை அறிந்து
வருந்தும் அனு மாமியாரை நாடி அவரது வீட்டுக்குச் செல்கின்றாள்.
அச்சமயத்தில் மற்றொருமொரு பெண்ணும் கையில் குழந்தையுடன் தான் ராமநாதனின்
மனைவி என வருகின்றாள்; அனுவை விவாகரத்து செய்த பின்னர் ராமநாதன் மணம்
புரிந்து கொண்ட பெண் அவள்.
சுக்கு நூறாய் உடைபவள் பரணியிடம் ஓடுகின்றாள். ராமநாதனே பரணிக்கு வேறொரு
பெண்ணை நிச்சயம் செய்வதைப் பார்க்கின்றாள். வழியில் ராமநாதனிடம்
எதிர்ப்படும் அவள் அவன் நல்லவனாக நடித்ததற்கான காரணத்தைக் கோபமாய்
கேட்கின்றாள். அவள் கதறி அழுவதைத் தான் காண விரும்புவதாக கூறுகின்றான்.
இவ்வாறான குணம் கொண்ட ஓர் ஆண் எத்தகைய குரூரரமானவன்? தான் திருமணம் செய்து
கொண்ட பெண்ணை விவாகரத்துக்குப் பின்னரும் கூட தன் வாழ்க்கையை நிம்மதியை
அமைத்துக் கொண்டு இன்பமாய் வாழ்வதைச் சகித்துக் கொள்ள முடியாதவன் ஒரு
மனிதனா? மனைவி என்ற உறவின் பெயரில் குடும்பத்தினுள் நுழைபவளை
மனிதத்தன்மையையுடன் அணுக தெரியாதவன் கல்வி கற்றவனாக இருந்தும்
மரியாதைக்குரியவனாக எண்ண தகுதியற்றவனாகவே ஆகின்றான்.
எல்லா துன்பங்களையும் தாண்டி வரும் அனு எத்தருணத்திலும் கதறி அழாதது ஒரு
பெண்ணின் உண்மையான வலிமையை இக்கணம் காட்டுகின்றது. ஒரு பெண்ணின் வலிமையை
எப்படியாவது உடைத்தெறிய வேண்டுமென்பது பல ஆண்களின் எண்ணமாய் அமைகின்றது.
மனைவியின் வலிமையை அறிந்து கொள்பவர்கள் அதை அழிக்க நினைப்பது இன்னும்
கொடுமை. ராமநாதன் போன்றோர் உண்டாக்கும் ஆண்களின் மீதான வெறுப்பை
உடைத்தெறிகின்றார் ஆர்.சூடாமணியின் ‘இணைப்பறவை’ என்ற கதையில் வரும்
ஸ்ரீமதியின் தாத்தா.
அறுபது ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பின்னர் பாட்டி இறந்து போக தாத்தா
அழவில்லை. துக்கம் விசாரிக்கும் அனுதாப வார்த்தைகளை அவர் வெறுக்கின்றார்.
அதனால் சுற்றியிருப்போரின் வெறுப்பும் குற்றப்பார்வையும் அவர் மீது
விழுகின்றன. ஸ்ரீமதியும் அவளது அண்ணனும் தங்கள் தாத்தா பாட்டியின் மீது
கொண்டிருக்கும் புரிந்துணர்வு, அன்பை இன்னும் விரிவாக்குகின்றது.
‘நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு.
அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம்.
அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத்
துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு’ என தன் பாட்டியைப்
பற்றி பேரன் விளக்கும்போது பாட்டியின் மரணத்தின்பால் தாத்தா காட்டும்
மௌனத்திற்கு அர்த்தம் புரிகின்றது. ஸ்ரீமதியும் அவளது அண்ணனும் மட்டுமே
இதைப் புரிந்து கொள்பவர்களாக இருக்கின்றனர்.
தாத்தா வெளியுலகத்திடம் போலியாக நடிக்கவில்லை. அவர் பாட்டியுடன் வாழ்ந்த
நாட்கள் அவருள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவரது கண்களுக்குப்
பாட்டி நடமாடிய இடங்களிலெல்லாம் பாட்டி இன்னும் நிறைந்திருக்கின்றார். அவர்
பாட்டியின் மீது கொண்டிருக்கும் அன்பை யாரிடமும் விளக்க முயலவில்லை. அவரது
அன்பு வார்த்தைகளால் குறுகவில்லை. உண்மை அன்பு மரணத்திற்குப் பின்னரும்
வாழ்வது சாத்தியம் என்பதை தாத்தா உறுதிப்படுத்துகின்றார். அழுகையினால்
காட்டக்கூடிய அன்பைத் தாத்தா அழாமலே வெளிப்படுத்தியுள்ளார்.
உறவுகள் என்றுமே நிரந்தரமானவையல்ல. ஆனால் உறவுகளின் அன்பு பரிமாற்றங்கள்
என்றுமே நிலையானவை; காலத்தால் அழியாதவை.
|
|