முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 43
ஜூலை 2012

  அபராஜிதா என்கிற அர்பு
கணேஷ்
 
 
       
பத்தி:

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்
கே. பாலமுருகன்




நேர்காணல்:


தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறும் வெளி!
சரவணன்



சிறுகதை:

சூனியக்காரனின் பூனை
அ. பாண்டியன்

அபராஜிதா என்கிற அர்பு
கணேஷ்



பதிவு:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு
வாணி. பாலசுந்தரம்



தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 2
அ. மார்க்ஸ்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

லீனா மணிமேகலை

வ.ஐ.ச. ஜெயபாலன்

சின்னப்பயல்

ஆறுமுகம் முருகேசன்

லிவிங் ஸ்மைல் வித்யா

ந. பெரியசாமி

எம். ராஜா

பூங்குழலி வீரன்



எதிர்வினை


வல்லினம் வகுப்புகள்


நேர்காணல் இதழ் 5

1988

ஜூன் மாத இரவு. ஒரே புழுக்கம். இருட்டு கவிந்த வானத்தை நோக்கியவாறு படுத்திருந்தேன். ஒரு சிலுசிலுப்பு கூட இல்லை. முதல் அடுக்கு அபார்ட்மென்டில் இருக்கும் மேத்தா அங்கிள் அப்பாவுக்கு அடுத்து படுத்திருந்தார். அவரின் ட்ரான்சிஸ்டரிலிருந்து பழைய இந்தி பாட்டொன்று சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. தினமும் பார்க்கும் ஒற்றை நட்சத்திரத்தை தவிர வேறொரு ஒளிப்பொட்டையும் வானில் காணவில்லை. அப்பாவுக்கு ஒன்பது மணிக்கே தூங்கிவிட வேண்டும். அந்த அபார்ட்மென்ட் கட்டிடத்தில் இருக்கும் மற்ற குடும்பத்தினர் போல நாங்களும் கோடைப்புழுக்கத்தின் காரணமாக மொட்டை மாடியில் படுத்துக்கொண்டிருந்தோம்.

ஒற்றை நட்சத்திரத்தை கிட்டத்தட்ட அதே இடத்தில் கடந்த ஐந்தாறு நாட்களாக பார்த்துக்கோண்டிருந்தேன். இன்று அதன் ஒளிர்வு அதிகமாக இருந்ததாகப் பட்டது. அரைமணி நேரம் கழித்து மங்குவது போல இருக்கும். பத்து மணி வாக்கில் மினுங்குவது போல தோன்றும். என் கவனிப்பைச் சிதறடிப்பது போல மொட்டை மாடிக்கதவைத் திறந்து அபராஜிதா என்கிற அர்பு மொட்டை மாடிக்குள் நடப்பாள். அவள் குடும்பத்தினரில் அவளும் அவள் தந்தையார் – ச்சுக் அவர்களும் மட்டுமே மொட்டை மாடியில் படுப்பது வழக்கம். மேத்தாவின் புதல்வியும் அர்புவும் பத்து மணி வாக்கில் படுக்க வருவார்கள். அவர்களுக்குத் தெரியாதவாறு அர்புவை மட்டும் பார்க்கப்ப் பிரயத்தனப்படுவேன். கதவை அடைத்து அவர்கள் மாடிக்குள் நுழைய சில வினாடிகள் தான் பிடிக்கும். அதற்குள், அர்பு அன்று எந்த நிற இரவு உடை அணிந்திருக்கிறாள் என்று அறிய முற்படுவேன். மாடியின் மேற்கு மூலையில் அவள் படுத்துக்கொள்வாள். இன்று வெண்ணிற டாப்சும் கால்சட்டையும் போட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் காலின் வெள்ளிக்கொலுசு (மிக) லேசாக சப்தமிடும். மாடியில் அவளைத்தவிர நான்கைந்து பெண்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கொலுசு அணிந்திருப்பார்களா என்று நான் கவனித்ததில்லை. அவர்களில் வேறு யாரேனும் கூட கொலுசு தறித்திருக்கலாம். இரவு முழுக்க சிணுங்கும் கொலுசு சத்தம் கேட்கும் போதெல்லாம் அவள் எந்தப் பக்கம் திரும்பி படுத்திருக்கிறாள் என்று ஊகிப்பேன். அவள் படுத்திருக்கும் இடத்தில் இருந்து என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறாளோ என்ற இனிப்பான ஐயம் எழும். இல்லை ஐயம் இல்லை. எதிர்பார்ப்பு தான்.

நடு இரவில் மொட்டை மாடிக்கதவைத் திறந்து போட்ட படி மேத்தாவின் மச்சான் கீழே இறங்கிச்சென்றான். நானும் எழுந்து மூன்றாம் அடுக்கில் இருந்த வீட்டிற்கு சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்தேன். மொட்டை மாடிக்கதவைச் சார்த்து முன் மேற்கு மூலை பக்கம் என் பார்வையை சுழல விட்டேன். ஒன்றும் தெரியவில்லை.

ஒற்றை நட்சத்திரத்தின் மேல் என் பார்வையைப் பதியவிட்டேன். நட்சத்திரத்தின் ஒளி வீரியம் குறைந்து வானத்தின் இருட்டு சில மடங்கு கூடி விட்டது போலிருந்தது.

சில்லென்று குளிரெடுத்தது. போர்வையை போர்த்தினாலும் குளிர் அடங்கவில்லை. டப்பென்று கண் திறந்தேன். விடிந்து காலையொளி எங்கும் பரவியிருந்தது. எல்லோரும் தத்தம் வீட்டிற்கு போய் விட்டார்கள். மேற்கு மூலையும் காலியாக இருந்தது. அர்பு எத்தனை மணிக்கு விழிக்கிறாள்?

ச்சுக் விரிக்கப்பட்டிருந்த படுக்கைகளை எடுத்துப்போக வந்தார். காலை வணக்கத்துக்குப் பிறகு “எத்தனை மணிக்கு எழுகிறீர்கள் அங்கிள்?” என்று கேட்டேன். “ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். ஐந்தரைக்கு தேநீரருந்தாவிடில் என்னவோ போலிருக்கும். நான் எழுந்தவுடன் அர்புவை எழுப்பி விடுவேன். அவள் வீட்டுக்குப்போய் தன் படுக்கையறையில் தன் தூக்கத்தை தொடர்வாள்” எனக்கு வேண்டியிருந்த தகவல் எனக்கு கிடைத்தது.

அடுத்த நாள் நட்சத்திரத்தைப் பார்த்தவாறு தூங்கத்தொடங்கிய போது விடியற்காலை ஐந்து மணிக்கு விழித்துவிடவேண்டும் என்று சொல்லிக்கோண்டேன். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி இறுதியாண்டு படிக்க திருநெல்வேலி திரும்பும் வரை ஒரு நாள் கூட ஐந்து மணிக்கு என்னால் விழிக்க முடியவில்லை. உறக்கம் படிந்த அர்புவின் செல்லமுகம் எப்படியிருக்கும் என்ற கற்பனை எனக்குள் அளவு கடந்த பரவசத்தை ஏற்படுத்தும்.

கல்லூரி இரண்டாமாண்டின் போது அப்பாவை ஜெய்ப்பூருக்கு இடமாற்றம் செய்துவிட்டார்கள். அப்பாவும் அம்மாவும் ஜெய்ப்பூர் வந்தார்கள். சிவில் லைன்ஸின் கேஷவ் நகரில் பிரார்த்தனா அபார்ட்மென்டில் இருந்தது அப்பா எடுத்திருந்த ஃப்ளாட். நானும், பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த என் தம்பியும் திருநெல்வேலியில் தங்கி படித்துக்கொண்டிருந்தோம். கோடைவிடுமுறையின் போது ஜெய்ப்பூர் வந்தோம்.

அப்பாவுடன் அரட்டையடிக்க ச்சுக் அங்கிள் வருவது வழக்கம். வெகு நேரமாகி விட்டதென்று ச்சுக்கை அழைக்க திருமதி ச்சுக் எங்கள் வீட்டுக்கு வந்து என் அம்மாவுடன் புது அரட்டையைத் துவங்க கடைசியில் அர்புவும் எங்கள் வீட்டுக்கு வந்தாள். அன்றுதான் அவளை முதலில் பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் சிறு சிறு பச்சைப்பூக்கள் பொறித்த சல்வாரும், பொருத்தமான கமீசும் அணிந்திருந்தாள். பட்டு போன்ற கூந்தல் அவள் தோள்களில் புரண்டன. காதில் கரடி பொம்மை தொங்கும் காதணி. ட்யூப் லைட்டின் ஒளி அவள் கன்னத்தில் பட்டு தெறித்தது. கண்கள் குறும்புத்தனத்தை அள்ளி வீசிக்கொண்டிருப்பது போல் இருந்தன. மற்றெதையும் என்னால் கவனிக்க முடியவில்லை. அவளின் தரிசனம் எனக்குள் ஏற்படுத்திய நிலையின்மையை அவள் கவனித்தாளா என்று தெரியாது. “இதுதான் விஸ்வநாதன் அங்கிளின் மூத்த மகன் சந்துரு” என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் ச்சுக். “ஹலோ” என்றாள் அர்பு. சில வினாடி இடைவெளியில் தன் மூன்று விரல்களை என் முன்னால் நீட்டினாள். கொஞ்சம் கூட எதிர்பாராதது. இதற்கு முன்னால் எந்த ஒரு பெண்ணின் கைகளையும் பற்றி குலுக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. பதவிசாக அவளுடன் கைகுலுக்கினேன். அவளின் மூன்று விரல்கள் என் ஐந்து விரல்கள்; ஒரு விதமான பயம் கலந்த கைகுலுக்கல். இந்நிகழ்வு வாழ்நாளில் நான் பலமுறை என் சிந்தனைகளில் ஓட்டிப் பார்க்கும் ஒரு நிகழ்வாக அமையப் போகிறது என்று எண்ணினேன்.

இரண்டு மாதங்களில் blink you’ll miss என்பது மாதிரி பலமுறை அவளைக் காணும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. சிறு புன்னகை பரிமாற்றங்களைத் தவிர எதுவும் நடக்கவில்லை. ஒரு சம்பாஷணை நடத்தும் முயற்சியில் மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்த்திருக்கிறேன். செயல்படுத்த முடிந்ததில்லை. அவள் தன் அழகின் காரணமாகத் தலைக்கனம் பிடித்தவள் என்றும் எண்ணியதுண்டு. அவள் தலைக்கனம் பிடித்தவளாக இல்லாதிருந்தால் இந்நேரம் என் எண்ணப்போக்கை புரிந்து என் சினேகத்தை ஏற்றுக்கோண்டிருப்பாள் என்று என்னை நானே சமாதானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

விடுமுறை முடிந்து நானும் என் தம்பியும் ஊருக்குக் கிளம்புவதற்கு முந்தைய நாள். மச்சுப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த போது அர்புவும் அவளுடைய தோழி (மேத்தா அங்கிளின் மகள்) ஏறிக்கொண்டிருந்தார்கள். தைரியத்தை வரவழைத்து “ஹை அர்பு... ஒரு நிமிஷம்” என்றேன். அவள் என்னைக் கூர்மையான விழிகளால் பார்த்து “யெஸ்” என்றாள். அவள் பார்வை என்னைப் பார்த்து “உனக்கு என்னிடம் பேசுமளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? என்று கேட்பது போலிருந்தது. “நாளை நான் ஊருக்கு திரும்புகிறேன்” என்றேன். “அப்படியா? ஹேப்பி ஜர்னி” என்று சொன்னாள். கை நீட்டுவாளா என்று பார்த்தேன். “ஒக்கே. பெஸ்ட் விஷஸ்” என்று சொல்லிவிட்டு முகம் திருப்பி படிகளில் ஏறுவதைத் தொடர்ந்தாள்.

1991

ஜெய்ப்பூரில் உள்ள பிரசித்தமான மருந்து நிறுவனத்தில் எனக்கு எழுத்தர் பணி கிடைத்தது. வேறு நல்ல வேலை கிடைக்கும் வரை அப்பாவுடனேயே தங்கியிருக்கும்படியாக இந்த வேலையை ஏற்றுக்கொண்டிருந்தேன், மிகக் குறைந்த சம்பளம். இருந்தாலும் ஒன்றரை வருடத்தை ஓட்டிவிட்டேன். அப்பா இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேஷவ் நகரை விட்டு பக்கத்து காலனியான சூரஜ் நகரில் குடி பெயர்ந்திருந்தார்.

அர்பு என் மனதில் ஒரு பிம்பமாக மாறியிருந்தாள். பிரார்த்தனா அபார்ட்மென்டுக்கு போய் அர்புவின் வீட்டைத் தட்டி “என்னுடன் நட்பு கொள்கிறாயா?” என்று கேட்க வேண்டும் என்று ஆயிரம் முறை நினைத்ததுண்டு. இல்லை. இதற்கெல்லாம் வயது இல்லை இப்போது. வேலையில் முன்னேறி, நல்ல நிலையடைந்து பின்னரே அவளைச் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைத்ததுண்டு. எல்லாம் சால்ஜாப்பு. அர்புவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை தோன்றும் நேரத்திலெல்லாம் மனது பக்பக்கென்று அடித்து ஒரு விதமான அவஸ்தையும் தோன்றுகிறதே. இது என்ன உணர்ச்சி? இந்த ஈர்ப்பு இயல்பான விஷயம் என்றால் பயம் என் ஏற்படுகிறது? பயமற்றவர்கள் மட்டுமே உலகின் அழகான விஷயங்களை அடைகிறார்கள். இதுதான் அடிப்படை உண்மை. பயமா? எனக்கா? எப்போதோ சில முறை பார்த்திருக்கும் ஒரு பெண்ணுக்காக இவ்வளவு உருகுவது ஒரு விதமான முட்டாள் தனமே! அப்பெண்ணுக்கு என்னைப் பற்றி ஒர் ஆர்வமும் இல்லை. அப்படியிருக்கும் போது நான் மட்டும் அவளை ஆசை பிம்பமாக வைத்து மனதில் மருகுவது கிறுக்குத்தனமன்றி வேறெதுவும் இல்லை.

ரஞ்சன் சாஹா என்று ஒரு நண்பன் இருந்தான். அவன் தங்கியிருக்கும் பாச்சிலர் குவார்ட்டர்ஸுக்கு விடுமுறை நாட்களில் சென்று அரட்டை அடிப்பது வாடிக்கை. நான் சந்தித்தவர்களில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று ரிசர்வு வங்கியில் எழுத்தராகப் பணி புரிந்த முதலும் கடைசியுமானவன் அவன் தான். குள்ளம், நோஞ்சான் தேகம் – ஆனால் தன்னம்பிக்கை அதிகம். தாடையெலும்பு வெளிவந்து, நரை முடியை மறைக்கும் முயற்சியில் ஈடுபடாத ஒரு நடு வயது குஜராத்திப்பெண் அவனுடைய அறைக்கு அடிக்கடி வருவதுண்டு. “அவள் யார் உன் காதலியா?” என்று அவனிடம் ஒரு முறை கேட்டேன். “அதெல்லாமில்லை..சும்மா டைம் பாஸ்” என்றான். “டைம் பாஸ் என்றால்….எல்லாம் நடக்குமா? இல்லையெனில்….முத்தம் மட்டும் தானா?” என்று கேட்டேன். ஏதோ நகைச்சுவையொன்றை கேட்டவன் போல் கலகலவென்று நகைத்தான்.

“ஹாஹா..நீ என்ன வர்ஜினா?..ஒரு தரம் கூட பண்ணியதில்லையா?”

நான் தலையாட்டியதும் “நல்ல தமாஷ்” என்று சொல்லி சிரிப்பின் ஸ்தாயியை மேலும் கூட்டினான். எனக்கு எரிச்சலாக வந்தது. இருந்தாலும் பேசப்படும் விஷயத்தின் மேலிருந்த உள்ளார்ந்த ஆர்வம் என்னை உரையாடலை மேற்கொண்டு நடத்திச்செல்ல தூண்டியது.

ஜெய்ப்பூர் வருவதற்கு முன்னர் அவன் மஹாராஷ்டிராவில் உள்ள கோபோலி என்ற ஊரில் வசித்த போது செய்த லீலைகளைப் பற்றி கூறலானான். இருபத்தியைந்து வயதில் இவ்வளவு அனுபவங்களா? ஐம்பது வயது ஆன்ட்டி முதல் பதினெட்டு வயது கஸின் வரை. பலவகையான பிரலாபங்கள். எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள் என்று தெளிவாகப் புரிந்தாலும், முகத்தை கம்பீரமாக வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

“நீலம் என்ற பெண் என்னை மிகவும் கவர்ந்திருந்தாள். அவளை அணுகுவது சிரமம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நான் விடுவேனா? ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டேன். ஸ்கூட்டர் வைத்திருந்த ஒரு தோழனுடன் மட்டுமே அவள் கல்லூரி செல்வாள். சைக்கிள் ஒட்டுனர்களை அவள் கண்டுகொள்வதில்லை என்று கண்டுபிடித்தேன். அன்று மாலையே என் மாமாவிடமிருந்து புல்லட் பைக் இரவல் வாங்கி ஒட்ட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். இரண்டாவது நாளே ஸ்கூட்டர்க்காரன் கட். கிளி என் பைக்கிள் வர ஆரம்பித்தது.”

“அவ்வளவு எளிதா? வாகனத்தை மாற்றுவதால் பெண் கிடைப்பாளா?”

“வாகனத்தை ஒட்டிக்கொண்டே, கியரையும் அவ்வப்போது மாற்றவேண்டும். மெதுவாக ஒட்டும் போதே திடீரென்று வேகத்தை அதிகரிக்க வேண்டும்” ரஞ்சன் பேசிய ஆட்டொமோபைல் நுட்பம் எனக்குப் புரியவில்லை. நீலம் என்ன ஆனாள் என்று கேட்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் அவனுடைய நடு வயது நண்பி வந்துவிட்டாள். ரஞ்சனிடம் விடைபெற்று கிளம்பும் போது ரஞ்சனின் மொபெட்-டை பார்த்தேன். புல்லட்டை விற்றுவிட்டு மொபெட் வாங்கிவிட்டான் போலிருக்கிறது!

ரஞ்சனுடனான உரையாடல் என்னுடைய கோழைத்தனத்தைக் கிட்டத்தட்ட உதறித்தள்ளிவிட்டது. பிரார்த்தனா அபார்ட்மென்ட் பக்கம் அடிக்கடி போனேன். ஒரு முறை ச்சுக் அங்கிள் என்னைப் பார்த்து விட்டார். பால்கனியில் நின்று கொண்டிருந்தவர் என்னைக் கையால் ஜாடை செய்து அழைத்தார். “வா வா சந்துரு? எப்படியிருக்கிறாய்? ரொம்ப நாள் கழித்து சந்திக்கிறோம்” என்றார். பரோடாவில் ஒவியக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் தன் மகன் – அமீத் – அர்புவின் அண்ணனை அறிமுகப்படுத்தினார். அர்பு எங்கானும் தென்படுகிறாளா என்று பார்த்தேன். ச்சுக் எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டார். தேநீர் உபசாரம் நடந்துகொண்டிருக்கும் போது, ரொம்பவும் இறுக்கமான் டீ-ஷர்ட்டும் குட்டியான நிக்கரும் அணிந்த பெண்ணொருத்தி அமீத்துக்கு மிக அருகில் வந்தமர்ந்தாள். “மீட் ரச்சனா பிரதான்….என் கேர்ள் ஃப்ரண்ட்” என்றான் அமீத். அமீத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்தவள் அமீத்தீன் கையை இறுக்கப்பற்றியபடி இருந்தாள். அவ்வப்போது அமீத்தின் கன்னத்தையும் தொட்டு தொட்டு பேசினாள். சத்தம் குறைவாக அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள். எல்லாப்பற்களும் தெரிந்தன. அவளுடைய பாய்ஸ்’ கட் வெட்டிய தலைமுடியை அமீத் ஒரிரு முறை தடவிக்கொடுத்தான். எங்கு முடிகிறது என்று தெரியாமல் நீண்டிருந்த வளப்பமான கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு முதலில் அமர்ந்திருந்தாள். சில நிமிடம் கழித்து தன் ஒரு காலை அமீத்தின் ஒரு காலில் லேசாக அண்டக்கொடுத்து உரிமையுடன் உட்காருகையில் ரச்சனாவுடைய இரு கால்களுக்கும் நடுவே சிறிய இடைவெளியேற்பட்டது. இவையெல்லாவற்றிற்கும் நடுவில் “அர்பு எங்கே?” என்று கடைசி வரை அமீத்தையோ ச்சுக் அங்கிளையோ கேட்க முடியவில்லை.

2012

ஏரியா மேனேஜருடன் சேலத்தில் ஒரு வாடிக்கையாளரைச் சந்தித்து விட்டுக் கோயம்புத்தூர் திரும்ப தாமதமாகிவிட்டது. அடுத்த நாள் மும்பையில் அகில இந்திய விற்பனை மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. நல்ல வேளை, கோவை விமான நிலையத்தை வந்தடைந்த போது, மும்பை விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று அறிந்தேன். பாதுகாப்பு பரிசோதனை முடித்துக் காத்திருக்கையில், என் பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்தவரை அடையாளம் கண்டு கொண்டேன். ச்சுக் அங்கிள். ஏறத்தாழ இருபது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன். அவருக்கு என்னை ஞாபகப்படுத்தினேன். அப்பாவை நினைவுக் கூர்ந்தார். அம்மா செய்யும் இட்லியின் சுவையையும் அவர் மறக்கவில்லை. நான் இத்தினங்கள் தில்லியில் இருப்பதைச் சொன்னேன். அமீத்தைப் பற்றி விசாரித்தேன். அமெரிக்காவில் இருக்கிறானாம். அமெரிக்ககாரி ஒருத்தியிடம் லிவ்-இன் பண்ணுகிறானாம். ரச்சனாவை பற்றி எதுவும் கேட்க தோன்றவில்லை.

ச்சுக் அங்கிளுக்கு ஒரு பெண் காபி கொண்டு வந்து கொடுத்தாள். “உனக்கு அர்புவை ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்” அர்புவைப் பார்த்து ஒரு கணம் நிசப்தமானேன். பிறகு “ஹவ் ஆர் யூ?... ஐ அம் விஸ்வநாதன் அங்கிள்’ஸ் சன், சந்துரு” என்று சொல்லி கை குலுக்கினேன். கை கொஞ்சம் சொறசொறப்பாக இருந்தது. அதே கண்ணாடி ஃப்ரேம். நிறைய எடை போட்டிருந்தாள். அங்கங்கு அங்கங்கள் பெருத்திருந்தன. இரு காதுகளுக்கும் மேலே லேசான நரை.

“எங்கே இந்தப் பக்கம்?” என்று கேட்டேன். ஜெய்ப்பூரில் கைவினைப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் இருக்கிறாளாம். “ஒரு சப்ளை சோர்ஸ்-சை ஆடிட் பண்ண கோவை வர வேண்டியிருந்தது” என்று சொன்னாள்.

ச்சுக் அங்கிள் புகைக்கும் அறையைத் தேடி சென்று விட்டார். சில நிமிடங்கள் அமைதியாய் இருந்துவிட்டு அர்பு “எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டாள். பதில் சொன்னேன்.
“உங்க கணவர் என்ன பண்ணுகிறார்?”

“தெரியாது. ஃபோன் பண்ணி தான் கேட்க வேண்டும்”

“புரியவில்லை”

“கல்யாணம் பண்ணி ஒரு வருஷத்துலயே பிரிந்து விட்டோம்”

இவளைக் கல்யாணம் செய்தவன் எப்படி இவளைப் பிரிந்திருக்க முடியும். இத்தனை வயசாகியும் இவளின் அழகு குறைந்ததாகத் தெரியவில்லை. கொஞ்சம் குண்டாக இருக்கிறாள். அவ்வளவு தான். குரலின் இனிமையில் குறைவில்லை. தோள் பட்டை எலும்புகள் இன்னும் எட்டிப்பார்த்துக் கொண்டு இருக்கின்றன. கண்களில் குறும்புத்தனம் அழியாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

அவளிடம் பேசுவதில் பல வருடங்களுக்கு முன்னிருந்த தயக்கம் இப்போது இல்லை. அரை மணி நேரப் பேச்சில் ஐந்து முறை கை குலுக்கினோம்.

ச்சுக் புகைத்து விட்டு திரும்பும் போது கூடவே இன்னோரு பெண்ணொருத்தியும் அவரோடு வந்தாள். நடு வயதுத் தோற்றம் கொண்டிருந்த அப்பெண் லேசான புன்முறுவலுடன் ஹலோ சொன்ன போது பற்களில் ஒட்டியிருந்த நிகோடின் கறை தெரிந்தது. சட்டை போட்டு பேண்ட் அணிந்து ஆண்கள் போல் டக் வேறு செய்திருந்தாள்.

ச்சுக் அங்கிள் “இவளை உனக்கு நினைவிருக்காது என்று நினைக்கிறேன். மேத்தா அங்கிள் தெரியும் இல்லையா? நம்ம அபார்ட்மென்ட்ஸில் இருந்தாரே. அவரின் மகள். கின்னரி என்கிற கிஷோர்” என்றார்.

கின்னரி என்கிற கிஷோர் வித்தியாசமாக இருந்தாள். விமானத்தின் போர்டிங் தொடங்கும் வரை அவள் அர்புவின் கையைத் தன் கையுடன் கோர்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
“மேத்தா தன் பெண்ணொடு பேசுவதில்லை. கிஷோர் அர்புவோட தான் இருக்கிறாள்” தகவல் வழங்குவதில் உள்ள ஈடுபாடு ச்சுக் அங்கிளுக்கு இன்னும் போகவில்லை.
கின்னரி என்ற பெயர் ஏன் கிஷோர் என்றானது என்று கேட்கலாமென்று பார்த்தேன். ஆனால் கேட்கவில்லை.

விமானத்தில் எனக்கு மூன்று வரிசை தாண்டி மூவரும் சேர்ந்து அமர்ந்திருந்தனர். ஜன்னல் சீட்டில் அர்பு, நடுவில் கின்னரி என்கிற..ஏதோவொன்று, ஏய்லில் ச்சுக் அங்கிள்.
ஜன்னலுக்குக் கீழே பார்த்தேன். விமானம் கும்மிருட்டான காட்டுப்பகுதியைத் தாண்டிப் பறந்து கொண்டிருந்தது! அவ்விருட்டில் ஒற்றை ஓளிப்புள்ளி தெரிந்தது. காட்டுக்கு நடுவில் ஏதொவிடத்தில் ஒற்றை விளக்கு எரிகிறதோ? விமானம் அந்த பகுதியைத் தாண்டும் வரை அவ்வொளிப்புள்ளியை விழியெடுக்காமல் பார்த்துக்கோண்டிருந்தேன்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768