|
|
தேசிய எழுத்தாளர் அப்துல்லா உசேன் அவர்கள் தன்னுடைய ‘இண்டர்லோக்’ நாவலில்
மலேசியாவிற்கு வந்த தமிழர்கள் அனைவரும் ‘பறையர்கள்’ என்று குறிப்பிட்டதை
மலேசிய தமிழ்/அரசியல்/சமூக அமைப்புகள் வன்மையாகக் கண்டித்திருந்தன. அந்த
எதிர்ப்புகள் அனைத்தும் ‘இது சாதிய சமூகமல்ல’ என்ற பின்னணியில்
ஒலிக்கவில்லை. இந்தச் சமூகத்தைச் சேர்ந்த எல்லோரும் ‘பறையர்கள்’ இல்லையே
என்ற பதற்றம்தான் அது.
'இண்டர்லோக்' நாவலுக்கு எதிராக மலேசியாவில் நிகழ்ந்த நாவல் எரிப்பு,
மரியல், கண்டனக் கூட்டங்கள் என அனைத்தும் இச்சமூகத்தில் ஆழப்பதிந்து
கிடக்கும் சாதிய உணர்வை அழித்தொழிப்பதற்கான முயற்சிகள் அல்ல என்பதைத்
தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் கவுண்டர்கள், தேவர்கள் எனப்
பலவகையாகப் பிரிவினையில் வாழ்ந்து கொண்டிருக்க, ஒட்டுமொத்தமாக எங்கள்
அனைவரையும் எப்படி ‘பறையர்கள்’ என அழைக்க முடியும் என்பதுதான் 'இண்டர்லோக்'
மீது நடந்த எதிர்ப்புணர்வின் சாரம் ஆகும். இண்டர்லோக்கைப்
பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என எழுந்த எதிர்ப்புக்குப்
பின்னணியில் இது சாதிய சமூகம்தான் எனும் குரல் அழுத்தமாகப் பதிந்திருப்பதை
நாம் உணர்ந்திருக்கிறோமா?
இந்த நாவல் எதிர்ப்பு நடந்தபோது, மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகள் யாவும்
‘பறையர்கள்’ எனும் அடையாளப்படுத்ததுதலைக் கண்டித்துப் பல செய்திகள்
வெளியிட்டன. 'இண்டர்லோக்' நாவலுக்கு எதிரான செயல்பாடுகள் அனைத்தையும்
ஆதரித்துப் பிரசுரித்தன. சாதிய சிந்தனை ஒழிய வேண்டும், கீழ்சாதி சொல்லைப்
பயன்படுத்தி இந்தியர்களை இழிவுப்படுத்தக்கூடாது எனத் தொடர்ந்து பக்கம்
பக்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. 'நியாட்' தலைவர் ஹஜி தஸ்லிம்
அவர்களும் இருக்கின்ற வேலையை எல்லாம் விட்டுவிட்டு இதற்காகவே
போராடக்கிளம்பினார். அவரோடு ஒரு கூட்டமும் இணைந்துகொண்டது. அடிப்படை தத்துவ
பலம் இல்லாமல் சேர்ந்த கூட்டங்களில் உள்ள கோமாளிகள் போல அதிலும் சிலர்
இருந்தனர். தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தில் நடைப்பெற்ற ஓர்
எதிர்ப்புக்கூட்டத்தில் பல்வேறு மதப் பிரிவினரையும் இணைத்த தஸ்லிம் கண்ணீர்
மல்க பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது. அக்குழுவைப் பிரதிநிதித்த ஒரு
கிருத்துவர் "நான் அவன் இல்லை" என உரக்கக் கூறியது இன்னும் நினைவில்
உள்ளது. அதாவது தான் பறையன் இல்லையாம். இவ்வாறான சாதிய மனம் படைத்தவர்களின்
கூச்சலுக்கு மத்தியில் ஒரு வழியாகத் தேர்தல் நெருங்கவும்
இண்டர்லோக்குக்கும் முடிவு கட்டப்பட்டது. எல்லாரும் வெற்றிகளிப்பில்
இருந்தனர்.
இந்த எல்லா முன்னெடுப்புக்கும் பக்க பலமாக இருந்தவை பத்திரிகைகள்தான்.
சும்மாவா? போராட்ட ரத்தமல்லாவா? எத்தனை காலமாக தங்களுக்குப் பணம்
கொடுக்கும் அரசியல் தலைவர்களுக்காகப் போராடியிருக்கும். அப்படியிருக்கும்
போது சாதிக்காக போராடாமலா இருக்கும். இதில் அந்தந்தப் பத்திரிகையின்
ஆசிரியர்களின் புரட்சிக்குரல் இருக்கிறதே. எத்தனை வசனங்கள் எத்தனை
சபதங்கள். தாங்கள் முழுக்கவே சாதியத்துக்கு எதிரானவர்களாகக்
காட்டிக்கொள்ளதான் எத்தனை திடீர் கொள்கைப் பிடிப்புகள். நல்லது நடந்தால்
சரிதான் எனத்தான் நாமும் நினைத்தோம். ஒரு நாடகமாகத் தொடங்கும் இவர்களின்
போராட்டம் உண்மையாகாதா என்ற நப்பாசைதான். இண்டர்லோக்
நிறுத்தப்பட்டதிலிருந்து ஓரளவு அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியப்
பத்திரிகைகள் மீண்டும் தங்கள் சாதிய புத்தியைக் காட்டத்தொடங்கிவிட்டன.
கடந்த இரு வாரங்களாக 'தமிழ் நேசன்' மற்றும் 'மக்கள் ஓசையில்' முக்குலத்தோர்
சங்கத்தின் கூட்ட அழைப்புகள் விளம்பரங்களாக வரத்தொடங்கிவிட்டன. இதை எப்படி
எடுத்துக்கொள்வது? முக்குலத்தோருக்கு மட்டும் இவ்விரு பத்திரிகைகளும் ஆதரவு
தரும் என்பதையா? பணம் கொடுத்தால் கொள்கையை கொஞ்ச நேரத்துக்கு ஒதுக்கி
வைத்து விடுவார்கள் என்பதையா? அல்லது அந்த முக்குலத்தோருக்கு வேறு
அடையாளங்கள் இருப்பதாக சால்ஜாப்பு சொல்லப் போகிறார்களா?
மேலும் இன்னொரு கேள்வியும் எழுகிறது, ‘பறையர்கள்’ என்பதற்கும்
‘முக்குலத்தோர்’ என்பதற்குமான அர்த்தத்தை அல்லது வேறுபாட்டை இந்தப்
பத்திரிகைகள் எப்படி உணர்கின்றன அல்லது புரிந்துகொள்கின்றன? கவுண்டர்
சங்கம் திறப்பு விழாவையும் முக்குலத்தோர் சங்கத்தின் செய்திகளையும்
பிரசுரிக்கும் பத்திரிகைகள் எதற்காகப் ‘பறையர்கள்’ என்ற
அடையாளப்படுத்துதலுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு ஆதரவாக இருந்தன?
இந்தக் கேள்விக்குப் பதில் தேடுகையில், தமிழ் பத்திரிகைகள் மேல்தட்டு சாதிய
பிரிவினருக்குத் துணையாக இருப்பதை உணர முடிகிறது. அவர்கள் தன் சாதிய
செயல்பாடுகளைச் சமூகத்திற்குள் கொண்டு போவதற்குத் தமிழ் பத்திரிகைகள் ஒரு
களத்தை அமைத்துக் கொடுத்து வருகின்றன.
பறையர் எனும் சொல்லைச் சமூகத்திற்குள் கொண்டு போவது இந்தியர்களை
இழிவுப்படுத்தும் என்றால், முக்குலத்தோர் என்ற சொல் சமூகத்தை
உயர்த்திவிடுமா? இது எந்த வகையான வேறுபாடு என்பதைத் தமிழ் பத்திரிகைகள்தான்
சமூகத்திடம் விளக்கப்படுத்த வேண்டும். ஒரு தரப்பினரைச் சமூகத்தின்
கீழ்தட்டில் வைத்து பிரித்தறிந்து ஒடுக்குவதற்கு சமூக மனசாட்சிக்கு
‘பறையர்’ எனும் சொற்பிரயோகம் தேவை எனில், அதே சொல் தன் சமூகத்தை
ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதிக்கும் என்றால் தேவையில்லை என்பதை எது நிர்ணயம்
செய்கின்றது? கட்டாயமாக சமூகத்திற்குள் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும்
சாதிய உணர்வு எனச் சொல்லலாம். அதுவே சாதியத்திற்குள் தீர்க்கமாக
வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு தரப்பினரை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடுவதற்கு மேல்மக்களின்
சாதிய பிரிவு தேவை என்ற அளவில் மீண்டும் மீண்டும் அவை முக்கியத்துவம்
பெறுகின்றன. அந்த முக்கியத்துவங்களை முன்னெடுக்கும் களமாகப் பத்திரிகைகள்
இயங்கி வருகின்றன. சாதி இழிவு வேண்டாம் என மறுத்த பத்திரிகைகள்தான் அதே
சாதிய தகவல்களைச் சமூகத்திடம் பரப்புகின்றன. பத்திரிகைகள் தன்னுடைய
தர்மத்தை இழந்துவிட்டிருக்கின்றன என்பது அறிந்த விசயம், ஆனால் தான் கொண்ட
நிலைபாட்டுக்கு முன் பொருளாதார சமரசம் செய்துகொண்டு தன் கொள்கைகளை விற்கும்
அளவிற்குப் போகும் என்ற சூழல் இப்பொழுது உருவாகி வருகின்றது.
பத்திரிகைகள் எது கொடுத்தாலும் அதைச் செய்தி என்கிற அளவில்
பெற்றுக்கொள்ளும் மனநிலையை முதலில் விட்டொழித்தாக வேண்டும். அவர்களின்
செயல்பாட்டை நோக்கி கேள்வி எழுப்பும் சூழல் உருவாவதன் மூலமே தமிழ்
சிந்தனைப்பரப்பை கூர்மையாக்க முடியும் என நினைக்கிறேன்.
கடைசியாக ஹஜி தஸ்லிமிடம் ஒரு கேள்வி. இண்டர்லோக்கை எதிர்க்க உங்களிடம்
நியாயமான காரணங்கள் இருந்திருக்கும். நீங்கள் சில கூட்டங்களில் உங்களை
அவ்வப்போது சைவ வேளாள குளத்தைச் சார்ந்தவர் என கூறிக்கொள்வதாகத் தோழர்கள்
வழி கேள்விப் பட்டுள்ளேன். கண்டதில்லை. ஒரு மாபெரும் போராளியான நீங்கள்
அப்படியெல்லாம் சாதிய உணர்வுடன் பேச மாட்டீர்கள் என எனக்குத் தெரியாதா
என்ன? ஆனால், இப்போதெல்லாம் அடிக்கடி போராட்டம் போராட்டம் என்று
பத்திரிகையில் முகம் காட்டும் தாங்கள் இந்தச் சாதியை ஏந்திக்கொண்டு
சம்பாதிக்கும் பத்திரிகைகளையும் கொஞ்சம் கண்டித்தால் என்ன? நீங்கள்
சொல்வதைக் கேட்காவிட்டால், உங்கள் செய்தியைப் போட வேண்டாம் எனக்
கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள். நாடு போற்றுவது போல நாங்களும் உங்களைப்
போற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள்.
|
|