முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 44
ஆகஸ்ட் 2012

  துணைக்கல்வி அமைச்சர் பதவி
ந. பச்சைபாலன்
 
 
       

கட்டுரை:

தமிழ்நேசன், மக்கள் ஓசை மற்றும் ஹஜி தஸ்லிம் கவனத்திற்கு...
கே. பாலமுருகன் - ம. நவீன்

துணைக்கல்வி அமைச்சர் பதவி
ந. பச்சைபாலன்

இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வர் ஓர் அறிமுகம்
மூலம் : ஜேம்ஸ் எஸ் ஹோம்ஸ் | தமிழில் : எம்.ஏ.நுஃமான்

தமிழில் சைறில் அன்வர் கவிதைகள்
எம்.ஏ.நுஃமான்



சிறுகதை:

சூன்யப்பெருவெளிக்கதைகள்
எம்.ஐ. ஷாஜஹான்

அவலம்
அண்டனூர் சுரா



பதிவு:

வல்லினம் வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்

'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 3
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

'லிவிங் ஸ்மைல்' வித்யா பதில்கள்
'லிவிங் ஸ்மைல்' வித்யா


புத்தகப்பார்வை:

ம. நவீனின் 'சர்வம் ப்ரம்மாஸ்மி' கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள்
மேமன்கவி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி

வழித்துணை
ப. மணிஜெகதீசன்



கவிதை:

எம். ராஜா

செ. சுஜாதா

ஆறுமுகம் முருகேசன்

ந. பெரியசாமி

பூங்குழலி வீரன்



எதிர்வினை



அறிவிப்பு:

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியங்கள் விற்பனைக்கு...

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்: மலேசிய பெண் எழுத்தாளர்களின் விபரங்கள் தேவை

எப்பொழுதும் இல்லாத அளவில் நம் நாட்டின் 13ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி குறித்த ஆரூடங்கள், அனுமானங்கள் ஒரு முடிவில்லாமல் தொடர்கின்றன. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஏற்பட்ட தேர்தல் காய்ச்சலின் தீவிரம் கொஞ்சமும் குறையாமல் தக்க வைப்பதில் அரசியல்வாதிகளோடு தகவல் ஊடகங்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாக ஆற்றி வருகின்றன. ஆகக் கடைசியாக, மலேசியத் தினத்திற்கு முன்னர், அதாவது செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்களும் அரசியல் ஆய்வாளர்களும் கூறுவதாக ‘மலேசியன் இன்ஸைடர்’ செய்தி வெளியிட்டுள்ளது. 2008ஆம் ஆண்டுத் தேர்தல் ஏற்படுத்திய அரசியல் சுனாமியின் தாக்கம்தான் இந்தத் தேர்தல் தேதியின் நீட்சிக்கும் தாமதத்திற்கும் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே!

தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் அமைச்சரவையில் இந்தியர் சார்ந்த கட்சிகளின் நிலை என்ன? நமது பிரதிநிதித்துவம் எப்படி அமையும்? வழக்கம்போலவா அல்லது புதிய துறைகளில் வாய்ப்பு கிடைக்குமா என்று எண்ணிப்பார்த்தேன். எப்பொழுதும் கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதே நமது நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. எங்களுக்கு இந்தத் துறைகள் வேண்டும் என கேட்டுப்பெறும் உறுதியான நிலை நமக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மாற்றங்களை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும் என்பது தெளிவாகும். ஆயினும், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை, இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பைத் தெரிந்துகொண்டு அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் போராட்ட உணர்வு நம் தலைவர்களுக்கு வேண்டாமா?

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. இன்றைய நிலையில் நம் சமூகத்தின் பல சிக்கல்களின் மையமாக இருப்பது கல்வித்துறைதான். தமிழ்ப்பள்ளிகளின் நிலை, உயர்கல்வி வாய்ப்பு, உபகாரச்சம்பளம், மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு, தொழிற்கல்வி வாய்ப்பு, ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாநில, மாவட்ட கல்வி இலாகாக்களில் இந்திய அதிகாரிகளின்குறைந்த எண்ணிக்கை - இப்படி வரிசை பிடித்து நிற்கும் பிரச்சினைகள் எத்தனையோ! இவற்றிலெல்லாம் கவனம் செலுத்திச் சமூகத்திற்கு உதவ நமக்குத் துணைக்கல்வி அமைச்சர் பதவி மிகவும் முக்கியமாகும். இந்தப்பதவி சமூகத்திற்கு வழங்கப்பட்டால் இனத்தின் மனக்குறைகளைக் குறைப்பதற்கான வாய்ப்பு கிட்டலாம். கல்விச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நிரந்தர வழிகள் பிறக்கலாம். இவற்றை வைத்தே பிழைப்பு நடத்தும் அறிக்கை மன்னர்களின், அரசியல்வாதிகளின் அவஸ்தைகளில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.

கல்வி அமைச்சுக்கும் நமக்கும் ஏழரைப் பொருத்தம் என்று யார் சொன்னது? கல்வி அமைச்சின் முக்கியப் பதவியில் இந்தியர்கள் யாரும் இருந்ததில்லையா? வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் இந்தியர் ஒருவர் கல்விப் பகுதிக்குத் தலைவராக (அமைச்சர் தகுதி கொண்டது) இந்நாட்டில் பதவி வகித்ததை அறியமுடியும். 1951 முதல் 1955ஆம் ஆண்டுவரை நாடு சுதந்திரம் அடையும் முன்னர் ஆங்கிலேயர் ஒரு முன்னோட்ட அமைச்சரவையை ஏற்படுத்தினர். அது ‘Member System’என்று அழைக்கப்பட்டது. எண்மர் அதில் இடம்பெற்றனர். அதில் டத்தோ இ.இ.சி. துரைசிங்கம் ‘கல்வி அமைச்சராக’ப் பதவி வகித்தார். அதற்குப் பிறகு, நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை கல்வி அமைச்சு, இந்தியருக்குத் தொடர்பில்லாத ஓர் அமைச்சாக ஆகிவிட்டது. அதுவே எழுதப்படாத தீர்ப்பாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக அமைந்துவிட்டது. காலத்திற்கு ஒவ்வாத அந்தத் தீர்ப்பைத் திருத்தி எழுதும் காலம் இப்பொழுது கனிந்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை குறிப்பிட்ட சில அமைச்சுகளே இந்தியருக்கு எனத் தீர்மானிக்கப்பட்டதுபோல் தெரிகிறது. துன் சம்பந்தன் காலந்தொட்டு இன்றுவரை ஆராய்ந்தால் அந்தப் பட்டியலில் இடம்பெறும் அமைச்சுகள் இவைதாம்: ஒற்றுமைத்துறை, தபால் தந்தித்துறை, தொழிலாளர், சுகாதாரத்துறை, வீடமைப்புத்துறை, மனிதவளம், பொதுப்பணி, வெளியுறவு, பிரதமர்துறை ஆகியனவாகும். டத்தின் கோமளாதேவி கல்வி அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக ஒரு தவணை பணியாற்றினார். அப்பொழுது தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி தொடர்பான பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டுத் தீர்க்கும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார். அதற்குப் பிறகு, கல்வி அமைச்சு இந்தியருக்கு இல்லாத அமைச்சாகச் சபிக்கப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

நமது அண்டை நாடாகிய சிங்கப்பூரின் அமைச்சரவையில் இந்தியர்கள் முக்கியமான அமைச்சுகளில் நியமனம் பெற்றுள்ளனர். சிங்கப்பூரின் அதிபர் எஸ்.ஆர்.நாதன். நான்கு முழு அமைச்சர்கள் உள்ளனர். துணைப்பிரதமர், நிதி அமைச்சர், ஆள்பல அமைச்சர் என மூன்று முக்கியப் பொறுப்புகளைத் திரு. தர்மன் சண்முகரத்தினம் ஏற்றிருக்கிறார். சட்டத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சராகதிரு. கெ. சண்முகம் உள்ளார். திரு. எஸ். ஈஸ்வரன் பிரதமர்துறை அமைச்சராக இருப்பதோடு இரண்டாவது உள்துறை அமைச்சர், இரண்டாவது வாணிபம் தொழிற்துறை அமைச்சராகவும் இருக்கிறார். டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சுற்றுச்சூழல் நீர்வள அமைச்சர். இவர்களில் திரு.தர்மன் சண்முகரத்தினம் முன்பு சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பினைப் பெற்றவர். சிங்கப்பூர் அமைச்சரவையில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகுந்த மனநிறைவை ஊட்டுவதாக உள்ளது.

நம் நாட்டைப் பொறுத்தவரை கல்வி அமைச்சர் பதவி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதை மறுக்கமுடியாது. கல்வி அமைச்சராக உள்ளவரே பின்னர் பிரதமராகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளதை வரலாறு காட்டுகிறது. எனவே, கல்வி அமைச்சர் பதவி அம்னோ தன் வசம் வைத்துக்கொள்ளும் பதவியாக, எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால், துணைக் கல்வி அமைச்சர் பதவி மற்ற இனங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமனம் பெறக்கூடியபதவியாக இருக்கிறது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாள் வரை இந்தியர்களுக்கு அந்த வாய்ப்பு ஏன் தரப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் பதவி வேண்டும் என்று நாம் கேட்டுப் பெறவில்லையா? அல்லது கேட்டும் கிடைக்கவில்லையா? கேட்டாலும் கிடைக்காது என்பதனால் கேட்காமல் விட்டோமா?

இப்பொழுது துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகதீன் யாசின் கல்வி அமைச்சராகவும் துணை அமைச்சர்களாக வீ கா சியோங், டாக்டர் புவாட் ஜர்காசி ஆகிய இருவரும் உள்ளனர். கல்வி அமைச்சு தொடர்பான நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடும் அதிகார மையங்களாக இவர்கள் செயல்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சீனர் கல்வி தொடர்பான பிரச்சினையென்றால் ம.சீ.ச. அமைச்சர்களோ கட்சியின் அடுத்த நிலை தலைவர்களோ அது குறித்த கருத்துகளை முன் வைத்தாலும் துணை அமைச்சர் உடனடி நடவடிக்கையில் இறங்கிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு சீன ஆசிரியர்களைப் பயிற்சிக்காக அங்கு ஆண்டுதோறும் அனுப்பி வைக்கும் வாய்ப்பினை துணை அமைச்சர் வீ கா சியோங் ஏற்படுத்தமுடியும். சீன மாணவர்கள் பங்குபெறும் தேசிய நிலையிலான போட்டியைக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டிலேயே நடத்த முடியும். நாம் எப்போதும் போலவே மகஜர்களை அனுப்பிக் காத்திருக்க வேண்டியதுதான்.

தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி அல்லது இந்தியரின் கல்வி தொடர்பான பிரச்சினையென்றால் முதலில் அது குறித்த அறிக்கைகள் எல்லாத் தரப்பிலிருந்தும் தமிழ் ஏடுகளில் வெளிவரும். தமிழில் வருவதாலேயே அவை தாமதமாகவே அரசின் பார்வைக்குப் போகுமோஎன்ற சந்தேகம் எழுகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நிலப் பிரச்சினை. அது பல மாதங்களாக ஏடுகளில் அலசப்பட்டும் முதல் பக்கச் செய்தியாகியும் அண்மையில் அந்தப் பிரச்சினை தொடர்பாகத் தம்மைச் சந்தித்த நடவடிக்கைக் குழுவிடம், இது குறித்துத் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என பிரதமர் கூறியதாக நாளிதழ் செய்தி வந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

அடுத்து, நம் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க நம் தலைவர்களை நேரடியாக நாடிப் போகிறோம். அவர்கள் சிபாரிசுக் கடிதங்கள் தருகிறார்கள். மற்ற அமைச்சுகளில் பொறுப்பேற்றிருந்தாலும் நடுவர்களாகச் செயல்பட்டு அமைச்சரவையிலோ சம்பந்தப்பட்ட இலாகா தலைமை இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்கிறார்கள். இங்கே, காலம் விரயமாகிப் பிரச்சினையின் சூடு தணிந்து போவதற்கும் வாய்ப்புண்டு. நமக்காக கல்வி அமைச்சில் துணையமைச்சர் பொறுப்பில் ஒருவர் இருந்தால் நேரடியாக அவரின் பார்வைக்குப் பிரச்சினை போய் விரைவாகத் தீர்வு கிடைக்கும் அல்லவா?

2009ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் பத்து பாடங்கள் மட்டும் எடுக்க முடியும் என கல்வி அமைச்சர் அறிக்கை வெளியிட்டதால் நம் சமூகத்தில் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழ், தமிழ் இலக்கியம் போன்ற பாடங்களைத் தமிழ் மாணவர்கள் எடுக்க முடியாத சூழல் உருவாகியது. வழக்கம்போல் ஏடுகளில் அறிக்கைகள் குவிந்தன. 12 பாடங்கள்வரை எடுக்க மாணவர்களை அனுமதிக்கும்படி சமூக இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அலிமுடினையும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தையும் சமூக இயக்கத்தினர்கள் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் சார்பில் நானும் அந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டேன். சமூகம் தந்த அழுத்தத்தினால் இந்தப் பிரச்சினை அமைச்சரவையில் எழுப்பப்பட்டது. அமைச்சரவையில், டத்தோஸ்ரீ சுப்ரமணியம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி பணிக்கப்பட்டார். அதன் பிறகு, கல்வி அமைச்சு, தேர்வு வாரியம் போன்ற தரப்பினரோடு பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தி, சமூகத்தின் தேவையை விளக்கி, மற்றப் பாடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லித் தீவிர முயற்சியினால் 12 பாடங்கள் எடுக்கலாம் என்ற போராட்டத்தில் வெற்றி பெற்றார். நம் தேவையை உணர்ந்த இந்திய சமூகத்தைச் சேர்ந்த துணைக்கல்வி அமைச்சர் ஒருவர் கல்வி அமைச்சிலேயே இருந்திருந்தால் இத்தகைய சிக்கல்கள் எழும்போது அவற்றைத் தீர்ப்பதில் அவரின் பங்களிப்பு எப்படியிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

நாட்டில் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் இன்னும் பல பள்ளிகள் கட்டடப் பிரச்சினை, நிலப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன. அண்மைய காலத்தில் இது குறித்த செய்திகள் ஏடுகளில் அதிகம் வருகின்றன. பினாங்கு சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பழனிவேல், அதன் மோசமான கட்டடச் சூழலைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக நாளிதழ் செய்தி வந்தது. அந்தப் பள்ளியில் நடந்த திருட்டுச் சம்பவத்தைக் கேள்வியுற்று அங்குச் சென்றிருக்கிறார். இனி, அந்தப் பள்ளிக்கு விடிவுகாலம் பிறக்கலாம். எல்லாப் பள்ளிகளுக்கும் வருகை மேற்கொண்டு அவற்றின் பிரச்சினையை இவரே தீர்ப்பார் என எதிர்பார்க்க முடியுமா? கல்வி அமைச்சிலேயே பொறுப்பான ஒருவர் இருந்தால் இது போன்ற பள்ளியின் அவலங்கள் மிக விரைவாக அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுமல்லவா?

எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது இந்தியரின் மனக்குறைகளுக்கும் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அரசு செவிகொடுப்பதைக் காணமுடிகிறது. இந்திய தொழில் முனைவர்களுக்கு 18 கோடி ரிங். நிதி ஒதுக்கீடு, தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கு 100 மில்லியன், ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு 30 ஆயிரம் ரிங். உதவிநிதி, 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிப்பு, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் 90 மாணவர்களுக்கு மருத்துவம் பயில வாய்ப்பு, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு ஒருங்கிணைப்பாளராக முனைவர் என்.எஸ். இராஜேந்திரன் நியமனம் இப்படிப் பல அறிவிப்புகளால் இன்ப அதிர்ச்சிக்கு இந்தியர்கள் ஆளாகி வருகிறார்கள்.

துன் மகாதீர் பிரதமராக இருந்தபோது,ஒரு முறை ம.இ.கா. பொதுப்பேரவையில் இந்தியர் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட உதவிநிதி வேண்டும் என டத்தோஸ்ரீ சாமிவேலு கோரிக்கை விடுத்தார். பிரதமர் உரையாற்றும்போது அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காது, “உலகிலேயே உயர்ந்த கட்டடம் கோலாலம்பூர் இரட்டைக்கோபுரம் - அதைக் கட்டியவர் ஓர் இந்தியர்” என இனிக்கப் பேசி, பேராளர்களின் பலத்த கரவொலியால் மண்டபம் அதிர, விடைபெற்றார். மறுநாள், நாளிதழ்களில் டத்தோஸ்ரீ தம் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். கேட்டாலும் கண்டும் காணாத நிலை அன்று. இன்று, பேச்சுவார்த்தைகள் மூலம் நம் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில், சிறுபான்மை இந்தியரின் வாக்குகளின் முக்கியத்துவத்தை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன. ஆயினும், வெறும் ஆய்வுகளும் அறிக்கைகளும் நாம் எதிர்நோக்கும் கல்விச் சிக்கல்களைத் தீர்க்காது. அமைச்சரவையில்இந்தியரைப் பிரதிநிக்கும் துணைக்கல்வி அமைச்சர் ஒருவர் நியமனம் பெற்றால் ஒழுகும் தமிழ்ப்பள்ளிகளின் கூரைகள் தொடங்கி மெட்ரிகுலேஷன் குளறுபடிகள், மாவட்ட கல்வி இலாகாக்களில் இந்திய அதிகாரிகள் ஒருவரும் இல்லாத நிலை, தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை வரை வரிசை பிடித்து நிற்கும் எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு பிறக்கலாம்.

இந்தியரின் மனவோட்டத்தை நன்கு அறிந்துகொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் இது குறித்தும் சிந்திக்கவேண்டும். ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்ற வாசகத்தில் நம்பிக்கை வைத்துச் செயல்படவேண்டும். ‘இப்போது இல்லாவிட்டால் இனி எப்போது?’ என கேட்கும் ஒவ்வோர் இந்தியர் மனத்தின் உள்ளார்ந்த விழைவுக்குக் காது கொடுக்கவேண்டும். செய்வார்களா தலைவர்கள்?

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768