|
|
கிழக்கு,
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இலக்கியம் பற்றி தமிழ் வாசகர்கள் அறிந்தது
மிகவும் குறைவு. சீன, ஜப்பானிய இலக்கியம் பற்றி நாம் ஓரளவு
அறிந்திருக்கிறோம். சில கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் இந்த
மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானிய ஹைக்கு தமிழில்
சற்றுப் பிரபலமாகியும் உள்ளது. எனினும், ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க
நாடுகளிலிருந்து நமக்கு அறிமுகமான இலக்கியங்களுடன் ஒப்பிடுகையில் சீன,
ஜப்பானிய இலக்கியங்கள் பற்றி நாம் அறிந்தவை மிகவும் குறைவுதான். அதேவேளை,
மலேசியா, இந்தோனேசியா, பிலிபைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
இலக்கியங்கள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுவரை இந்தோனேசிய இலக்கியம் எதுவும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதாகத்
தெரியவில்லை. நான் அறிந்தவரை சைறில் அன்வரின் கவிதைகளைக் கொண்ட
இத்தொகுப்புத்தான் இந்தொனேசிய இலக்கியத்தின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு
என்று நினைக்கிறேன்.
சைறில் அன்வர் (1922-1949) நவீன இந்தொனேசிய இலக்கியத்தின் மிக முக்கியமான
ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவர் வாழ்ந்த காலமும் குறைவு அதுபோல் அவர்
எழுதியவையும் குறைவு. அவர் இறக்கும்போது அவருக்கு இருபத்தேழு வயது
நிறையவில்லை. மொத்தமாக சுமார் எழுபது கவிதைகள்தான் எழுதியிருக்கிறார்.
ஆயினும் இன்றுவரை அன்வர்தான் இந்தொனேசியாவின் தலையாய நவீன கவிஞராகக்
கருதப்படுகிறார். இந்தொனேசிய பள்ளிமாணவர்கள் யாவரும் அவரை அறிவர். அவரது
புகழ்பெற்ற கவிதையான அக்கு (நான்) இந்தொனேசியாவில் பொது இடம் ஒன்றில் பெரிய
போஸ்ட்டரில் எழுதி ஒட்டப்பட்டிருப்பதை நான் ஒரு இணையதளத்தில் பார்த்தேன்.
இறந்து அரை நூற்றாண்டுக்குப் பிறகும் ஒரு கவிஞனுக்கு தனது நாட்டில் இத்தகைய
கௌரவம் கிடைப்பது ஆபூர்வம்.
சைறில் அன்வர் 1922 ஜுலை 26ல் வட சுமாத்திராவில் உள்ள மெடானில் பிறந்தார்.
சுதேசிகளுக்காக டச்சுக்காரர்களால் நடத்தப்பட்ட ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில்
பயின்று பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே இடைவிலகினார். பெற்றோர்
விவாகரத்துச் செய்துகொண்டமை அதற்கு ஒரு காரணமாகலாம். 1940ல் தனது 18ஆவது
வயதில் தனது தாயாருடன் இந்தொனேசியாவின் தலைநகரான பட்டேவியாவுக்கு (இன்றைய
ஜாகர்த்தா) குடிபெயர்ந்தார். அங்கும் அவரால் பள்ளிப் படிப்பைத்
தொடரமுடியவில்லை. எனினும், இலக்கிய ஆர்வம் காரணமாக சுயமாக நிறைய
வாசித்தார். வு. ளு. எலியட், று. ர். ஆடன், எமிலி டிக்கின்சன் போன்றவர்களை
அவர் நன்கு படித்திருக்கிறார். ஹென்றிக் மர்ஸ்மன், ஜெ. ஜெ. ஸ்லாவர்ஹொஃப்
ஆகிய டச்சுக் கவிஞர்களும் அவர்மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளனர்.
ஸ்பானியக் கவிஞர் கார்ஸியா லோகாவை மொழிபெயர்க்கும் நோக்கமும் அவருக்கு
இருந்ததாகத் தெரிகிறது. தாய்மொழியான மலாய் தவிர டச்சு, ஆங்கிலம், ஜெர்மன்
ஆகிய மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது. மெடானில் இருக்கும்போதே
அவருக்கு இலக்கிய ஆர்வம் இருந்தது. அப்போது அவர் எழுதிய கவிதைகள் எவையும்
கிடைக்கவில்லை. அவற்றைத் தானே அழித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
பட்டேவியாவுக்கு வந்த பின்னர் 1942ல்தான் அவரது முதல்கவிதை ‘நிசான்’
(கல்லறை வாசகம்) பிரசுரமாயிற்று. அதுமுதல் இலக்கிய உலகில் அவர்
கவனத்துக்குரியவரானார். 1949ல் அவர் இறக்கும் வரையுள்ள ஏழாண்டு காலம்தான்
அவருடைய படைப்புக்காலம். அந்தக் குறுகிய காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான
கவிதைகளை எழுதி இந்தொனேசியாவின் கவிதை வரலாற்றில் மிகப் பெரும்
செல்வாக்குச் செலுத்தியவர் என அவர் கருதப்படுகிறார். சைறில் அன்வரின்
தேர்ந்தெடுத்த கவிதைகளின் ஆங்கிலத் தொகுப்புக்கு அறிமுகம் எழுதிய ஜேம்ஸ்
ஹோம்ஸ் நவீன இந்தொனேசியாவின் மிகச் சிறந்த கவிஞரரகவும், முழு ஆசியாவிலும்
மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவராகவும் அவரைக் கருதுகிறார்.
அன்வருடைய தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலானது. எந்த வகையான ஒழுங்குமுறைக்கும்
உட்படாதது. பொருளாதார ரீதியிலும் அவருடைய வாழ்க்கை சௌகரியமானதல்ல. ஒரே
நேரத்தில் அவர் வாழ்க்கையின் மேல் மட்டத்திலும் அடித்தளத்திலும்
சஞ்சரித்திருக்கிறார் என்று தெரிகிறது. குடியும் புகைத்தலும் அவருக்குப்
பிரியமானவை. சுருட்டுப் புகைத்தவாறிருக்கும் அவரது புகைப்படத்தை இணையத்தில்
பார்க்கலாம்.
இங்கு நிறுத்த வேண்டாம்
இங்கு நல்ல பியர் கிடைக்காது
நிறையவும் கிடைக்காது
பீப்பாய் பீப்பாயாக வேண்டும் நமக்கு
என்று ஒரு கவிதையில் கூறுகிறார். அவருக்கு நிறையச் சிநேகிதிகளும்
இருந்தனர். பொது மகளிருடனும் உறவு இருந்ததாகத் தெரிகிறது. அவருடைய
கவிதைகளில் இதுபற்றிய குறிப்புகளைக் காணலாம். அதேவேளை டச்சுக்காரருக்கு
எதிராகப் போராடிய கெரில்லாப் போராளிக் குழுக்களுடனும் அவருக்குத் தொடர்பு
இருந்தது. தன் உடல் நலனைக் கவனிக்காத ஒரு வாழ்க்கை முறைக்கு உட்பட்டு
இளமையிலேயே பல நோய்களுக்கு ஆளாகி, இறுதியில் தனது 27ஆவது வயதைப்
பூர்த்திசெய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1949 ஏப்ரல் 28ல் காலமானார்.
அவரது உடல் ஜாகர்த்தா கறெற் பிவக் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. தான்
நீண்ட காலம் உயிர்வாழ முடியாது என்ற உணர்வு அவருக்கு இருந்திருக்கிறது.
அவர் கடைசி நாட்களில் எழுதிய கவிதை ஒன்று ‘கைதுசெய்யப்பட்டோரும்
விடுவிக்கப்பட்டோரும்’ இதைப் பதிவுசெய்கின்றது
இருட்டும்
கடந்துசெல்லும் காற்றும்
என்னைக் குடைகின்றன.
நான் நடுங்குகிறேன்,
நான் விரும்பும் ஒருவர் விழுந்துகிடக்கும்
அந்தப் பெரிய அறையும் நடுங்குகின்றது.
இரவு கவிகின்றது,
கற்தூண்கள்போல் மரங்கள் உயிரற்று இருக்கின்றன.
கறெற்றில்,
(அடுத்து நான் போக இருக்கும்) கறெற்றில்,
இரைச்சலுடன் குளிர்காற்று வீசுகிறது.
நான் என் அறையை,
என் இதயத்தைச் சுத்தப்படுத்துகிறேன்
ஒருவேளை நீ வரக்கூடும் என்று
உனக்காக ஒரு புதிய கதையை
நான் அவிழ்த்துவிட முடியும்
ஆனால் இப்போது என் கைகள் மட்டும்தான்
வெறுமையாக அசைகின்றன.
அவரது மரணத்தின் பின்னர் அவரது கவிதைகள் இரண்டு சிறு தொகுப்புகளாக
வெளியிடப்பட்டன. Derut Campur Debu (புழுதி கலந்த இடிமுழக்கம்), Kerikil
Tadjam dan Jang Terampas dan Jang Putus (கூரான சரளைக் கற்களும்
கொள்ளையிடப்பட்டவையும் உடைந்தவையும்) என்பன அவை. டச்சுக்
காலனித்துவத்துக்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கும் எதிராக விடுதலைப்
போராட்டமும் கிளர்ச்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சமூக எழுச்சிக்
காலகட்டத்தில் அவர் எழுதிக்கொண்டிருந்தார். அவரது கவிதைகள் அவரது சொந்த
ஆளுமையையும் சமூக நெருக்கடிகளையும் பற்றிப் பேசுகின்றன. டச்சு, ஜப்பானிய
தணிக்கை காரணமாக அவரது பெரும்பாலான கவிதைகள் அவரது வாழ்நாளில் வெளிவர
முடியாதிருந்தன. சாதாரண மக்களின் வழக்கு மொழியை அவர் கவிதைக்குள்
கொண்டுவந்தார் என்றும் மேலைய நவீனத்துவத்தையும் நாட்டாரியல் படிமங்களையும்
இந்தொனேசியக் கவிதைக்குள் அவரே முதலில் கொண்டுவந்தார் என்றும்
கூறப்படுகின்றது இதன்மூலம் தேங்கிப்போய் கிடந்த இந்தொனேசியக் கவிதைக்கு
புத்துயிர் அளித்தவர் அவரே என்றும் கருதப்படுகின்றது.
தனது மரணத்துக்குப் பின்னரே இந்தொனேசியாவில் அவர் மிகவும் பிரபலமானார்.
இந்தொனேசியாவில் அவரளவு கவனம் பெற்ற நவீன எழுத்தாளர்கள் வேறுயாரும் இல்லை
என்று சொல்லப்படுகின்றது. அவரைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன, பலருக்கு
அவர் ஆதர்சமாக அமைந்தார். நவீன இந்தொனேசியக் கவிதை வரலாற்றில் “1945
தலைமுறை” என்று அழைக்கப்படும் ஒரு குழுவினரின் தோற்றுவாயாகவும் தலைமைக்
கவிஞராகவும் அவர் கருதப்படுகிறார். அவர் இறந்த ஏப்ரல் 28ஆம் திகதி
இந்தொனேசியாவின் இலக்கிய தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
சைறில் அன்வரை முதல்முதல் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் பேர்டன்
றஃப்பெல் (Burton Raffel) என்ற அமெரிக்கர். இவர் 1950களின் தொடக்கத்தில்
இந்தொனேசியாவில் இரண்டு வருடங்கள் ஆங்கிலம் கற்பித்தார். அக்காலத்தில் தனது
மாணவர்களுள் ஒருவரான நூர்தீன் சலாமுடன் இணைந்து இந்தொனேசியக் கவிதைகள்
சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் பெறுபேறாக சைறில் அன்வரின்
தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கவிதைகள் (Selected Poems: Chairil Anwar,
Translated by Burton Raffel and Nurdin Salam, The World Poets Series,
New York) என்ற தலைப்பில் 1962ல் வெளிந்தது. பின்னர் இவரே சைறில் அன்வரின்
அனைத்துக் கவிதைகளையும் கட்டுரைகளையும் The Complete Poetry and Prose of
Chairil Anwar (State University of New York Press, 1992)என்ற தொகுப்பாக
வெளியிட்டார். பின்னர் இதன் திருந்திய மொழிபெயர்ப்பு The Voice of the
Night: Complete Poetry and Prose of Chairil Anwar (Ohio University,
Centre for International Studies, 1993)என்ற பெயரில் வெளிவந்தது.
2
2007-2008ல் நான் மலாயாப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் சைறில்
அன்வர் எனக்கு முதலில் அறிமுகமானார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர்
மலாயாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நண்பர் கிருஷ்ணன் மணியம்.
இந்தொனேசியாவின் முக்கியமான கவிஞர் என்ற அறிமுகத்துடன் சைறில் அன்வரின்
தேர்ந்த கவிதைகள் ஆங்கிலத் தொகுப்பை என்னிடம் தந்தார். அது ஒரு சிறிய
தொகுப்புத்தான். முன்னுரை எல்லாம் உட்பட 48 பக்கங்கள். அதில் உள்ள 35
கவிதைகளையும் ஜேம்ஸ் ஹோம்ஸ் அதற்கு எழுதிய சற்று விரிவான அறிமுகத்தையும்
படித்தபோது சைறில் அன்வர் தமிழுக்கு கட்டாயம் அறிமுகமாக வேண்டிய கவிஞர்தான்
என்று நினைத்தேன்.
சைறில் அன்வர் 1940களில் எழுதியவர். 40களில் தமிழில் கவிதை எழுதிய யாரையும்
சைறில் அன்வருடன் ஒப்பிடவே முடியாது. அக்காலத்தில் தமிழில்
எழுதிக்கொண்டிருந்த பாரதிதாசனோ அவரது பரம்பரையினரோ பாரதி தமிழுக்குக்
கொண்டுவந்த நவீனத்துவத்தின் வீச்சை வேறு ஒரு தளத்துக்கு வளர்த்துச் செல்ல
முடியாமல் தேங்கிப்போயினர். உரைநடையில் நவீனத்துவத்தை முன்னெடுத்த
புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், பிச்சமூர்த்தி போன்றவர்கள்தான்
கவிதையின் பொருளிலும் வடிவிலும் ஓரளவு நவீனத்துவத்தைப் பரிசோதிக்க
முயன்றனர். ஆனால்; அது சைறில் அன்வருடைய நவீனத்துவம்போல் பாரம்பரிய
விழுமியங்களை உடைத்துக்கொண்டு வந்த நவீனத்துவம் அல்ல. 1960களில் எழுத்து
சஞ்சிகை மூலம் வெளிப்பட்ட நவீனத்துவமும் பெரிதும் உருவம் சார்ந்ததாக
இருந்ததே தவிர மரபு சார்ந்த விழுமியங்களுக்குச் சவாலாக அமையவில்லை.
தற்காலத் தமிழில் சைரில் அன்வருடன் ஒப்பிடத் தகுந்த ஒரு கவிஞரை இனங்காண்பது
சிரமம் என்றுதான் நினைக்கிறேன். சைறில் அன்வர் நமக்கு ஒரு ஆதர்சமாக அமைய
வேண்டும் என்ற கருத்தில் அன்றி, அவருடைய தனித்துவத்தையும் வேறுபாட்டையும்
சுட்டிக்காட்டவே இந்த ஒப்பீடு.
இறுக்கமான இடதுசாரி நோக்குநிலையிலிருந்து சைறில் அன்வர் தீவிர
விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். அவருடைய மேலைத்தேய தனிமனிதவாதம்
இந்தொனேசிய தேசியப் புரட்சியின் நோக்கத்துக்கு எதிரானது என்பது அத்தகைய ஒரு
விமர்சனம். எனினும் அன்வரின் ‘நான்’, ‘தோழர் சுகர்னோவுக்கு’ முதலிய
கவிதைகள் இந்த விமர்சனத்தை வலுவிழக்கச் செய்துவிடும் என்று தோன்றுகிறது.
எது எவ்வாறு இருப்பினும் நவீன இந்தொனேசியாவின் பண்பாட்டு மலர்ச்சியில்
சைறில் அன்வரின் இடம் நிரந்தரமானது என்பதை மறுக்கமுடியாது.
இத்தொகுப்பில் சைரில் அன்வரின் 43 கவிதைகள் உள்ளன. சைரில் அன்வரின்
தேர்ந்தெடுத்த கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ள 35 கவிதைகளும் இரவின்
குரல் என்ற ஆங்கிலத் தொகுப்பிலிருந்து தோர்ந்தெடுத்த மேலும் 5 கவிதைகளும்,
இணையத்திலிருந்து பெறப்பட்ட ‘இல்லை பெண்ணே’, ‘அறிவிப்பு’, ‘தூரத்தில்
தெரியும் பைன் மரங்கள்’ ஆகிய மூன்று கவிதைகளும் இதில் அடங்கும். கடைசியாகக்
குறிப்பிட்ட மூன்று கவிதைகளும் ஜோன் எச். மக்லின் என்பவரால் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டவை. ஏனைய 40 கவிதைகளையும் மொழிபெயர்த்தவர் பேர்டன்
றஃப்பெல்.
3
மொழிபெயர்ப்பு எப்போதுமே பிரச்சினைக்குரியதுதான். ஒரு மொழிபெயர்ப்பை நல்ல
அல்லது மோசமான மொழிபெயர்ப்பு என்று நாம் வகைப்படுத்தலாம். ஆனால்,
முழுநிறைவான மொழிபெயர்ப்பு என்று எதுவும் இல்லை (There is no perfect
translation). ஒரு கவிதையின் மூன்று மொழிபெயர்ப்புகளைப் பார்த்தால்
மூன்றிலும் பல வேறுபாடுகளைக் காண முடிகின்றது. சில வேறுபாடுகள்
பாரதூரமானவையாகவும் காணப்படுகின்றன. ஒருவரே இருமுறை மொழிபெயர்க்கும்போதும்
இந்த வேறுபாடுகள் தோன்றிவிடுகின்றன. பேர்டன் றஃப்பெலின் முதல்
மொழிபெயர்ப்புக்கும் திருத்திய அவரது இரண்டாவது மொழிபெயர்ப்பக்கும் இடையில்
இத்தகைய சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் சில முக்கியமானவை.
சைறில் அன்வரின் மிகப் பிரபலமான ‘நான்’ என்ற கவிதையின் மூன்று
மொழிபெயர்ப்புகள் எனக்குக் கிடைத்தன. அதன் இந்தொனேசிய மூலத்தையும்
மொழிபெயர்ப்புகளையும் இங்கு தருகிறேன்:
Aku
Kalau sampai waktuku
'Ku mau tak seorang'kan merayu
Tidak juga kau
Tak perlu sedu sedan itu
Aku ini binatang jalang
Dari kumpulannya terbuang
Biar peluru menembus kulitku
Aku tetap meradang menerjang
Luka dan bisa kubawa berlari
Berlari
Hingga hilang pedih peri
Dan aku akan lebih tidak perduli
Aku mau hidup seribu tahun lagi
Me
When my time comes
I want to hear no one’s cry
Nor yours either
Away with all who cry!
Here I am, a wild beast,
Cut off from his companions
Bullets may pierce my skin
But I’ll keep on,
Carrying forward my wounds and my pain
Attacking
Attacking,
Until suffering disappears
And I won’t care anymore
I want to live a thousand years
***First translation of Burton Raffel
Me
When my time comes
No one’s going to cry for me,
And you won’t, either
The hell with all those tears!
I’m a wild beast
Driven out of herd
Bullets may pierce my skin
But I’ll keep coming,
Carrying forward my wounds and pain
Attacking
Attacking
Until suffering disappears
And I won’t give a damn
I want to live another thousand years
***2nd translation of Burton Raffel
I
If my time should come
I'd like no one to entice me
Not even you
No need for those sobs and cries
I am but a wild animal
Cut from its kind
Though bullets should pierce my skin
I shall still strike and march forth
Wounds and poison shall I take a flee
A flee
Till the pain and pang should disappear
And I should care even less
I want to live for another thousand years
***translation of Urip Hudiono
இம்மொழிபெயர்ப்புகளில் தலைகீழான மாற்றங்கள் இல்லை எனினும் முக்கியமான சில
வேறுபாடுகளை நாம் அவதானிக்க முடிகின்றது. மூல மொழி தெரியாத நிலையில்
இவற்றுள் எது மூலத்துக்கு மிகக் கிட்டியது, மிகப் பொருத்தமானது என்று
நம்மால் சொல்ல முடியாது. கிடைக்கக் கூடிய மொழிபெயர்ப்புகளை ஒப்புநோக்கி
பொருத்தமான ஒரு மொழிபெயர்ப்பைச் செய்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.
இக்கவிதைக்கான எனது மொழிபெயர்ப்பைக் கீழே தருகிறேன். அது பேர்டன் றஃப்பலின்
முதலாவது மொழிபெயர்ப்புக்குக் கிட்டியது.
நான்
என் காலம் வரும்போது
யாரும் எனக்காக அழவேண்டாம்
நீயும்தான்
அழுவோர் எல்லாரும் அகல்க
இதோ நான் இங்கிருக்கிறேன்
தன் சகாக்களிடமிருந்து தொடர்பறுந்த
ஒரு காட்டு விலங்கு
சன்னங்கள் என் சருமத்தைத் துளைக்கலாம்
நான் தொடர்ந்து செல்வேன்
என் காயங்களுடனும் வலியுடனும்
தாக்கியவாறு
தாக்கியவாறு
முன்னேறுவேன்
துயரம் மறையும்வரை
இனி எனக்கு எதுவும் ஒரு பொருட்டல்ல
நான் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்
இதுவரை தமிழில் வெளிவந்துள்ள மிகப் பெரும்பாலான பிறமொழிப் படைப்புகள்
ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வகையில் இவை
மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புகளாகவே உள்ளன. எனது இந்த மொழிபெயர்ப்பும்
அத்தகையதே. இந்தொனேசிய (மலாய்) மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு
மொழிபெயர்க்கப்பட்டதை நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஒரு படைப்பை மூலமொழியிலிருந்து இரண்டாம் மொழிக்குப் பெயர்க்கும்போது சில
அம்சங்கள் இழக்கப்படுகின்றன, சில அம்சங்கள் புதிதாகச் சேர்கின்றன. எந்த
மொழிபெயர்ப்பிலும் இது தவிர்க்க முடியாதது. இரண்டாம் மொழியிலிருந்து
மூன்றாம் மொழிக்குப் பெயர்க்கும்போது இந்த இழப்பு இன்னும் அதிகம் இருக்கும்
என்பது புரிந்துகொள்ளக் கூடிய உண்மைதான். நேரடியாக மூலமொழியிலிருந்து
மொழிபெயர்க்க முடியாத நிலையில் நமக்கு வேறு வழியில்லை. சைறில் அன்வரின்
கவிதைகளின் இந்த மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை ஆங்கிலமே இதன் மூலம்.
முடிந்தவரை மூலத்துக்கு விசுவாசமாக இருக்க முயன்றுள்ளேன்.
மொழிபெயர்க்கப்படும் கவிதை மூலத்துக்கு விசுவாசமாக இருப்பதுடன் தமிழில்
கவிதையாகவும் இருக்கவேண்டும். எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் எதிர்கொள்ளும்
சவால்தான் இது. முடிந்த அளவு திருப்தியாக இந்தச் சவாலை நான்
நிறைவுசெய்திருக்கிறேன் என்று நம்புகின்றேன்.
சைறில் அன்வர் தமிழில் இப்போதுதான் அறிமுகமாகிறார். இணையத்தில் அவரைப்பற்றி
நிறையத் தகவல்கள் உள்ளன. இந்த முன்னுரையை எழுதுவதற்கு அவை எனக்கு மிகவும்
பயன்பட்டன. எனினும் இந்த முன்னுரையில் இருப்பவை அவரைப்பற்றிய சில
மேலோட்டமான குறிப்புகள்தான். மேலதிக விளக்கத்துக்காக இந்தொனேசிய
இலக்கியத்தில் ஆழ்ந்த நிபுணத்துவம் உடைய ஜேம்ஸ் எஸ். ஹோம்ஸ் சைறில்
அன்வரின் தேர்ந்த கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எழுதிய விரிவான
அறிமுகத்தையும் இங்கு மொழிபெயர்த்துச் சேர்த்திருக்கிறேன்.
இத்தொகுப்பை வெளியிடும் அடையாளத்துக்கு எனது நன்றி.
|
|