|
|
பதுங்குக் குழியில் பிறந்த குழந்தை - தீபச்செல்வனின் கவிதைகள்
தீபச்செல்வன் இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சியில் வாழ்கிறார். போர்,
அரசியல், மாணவர் சமூகம், தனிமனித உணர்களை தளமாக கொண்டு இவர் எழுதி
வருகிறார். யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையில் பட்டம் பெற்று தற்போது
யாழ் பல்கலைக்கழக ஊடகப் பிரிவில் வருகை விரிவுரையாளராக பணிபுரிகிறார். இவர்
எழுதியவற்றுள் “கிளிநொச்சி”, “யாழ் நகரம்”, “முற்றுகையிடப்பட்ட நகரத்தின்
பதுங்குகுழி”, “கிணற்றினுள் இறங்கிய கிராமம்”, “குழந்தைகளை இழுத்துச்
செல்லும் பாம்புகள்”, “பதுங்குகுழியில் பிறந்த குழந்தை” ஆகிய கவிதைகள்
வாசிப்பவர்களின் மனதில் கண்ணீரை கசிய வைக்கும் தன்மை கொண்டவையாக
கருதுகிறேன். ஒரு விடுதலைப்போராட்டத்தின் கட்டமைப்பை நேரடியாக பார்த்து
அதனுள் அமிழ்ந்திருந்து வாழ்ந்து பார்த்த வார்த்தைகளாக வெளிவருகின்றன
தீபச்செல்வனின் கவிதைகள்.
அழகியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு அந்த உணர்வுகளை மகிழ்வான வார்த்தைகளில்
நிரப்பிக் கொண்டு கவிதையாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறமிருக்க
வாழ்வையும், அதன் கொடூர பக்கங்களையும் பிறருக்காக பேசும் வார்த்தைகளை
கொண்டு நிரப்பிக் கொண்டிருப்பவர்கள் எப்போதுமே நம்மைத் திரும்பிப் பார்க்க
வைக்கிறார்கள். எழுதுபவரது முகம் நமக்கு ஒருபோதும் பெரும்பாலும்
தெரிவதில்லை. ஆனால், அவரது வாழ்வு, வாழ்தலின் தளம், சூழல், அவனுக்குள்
ஏற்படும் தாக்கங்கள் கவிதைகளாகும்போது நம்மோடு மிக நெருங்கிவந்து
பேசுகிறான் அந்தக் கவிஞன். கவிஞன் கடந்து வந்த அதே பாதையை சிலவேளை நாம்
கடந்து வந்திருப்பின் அந்த கவிஞன் நம் உறவினன் ஆகிறான். அவனது துயர் நம்
துயராகிறது. அவன் கொட்டி வைத்திருக்கும் வார்த்தைகளின் மீது நம்மை கிடத்தி
அந்த கவிதைக்குள் ஆழ்ந்து போகிறோம்.
தமிழ்ச்செல்விக்கு முன்பு ஒரு கடவுள் இருந்தது
இப்பொழுது அவளிடம் கோவில்கள் இல்லை
செய்வதற்கு எந்தப் பிரார்த்தனைகளும் இல்லை
கடாட்சங்களையும் திருவருள்களையும் அவள் அறிந்தததில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அழகான உலகம் இருந்தது
இப்பொழுது அவளிடம் யாருமற்ற நிலம் இருக்கிறது
தமிழ்ச்செல்வி ஒரு சிறு பெண். எல்லா சிறு வயது குழந்தைகளுக்கும் இருக்கும்
பொம்மை வாசனைகளோடும் அம்மா அப்பா தூக்கி கொண்டு திரியும் பாசமிக்க ஓர்
அழகோடுதான் அவளது வாழ்வும் இருந்தது. போர் தின்ற வாழ்வு அந்த பிஞ்சுக்
குழந்தையையும் விட்டு வைக்கவில்லை. போர் முடிந்தப் பின்னும்
எஞ்சியிருக்கும் வாழ்தலில் யதார்த்தத்தை இந்த கவிதை பேசுகிறது.
உயிரோடிருத்தல் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது வாழ்தலில்?
பிரார்த்தனைகளும் கடாட்சங்களும் திருவருள்களும் அவளைக் காப்பாற்ற வராத
பொழுது யாருமற்ற நிலத்தில் அழகான உலகத்தை நினைத்து முன்பிருந்த கடவுளிடம்
வார்த்தைகள் தொலைத்த வெளியில் நின்று கதறிக் கொண்டிருப்பதை வேறு என்ன
செய்துவிட முடியும்?
நான் எப்போதும் இல்லாதிருக்கிறேன்
பெருங்காட்டில் இடமின்றி
அலையும் விலங்காய்
பெரும் வான வெளியில்
இடமற்று அலையும் பறவையாய்
திசைகளின்மீது
வெளிகளின்மீதும் வீழ்கிறேன்.
“நான் எப்போதுமே இல்லாதிருக்கிறேன்” என்ற துயரம் தீபச்செல்வனின் கவிதை
வெளியெங்கும் முளைத்து கிடக்கின்றன. ஒரு துயருக்குள் நின்றுகொண்டு அந்த
துயர் குறித்து மட்டும் எழுதும் ஓரு கவிஞன் இவர்என நான் நினைக்கிறேன்.
போர்சூழ் நிலத்தில் வாழ்ந்திருந்த மக்கள் உலகின் எந்த மூலையில் போய்
அடைந்திருந்தாலும் அந்த துயர் அவர்களின் முகத்தின் ஏதோ ஒரு புள்ளியில்
தேங்கியிருக்கும். யுத்தத்தின் குரூர முகங்களை வெளிக்காட்டியபடியே
இருக்கின்றன இவரது கவிதைகள்.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது
ஆண்டாண்டு காலமாய் தன் மூதாதையரும் தன் தாயும் தந்தையும் வாழ்ந்த தன்
தாய்நிலத்தில் மக்களை சூழ்ந்து கிடக்கும் மரணம், கண்ணீர், இடப்பெயர்வு,
பசி, நோய் என அனைத்தையும் பார்க்கவும் கேட்கவும் எதுவும் செய்ய இயலாமல்
கடந்து போக விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கையறு நிலை கவிதையாக
வெளிப்படுகின்றன. பயம், அதைத் தொடர்ந்த ஒரு பதற்றம், இயலாமை, கோபம் என
எல்லாக் கவிதைகளும் உணர்வுகளாக பரவிக் கிடக்கின்றன.
நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்புப் பொதிகளைச் சுமந்தபடி
நிழல் வீடுகளை பறிகொடுத்துவிட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கா போய்க் கொண்டிருக்கிறோம்.
போர் படிமத்தை தாங்கி கவிதை படைக்கும் கவிஞர்கள் ஒன்றுபோலவே
இருக்கிறார்கள். அது பாலஸ்தீனமாகட்டும்; ஈழமாகட்டும். வெறிச்சோடிப் போன
நகரங்களும், கிராமங்களும், அவற்றின் தெருக்களுமே திரும்பத் திருப்ப நம்
நினைவுக்கு மீட்டுத் தரப்படும். ஏதோ ஒரு சூனிய வெளியில் நின்று கொண்டு
அகதிகளாய் ஓடிக் கொண்டிருக்கும் மக்களில் ஒருவராக அவர்களோடே ஓடிக்
கொண்டிருக்கும் மனம். வாழ்வு பிடுங்கப்பட்டு இன்னொரு இடத்தில் வேர்
மரணிக்கும்முன் நட்டு வைத்துவிட வேண்டும் என்ற ஏக்கம் தீபச்செல்வனின்
கவிதைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அகதியாய் போகும் மக்கள்
ஒவ்வருவரோடும் தானும் ஒரு அகதியாய் பின்தொடர்ந்தபடியே இருக்கிறார் கவிஞர்.
இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்
மானே பொறியாக இருக்கலாம்.
காலம் கடைவிரித்திருக்கும் மருட்சி, எப்போதும் துரத்திக் கொண்டிருக்கும்
பயம் என் தொடரும் வாழ்வு. பயம் சந்தேகத்திற்குக் காரணமாகிறது. எப்போதும்
உயிர் போய்விடும் சந்தேகத்துடன் மட்டும் தொடரும் மனித வாழ்வின் கொடுமை இது.
இதுவும் கடந்து போகலாம். ஆனால் அதே மருட்சியினை கண்களில் தாங்கியபடி
எப்போதும் போல் வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரை நாமும் கடந்து போக
வேண்டிருக்கும்.
கவிஞன் என்கிற அடையாளம், கொட்டிக் கிடக்கும் கவித்துவம், சொல்விளையாட்டு,
படிமம், அழகியல் என்பதைத் தாண்டியும் இருக்கிறது கவிதை. அது தான் கடந்து
வந்தவற்றை எந்தவொரு புனைவும் இன்றி உண்மையாக எழுதுவது. அந்த உண்மைத் தன்மை
நம்மைச் சுடும். மனித நேயம் கொண்டவர்களின் இதயத்தில் அது இரத்தத்தின்
வெப்பமாக வெளிப்படும். அவலங்களை யதார்த்தமாக வேடிக்கை பார்க்கும் கடைசி
மனிதனின் சுவாசமாக வெளிப்படும்.
போர் தின்ற நிலத்தை தாண்டியும் தீபச்செல்வனின் படைப்புகள் தொடர வேண்டும்.
|
|