|
|
வௌவால்
இங்கேயே
பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்தக் குகைகள் சாதாரணமாக தான் தெரியும். ஆனால்
என்னை போல பிறரை போல ஊர் விட்டு ஊர் வந்தவர்களுக்கு எல்லாமே புதிதாக
தெரியும். எனக்கு எல்லாமே அப்படித் தான் தெரிந்தது. காற்று குகைக்குள்
காலடி எடுத்து வைத்தபோது சற்று வழுக்கியது. அதற்கு காரணம் நான்
அணிந்திருந்த காலணி, இன்னும் சொல்ல போனால் ஜப்பான் சிலிப்பர். அதோடு
மட்டுமில்லாது நடைபாதைக்காகக் கட்டப்பட்டிருந்த பலகைகளின் மீது
படிந்திருந்த வௌவால்களின் எச்சங்கள். இவை இரண்டுமே வழுக்கி விழுவதற்கான
ஏற்ற காரணங்கள். இதனாலே நான் பல முறை தட்டு தடுமாறி நடந்தேன்.
குகையின்
வாயில் பகுதியிலேயே அவ்வளவு நிசப்தம். நாங்கள் கேட்டவை யாவும் வௌவால்களின்
கிசுகிசுப்பு தான். இடையிடையே எங்கள் உரையாடல்களின் எதிரொலி. குகை மூன்று
பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வாயில் பகுதி, நடுபகுதி மற்றும்
கடைப்பகுதி. ஒவ்வொரு பகுதியிலும் குடியிருந்த வௌவால்களின் அளவுகள்
சிறிதளவில் மாறுப்பட்டிருந்தன. வாயில் பகுதியில் காணப்பட்ட வௌவால்களும்
குகையின் கடைபகுதியில் காணப்பட்ட வௌவால்களும் கொஞ்சம் பெரியதாக காணப்பட்டன.
உட்பகுதியில் இருந்த வௌவால்கள் சிறியதாக இருந்தன. இரு வகையான வௌவால்களும்
வெவ்வேறானவை என குகைக்குள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்த செய்தி குறியீட்டு
பலகைகளிலிருந்து தெரிந்து கொண்டேன். அதோடு மட்டுமல்லாது அவற்றின் உணவும்
கூட மாறுப்பட்டிருந்தன. குகையின் வாயிலில் குடியிருந்த வௌவால்கள் சைவ
அல்லது பழம் தின்னி வௌவால்கள் ஆகும். இவை பழங்களை உண்ணுவதோடுல்லாமல்
மகரந்தத்தையும் உறியகூடியவையாக உள்ளன என்பது தான் என்னை ஆச்சிரியப்படுத்திய
விஷயம்.
உட்பகுதியில்
குடியிருக்கும் வௌவால்கள் அசைவ தன்மையுடயவை. இவற்றை மைக்ரோ பேட் அதாவது
சிறிய வௌவால்கள் என அழைக்கப்படுகின்றன. பழந்தின்னி வௌவால்களை விட இவை
அளவில் சிறியதாகவே இருந்தன. இவை பெரும்பாலும் குகையை விட்டு வெளியேறுவது
இல்லை. அதற்காக இவை இரத்ததை உறிஞ்சுபவை என எண்ண வேண்டாம். அதற்கு சாத்தியம்
இருந்தாலும் விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இல்லாமையால் இவற்றின் உணவு
வகைகள் பூச்சிகளும் எறும்பு வகைகளுமாகவே இருக்கின்றன. உலகத்திலேயே மிகவும்
மெல்லமாக இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் இதுவேயாகும். இவற்றின் ஸ்பரிச
உணர்வு மிகவும் நுண்ணியதும் வியப்பூட்டுபவையாகவும் இருக்கின்றது.
காற்று குகை முழுவதுமாக சுண்ணாம்பு கற்களால் ஆனது. ஆங்காங்கே தொங்கு
பாறைகளின் தரிசனத்தை கைவிளக்கின் உதவியோடு காணலாம். கை வைத்தும் உணரலாம்.
மிகவும் குளிர்ச்சியானதாகவே இருந்தன இந்த தொங்கு பாறைகள். சொல்லப்போனால்
குகையின் வெளிப்பாகத்திலிருந்து கடைப்பாகம் வரை தொங்கு பாறைகள் அதிகம்
இருந்தது. அதோடு மட்டுமல்லாது குகையின் சுவர் முழுக்க சிறிது பெரிதாக பல்
துவாரங்கள் காணப்பட்டன. சிறிய துவாரத்துக்கும் பெரிய துவாரத்துக்கும்
வெவ்வேறாக பெயரிட்டிருந்தனர். சிறிய துவாரத்துக்கு பெல் ஹோல் (Bell-hole)
அதாவது மணித்துவாரம் எனவும் பெரிய துவாரத்துக்கு எவேன் (Aven) எனவும்
பெயரிடப்பட்டிருந்தது. இவை வௌவால்கள் இருந்ததற்கான அடையாளமாக
கருதப்படுகின்றன.
வௌவால்
சிறுநீரயும் மலத்தையும் மேல்நோக்கி கழிக்குமாம். அதை இங்கே தான் தெரிந்து
கொண்டேன். அவற்றின் எச்சங்கள் அமிலத்தன்மை அல்லது காடித்தன்மை உடையவை,
சுண்ணாம்பு அமிலதுக்கு எதிரான காரத்தன்மையுடையது. எனவே இவை இரண்டும்
ஒன்றிணையும் போது சுண்ணாபம்பு பாறை கறைகிறது. அதுவும் எச்சம் பட்ட அந்த
குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இந்த வினை காணப்படுகிறது. எனவே அந்த இடம்
குழியாக இருக்கிறது. அதுவே அடிக்கடி அவ்விடத்தில் எச்சம் கழிக்கப்பட்டால்
குழி பெரியதாக ஆகின்றது. இது தான் வித்தியாசம். இங்கே குகையின் உட்புற
சூழல் மற்றும் அதன் தன்மை பற்றிய பல விஷயங்களை கண்கூடாக கண்டு அறிந்து
கொண்டேன்.
வௌவால்களை தவிர இங்குச் சிப்பிகளின் படிமங்களையும் பார்க்க முடிந்தது.
அதுவும் பெரிய சைஸில். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக
கணிக்கப்பட்ட இராட்சஷ சிப்பி படிமங்கள் குகையின் சுவர்களில் தெளிவாக
தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கே வண்ணமயமான பாம்புகளும் வலம் வருமாம்.
ஆனால் எங்களுக்கு அப்பாக்கியம் கிட்டவில்லை. இதை பற்றி பாதுகாவலரிடம்
வினவிய போது அப்படிப் பாம்புகளை பார்த்தால் அது பாக்கியம்
அல்ல
மாறாக துர்பாக்கியம் என சொல்லி சிரித்தார். அதுவும் நல்லதுக்கு தான்.
இப்படி பல வாறான அனுபவங்களோடு அக்குகையை விட்டு வெளிவந்த நாங்கள் குகையை
ஒட்டி அமைந்திருந்த ஆற்றில் சிறிது நேரத்தை கழித்து விட்டு பின்னர் அதே
நாளில் இன்னொரு குகையை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். அப்போதும் கூட
எங்களுக்கு அலுப்பு தட்டவில்லை. எதனால் என்றும் தெரியவில்லை. கார் மட்டும்
அடுத்த இடத்தை நோக்கி பயணித்தது.
|
|