|
|
கடந்த 7 மற்றும் 8 ஜூலை 2012-ல் நடைபெற்ற
வல்லினம்
வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்
நிகழ்வின் போது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்
http://photobucket.com/vallinamclasses1
கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில்
வல்லினமும் செம்பருத்தி இணையத்தளமும் (www.semparuthi.com) இணைந்து
மொழியியல் வகுப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மொழியியல்
வகுப்பினை நடத்த இலங்கையிலிருந்து பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள்
கலந்துகொண்டார். இலங்கையில் மிக முக்கியமான ஆளுமைகளான பேராசிரியர் கைலாசபதி
மற்றும் கா.சிவதம்பிக்கு அடுத்து மிக முக்கிய தமிழ் இலக்கிய ஆளுமையாகக்
கருதப்படும் எம்.ஏ.நுஃமான் அவர்கள் இரண்டு நாட்களில் ஐந்து தலைப்புகளை
ஒட்டி பங்கேற்பாளர்களிடம் கலந்துரையாடினார்.
நிகழ்வின் நோக்கம் குறித்து பேசிய ம.நவீன், இலக்கியம் என்பது ஒரு
பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே மலேசியாவில் கருதப்படும் சூழலில், அதை மீறி
தீவிர வாசிப்புக்கு ஒரு பிரதியை உட்படுத்த பல்வேறு அறிவுத்துறை / கோட்பாடு
சார்ந்த அணுகுமுறைகள் தேவைப்படுகிறது என்றார். வாசகனின் அந்த இடைவெளியை
நிரப்பவே இந்த வகுப்பை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தொடர்ந்து அமைப்பியல்,
பின் அமைப்பியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், மார்க்ஸியம், தலித்தியம்,
பெண்ணியம் போன்ற தலைப்புகளில் அடுத்தடுத்த வகுப்புகளை தமிழக மற்றும் இலங்கை
ஆளுமைகள் நடத்துவார்கள் என்றார்.
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களை எழுத்தாளர் பாலமுருகன் விரிவாக அறிமுகம்
செய்துவைத்தார். இந்த இரண்டு நாள் பட்டறையில், IBA ஆசிரியர் பயிற்சி
கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவர்களும், 'இலக்கியகம்' எனும் அமைப்பைச் சேர்ந்த
ஆசிரியர்கள் 10 பேரும் 20 எழுத்தாளர்களும் பங்கு பெற்றனர். மேலும் முனைவர்
முல்லை ராமையா, நயனம் ஆசிரியர் ஆதி.இராஜகுமாரன், தமிழகப் பேராசிரியர்
சிற்சபேசன், ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபெற்று தத்தம் கருத்துகளை
பகிர்ந்துகொண்டது பங்கேற்பாளர்களுக்கு பெரும் பலனை கொடுத்தது.
'வல்லினம்' மற்றும் 'செம்பருத்தி' இதழில் ஆலோசகரான எழுத்தாளர்
மா.சண்முகசிவா அவ்வப்போது தனது கருத்துகளைக் கூறியதோடு 'நடையியல்'
தொடர்பாகவும் தனது கருத்துகளைக் கூறினார். வழிபாட்டு ரீதியிலான மொழி மீதான
பற்றை கேள்வி எழுப்பும் வகையில் அறிவியல் தன்மையுடன் மொழி இயங்கும் விதத்தை
இந்தப் பட்டறையின் மூலம் அறிய முடிந்தது.
இந்த நிகழ்வினை வழக்கறிஞரும், செம்பருத்தி நிறுவனருமான திரு. பசுபதி
அவர்கள் நிறைவு செய்து வைத்தார். சமூகத்திற்கு ஆசிரியர்களின் பங்களிப்பின்
அவசியத்தை வலியுறுத்தியவர் அடுத்த தலைமுறையை ஆரோக்கியமான வழிநடத்த அவரும்
சண்முகசிவாவும் நடத்திக்கொண்டிருக்கும் கல்லூரி குறித்தும் கூறினார்.
கல்வியில் பின்தங்கியதால் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்காக
நடத்தப்படும் 'பிரிமாஸ்' கல்லூரி தொடர்பான தகவல்கள் பலருக்கும் புதிதாகவே
இருந்தது.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைவரும்
புதியதொரு விடயத்தினைக் கற்றது முகத்திருப்தியில் தெரிந்தது.
|
|