|
|
தூதோடு வந்த மழை
கவனமின்றி செய்த காரியமொன்று
பிழையாய்ப் போனது.
மழைக்குமுன் திரளும் மேகமாய்
இருண்டு கிடக்குது மனது.
சன்னல் வழியே
சிறகடித்து வந்த காற்று
சில கண்ணீர்த் துளிகளை
தெளித்துச் செல்கிறது.
எங்கோ எவரோ அழுதிருக்கக் கூடும்.
துளிகள் அடர்ந்து
மூடிய சன்னலைத் தட்டுகின்றன.
கதவு திறந்து
குடை விரித்து வெளியேறுகிறேன்.
முழங்கையும் முதுகும்
முழுதாய் நனைந்திருக்க
மயிரும் சேர்ந்து நனைந்தால்
உயிரா போய்விடப் போகிறது?
குடை மடக்கி
இமை தாழ்த்தி
நெற்றிச் சுருக்கம் தளர்த்தி
கை விரித்து நின்று
மழைக்கு என்னை
முழுதாய் எழுதிக் கொடுக்கிறேன்.
நாள நரம்புகளை நிறைத்து
நெஞ்சுக்குள் பொங்கி நுரைத்து
குப்பை கூளங்கள் கழுவிய மழை
சேறாய் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.
வானம் தெளிந்து
இலை தழை துளிர்க்கிறது.
பாரம் குறைந்த மனசு
இலவம் பஞ்சாய் மிதக்கிறது.
|
|