என் வாழ்வில் நான் குழந்தைகளுக்கு வழங்கியிருக்கும்
இடம் மிக முக்கியமானது. எனது வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் அவர்கள்
ஏராளமான பதிவுகளை ஏற்படுத்தி சென்றிருக்கின்றனர். அவர்களில் மிக
முக்கியமானவள் என் அண்ணனின் 5 வயது மகள் இனியவள். மிக குறைந்த
வார்த்தைகளோடு இயங்கும் அவளது உலகத்தில் எப்போதும் எனக்கு ஈர்ப்புகள்
அதிகம். அவளோடு எனக்கு கிடைத்த சில ஈர்ப்புகளை பதிவாக்க முனைந்து பல முறை
தோற்றுப் போயிருக்கிறேன். பதிவாக்க முடிந்த சிலதை மட்டும் இங்கே பகிர்ந்து
கொள்கிறேன்.
குறிப்பு 17
எந்தவொரு முன்அறிவிப்பும்
படபடப்பும் இன்றி
நடந்து கொண்டிருக்கின்றன
அறுவைச் சிகிக்சைகள்...
கைவேறு கால் வேறு தலைவேறாக
கிடக்கும்
பொம்மைகளுக்கு மிக குறுகிய
நேரத்தில் அங்கங்கள் பொறுத்தப்படுகின்றன...
துளியும் இரத்தம் சிந்தும்
அவசியமின்றி
நடந்து முடிந்து விடுகின்றன
குழந்தைகள் தரும் சிகிச்சைகள்...
குறிப்பு 18
மழை எங்கிருந்து வருகிறது
என்ற நச்சரிப்பில் என் காலைத் தூக்கம்
கலைந்து போனது.
கண்களை அகல விரித்தபடி வெளியே
மழை பெய்வதாக சொன்னவள்
விளையாட போகமுடியாத சோகத்தை மறைத்தபடி
மழை வேடிக்கையில் திளைத்திருந்தாள்.
முகம் கழுவி வந்த என்னை முன் கேட்ட கேள்வி துரத்தியது.
மழை வானத்திலிருந்து வருகிறது என்றேன்.
அது எப்படி வானத்திற்குப் போகிறது என்றாள்.
வெயிலில் சூடாகி
நீர் ஆவியாகி
மேலே போய் மேகமாகி
பாரம் தாங்காமல் மேகம்
மீண்டும் மழையாகிறது என்றேன்.
ஏன் மழைநீரில் வானவில் கரைந்து வருவதில்லை என்றபடி
எழுந்து போகிறாள்.
அவளின் கால் சுவடெங்கும் கரைந்து கரைந்து
பதிகிறது வானவில் வண்ணங்கள்
வீட்டின் தரையெங்கும்.
குறிப்பு 19
அது காடுகள் சூழ்ந்த சாலையில்
குழந்தையின்
முதல் பயணம்
கண்கள் விரிய பார்த்து கொண்டு
வந்தவள்
சிங்கத்தைப் பார்த்ததாக சிலிர்க்கிறாள்
வெளியே தூரத்தே ஒரு பசு
புல்மேய்ந்து கொண்டிருந்தது
மட்டும் என்னால் காணக்கூடியதாய் இருந்தது.
குறிப்பு 20
அன்று அவளுக்கு தேர்வு முடிவுகள்
வெளிவருகிற
நாள்.
தன் வழக்கமான
சேட்டைகள் துறந்து
மெளனவெளியில் திரிந்தபடி இருந்தாள்.
எப்போது போகப் போகிறோம்
மிக மெல்லிய குரலில் தன்
அம்மாவோடு அவளது நச்சரிப்பு
தொடர்ந்தபடி
இருந்தன.
எல்லா பாடத்திலும் 100 புள்ளிகள் எடுத்தால்
அத்தை விளையாட்டுப்பொருள் வாங்கித் தருவதாக
சொன்னதை தன் அக்காவிற்கு
நினைவுப்படுத்தியபடி இருந்தாள்.
மொத்த புள்ளியில் 7 புள்ளிகள்
மட்டும் குறைந்திருந்தன.
தட்டிக் கொடுத்த என்னை
தாவி அணைந்தாள் ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளை
கண்களால் அளந்தபடி!
|