|
|
பூமணியின் ‘பேனாக்கள்’
இன்று உறங்க செல்லும் உடல் நாளை காலை எழுமா எழாதா என்ற
உறுதியான பதில் கூட தெரியாத நிலையில் மனித மனங்கள் உலகிலுள்ள அனைத்தையும்
தனதாக்கிக் கொள்ள எண்ணுகின்றன. தன் உடமைகளின் மீது இன்னும் பன்மடங்கு
உரிமையை எடுத்து கொள்கின்றன. உணர்வுகளை விடவும் உடமைகள் முதன்மையாகவும்
முக்கியமாகவும் அமைந்து விடுகின்றன. பணம், பொருள், பதவி என எல்லாவற்றையும்
ஒரெ நொடியில் இடித்து தரைமட்டமாக்குகின்றது இறப்பு. இறப்பென்பதை அத்தருணம்
வரும் வரையிலும் மறந்துவிட்டு எல்லாவற்றின் மீதும் உருவாகும் பற்று கால
ஓட்டத்தினிடையே வளர்ந்த வண்ணம் இருக்கின்றது. பற்றற்ற வாழ்க்கையே நிலையான
பேரின்பத்தை அளிக்கும். ஆனாலும் மனிதர்கள் பற்றற்ற வாழ்க்கையைக்
கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றது
எழுத்தாளர் பூமணியின் ‘பேனாக்கள்’ கதை.
தாத்தா
தன் பேனாவைச் சிரத்தையுடன் பாதுகாக்கின்றார். தன் மகன் உட்பட யாருக்கும்
அதை இரவல் தரமாட்டார். அவரே அப்பேனாவைப் பயன்படுத்துவது குறைவு. தாத்தாவின்
மறைவிற்குப் பின் பேனா அப்பாவிடம் கைமாறுகின்றது. அதில் மகனுக்குச் சற்று
ஏமாற்றம். அவனுக்கும் தாத்தாவின் பேனாவின் மீது ஒருவித ஈர்ப்பு. அவனது
பால்ய மகன் ஒருநாள் பேனாவுக்கு அடம்பிடிக்க தன் அப்பாவின் பேனாவைக்
காட்டுகின்றான். சிறுவன் பேனாவை பழுதாக்கிவிடுகின்றான். அப்பாவுக்கு வந்த
கோபத்தில் பேரனைத் திட்டுகின்றார்; அடிக்கின்றார். பழுதடைந்துவிட்ட
பேனாவைக் கூட மகனிடம் தர அவருக்கு மனம் வரவில்லை. ஒருநாள் மகனின் பேனாவை
இரவல் கேட்கின்றார். பேனா பழுதென காரணம் கூறி இரவல் தர அவனும்
மறுக்கின்றான். அடுத்த சில தினங்களிலேயே அவனது பேனாவையும் அவனது மகன்
பழுதாக்கிவிட கோபமாய் அவனை அடிக்கின்றான். பெரிய பேனா. போடா போ. அன்னைக்கே
ரிப்பேர்னு சொன்னயே. அது போயித் தொலஞ்சா இனியொண்ணு வாங்கிக்கயேன்.” என
வருகின்றது அப்பாவின் பதில்.
தாத்தாவிடம் நித்தமும் கவனமுடன் பாதுகாக்கப்பட்ட பேனா இறப்பிற்குப் பின்னர்
தொடர இயலாமல் போகின்றது. இது இக்கதையில் அப்பா, மகன் மற்றும் அனைவரும்
அறிந்ததே. இதே நிலையை அடுத்தடுத்து நாமும் சந்திக்க நேரும் என்ற எண்ணம்
தோன்றினால் பற்றற்ற வாழ்க்கை அக்கணமே உருப்பெற்றுவிடும். அத்தகைய எண்ணம்
இயல்பாக தோன்றிவிடுவதில்லை. நம் உடமைகளைப் பிறருக்கு இரவல் தருவதை மனம்
விரும்புவதில்லை. இது அனைத்து உறவுகளையும் உள்ளடக்கிய ஓர் உணர்வு.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இங்கே தோல்வியைத் தழுவி நிற்கின்றது.
கதையில் மற்றொரு சிறுப்பகுதியாக பாட்டி-அம்மா-அக்கா-மனைவி எனும் சிறு
பெண்கள் வட்டம் வருகின்றது. பாட்டியின் நகைகளுக்காக பாட்டியின் இறுதி நேர
அவஸ்தைகளில் மேற்குறிப்பிட்டோர் வலிந்து வெகு சிரத்தையுடன் பங்கெடுத்துக்
கொள்கின்றனர். இறப்புக்குப் பின் பாட்டியின் நகைகள் அம்மாவிடம் சென்று சேர
அக்கா அம்மாவிடம் பேச்சைக் குறைத்துக் கொள்கின்றாள். பற்று என்பது ஆண் பெண்
இருவருக்குமே உண்டு. அம்மா மகள், அப்பா மகன் என்ற உறவுகள் பிறப்பிலேயே
தொடங்கி விடுகின்றன. ஆனாலும் இடையில் வந்து புகுந்து கொள்ளும் நிலையற்ற
அம்சங்கள் அவற்றையெல்லாம் உடைத்தெறியும்பொழுது அதன் வலிமை எங்கிருந்து
வருகின்றது என கேள்வி கண்டிப்பாக உருவெடுக்கும். எல்லையற்ற பற்றினை மனிதனே
அதன்பால் செலுத்தி வலிமையைத் தருகின்றான் என்பது என் கருத்து.
தன்னிடம் இல்லாத ஒன்று மற்றொருவரிடம் இருப்பதைப் பல சமயங்களில் மனம்
திருப்தியடைவதில்லை. பொருள் தவிர புகழ், கல்வி, பதவி என உள்ளடக்கியது இது.
தன்னிடமில்லாத ஒன்றைப் பற்றிய திருப்தியின்மையின் காரணமாக பொறாமை
வெளிப்படுகின்றது. தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவரிடம் இருப்பதை அழிக்க
வேண்டுமென மனம் ஆவல் கொள்கின்றது. முயற்சி செய்து இல்லாததை அடைவதைக்
காட்டிலும் பிறரிடம் உள்ளவற்றை அழித்தும் அபகரித்தும் கிடைக்கும் திருப்தி
பன்மடங்கு பெரிதாய் உணரப்படுகின்றது.
பேனா எனும் பொருளை எடுத்துக்காட்டாக கொண்டு மற்ற உடமைகளையும் இங்கே
பொருத்திப் பார்த்தால் இன்னும் கணமான புரிந்துணர்வுகள் பிறக்க
வாய்ப்புண்டு.
‘அவன் மகன் அவருக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தான்’ என்ற கதையின்
கடைசி வரி ஆழ்ந்த சிந்தனைகுரியது. தாத்தா-அப்பா-மகன் என கதையில் வரும்
உறவுச்சங்கிலி அறுபடாமல் தொடர்ந்து கொண்டே இருப்பது போன்றே பொருளியல் மீதான
பற்றும் அகலாத ஒன்றாக தொடர்ந்து கொண்டே வருகின்றது.
|
|