|
|
சூன்யக் குறிப்பு அல்லது பூச்சியம்
“2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் இருந்த பிரதேச
ரீதியான பிரச்சனைகள் அம்பலத்துக்கு வந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு
மாபெரும் கிழக்கு பிளவு நிகழ்ந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சுமார்
ஆறாயிரம் போராளிகளைக் கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் சிறப்புத்
தளபதியான கேணல் கருணா மார்ச் மாதம் 03 ஆம் திகதி இந்த கிழக்குப் பிரிவினைப்
பகிரங்கமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய நிர்வாகக்
கட்டமைப்பிற்காக நியமிக்கப்பட்ட 32 துறைச் செயலாளர்களிலும் ஒருவர் கூட
கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை என்பது முதற்கொண்டு
கிழக்கு மாகாணத்து போராளிகளும் கிழக்கு மாகாண மக்களின் நலன்களும்
புறக்கணிக்கப்படுகின்றன எனும் பல அதிருப்திகள் கேணல் கருணாவால்
முன்வைக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள மறுத்த புலிகளின் தலைமை கேணல்
கருணாமீது துரோகப்பட்டம் சூட்டி கிழக்கு மாகாணப் போராளிகள் மீது படைகொண்டு
ஏவியது. வன்னியில் இருந்து சொர்ணம் தலைமையில் திருகோணமலையை வந்தடைந்த
புலிகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் வெருகல் ஆற்றினை
கடந்து மட்டக்களப்பு மண்ணில் நிகழ்திய கொலைவெறியில் சுமார் 210 கிழக்கு
போராளிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இந்த படுகொலையே வெருகல் படுகொலை என
இன்றுவரை கிழக்குமாகாண மக்களால் நினைவுகூரப்படுகின்றது.”
- ஒரு இணையத் தளச் செய்தி -
கதை ஒன்று
சாச்சாவின் கதையைச் சொல்லப்போகின்றேன். ஈழப்போராட்டம் இப்போது நாடு கடந்த
நிலைக்குப் பரிணாமம் அடைந்து விட்டதால் குளிர் விட்டுப்போய் சிலருக்கு
தைரியம் பிறந்ததே அதுபோன்ற ஒரு துணிச்சல் எனக்கும் ஏற்பட்டதால் இன்று அதைச்
சொல்லிவிடலாம் என்று தோன்றியது. நாளை எப்படியிருக்குமோ யாருக்குத்
தெரியும்?
சஹியை விடுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது சூரியன்
காவத்தமுனைக்குள் லேசாகப் புதைந்துகொண்டிருந்த நேரம். மச்சானின் ‘சுப்பர்
கப்’பை ஒரு அரை வட்டமாகச் சுழற்றி தெருமுனையில் நின்றுகொண்டிருந்த
பெண்களுக்குக் கொஞ்சம் ‘கலர்ஸ்’ காட்டிவிட்டு லேசாக அதைக் கெழித்துக்
கதவைக் காலாலேயே எம்பித் திறந்து நேரடியாக வாசற்படியருகே கொண்டு
நிறுத்தினேன். வாசலில் குடும்பத்துப் பெண்களும் அக்கம்பக்கத்தினரும்
குழுமியிருந்த சூழ்நிலை வழக்கத்துக்கு மாறாகச் சற்று விநோதமாகத் தோன்றியது.
எல்லோரும் என் முகத்தை ஒரே நேரத்தில் நோக்கியது என்னிடமிருந்து ஏதோ
செய்தியைத் தெரிந்து கொள்வதற்கோ அல்லது சொல்வதற்கோ போலிருந்தது. நானே
உம்மாவிடம் கேட்டேன் “என்னம்மா... எதாவது பிரச்சினையா?”
“சாச்சாவைக் காணல்லியாம்... புலிப் பொடியன்மாரு
கடத்திட்டானுகளாம்...உனக்குத் தெரியாதா...? பஸாரால வரல்லியா?”
சிரிப்புத்தான் வந்தது. சாச்சாவைக் கடத்துவதாவது? “ச்சே.. எங்கயாவது ‘ஹயர்’
போயிருப்பான்” என்று அநாயாசமாகப் பதில் சொன்னபோது, எல்லோரும் என்னை
‘உறைப்பாகப்’ பார்த்தார்கள், சில பெண்கள் வாயருகே கையைக் கொண்டு செல்லவும்
முற்பட்டார்கள்.
“என்னடி மக்காளே இது...? உனக்கு ஒன்டும் தெரியாதா? ‘பஸார்ல போய்ப் பாரன்
புதுனத்த. ஊரெல்லாம் அங்கானே கிடக்கு” என்று பல்கீஸ் சாச்சி இடது கையை
இடுப்புக்குக் குறுக்காக மடித்து அதன் மேல் வலக்கையை நிலைகுத்தி இரண்டு
விரல்களைத் தாடையில் வைத்தவாறு சொன்னா. இவ எப்பவும் இப்படித்தான். இரண்டு
அங்குல விடயத்தையும் இரண்டு முழ அளவுக்கு நீட்டிச் சொல்லுவா. “எதுக்கும்
நான் பாத்துட்டு வாறன்” என்றவாறு ‘சுப்பர் கப்’பை முடுக்கினேன்.
எங்கள் வீட்டுச் சந்தி மாறி அங்கிருந்து பார்த்தால் சாச்சாவின் வீடு
தெரியும். அங்கே சனக்கூட்டமிருந்தது. பல்கீஸ் சாச்சி சொன்னது சற்று உண்மை
போலத்தான் பட்டது. அருகே சென்று நிறுத்தியவுடன் யாரிடம் விசாரிப்பது என்று
ஒரே குழப்பமாக இருந்தது. இருவர் மூவர் என்று சிறுசிறு குழுக்களாகப்
பிரிந்து பலர் பேசிக் கொண்டிருந்தார்கள். சாச்சாவின் குடும்பத்து ஆண்கள்
எவரும் அவ்விடத்தில் இல்லாதது எனக்கு உறுத்தியது. வஜிதா மாமி அழுத கண்களோடு
நின்று அந்தத் தெருப் பெண்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தா. அவர்கள்
மண்டையை மண்டையை ஆட்டியபடி உச்சுக் கொட்டியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
பெண்களிடம் சென்று என்னத்தைக் கேட்பது? அங்கு பேசிக்கொண்டு நின்ற ஆண்களில்
எனக்கு நெருக்கமானவர்கள் எவருமில்லை. என்ன நடந்தது என்று கேட்பதற்கு என்
வயதொத்த எவரும் அங்கு தட்டுப்படவுமில்லை. எவ்விடத்தில் சென்று நிற்பது
என்றுகூட நிச்சயமில்லாததால் நிலையற்று அங்குமிங்கும் நடந்தேன். யாராவது
என்னைப் பார்த்துப் புன்னகைத்தால் கூடப் போதும், அவ்விடத்தில் நின்று
கொள்ளலாம் என நினைத்தேன். யாரும் யாரையும் கவனிக்கும் சூழ்நிலை அங்கு இல்லை
என்பதே ஏதோ நடந்திருக்கிறது என்று எண்ணப் போதுமானதாக இருந்தது. வஜிதா மாமி
என்னைக் கண்டுகொண்டு, தலையசைத்துக் கூப்பிட்டா. முழுக்கவும் பெண்களே அவவைச்
சுற்றி நின்றதால் கொஞ்சம் தள்ளி நின்றேன். “போனாக்கள் வந்துட்டாகளான்டு
பாத்துட்டு வா மன...” என்று தேங்கித்தேங்கி வந்த வார்த்தைகளில் சொன்னா.
தலையசைத்து விட்டு நடந்தேனே தவிர எங்கு போய்ப் பார்ப்பது... யார் அந்தப்
‘போன’ ஆட்கள்... அவர்கள் எங்கே போனார்கள்... என்றெல்லாம் எனக்கு விளங்கவே
இல்லை. நானாகவே ‘பஸாரை’ நிச்சயித்துக் கொண்டு ‘சுப்பர் கப்’பை
செலுத்தினேன்.
சரிதான், சாச்சி சொன்னது போலவே ஊர் அங்கு திரண்டிருந்தது. முச்சக்கர
வண்டித் தரிப்பிடத்தில் ஒரு வண்டிகூட இல்லை என்பது விஷயத்தின் தீவிரத்தை
உணர்த்தியது. ‘பஸார்’ப் பள்ளி மதிலிலும் ஜலால்தீன் ஜே.பியின் வீட்டு
மதிலிலும் அநேக மிதிவண்டிகள் சாத்திக்கிடந்தன. அவற்றின் சொந்தக்காரர்கள்
குழுக் குழுவாகப் பிரிந்து நிலைமையை ‘விவாதித்து’க் கொண்டிருந்தார்கள்.
‘மோட்டார் சைக்கிள்’களில் இளைஞர்கள் பாலத்துப் பக்கம் பறந்து
கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ‘குழு’வினருகிலும்
இரண்டிரண்டு நிமிடங்கள் வீதம் செலவழித்ததில் நடந்ததாகச் சொல்லப்படுவதை ஒரு
சட்டகத்துக்குள் அடைக்க என்னால் முடிந்தது. ஆனால் இது எப்படிச் சாத்தியம்
என்றுதான் விளங்கவில்லை. சாராம்சம் இதுதான் – மரவியாபாரிமார் இருவரைப்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ‘ஆட்டோ’வில் ஏற்றிச்சென்றபோது,
அவ்வியாபாரிமாரை விரட்டிவிட்டு சாச்சாவை கடத்திச் சென்றுவிட்டனர் புலிகள்.
தப்பிவந்த அவ்விருவரும் சந்தேகத்தின் பேரில் போலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தப்பிவரும்போது ‘ஆட்டோ’ நிறுத்திய
பக்கத்திலிருந்து இரண்டு வெடிச்சத்தம் கேட்டது என்பது அவர்கள் சொன்ன உபரித்
தகவல்.
ஜௌஃபரின் கடையப் பார்த்து நடந்தேன். இந்த நேரம் பார்த்து ‘சனியன்
காப்பானுகள்’ ஒருத்தனும் அங்கில்லை. எரிச்சலாக வந்தது. எங்கே சென்று
விட்டான்கள்... ஒரு வேளை சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றுவிட்டான்களா?
அப்படித்தான் இருக்கும். ‘சுப்பர் கப்’பை எடுத்துக் கொண்டு பாலத்துப்
பக்கம் வேறு யாரோ ஒருவரால் செலுத்தப்படுபவன் போல சென்றேன். உணர்ச்சிகளை
இனம் பிரித்து அறிய இயலாதவாறு மனமானது கண நேரத்துக்குள் பல்வேறு எண்ணங்களை
உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது. பாலத்தை நெருங்கும் முன்பே கட்டுமுறிவடியால்
சனத்திரள் பொங்கி ‘ஓ’வென்ற இரைச்சலோடு ஊருக்குள் வருவதைக் கண்டேன். சுமார்
இருநூறு முந்நூறு மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், வேறு வாகனங்கள் என்று
பாலம் நிரம்பி வழிந்தது. ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் ஆட்டோவில்
எட்டுப் பேர் என்ற ரீதியில் வந்துகொண்டிருந்தார்கள். ஆட்டோவிலே சிலர்
தொங்கிக் கொண்டே போனார்கள், அவர்கள் போட்டிருந்த சட்டைகளைக் கழற்றி
விசுக்கியவாறு வழிவிடச் சொல்லிக் கூவிக்கொண்டே சென்றார்கள். வீதியோரத்தில்
தரித்து நின்றேன். ஒரு பேரோலம் ஊருக்குள் நுழைவதை எந்த அர்த்ததில் புரிந்து
கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. உதடெல்லாம் உலர்ந்து விட்டது.
சிந்திக்கவே தயங்கினேன். என்னை உரசிச்சென்ற கூட்டத்திலிருந்து என்னை இழுத்த
கைகளோடு இழுபட்டுச் சென்று கொண்டிருந்தேன். எப்போது ‘சுப்பர் கப்’பை
‘ஸ்டார்ட்’ பண்ணினேன் என்பதெல்லாம் நினைவிலில்லை. நண்பர்களைக்
கண்டுகொண்டேன். என்னை இழுத்துச்சென்றது ருவைம், அருகில் ரமீஸ்கானும்
இருந்தான். இப்போது நண்பர்களால் சூழப்பட்ட கூட்டத்துக்குள் நான்
பயணித்தேன். மறுபடியும் ஜௌஃபரின் கடையருகே வந்து நின்றோம் அல்லது நான்
நிறுத்தப்பட்டேன். சனத்திரள் நிற்கவில்லை. ‘பெட்ரோல் செட்’ பக்கம் அல்லது
போலீஸ் நிலையப் பக்கம் இரைச்சல் அடங்காமல் போய்க்கொண்டேயிருந்தது. நான்
கணக்கிட்டதைவிட எண்ணிக்கை அதிகமிருக்கலாம். அநேகமானோர் என் வயதையொத்த
இளந்தாரிகள். ‘இப்படியான’ அசாதாரணமான சந்தர்ப்பங்களின்போதே இவர்களில்
பெரும்பாலானோரை வீதிகளில் காணமுடியும். கூட்டம் கடந்து செல்லவதற்குப் பத்து
நிமிடங்கள் வரை பிடித்தது.
நண்பர்களின் முகங்களில் கலவரம் வெடித்திருந்ததை அவதானித்தேன். ‘வைரவனின்’
உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. “இது செட்டப் மச்சான்...” என்றான்
ஆத்திரமாக. “எது?” என்று நான் கேட்டது நாக்கு வரண்டிருந்ததாலோ என்னவோ
வெளிவரவில்லை. தொண்டையைக் கனைத்துக்கொண்டு மறுபடியும் கேட்டேன். “அவனுகள்
ரெண்டுபேரும் செ... செ...செட் பண்ணிக் கூட்டிக்கிட்டு போயிரிக்கானுகள்..
கொ...கொ....கொண்டுபோய்க் கு..க்கு..குடுத்துப்போட்டு வந்து இப்...இப்ப பொய்
சொல்றானுகள்...” உணர்ச்சிவசப்பட்டால் அல்லது கோபம் வந்தால் வைரவன் இப்படித்
திக்குவான். “சாச்சாவுக்கு என்னயாவது நடந்தா... அவனுகள விடப்படா...
கொ...கொ...கொல்லனும் மச்சான்” என்றான். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.
இப்படி உணர்ச்சிவசப்படும் சந்தர்ப்பங்களில் எதையும் செய்வதற்கு அவன்
யோசிப்பதில்லை. அவனது குணவியல்புகளை நன்கு அறிந்திருந்த சாச்சா சூட்டிய
பெயர்தான் ‘வைரவன்’ என்பது.
கபீர் எதையும் நிதானமாக யோசிப்பவன். “கொஞ்சம் பதட்டப்படாம நில்லு” என்று
‘வைரவனை’ சாந்தப்படுத்தினான். “இவனுகள் செட் பண்ணிக் கூட்டிக்கிட்டுப்
போனயா இல்லையான்டெல்லாம் நமக்கு சரியாத் தெரியா.. ஆனா சாச்சாக்கு ஒன்டும்
நடக்காது...பயப்படத் தேவல்ல...!” என்றான்.
“ப்... ப்... போடா லூசுப் பணியாரம்... சாச்சாட ஆட்டோவப் பாத்தியா? ரெண்டு
வெடிப் பட்ட அடயாளம் இரிக்கி...” வைரவனின் வார்த்தைகளில் கோபம் தெறித்தது
என்றாலும் அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது.
“இல்லடா...! சாச்சாவ சுடல்ல... அது எனக்குக் ‘கன்ஃபோம்’... ஏனென்டா அந்த
ஏரியாவுல எங்கயும் ‘பொடி’ இல்ல... ரத்தமும் இல்ல... சாச்சாவ ஏதோ
விசாரிக்கக் கூட்டிக்கிட்டுப் போயிருக்கானுகள்... விசாரண முடிய
வந்திடுவான்... பாருங்க...” என்று கபீர் திடமாகக் கூறினான். எனக்கும்
அப்படித்தான் பட்டது. புலிகள் சாச்சாவைக் கடத்திச்செல்ல எந்த முகாந்திரமும்
இல்லை. அத்தோடு சாச்சாவுக்கு வாகரைப் பக்கம் சென்று வருவதெல்லாம் மிகச்
சுலபமான காரியம். புலிபாஞ்சகல் பக்கமெல்லாம் போய் வந்த கதைகள் அநேகம்
சொல்லியிருக்கிறான். ஓட்டமாவடி பஸாரில் ‘அவர்கள்’ கொள்வனவு செய்யும்
சாமான்கள் அனைத்தையும் பத்திரமாகக் கொண்டு சென்று அவர்களின் பிரதேசத்தில்
ஒப்படைக்கும் நம்பிக்கையான ஆட்டோ சாரதிகளில் சாச்சாவும் ஒருவன்.
அப்படியிருக்கும்போது அவர்களால் சாச்சாவுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடும்
என்று நான் சந்தேகிக்கவில்லை. இது தெரியாமல் ஊரவர்கள் பண்ணும்
ஆர்ப்பாட்டங்கள் வியப்பைத் தந்தன.
எங்கள் ஊர் இளசுகளுக்கு இப்படியான ‘கொந்தளிப்பு’களில் ஒருவிதக் கிளர்ச்சி
இருக்கின்றது என்பதைப் பலபோது நான் கண்டிருக்கிறேன், பெரும்பாலும் எல்லா
இளசுகளுக்கும் இந்த வயதில் வரும் அதீத ‘சமூகப் பிரக்ஞையே’ இதற்குக் காரணம்
போலும். ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்களில் கிடைக்கும் விடுமுறை அலாதியானது
எனும் எண்ணம் என் பாடசாலை நாட்களில் எனக்கும் இருந்திருக்கிறது.
எதிர்பாராமல் கிடைக்கப்பெறும் ஒருநாள் பாடசாலை விடுமுறை பெறுமதி மிக்கது
எனும் அதே கொண்டாட்ட மனநிலையை இங்கே இவர்களிடமும் காணமுடிந்தது. பெருநாள்
தினங்களில் இதே மாதிரி மூன்று பேர் ஒரு ‘மோட்டார் சைக்கிளில்’ போவார்கள்.
நேற்று நீண்ட நேரம் நான் சாச்சாவுடன்தான் இருந்தேன். கொஞ்சம் பொறுங்கள்,
சாச்சா என்று நான் அழைப்பதைக் கொண்டு ஒரு நடுத்தர வயதுள்ள குடும்பஸ்தனை
நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் இல்லையா? தவறு. என்னை விட ஒரு வயது இளையவன்.
எனக்கு உம்மா வழிச்சொந்தத்தில் சாச்சா முறை. நான் சாச்சா என்று அழைப்பதால்
மற்ற நண்பர்கள் அனைவரும் சாச்சா என்றே அழைத்தார்கள். நாளடைவில் பஸாரிலும்
சாச்சா என்றே அறியப்பட்டிருந்தான். உயர்தரம் படித்து முடித்த கையோடு ஆட்டோ
ஒன்றை வாங்கி உழைக்கத் தொடங்கிக் குடும்பத்தைப் பராமரிக்கத் தொடங்கிய
காரணத்தினால், அவன் மீது அனைவரும் நன்மதிப்புக் கொண்டிருந்தோம்.
எல்லோருக்கும் சேர்த்து செலவழிப்பவர்களில் ஒருவனாக அவன் இருந்தான்
என்பதாலும்.
நேற்று சஹி வருவதாகச் சொல்லியிருந்தாள். சாச்சாவை அழைத்துக்கொண்டு
சென்றிருந்தேன். சஹி அப்போது வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தின் பெண்கள்
விடுதியில் உதவி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தாள்.
வாரத்திற்கு ஒருமுறைதான் வருவாள். ஓரிரு நாட்கள் தங்கிவிட்டுச் செல்வாள்.
மச்சானின் ‘சுப்பர் கப்’ கிடைக்காத சந்தர்ப்பங்களில் எல்லாம் நான்
சாச்சாவைத்தான் கூட்டிச்செல்வது வழக்கம். நேற்றுக்காலை பஸ்ஸில் வருவதாகவும்
காத்திருக்கச்சொல்லியும் தொலைபேசியில் சஹி சொல்லியிருந்ததால் சாச்சாவும்
நானும் ‘டெலிகொம்’முக்கு முன்னால் நின்ற ‘மஞ்சோணா’ மரத்தின் சிறுநிழலில்
ஆட்டோவில் காத்திருந்தோம்.
“என்னாச்சா! சனூன் தலைவர் வாறாராமே...?”
“அவரு இந்தா மூணு மாசமா வாறன் வாறன்டுதான் சொல்லிக்கிட்டிருக்காரு... ஆனா
‘நாசமத்தவரு’ வரமாட்டாரு...” சாச்சாவின் எள்ளல் யாருக்கும் அவ்வளவு எளிதில்
கைவராது. மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவன். சாச்சாவின் ஆத்ம நண்பர்களில்
வைரவனும் தலைவர் என்றழைக்கப்பட்ட சனூனும் முக்கியமானவர்கள். சனூன் மத்திய
கிழக்கில் பணிபுரிந்து கொண்டிருந்தான்.
“இல்லை சாச்சா.. உண்மையாத்தானிரிக்கும்... அவன்ட வாப்பா எனக்கிட்டச்
சொன்னாரு... ஞாயத்துக் கிழமை வாறானாம்...”
“ஏஏஏஸ்ஸ்... வந்தாகன்டாப் பாக்கத் தேவல்ல... அவக வாறத்துக்கிடையில ஒன்டு
நாம வெளிநாட்டுக்குப் போகணும்... இல்லாட்டி ‘மௌத்தாப்’ பெய்த்திடனும்...
நம்மளக் கிடக்கயும் விடமாட்டாக... வெளிநாட்டுக் கத சொல்லிச் சொல்லியே
நம்மளச் சாகடிச்சிடுவாக... கக்கூஸிக்கிப் போறன்டாலும், ‘இதெல்லாம்
என்னாச்சா கக்கூஸி? அங்க இருக்கி கக்கூஸி... பாக்கணும்...’ அப்படின்டுதான்
சொல்லுவாக....” இரண்டு கைகளையும் ஓங்கித் தட்டிச் சிரித்தான்.
இந்த வசனத்தை நான் சொல்லும்போது அதன் சுவை உங்களுக்குப் புலப்படப்
போவதில்லை. சாச்சா அதைச் சொல்லும்போது கேட்கவேண்டும். சிரித்துச்
சிரித்துத் தொண்டையும் கமறியது எனக்கு. முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு,
“சிரிக்கிற விஷயமில்ல மகன் இது... நீங்க வேணும்டாப் பாருங்க...
வெளிநாட்டுக் கதைகளெல்லாம் சொல்லிச்சொல்லியே நம்மளக் கடுப்பாக்குவான்...”
இரண்டு மூன்று ‘செக் பொயிண்ட்’ தாண்டி வரவேண்டியிருந்ததால் சஹி வருவதற்குப்
பத்தரைக்கும் மேலானது. அதுவரைக்கும் இருவரும் அளவில்லாமல் பேசிச்சிரித்துக்
கொண்டிருந்தோம். வீட்டில் கொண்டுவந்து விடும்போது “எப்ப போற?” என்று
சஹியிடம் சாச்சா கேட்டான். “நாளைக்குப் பின்னேரம்”
“சரி.. நான் வந்து கூட்டிட்டுப் போறன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு என்னைப்
பார்த்துக் கண்ணடித்து “அப்ப இரவைக்கி ‘ரூம்’ பக்கம்
வரமாட்டிங்களாக்கும்....?” என்று மெதுவாகக் கூறி உரத்துச் சிரித்துவிட்டுச்
சென்றான்.
இன்று வேறெங்கோ அவன் ‘ஹயர்’ சென்றுவிட்டதால் நான் மச்சானின் மோட்டார்
சைக்கிளில் சஹியை ஏற்றிக்கொண்டு சென்று விடுதியில் விட்டுவிட்டு வந்தால்
இங்கே இந்தக் கலவரம். போலிஸார் சாச்சாவின் முச்சக்கர வண்டியைக் கைப்பற்றி
வந்திருந்தார்கள். பின்னிருக்கைக்கு ஏறும் வழியோரத்தில் ‘பெயிண்ட்’
சிராய்க்கப்பட்ட அடையாளமிருந்தது. நிச்சயமாக அது துப்பாக்கி ரவையொன்று
உராய்ந்து சென்ற அடையாளமேதான்.
சூன்யக் குறிப்பு அல்லது பூச்சியம்
நீராடுதல் என்பது தினமும் நீரில் குளிப்பதை உரைப்பதன்று. அது புறத்தே உள்ள
அழுக்கை நீக்குவது. அதனால் தான் ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்றும்
குறிப்பிடப்படுகிறது. நீராடுதல் என்பது ‘சனிநீராடு’ எனக் குறிப்பிடும்
நீராடலையாகும். நீராடுதல் வாரம் ஒன்றுக்கு இருமுறை நீராட வேண்டுமென்று,
‘வாரம் இரண்டு’ என்று குறிப்பிடக் காணலாம். அவ்வகை நீராடலால் ஏற்படும்
பயனைப் போகர் குறிப்பிடக் காணலாம். நெல்லி, கடுக்காய், மிளகு, மஞ்சள்,
வேம்பின் வித்து ஆகிய ஐந்துடன் கையான் தகரைச் சாறும் கூட்டி அரைத்து
தலைக்குத் தேய்த்து வாரம் இருமுறை நீராடி வந்தால் கண் குளிர்ச்சியாகும் கண்
எரிச்சல் நீங்கும், தலைவலி போகும், மண்டைக் குத்து தீரும். உடல்
கல்தூண்போலாகும் என்று, நோயிலிருந்து பாதுக்காத்துக் கொள்வதுடன் உடலைப்
பேணவும் வழி உரைக்கப் பட்டது. இம்முறையைக் ‘காயாதி கற்பம்’ என்பர்.
இன்னொரு கதை
வாகரை செல்லும் நெடுஞ்சாலையில் மாங்கேணிக்கு அருகே இடது பக்கம் பிரிந்து
செல்லும் சாலை மதுரங்கேணிக்குளம் நோக்கிச் செல்கின்றது. சாலை பிரியுமிடம்
கிரிமிச்சைச் சந்தி. கிரிமிச்சை இரண்டாம் கட்டையில் எண்பதுகளில் எங்கள்
குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னாசித்தோட்டம் ஒன்றிருந்தது. எனக்குத்
தெரியாது. நான் அப்போது கைக்குழந்தை. மாமா சொல்லியிருக்கின்றார். அறுவடை
நடக்கும் காலங்களில் குடும்பத்திலுள்ள அனைவரும் சென்று அறுவடையில்
ஈடுபடுவார்கள். ஒத்தைக் கரத்தை வண்டியில் அன்னாசிக்காய்களை ஏற்றிவந்து
பெரியம்மா வீட்டுத் திண்ணையில் சொரிவார்கள். கூடவே கரும்பு, மரவள்ளி,
கச்சான் போன்றவையும். பலமுறை இதைப்பற்றி உம்மாவும் மாமாவும் சொல்லக்
கேட்டுக்கேட்டு, ஏதோ நானே அந்த ஒத்தைக் கரத்தை வண்டியை செலுத்திவந்தது போல
ஒரு மனப்பதிவு என்னுள் கிளைத்திருந்தது. ஆனால் அந்த செம்மண் பூமியை
வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்திருக்கவில்லை. எப்படியாவது பார்த்துவிட
வேண்டும் என்ற எண்ணம் பலபோது தோன்றியிருக்கின்றது. இரத்தம் உறைந்து
போகச்செய்யும் திகிலோடு, காணாமல் போன சாச்சாவைத் தேடும் நோக்கில் இந்த
மண்ணில் கால்பதிப்பேன் என்ற கனவு ஒருமுறையேனும் எனக்கு வந்ததில்லை.
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வீடுகளோ குடிசைகளோ எதுவுமேயில்லை.
வயற்பரப்புகள் காய்ந்து கிடந்தன. பற்றைகள். காடுகள். மாபெரும் மௌனம் இந்த
அந்திப் பொழுதின் காற்றில் கலந்திருந்தது. பற்றைகளுக்குள் இறங்கிப்போவது
ஆபத்து என உடன்வந்த இராணுவ வீரர்கள் எச்சரித்தும் கேளாமல் முதலில் ‘வைரவன்’
அந்தப் பற்றைக் காட்டுக்குள் காலடி வைத்தான். சாச்சாவின் பெயரைக்
கூவியழைக்கத் துவங்கினான். காற்றில் கலந்திருந்த மௌனத்தின் வெறுமையை அவனது
ஏங்கிய குரல் தகர்த்தபோது எனக்கு உடலெல்லாம் சிலிர்த்தது. உடனே அருகில்
நின்ற இராணுவ வீரனொருவன் திரும்பிவிடுமாறு கூறினான். ஆனால் வைரவன்
கேட்டானில்லை. “அவனுகளுக்குப் ப...ப...ப...பயமாருந்தாப்
போப்...போப்...போகச்சொல்லு” என்று ஆவேசமாகக் கத்தினான். அவனது கூக்குரலில்
பொதிந்திருந்த உணர்வை முன்னால் நின்ற இராணுவ வீரன் புரிந்துகொண்டிருக்க
வேண்டும். அவன் அசைவற்று நின்றான். பின்னால் நின்ற அதிகாரித் தரத்திலுள்ள
ஒருவன் வந்து சிங்களத்தில் ஏதோ கூறி விளக்க முற்பட்டான். இப்பகுதியில்
நிலக்கண்ணி வெடிகள் இருக்கக்கூடும் என்பதுதான் அதன் சாராம்சம் என்பது
எனக்கு விளங்கியது. ஆனால் அதைக்கேட்கும் மனநிலையைக் கடந்திருந்த எங்களை
மரக்கறிக்கடைத் தாஜுதீனின் குரல் உசுப்பிவிட்டது. “ஃபீ ஸபீலில்லா... என்ன
வாறன்டு பாப்பம்... இறங்குங்கடா!”
அதற்குமேல் இராணுவ வீரர்கள் எவரும் எதுவும் பேசவில்லை. சுமார் நாற்பது
ஐம்பது பேர் பற்றைக் காடுகளுக்கூடாகத் தேடத் தொடங்கினோம். பல திசைகளிலும்
சாச்சாவின் பெயர் கூவப்பட்ட ஓசையில் காற்றின் அமைதி கிழிந்தது.
கிரிமிச்சைப் பாடசாலை தாண்டி சற்று உள்ளே நுழைகையில் அகதி முகாம் இருந்தது.
இருள் மூடிக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதிலும்கூட அங்கிருந்த மக்களின்
முகங்களில் தேங்கிநின்ற உணர்வைப் படமெடுக்க முடிந்தது. அச்சம்! வேறெந்தத்
தத்துவார்த்த வார்த்தைகளில் விளக்கினாலும் சரி, கடைசியில் அச்சம் என்ற
ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிடக்கூடிய ஒரே உணர்வுதான் அவர்களின்
முகங்களில் வழிந்தது. வெருகல் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த தமிழ்
மக்கள். பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், வயோதிக ஆண்களே
நிறைந்திருந்தனர். இளைஞர்களைக் காண்பது அரிதாக இருந்தது. இராணுவத்தின்
துணையோடு ஒரு இளைஞர் பட்டாளம் காடுகளினூடாகப் பரவி வந்தது அவர்கள்
முகத்தில் இன்னும் ஏகக் கிலியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சில
சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் தாய்மாரின் வயிற்றோடு ஒன்றி அவர்களின்
ஆடைத் தலைப்பைக் கைகளால் இறுகப் பற்றிப்பிடித்தார்கள். அந்தத் தாய்மாரின்
விரல்களும் தத்தமது குழந்தைகளின் தோளையோ, தலையையோ அழுந்திப் பிடிக்கத்
தவறவில்லை என்பதைக் கவனித்தேன். எவ்வளவு பேருக்குத்தான் அவர்கள்
பயப்படவேண்டியிருக்கிறது?
இராணுவத்தினரும் எங்களுடன் வந்த சிலரும் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.
எந்தத் தயக்கமுமின்றி அவர்கள் சொன்ன ஒரே பதில் எங்களுக்கு எதுவும் தெரியாது
என்பதுதான். ஒருவேளை அவர்களின் அச்சத்தைப் போக்கி ஆதரவு கூறிக்
கேட்டிருந்தால் ஏதாவது தகவல் பெயர்ந்திருக்க்க் கூடும். பாதிக்கப்பட்ட
மக்களிடம் பேசி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது ஒரு கலை என்று சனா
சொல்வான். இன்று அவன் எங்களுடன் வரவில்லை. சாச்சா காணாமல்போன செய்தி
அவனுக்குத் தெரிந்திருக்கவும் நியாயமில்லை. அவன் தனது மனைவி சஹியைப்
பல்கலைக்கழக விடுதியில் கொண்டுபோய் விடப்போவதாகக் கூறிச்சென்றான். என்.ஜி.ஓ
ஒன்றில் சமாதானம் குறித்த ஏதோ ஒரு செயற்றிட்ட்த்தில் பணி புரிவதால்
இம்மாதிரி அகதிகளாக இடம்பெயர்ந்து வந்த மக்களிடம் பேசுவதிலும், அவர்களை
ஆற்றுப்படுத்துவதிலும் சனா மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தான். ஒருவேளை இங்கு
அவன் வந்திருந்தானென்றால், இங்கே உள்ளவர்களோடு நைச்சியமாகப் பேசி தகவல்
எதையாவது பெற்றிருக்கலாம். குறைந்தபட்சம் கொண்டுபோகும்போது சாச்சா உயிருடன்
இருந்தானா என்பதையாவது.
அந்த மக்கள் கிலிகொண்டு மிரண்டார்களே தவிர வேறெதுவும் அவர்களுக்குத்
தெரிந்திருக்கவில்லை. அல்லது அவர்கள் சொல்லவில்லை. சில இராணுவச்
சிப்பாய்கள் அதட்டிக் கேட்கவும் செய்தார்கள். ம்ஹும்... பலனில்லை. முகாமைச்
சுற்றிச் சுற்றி அச்சிப்பாய்கள் தேடிச்சலித்தார்கள். இருட்டுக்
கவியத்தொடங்கியது. சீக்கிரம் பார்த்துவிட்டுத் திரும்பி விடவேண்டும்
என்பதிலேயே அவர்கள் கவனமாக இருந்ததை அவதானித்தேன். திரும்புவதைத் தவிர
வழியிருக்கவில்லை. அகதிகளின் கூடாரங்களுக்குள் நுழைந்து தேடவேண்டும் என்று
வைரவன் சத்தமிட்டான். அதை யாரும் கணக்கிலெடுக்கவில்லை. திரும்பி வரும்போது
ஊர்ப் பக்கமிருந்து நிறையப்பேர் வந்தவண்ணமிருந்தார்கள். வந்தவர்களில்
யாராரோ கேள்வி கேட்டார்கள், யாராரோ பதிலளித்தார்கள். சாச்சாவின் ‘ஆட்டோ’
நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து போலிஸார் அதை எடுத்துச்செல்ல
முற்படுவதைக் கண்டேன். தன்னிச்சையாகக் குனிந்து எனது கண்கள் ஆட்டோவுக்குள்
சாச்சாவைத் தேடின.
சூன்யக் குறிப்பு அல்லது பூச்சியம்
குஞ்சன்குளத்திலிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் வரும் வயற்பரப்பைத்
தாண்டி சில கிலோ மீற்றர்கள் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில், தாக்குதல்
ஒன்றை மையமாகக் கொண்டு பதுங்கியிருந்த வன்னிப்புலிகள் மூவர், புதர்
ஒன்றிற்குள் ‘லெமன் பஃப்’ பிஸ்கட்டும் ‘ஃபன்டா’ பானமும் உட்கொண்டவாறு தம்மை
மறந்திருந்த நேரத்தில் கருணா அணியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதலை வெற்றிகரமாக முடித்த கருணா அணியைச் சேர்ந்த இருவரும் தங்களை
ஏற்றி வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி ஓட்டமாவடியூடாகச் சென்று வாழைச்சேனைப் பஸ்
நிலையத்தில் சனக்கூட்டத்திற்குள் கலந்து மறைந்தனர். நமக்கு வேலை மிச்சம்.
-சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு இராணுவப் புலனாய்வுத் தகவல்–
கதையில் வந்த ஒருவனின் கதை
மூன்று வருடங்களின் பின் ஊரைப் பார்க்கப்போகிறேன் என்ற சிலிர்ப்பு அன்றைய
இரவுப் பிரயாணத்தில் என்னைத் தூங்கவிடாமல் செய்திருந்தது. குடும்பத்தினரைப்
பார்க்கப்போகின்றேன் என்ற ஆவலைவிட சகாக்களைக் காணவேண்டும் என்ற உணர்வே
மேலோங்கி நின்றது. அவர்களிடம் கேட்கவும் சொல்லவும் என்னிடம் இப்போது நிறைய
சேதிகளுண்டு. ஆனால், எவ்வளவோ சந்தோஷமான எதிர்பார்ப்புகளுடன் ஊர்வந்த
எனக்கு, பஸ்ஸிலிருந்து இறங்கியவுடனேயே இப்படியொரு அதிர்ச்சியான செய்தி
காத்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சிபாயா ஹோட்டலின் முன்னுள்ள
நடைபாதைக் கட்டில் நண்பர்கள் அனைவரும் அமர்ந்திருந்த்தைப் பார்த்தவுடன்,
நான் வருவதை எப்படியோ தெரிந்துகொண்டு பஸ்ஸை விட்டிறங்கும் எனக்கு
அதிர்ச்சியளிக்கும் நோக்கத்தோடு இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்றே
நினைத்தேன். இந்தப் பின்னிரவின் பனியில் என் வரவை எதிர்பார்த்துக்
காத்திருக்கும்... என்னே நட்பு....? ஆனால், நட்பின் சாயல் மறந்த முகங்களில்
உறைந்திருப்பது வேறொன்று என நான் நிதானிப்பதற்குள் “வந்துட்டீங்களா
தலைவர்...?” எனப்பாய்ந்து என்னை அணைத்த வைரவன் குலுங்கித் தேம்பினான். நான்
வெளிநாடு போகும்போதும் இதே அணைப்புடனும், கேலி அழுகையுடனுமே என்னை
வழியனுப்பினார்கள். அதே வகை அழுகையே இது என நினைத்த எனக்கு “சாச்சாவைக்
கொண்டு பெய்த்தானுகள் தலைவர்...” என்ற அடுத்த வாக்கியம் திடுக்கிடலைத்
தந்தது. என்ன வகையான வரவேற்பு இது? இவர்கள் என்னை வரவேற்க வரவில்லை என்பது
புரிந்தது.
அந்தப் பனியில் வீதியோரத்தில் அமர்ந்து அனைத்தும் கேட்டறிந்த பின், என்னால்
எதையும் அவ்வளவு இலகுவாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. இவர்கள் சொல்லும்
சேதிகளில் ஒரு விடயக்கோர்வை இல்லை. துண்டு துண்டாக இருந்தது. ஒருத்தன்
பேசும்போது இன்னொருத்தன் குறுக்கிட்டுப் பேசினான். சிலர் உணர்ச்சி
வசப்பட்டு அழவும் செய்தனர். சனா வெறித்துப்போய் உட்கார்ந்திருந்தான்.
ஜெஸீர், “எல்லாத்தையும் காலையில பாத்துக்கலாம், முதல் வந்தவனை வீட்ட
அனுப்புங்க” என்று எனது பெட்டிகளைத் தூக்கினான். நானும் கூடவே இருப்பதாகச்
சொல்லியும் விடவில்லை. ‘நாங்க தூக்கம் வராம இஞ்ச வந்து கிடக்கம், நீ
பிரயாணக் களைப்பில இருப்பாய். உங்கட வீட்டயும் உன்னப் பாத்துக்கிட்டு
இரிப்பாக... நீ கிளம்பு’ என்று கூறிச் சைக்கிள்களில் ஏற்றிச்சென்று
வீட்டில் விட்டார்கள். வீட்டாரின் குசல விசாரிப்புகள், கட்டியணைப்புகள்
எதுவும் இதமாக இருக்கவில்லை. விடிவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே
இருந்தன. உறக்கம் வரமறுத்தது.
சூன்யக் குறிப்பு அல்லது பூச்சியம்
“இரண்டு பலம் கொண்ட யானைகள் மோதிக்கொள்ளும்போது இடையிலுள்ள சில தகரைப்
பற்றைகள் மிதிபட்டு அழியத்தான் செய்யும்”
-பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரம்-
மற்றொருவனின் கதை
இலேசாக இருள் பிரியத்தொடங்கியிருந்தது. பனிப்புகை இருளுடன் கலந்து
அமானுஷ்யமாகக் குளிர்ந்தது. நேற்று வந்து பழக்கப்பட்ட பாதைகளில்
நடந்துகொண்டிருந்தோம். இரவெல்லாம் தூக்கமில்லாமல் போனதால் கண்கள் எரிந்தன.
அகதி முகாமிருக்கும் இடத்தையடைய இன்னும் கொஞ்ச தூரம் நடக்கவேண்டும். இந்தப்
பகுதியில்தான் எங்கோ தங்களுடைய அன்னாசித் தோட்டமிருந்தது என்று நேற்று மாலை
வரும்போது பைரூஸ் கூறியிருந்தான். ஆட்டோ கிடந்த இடத்தைத் தாண்டிச்
சென்றுகொண்டிருக்கையில் கறுத்த தடித்த உருவமொன்று எங்களை நோக்கி
வந்துகொண்டிருந்தது. தொட்டில் ஊஞ்சல் ஆடும்போது மேலிருந்து கீழ்நோக்கி
வருகையில் வயிற்றில் ஒருமாதிரிக் காற்றடைக்குமே அப்படியொரு உணர்வு
ஏற்பட்டது எனக்கு. கிலி. அனைவரும் சற்று நேரம் அப்படியே அசைவற்று
நின்றுவிட்டோம். பயமும் குளிருடன் கலந்து எலும்புகளை விறைக்கச்செய்யும்
இந்த வைகறையில் இந்தக் காட்டுக்குள்ளிருந்து யார் வரக்கூடும் என்ற
யோசனையோடும் ஒரு தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய உடனடித் தைரியத்தை உடல்
முழுதும் ஏதேதோ சுரப்பிகள் கணவேகத்தில் சுரந்து இரத்தம் சூடேறுவதை
உணர்ந்தேன். எங்களை நோக்கி நேராக வந்த அந்த உருவம் மெல்லத் தெளிவாகத்
தெரிந்ததும் “டேய்... உமறுக் காக்காடா!” என்று வைரவன் உரத்துக் கூவினான்.
இந்தக் கூவலைக் கேட்ட பின்னர்தான் என் பார்வை சற்றுத் தெளிவடைந்ததை
உணர்ந்தேன். இப்படி அசாதாரணமான இந்தப் பயம் ஏற்பட்டபோது கண்களில் சற்று
நீர் சுரந்தது ஏனெனப் பிடிபடவில்லை. இந்த மனுஷன் எங்களுக்கு முன்பே
வந்துவிட்டாரே என வியந்து அவரை அணுக, அவர் யாதொன்றும் கூறாமல் வலது கையை
அவர் வந்த திசையை நோக்கி நீட்டினார். எதுவும் தெளிவாக விளங்கவில்லை.
பனிமூட்டம் மறைத்திருந்தது. “என்ன...?” என்ற கேள்விக்கும்
பதிலளித்தாரில்லை. ஏதோ புரிகிறாற்போலிருந்தது. மெல்ல எட்டு வைத்து அவர்
காட்டிய திசையில் நடந்தேன். செம்மண் சாலையோரம்... நெஞ்சு சில்லிட்டது....
என்னை மறந்து அதை நோக்கி ஓடினேன். என் பின்னால் பலரும் ஓடிவரும் ஓசையோ
அல்லது என் இதயத்துடிப்போ தடதடவென உரத்துக் கேட்டது.
உமறுக்காக்காதான் ஒரு பழைய இற்றுப்போன பாய் ஒன்று எங்கோ கிடக்கக் கண்டு,
அதைக்கொண்டு மூடிமறைத்தாராம் என்று பிறகு கேள்விப்பட்டேன். அருகே
ஓடிவிழுந்து முழந்தாளிட்டு அதை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். என்
தாடைகள் குளிரிலும் அதிர்ச்சியிலுமாக இறுகிக்கொண்டிருந்தன. தலை பாரமாகியது.
பாயை விலக்கும் தைரியமெல்லாம் தோன்றவில்லை. கால்கள் வெளித்தெரிந்தன.
வெள்ளையில் ஏதோ ஒரு நிறக்கோடுகள் போட்ட சாரம் முழங்கால் வரை
உயர்ந்திருந்தது.
சூன்யக் குறிப்பு அல்லது பூச்சியம்
“நாங்கள் வழக்கமாக மரம் வெட்டும் தொழிலைச் செய்பவர்கள். புலிகளுக்கும்
இராணுவத்தினருக்கும் கடந்துவரும் வழியில் எதிர்ப்படும் போலீஸாருக்கும் பணம்
கொடுத்து இத்தொழிலைச் செய்து வருகின்றோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு
ஜீவனோபாயம் இல்லை. குறித்த சம்பவம் நடந்த அன்று மதுரங்குளத்தைத்
தாண்டியுள்ள காட்டுப்பகுதியில் அறுத்துப் போடப்பட்டிருந்த மரங்களை ஏற்றுவது
தொடர்பாக அங்கு செல்ல வேண்டியிருந்ததால், ‘ஆட்டோ’ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி
அங்கு சென்றோம். செல்லும் வழியில் இடைமறித்த ஆயுதமேந்திய புலிகளில் சிலர்
எங்களையும் ஆட்டோ சாரதியையும் விசாரித்துவிட்டு ஆட்டோ சாரதியைத் தங்களோடு
வருமாறு வற்புறுத்தி எங்களை ஓடிச்செல்லுமாறு விரட்டியடித்தார்கள். இதைத்
தவிர, குறித்த ஆட்டோ சாரதியைத் திட்டமிட்டு நாங்கள் அழைத்துச் சென்று
புலிகளிடம் ஒப்படைத்தாகச் சொல்லப்படுவதற்கும் எங்களுக்கும் எந்தத்
தொடர்புமில்லை.”
-சம்பவம் இடம்பெற்றபோது, ஆட்டோவில் சென்றதாகக்
கருதப்படும் இரண்டு மரவியாபாரிகளினது இணைந்த வாக்குமூலம், வாழைச்சேனைப்
போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது–
எல்லாக் கதையிலும் வந்தவனின் கதை
ஜெஸீர் செயலற்றுப் போய் உட்கார்ந்திருந்தான். இல்லை முழங்காலில்
குந்தியவாறு இருந்தான் என நினைக்கிறேன். தலையை வான் நோக்கி
வெறித்திருந்தான். நான் ஓடிப்போய்ச் சறுக்கி முழங்கால் சில்லுகள் கிறவலில்
தேய்பட விழுந்தேன். என் தாடை எலும்புகள் பிரிந்து தண்ணீருக்கு ஏங்கும்
நாய்போலத் தவித்து மூட மறுத்தன. இப்படி சில நேரங்களில் நிகழும். அழுகை
முட்டிக்கொண்டு வந்தாலோ, கோபம் கொப்பளித்தாலோ தாடைகள் விரிந்து நாக்கு
உள்வாங்கி சொற்கள் வெளிவர மறுக்கும். அப்படியே சொற்கள் வெளிவந்தாலும்
திக்கித் திக்கியே வரும். நாக்கு மேலன்னத்தைத் தொட்டுத்தொட்டுச் சொற்களைத்
தேடுவதால் “ச்த்..ச்த்..ச்த்..” என்ற ஒலி முதலில் பிறந்த பின்னரே
வார்த்தைகள் உடைந்து வெளிப்படும். “சாச்சா” எனும் அலறலும் அப்படித்தான்
அப்போது வெளிப்பட்டது.
அது ஒரு கரைந்து இற்றுப்போன பாய். நடுங்கும் கைகள் என்ன தைரியம் கொண்டோ அதை
சரேலென விலக்கியபோது முகம் மல்லாந்திருந்தது. எடுப்பான பற்கள்
துருத்திக்கொண்டு தெரிய வாய் இறுதித் தருணத்து வலியின் வசப்பட்ட பாவனையோடு
பிளந்திருந்தது. வலது கழுத்தோரம் பிளந்திருக்க இன்னும் செம்மண் நிறத்தில்
ஊர்ந்து வெளிவருவது என்ன? இரத்தமா? திரள்களாக? இல்லை.... முசுறுகள்...!
பிளவை மொய்த்து ஊர்ந்துகொண்டிருந்தன. “ஹெ....ஏ....ஏ....ச்சா...ஏ...ஏ...”
என்று விநோத ஒலிகளை எழுப்பியவாறு ஓலமிட்டுக்கொண்டே கையினால் முசுறுகளைத்
தட்டத்தொடங்கினேன். முசுறுகள் சற்று ஈரலிப்பாக என் கைகளில் கொளகொளத்து
விரலிடுக்குகளில் ஊர்ந்து என் நாளங்களில் விறுவிறுவென்று நுழைந்து வேகமாக
ஓடத்தொடங்கி மூளையெல்லாம் முசுறுகளின் குறுகுறுப்பை உணர்ந்தேன். கண்களை
நீர்ப்படலம் மறைக்க ‘தூங்கல் பரிசாரியாரின்’ சாத்தாவரி லேகியத்தைப்
போட்டதும் நம் கால்களிடையில் இருக்கும் பூமி அப்படியேயிருக்க உடல் மட்டும்
கனவேகமாய்ப் பூமியை விட்டு நழுவுவது போல சாச்சாவின் உடலருகிலிருந்து
நழுவிக்கொண்டிருந்தேன். அவ்வாறு இல்லையேல், ஒரு நாலைந்து பேர் சேர்ந்து
என்னைப் பின்னோக்கி இழுத்தார்கள் எனவும் கொள்ளலாம். இழுத்தவர்களை
உதறியபடியே எனது கைகள் காற்றில் முசுறுகளைத் தட்டிக்கொண்டேயிருந்தன.
தாடைகள் ஒட்டமறுத்தன.
சூன்யக் குறிப்பு அல்லது பூச்சியம்
கொன்ன வாயன் பேச்சக் கேட்டு
குழந்தப்புள்ள நீ
குமுறிக் குமுறிச் சிரிப்பாயே...
இசுராயீல் கொண்டு போறாகன்டு - நாஞ்
சொல்லிச் சொல்லியே
உன்ன வழியனுப்பி வச்சேனே...
கூட்டாளிமாரையெல்லாம்
கூடாதே செடியா என்டு
குறிப்பான புத்திமதி சொன்னாயே...
கல்லாத வா(ர்)த்தையெல்லாம்
கத்துத் தந்த சாச்சாவே –
மண்ணால மூடிக்கிட்டு
தனியப் போயிப் படுத்ததென்ன...
கபுறச் சுத்தித் தகரைப் பத்தை
கபுறுக்குள்ள ஆலம் வித்து
உன்னைச் சொல்லிக் கத்தக்கொள்ள
திக்குதுடா என்ட நாக்கு!
-இது வைரவன் பாடிய ஒப்பாரி அல்லது யாரோ ஒரு நண்பன் எழுதிய கவிதையாக
இருக்கலாம். சரியாக நினைவில் இல்லை –
மறுபடியும் கதை ஒன்று
அந்த இரவு கொடூரமாக எங்கள்மீது விரிந்திருந்தது. விளையாடித் தேய்ந்த
தாள்கூட்டத்தின் மேற்பரப்பழிந்த தாள்கள் விசிறியெறியப்பட்டது போல
தண்டவாளங்களில் பரவியும் சுற்றியும், ஒருவன் தோளில் இன்னொருவன் சாய்ந்து
கொண்டும், தனியாகவும் கிடந்தோம். வைரவனைச் சுற்றி எப்போதும் இரண்டொருவர்
இருக்க வேண்டியேற்பட்டது. அவனை அடக்கச் சிரமப்பட்டோம். மறை கழன்றவனைப்
போலாகிவிட்டிருந்தான். அவ்வப்போது “முசுறு... முசுறு” என்றபடி தனது
கழுத்து, பிடறியெல்லாம் அறைந்தான். முன்னாலிருப்பவர்களையும் சிலபோது
மிரட்சியோடு பார்த்து அவர்களின் கழுத்திலும் முசுறு தட்டத் தொடங்கினான்.
மனவெழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் அவனைப்
பார்த்துவிட்டுத் தங்களைப் பற்றிப் பெருமிதம் கொண்டிருக்கவும் கூடும்.
எனக்கோ அவனைப்போல் தண்டவாளச் சக்கைக் கற்களில் புரண்டு அழமுடியவில்லையே
என்ற ஏக்கம் நேரம் செல்லச்செல்ல வெட்கமாக மாறிக்கொண்டிருந்தது. “சாதலும்
புதுவதன்றே...” என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகள் எனக்குத்
தெரியும். அது இயல்பானது. மூதறிவு மிக்கது. ஆனால் அது நிகழும் வழிகளில்
அபத்தமானதும் கூட. அர்த்தம் பெறாத வாழ்வின் முடிவு தன் கோரப்பற்களைக்
காட்டி நம் அருகாமையில் நின்று சிரிக்கும்போது, “நீர் வழிப்படூஉம்
புனைபோலாருயிர் முறைவழிப்படூஉம்” என்று சொன்ன பூங்குன்றனைக் கேட்க வேண்டும்
– முறை வழிப்படுவதென்பது இதுதானா என்று.
பல சமயங்களில் நம் தேர்வே நம்மை வழிநடத்தும் கருவி. ஆனால் நாம் தேர்வு
செய்யாத சூழ்நிலைகளின் பிடியில் வாழவும் சாகவும் நிர்ப்பந்திக்கப்படுவதில்,
விதியென்று சொல்லப்படுவதற்கும் நம் தேர்வுக்கும் இருக்கும் முரணுறவு தன்னை
ஏற்றுக்கொள்ளச் செய்வதில் எம்மிடம் வெற்றிபெற்றே தீர்கிறது. பூமியில்
எங்கேனும் ஒரு ஓரத்தில் நிகழ்ந்த செயலொன்றின் எதிர்வினைத் தாக்கமாக உங்கள்
மரணம் சம்பவிக்கிறது. அதற்கான விஞ்ஞானக் கோட்பாடுகளை நீங்கள்
ஏற்றுக்கொள்ளவும் கூடும். அல்லது அதனை மறுப்பதற்கான விதியும் உங்கள்
கைகளிலேயே இருப்பதாக நீங்கள் நம்பவும் முடியும். ஆனால், மரணித்தலின்
நியாயமும் காரணமும் எல்லா நேரங்களிலும் உங்கள்முன் வைக்கப்படுவதில்லை.
அவ்வாறு வைக்கப்பட்டாலும் அவற்றை நிராகரிக்கும் உரிமை உங்களுக்கில்லாமல்
பெரும்பாலும் அபத்தமாக மரித்துப்போகிறீர்கள். இதில் நகைப்புக்குரிய விடயம்
என்னவெனில், உங்கள் மரணத்துக்கான நியாயமும் காரணமும் என்று பிறரால்
கற்பிக்கப்படுபவைதான். நீங்கள் உயிருடன் இல்லாததால் உயிருடனிருப்பவன்
அவற்றை நம்புகிறான், நிராகரிக்கிறான், எதிர்த்து வாதிடுகிறான்,
குறைந்தபட்சம் ஒரு சமரசத்துக்காவது அவனால் வந்துவிட முடிகிறது. ஆனால்,
நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் ஆணுறுப்பு ‘பூட்ஸ்’ அணிந்த கால்களால்
நசுக்கப்பட்டு அல்லது சிகரெட் லைட்டரால் சில இடங்களில் பொசுக்கப்பட்டு
அல்லது அடிவயிறு கன்றிப் போகுமளவுக்கு மிதிக்கப்பட்டு அல்லது உடலின் பல
பாகங்களிலும் இருந்து வெளிவரும் இரத்தத்தின் அளவை உங்களுக்குக் காட்டிப்
பயமுறுத்தும் விதமாக சிறிய கத்தியின் கூரிய முனையினால் துளைகளிடப்பட்டு
அல்லது தொண்டைக் குழியோரத்தில் பிளக்கப்பட்டு நீங்கள் கடைசிக்கணத்தின்
வலியிருந்து விடுபடுவதற்காக ‘இப்போது உயிர் போனால் நன்றாக இருக்குமே’ என
எண்ணி இறுதிப்பெருமூச்சில் வலியிலிருந்து விடுபட்டு ஆறுதல்
பெறுவதற்கிடையில் அந்த நியாயமும், காரணமும் சொல்லப்பட்டாலேயன்றி நீங்கள்
என்ன செய்வீர்கள்? அபத்தமாக இறந்து போவதைத் தவிர உங்களால் என்ன
செய்யமுடியும்?
இறப்பதற்கு முதல் நாள் ‘சனூன் தலைவர் வாறதுக்கிடயில நாம ‘மௌத்தாப்
போயிறனும்’ என்று பகிடிக்காக சாச்சா என்னிடம் சொன்னதை, ‘இதைப்பார்க்கவா
கடல் கடந்து வந்தேன்?’ எனப்புலம்பிய சனூனிடம் சொல்வதற்கு எப்போதாவது
என்னால் இயலுமாக இருக்குமா என்பதை எண்ணிப்பார்க்கிறேன். சிலிப்பர்
கட்டைகளுக்கு இடையில் பரவப்பட்டிருந்த சக்கைக் கற்களில் மறுபடியும்
புரண்டவாறு “தகரைப் பத்தையாமேடா சாச்சா நீ....” என்று வைரவன்
புலம்பிக்கொண்டிருந்தான்.
*
|
|