முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 44
ஆகஸ்ட் 2012

  அவலம்
அண்டனூர் சுரா
 
 
       

கட்டுரை:

தமிழ்நேசன், மக்கள் ஓசை மற்றும் ஹஜி தஸ்லிம் கவனத்திற்கு...
கே. பாலமுருகன் - ம. நவீன்

துணைக்கல்வி அமைச்சர் பதவி
ந. பச்சைபாலன்

இந்தோனேசியக் கவிஞர் சைறில் அன்வர் ஓர் அறிமுகம்
மூலம் : ஜேம்ஸ் எஸ் ஹோம்ஸ் | தமிழில் : எம்.ஏ.நுஃமான்

தமிழில் சைறில் அன்வர் கவிதைகள்
எம்.ஏ.நுஃமான்



சிறுகதை:

சூன்யப்பெருவெளிக்கதைகள்
எம்.ஐ. ஷாஜஹான்

அவலம்
அண்டனூர் சுரா



பதிவு:

வல்லினம் வகுப்புகள் 1 - இலக்கியமும் மொழியியலும்

'ஐ.பி.ஏ' ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் பதிவுகள்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 3
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

'லிவிங் ஸ்மைல்' வித்யா பதில்கள்
'லிவிங் ஸ்மைல்' வித்யா


புத்தகப்பார்வை:

ம. நவீனின் 'சர்வம் ப்ரம்மாஸ்மி' கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள்
மேமன்கவி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி

வழித்துணை
ப. மணிஜெகதீசன்



கவிதை:

எம். ராஜா

செ. சுஜாதா

ஆறுமுகம் முருகேசன்

ந. பெரியசாமி

பூங்குழலி வீரன்



எதிர்வினை



அறிவிப்பு:

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியங்கள் விற்பனைக்கு...

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்: மலேசிய பெண் எழுத்தாளர்களின் விபரங்கள் தேவை

“வச்சப் பொருளை வச்ச இடத்திலிருந்து எடுக்க முடியுறதில்ல. எதை எப்படி மறைச்சி வச்சாலும் அதைக் கண்டுப்பிடிச்சிடுறான். கையில சிக்கும் பொருளை வாய்க்குள்ளே திணித்துச்சிக்கிட்டு குதப்புறான்........" மொபைலில் தெரிவித்திருந்தார் சித்தப்பா.

ரேவந்த் என் கண் முன்னால் நிழலாடிக்கொண்டிருந்தான். அவனை பார்க்கணும் போல தோன்றியது எனக்கு. அதை விட முக்கியம் சித்தப்பாவிற்கு ஆறுதல் சொல்லியாக வேண்டும். ஒரு மணி டவுன் பஸ்ஸை பிடித்து அவர் வீடு போய் சேர்வதற்குள் மணி மூன்று ஆகியிருந்தது. நான் வீட்டிற்குள் நுழைந்ததும் ரேவந்த் தலை தூக்கி பார்த்தான். பூப்போல சிரித்து வைத்தான். முன் பற்கள் கார்ட்டூன் முயலுக்கானதைப் போல செவ்வகங்களாக தெரிந்தன. அவனை தூக்கி தலையை மார்போடு அணைத்துக்கொண்டு உச்சந்தலையில் ஒரு முத்தம் பதித்தேன். என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டான்.

புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் வேகமாக ஓடினான். புத்தகங்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து விட்டெறிந்தான். பிறகு வண்ணமயமாக இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உட்கார்ந்த படி கால்களை விரித்து வைத்துக்கொண்டு புரட்டினான். ஒரு பக்கத்தைச் சரட்டென கிழித்தான்.பிறகு அடுத்த அறையை நோக்கி ஓடியவன் அந்த அறையில் உள்ள சேலைகளை அள்ளி தலையில் போட்டுக்கொண்டு இரு கைகளையும் மேலே தூக்கி குதித்துக்கொண்டிருந்தான்.

குத்துக்காலிட்டு மகன் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார் சித்தப்பா. என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டார். சிரித்து வைக்குமளவிற்கு மனதில் சௌரியமில்லை என்பதை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. இணக்கமற்ற வெறுமையுடன் முகத்தைக் கடுமையாக காட்டிக்கொண்டிருந்தார்.

அவர் தலைக்கு மேல் முத்துலெட்சுமியுடனான கல்யாணக்கோலம் நிழற்படமாக தொங்கிக்கொண்டிருந்தது. புகைப்பட கண்ணாடி நீண்ட விரிசல்கள் விட்டிருந்தன. அதன் மையத்தில் கல்லால் அடிப்பட்ட சுவடு தெரிந்தது. அதை கண்டதும் எனக்குள் விபரீத எண்ணங்கள், வயிற்றுக்குள் புளி கரைத்தது.

“எப்படி சித்தப்பா கண்ணாடி உடைஞ்சது?“ கேட்டேன்.

படத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு சொன்னார். “நான் தான் உடைச்சேன்.“

“ஏன்...............?“

“பிடிக்கல“ என்றார் அவருக்கே உரித்தான அசூசை குணத்தில்.

“சித்தி பற்றிய தகவல் எதாவது கிடைத்ததா சித்தப்பா? “

தொண்டையை செருமிக்கொண்டார். “ம். கிடைத்தது.“

“என்ன சித்தப்பா..........?“

“எவன் கூடவோ ஓடிவிட்டாளாம்“ எனச் சொல்லிவிட்டு துயரத்தைக் கண்களால் வடித்துக்கொண்டார். அவர் முகத்தில் அவலத்தைக் காட்டும் கோடுகள் தெரிந்தன. கையில் சிக்குண்ட குருவியைப் போல விழுக், விழுக் என முழித்துக்கொண்டு பரிதாபமாக உட்கார்ந்திருந்தார். கனத்த அவரது உருவம் காற்றடித்தால் சாய்கிற தேகமாக மெழிந்துப்போயிருந்தது.

மதுவின் நெடியும் சிகரெட் நாற்றமும் அவர் மேலிருந்து வந்துக்கொண்டிருந்தன. அவர் கண்களை மூடி வீட்டின் கூரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கன்னங்கள் ஒட்டிப்போய் தாடிகள் முகத்தில் அப்பிக்கிடந்தன.

தயவு தாட்சணியம் பார்க்காமல் எல்லோருக்குமாக வரும் காதல்தான் சித்தப்பாவிற்கும் வந்திருந்தது. வர வேண்டிய வயதில் அது வராமல் காலம் கடந்து வந்தது ஒன்றும் காதலோட குறை அல்ல. அது சித்தப்பாவின் குறைதான். உணர்வுகளை ஒடித்து நரம்புகளுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும் கலை அவருக்கு இருந்திருந்தது.

அவர் எடுத்துப்படித்த பாடம் வரலாறு. ஊரின் முதல் பட்டதாரி அவர்தான். தமிழ்நாட்டில் பிரசுரமாகும் அத்தனை வார இதழ்களையும் வாங்கி கையில் சுருட்டி வைத்துக்கொண்டு உலக அரசியல் பேசுவார். தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றத்தை கார்ல் மார்க்ஸ், லெனின் உடன் முடிச்சுப்போட்டு பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு முப்பது வயது ஆகிக்கொண்டிருந்த பருவத்தில் கல்யாண பேச்சு எடுத்தாகிவிட்டது. அவர் உச்சாணிக் கொம்பிலிருந்து இறங்கி வருவதாக இல்லை. அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் வரை நான் யாரையும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதில்லை என்ற உறுதிபாட்டில் உறுதியாக இருந்தார். கடைசி வரை அவருக்கு அரசு பணி கிடைக்காமல் இருந்திருக்க வேண்டும். வரலாறு படித்தவனின் அவலத்தைப் பார்த்தீங்களா..............? எனப் பத்து பேருக்குப் கேலியாக இருந்துவிட்டு போயிருப்பார். அவருக்கு அரசு உத்தியோகம் கிடைத்தது நாற்பத்து ரெண்டு வயதில். அதற்குப் பிறகு வாலிப வயதில் சுரக்க வேண்டிய என்சைம்கள் அவருக்கு சுரக்கத்தொடங்கின.

பெண் பார்க்கும் படலத்தை அவரே தொடங்கினார். ஒரு கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருத்தி அவருக்குப் பிடித்துப்போயிருந்தாள். சாந்த முகமும் சந்தன நிறமுடைய அவளுடைய பெயர் முத்துலெட்சுமி. வருட தேர்வு முடிந்ததும் திருமணக்கோலம் எளிமையாக நடந்தேறியது. மறு வருடமே அவருடைய நகலாக ரேவந்த் பிறந்தான் . சித்தப்பாவைப்போல முகமும் சித்தியைப்போல நிறமும் கொண்டவனாகப் பிறந்தவன் ஒரு வாரக்காலம் அழுகாமல் மருந்துவமனையில் கிடந்துப்போனான். சித்தப்பா அவனது முகத்தைப் பார்த்தே பூரித்தார். சித்திதான் அவசர முடிவு எடுத்துவிட்டோமே....... என நாளும் பொழுதும் வருந்தினாள். இரண்டு வருடக்காலம் குழந்தையை வளர்த்து விட்டு ஒரு நாள் இரவு காணாமல் போய்விட்டாள்.

எப்பொழுதாவது மது அருந்தும் சித்தப்பா அதற்குப் பிறகு எப்போதுமாக அருந்த தொடங்கிவிட்டார்.

“சித்தப்பா.............. குடிக்கிறதை விடுங்கள். எல்லாப் பிரச்சனைக்கும் அதுதான் காரணம்“ என்றேன். எனது சொற்களை அலட்சியப்படுத்திவிட்டு அறைக்குள்ளேருந்து ஒரு பாட்டிலை எடுத்து வந்து திறந்துக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் அவரால் போதை இல்லாமல் இருக்க முடிவதில்லை.

ஒரு நாள் இரவு வீட்டை விட்டு கிளம்பிப்போனவர் மறுநாள் மதியம் வாக்கில் வீட்டிற்கு வந்தார். உடுத்திருந்த ஆடைகள் கந்தைகளாகி போயிருந்தன. வாயிற்கதவை பிடித்தபடி தலையை கீழே தொங்கவிட்டபடி தளதளத்துப்போய் நின்றுக்கொண்டிருந்தார். வேட்டி முழுவதுமாக அவிழ்ந்துப்போயிருந்தது. கால்களை இருவர் ஆளுக்கொரு பக்கம் இழுப்பதைப்போல தாறுமாறாக கால்களை எடுத்து வைத்தார்.

“முத்து......... முத்து...........“ என அழைத்தார். சில நிமிடங்கள் கரைய அவரைப் பார்த்தேன். நிற்கப்போகும் பம்பரத்தைப்போல அவர் தலை சுற்றிக்கொண்டிருந்தது.

“ஏன் சித்தப்பா இப்படி குடிச்சு உடம்பை அழிச்சிக்கிறீங்க?“ உலக மகா பொதுக்கேள்வியை கேட்டேன்.

ஏளனமாக என்னைப்பார்த்து சிரித்தார். கூட அவருக்கு அழுகையும் வந்திருந்தது.

“நாட்டில யார் சித்தப்பா குடிக்கல ? . அரசன் முதல் ஆண்டி வரை அத்தனை பேரும் குடிக்கிறான். தாகத்துக்கும் குடிக்கிறான். துக்கத்துக்கும் குடிக்கிறான். வாழ்ந்தாலும் குடிக்கிறான். செத்தாலும் குடிக்கிறான். அதுக்கு என்ன இப்படியா............?“

சித்தப்பா என்னை நெருங்கி வந்தார். “எனக்குண்டான அவமானம் எனக்குதான் தெரியும்?“ என்றபடி என் சட்டையைப் பற்றி தள்ளினார்.

“நீ ஏன் குடிகாரனானேனு? ஒவ்வொருத்தருக்கிட்டேயும் கேட்டால் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு மூட்டை காரணங்கள் இருக்கவே செய்யும். எத்தனை காரணங்கள் இருந்தால் என்ன? அதுக்காக ஒரு போதும் குடியையும் போதையும் என்னால ஆதரிக்க முடியாது“

“டேய் நிறுத்துடா........... போதையில எல்லோருமே அழிஞ்சிப்போனதில்ல. ஒரு கோப்பையிலே என் குடியிருப்புனு கண்ணதாசனே குடிச்சிட்டுதான் பாட்டு எழுதிருக்காரு“ என்றார்.

“செய்கிற தவறுக்கு நியாயம் கற்பிக்க தத்துவம் பேசாதீங்க சித்தப்பா. அவரு காலத்தில வாழ்ந்த சுரதா மது குடித்தால் போதை வரும். அதை விடுத்து கவிதை வரும் என்பதெல்லாம் கட்டுக்கதையேனு எழுதிருக்காரு“

பதிலுக்கு பதில் கொடுக்கிறானே என அவர் நினைத்தாரோ என்னவோ............ தப்படி எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தார். கண்களைக் கசக்கிக்கொண்டு உருட்டி திரட்டி முழித்தார். கொஞ்சநேரம் சுவற்றில் சாய்ந்தபடி இரு கால்களையும் நீட்டியபடி உட்கார்ந்திருந்தார்.

வீட்டுக்கு இன்னும் வாடகை கொடுத்தப்பாடில்லை. கல்லூரிக்கும் சரிவர போறதுமில்லை. மகனைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. சதா நேரமும் குடித்தே மனைவி பற்றிய அவமான எண்ணங்களுடனே ஒவ்வொரு நொடியையும் நிமிடத்தையும் நாட்களையும் கடத்துகிறார்.

“மனைவி ஓடிப்போனது சரிதான். வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படிப் பொறுப்பு இல்லாமல் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தால் எவள் தான் பொறுத்துக்கிருவாள். வயசு வேற பல வருச வித்தியாசம். குழந்தையை நம்பி காலத்தைக் கடத்தலாமுனு பார்த்தால் அதுவும் ஆரோக்கியமாக பிறக்கலை. சொச்சக்காலத்தை நினைச்சிப்பார்த்தாள். ஆளை விடுடா சாமினு கிளம்பிட்டாள்.........“ என பலரும் ஒரே மாதிரியாக பேசிக்கொள்வதை என்னால் கேட்க முடிந்தது.

சித்தப்பா மெல்ல எழுந்தார். அவரது அறைக்குள் நுழைந்தார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு வெளியே வந்தார். “நீ ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுற. நீ ஒன்னா நம்பர் குடிகாரனாக இருப்பே போல “என்னைப் பார்த்தப் படி சொன்னார்.

அவரிடம் வார்த்தைகளை விரயம் செய்ய விரும்பவில்லை. நுனி நாக்கு வரைக்குமாக வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன். உடலை குலுக்கி சிரித்தார். “நீ குடிக்க பழகியிருக்கே“ என்றபடி மறுபடியும் சிரித்தார். அந்தச் சிரிப்பு என்னை அறைந்தது போல இருந்தது.

குடிக்காரர்களுக்கு யாரைப்பார்த்தாலும் குடிகாரனாகவே தெரிவார்கள் போலும். “கர்மம்...., கர்மம்.......“ என தலையில் அடித்துக்கொண்டேன்.

“எத்தனை நாளா நீ குடிக்கிற?“ எனக் கேட்டார்.

“நான் குடிக்கிறதுல்ல சித்தப்பா“ என்றேன்.

“பிறகு இது என்னவாம்?“ என்றபடி பாட்டிலைத் தூக்கிக் காட்டினார். பாட்டிலில் கொஞ்சம் போல மது குறைந்திருந்தது.

“குடிக்க தெரியுது இதை மூடி வைக்க தெரியல. டேய்...... பாட்டிலோட மூடியைக்கொடு“ என்றவாறு என்னை நெருங்கி வந்தார். என் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு துலாவினார். மூடி கையில் சிக்கவில்லை. பிறகு மொத்த மதுவையும் ஒரே மூச்சில் அருந்தினார். அடி எடுத்து வைக்க திராணியற்று அதே இடத்தில் சுருண்டு படுத்துக்கொண்டார்.

நான் பெரு மூச்சு விட்டபடி ரேவந்தை பார்த்தேன். அவன் முயல் குட்டியைப்போல தூங்கிக்கொண்டிருந்தான். நல்ல வேளை இவன் இதையெல்லாம் பார்க்கவில்லை. நீண்ட நேரமாக தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்ப அருகில் சென்றேன். அவனது அவலத்தைக் கண்டு திடுக்கிட்டேன்.

அவன் கையில் அந்த பாட்டிலோட மூடி இருந்தது!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768