|
|
வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு 'லிவிங்
ஸ்மைல்' வித்யா பதில் தருவார். கேள்விகளை editor@vallinam.com.my என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
மகேன், மலேசியா
கேள்வி : நான் தங்களின் 'நான் வித்யா' மட்டும்
படித்துள்ளேன். வேறு நூல் எழுதியுள்ளீர்களா?
பதில் : ம்ம்ம்... இதுவரை இணையத்தில், சில பத்திரிகைகளில் எழுதிய
கட்டுரைகளின் தொகுப்பு “அலி, அரவானி, திருநங்கை”... ”மரணம் மட்டுமா மரணம்”
என்ற கவிதை தொகுப்பு ஆகியவற்றை வெளியிட முயற்சித்து வருகிறேன்.
மேலும், கி.ரா. அவர்களின் “கோமதி” முதல் கவின்மலர் எழுதிய “தீரா கனவு” வரை
திருநங்கைகள் தொடர்பாக பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை தொகுத்து
“மெல்ல விலகும் பனித்திரை” என்னும் சிறுகதை தொகுப்பும் வெளியிட முயற்சித்து
வருகிறேன். எழுத்து எனது தேடல் அல்ல என்பதால் இந்த தாமதம் ஒரு காரணமாக
இருக்கலாமென நினைக்கிறேன். கூடிய விரைவில் வெளிவரலாம்... படிக்க
விரும்பினால்... எனது 'ஸ்மைல் பக்கம்' எப்போதும் திறந்தே உள்ளது. நன்றி!
பரதராஜன், தமிழகம்
கேள்வி : நான் சில திருநங்கைகளில்
பேசியுள்ளேன். சிலர் தங்களை முழு பெண்ணாக அடையாளம் காட்ட முயல்கின்றனர்.
சிலர் தங்களை அரவாணிகளாக காட்டவே முயல்கின்றனர். இதில் எது சரி? நீங்கள்
எப்படி?
ராஜா, மதுரை
கேள்வி : நான் ஒரு ஆணாகவே வெளியே
சுற்றுகிறேன். என் மனதில் அது ஒவ்வொரு கனமும் உள்ளது. (ஆண் திமிர் என
சொன்னாலும்.) என் மனைவிக்கும் தான் பெண் என்ற எண்ணம் உள்ளது. நீங்கள்
உங்கள் மனதில் உங்களை என்னவாக உணர்கிறீர்கள்?
பதில் : பொதுவாக, திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்று சொல்வதில் கூட
எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் நான் மட்டுமல்ல எந்த திருநங்கையும் தமது
பதின்ம வயதில் பாலின அடையாள சிக்கலை எதிர்கொள்ளும் அம்முதல் தருணம் முதலே
பெண்ணாகத்தான் உணர்கிறார்கள். திருநம்பிகளும் தங்களை ஆண்களாகத்தான்
உணர்கிறார்கள்.
ஆண் உடலில் பிறந்த காரணத்தால் எங்களை முழு பெண்களாக ஏற்றுக்கொள்வதில்
உங்களுக்குள்ள மனத்தடைதான் எங்களை திருநங்கைகள் என பெயரிடக்காரணமாகிறது.
அவ்வாறே திருநம்பிகளும்.
ஆனால், அரசியல்ரீதியாக எதிர்காலத்தில் கல்வி/வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
தரக்கூடும் என்ற நம்பிக்கையில் தனி பாலின அடையாளம் வேண்டுமென சிலர்
வாதிடுகிறார்கள். ஆனால், பெண்/ஆண் என்ற அடையாளத்தோடே கூட இந்த ஒதுக்கீடு
தரமுடியும். அடிப்படையில் இது உடலியல்/மனோவியல் சார்ந்த பிரச்சனை
என்பதாலும், இளவயதில் பள்ளி/கல்லூரி படிக்கும் நாட்கள் ஏற்படும்
மனக்குழப்பம் மற்றும் சகமாணவர்கள்/ ஆசிரியர்கள் உடல்/மனரீதியாக
பாதிக்கப்படுகிறார்கள். இவ்வடிப்படையில் உடல் ஊனம் போல பாலியல் ஊனமாக
கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு தரலாமேயன்றி திருநங்கை/திருநம்பி என்று
தனியாக ஒரு பாலின அடையாளம் தேவையில்லை.
எனவே எங்களை, திருநங்கைகளை பெண்களாகவும், திருநம்பிகளை ஆண்களாகவும் நம்ப
வேண்டுமென உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.
வெள்ளை கறுப்பு, இலங்கை
கேள்வி : தமிழகத்தில் இப்போது மேடை
நாடகத்துக்கான தேவை உள்ளதா? ஒரு நாடக நடிகை என்பதை தவிர உங்கள் பங்களிப்பு
என்ன?
பதில் : தேவை உள்ளதா என்றால் நம்நாட்டில் பல கேள்விகள் கேட்டுக்கொண்டே
போகலாம்... இங்கே நடக்கும் ஊழல்கள், கொள்ளைகள் எதற்கும் தண்டனை பெறாதவர்கள்
இருக்க... சிறு சிறு குற்றங்களுக்காக எளிய மனிதர்கள் தண்டனை பெறும் போது...
இந்த நாட்டிற்கு நீதிமன்றம் தேவையா என்று கூட கேட்கலாம். நிஜ தமிழகத்தை,
தமிழர்கள் காட்டாத தமிழ் சினிமா கூட தேவையா என்று கேட்கலாம்..
வாதததிற்காக, பதில் சொல்வதானால், ஒரு உதாரணம் ஈழ மாந்தர்கள்
செத்துக்கொண்டிருக்கும் போது தமிழ்சினிமாவும், கிரிக்கெட் வீரர்களும்,
தமிழ் ரசிகர்களும்... கள்ள மௌனம் அல்லது போலி பாசமழை கொட்டிய போது,
நாடங்கள் குறிப்பாக தமிழ் நாடகங்கள் காட்டமாக பதிவு செய்தது.
அ. மங்கை இயக்கிய இன்குலாப் அவர்களின் “யாது நம் ஊர்”, ச.முருகபூபதியின்
“மிருக விதூஷகம்”, ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கிய “என்.ராமாயணம்”, இவற்றோடு
மு.ராமசாமி இயக்கிய “ஸ்பார்ட்டகஸ்” அதன் மூலப் பிரதியினூடே ஈழ அவலத்தையும்
தொட்டு சென்றது. இவை யாவும் நான் நடிகையாக பங்கேற்ற நாடங்கள் மட்டுமே...
இவை போக குமரன் வளவன் இயக்கிய “சாம்பல் பூமி” போன்ற பல நாடங்கள் ஈழ அவலத்தை
காத்திரமாக பதிவு செய்த்து... இந்த மனசாட்சியும், திண்ணமும்
நாடக்காரர்களிடம் மட்டுமே இருந்தது...
இவ்வாறு பெண்ணியம், தலித்தியம், பாலியல் சிறுபாண்மையினரை குறித்து கூட மற்ற
கலை வடிவங்களை விட நாடகங்களே அதிக அளவில் தொடர்ந்து அக்கரைகொண்டு இயங்கி
வருகிறது.
ஆகவே, ஆம் நாடகத்தின் தேவை உள்ளது.
நடிகையாக இருப்பதே எனது பங்காகும். இங்கே நடக்கும் ஆங்கில நாடகங்களைப் போல
மேல்தட்டு-பொழுது போக்கு-வெற்று நகைச்சுவைகளை அள்ளி தெளிக்கும் ஆங்கில
நாடகக்காரர்களை போல வெறுமனே கல்லா கட்டாமல்... மேற்கூறிய நியாயமான
நாடகங்களில் நடிப்பதே எனது பங்கு. அது தவிர கொஞ்சம் பாலியல்
சிறுபாண்மையினர் குறித்த விழிப்புணர்வை எழுத்து மூலம் தருகிறேன். எனது
சொந்த வாழ்க்கையை மற்ற திருநங்கைகளுக்கும் உதாரணமாக தன்னம்பிக்கை தருகிறேன்
என்றும் சொல்லலாம்.
அது இருக்கட்டும் ஒரு திருநங்கையாக, மனுசியாக கூட மதிக்காத இந்த
சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் நான் எதற்காக பங்களிக்க வேண்டும்? எனது
செயல் யாவும் மனசாட்சியுள்ள ஒரு பெண்ணாக எனது திருப்திக்காக மட்டுமேயன்றி,
சமூகத்திற்கு பங்காற்றும் லட்சியமெல்லாம் எனக்கு எதுவும் கிடையாது.
நரேன், மலேசியா
கேள்வி : இன்று உங்களின் வாழ்வியல் நிலையை,
கலை, சமூக செயல்பாடுகள் அடிப்படையில் கூற இயலுமா?
பதில் : என்னளவில் திருநங்கைகள்/திருநம்பிகள் இருவருமே பெண்/ஆண் என்றே
அறியப்பட வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். பாலியல் சிறுபாண்மையினர்
குறித்த விழிப்புணர்வை சரியான புரிதலை எழுத்து மூலமும் மக்களை நேரடியாக
சந்தித்து பேசுவதன் மூலமும் ஏற்படுத்தி வருகிறேன். பகுத்தறிவுள்ள
குடிமகளாக, பெரியாரியம், அம்பேத்கரின் தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றை
கூடுமான வரை பின்பற்றி வருகிறேன்.
தனிப்பட்ட முறையில் நாடகம் என்பது எனக்கான கலை... துரத்தும் மோசமான
வாழ்க்கை சூழலின் வேதனையிலிருந்து விடுவித்து உவகை தரும் அருமருந்து நாடக
மேடையும், ஒத்திகையுமே எப்போதும் விடுதலை உணர்வையும், கொண்டாட்டத்தையும்
தருகிறது. திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றியதை விடவும், தனியார்
வங்கியொன்றில் பணியாற்றியதை விடவும், குழந்தைகளுக்காகப் பணியாற்றும் தொண்டு
நிறுவனத்தில் பணியாற்றியதைவிடவும் சொற்ப வருமானம் என்ற போதும், மனநிறைவான
பணியாக அரங்கமே உள்ளது.
அரங்கிலும் திருநங்கையாகவன்றி இதுவரை நடித்துள்ள 11 நாடகங்களிலும் இயல்பான
பெண்ணாக நடித்து வந்துள்ளேன். தினசரி வேலைக்கு செல்வதைப் போல தினசரி,
ஒத்திகையும், அரங்கேற்றமுமாக என் வாழ்நாள் நிறைந்திருக்க விரும்புகிறேன்.
அதற்காக, பல்வேறு இயக்குநர்களிடன் பணியாற்றி வருகிறேன். இருந்தாலும்,
பொருளாதாரத் தேவை காரணமாக சினிமா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க
விரும்புகிறேன். தேடி வந்து வாய்ப்பு தரும் அனைவரும் என்னை திருநங்கையாகவே
நடிக்க விரும்புவதால் அவ்வாய்ப்புகளை மறுத்து வருகிறேன். ஒரு
பெண்ணாக/நடிகையாக இச்சமூகத்தை வெள்ளித்திரையிலிருந்து பார்க்க
விரும்புகிறேன்.
என்னை முதல் முறையாக திருநங்கை என்று அறிந்த போது வாதாடிய என் அக்கா...
”இப்பிடியாயிட்டா தப்பான வேலைதான செய்யமுடியும்...” என வருந்தியபோது,
கண்டிப்பா அப்பிடி போகமாட்டேன்னு உறுதியளித்தேன். ”இருந்தாலும்,
வாழ்க்கையில முன்னேற முடியாதேன்னு, உன்னோட நாடகம் நடிக்கிற ஆசையெல்லாம்
வீணாபோயிடுமே” என்று புலம்பிய அக்காவிடம் நாடகம் மட்டுமல்ல நிச்சயம்
ஒருநாள் சினிமாவிலும் நடிகையா நடிச்சு காட்டுவேன்னு உறுதியாக சொன்னேன். அதை
விரைவில் நிறேவேற்றுவேன்.
மனதில் தோன்றும் போது கொஞ்சம் கோட்டோவியங்களும் வரைவேன். அழகிய பெரியவனின்
தீட்டு சிறுகதைக்கு எனது ஓவியம் பயன்படுத்தப்பட்டதும், 'வல்லினம்' இணைய
இதழில் எனது ஓவியம் வெளிவந்ததும், மேலும் ஓசூர் தோழர் பெரியசாமி அவர்களின்
வரவிருக்கும் கவிதை தொகுப்பிற்கும் ஓவியம் வரைந்துள்ளதும் எனக்குப் பெருமை.
|
|