முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 45
செப்டம்பர் 2012

  நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன்  
 
       

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன் நிகழ்வு தொடர்பான கட்டுரைகள்:

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன்

டத்தோ அம்பிகா சீனிவாசனின் தலைமை உரை
வல்லினம் ஆசிரியர் குழு

இரு கேள்விகள்
வல்லினம் ஆசிரியர் குழு

கா. ஆறுமுகத்தில் அறிமுக உரை
வல்லினம் ஆசிரியர் குழு



கட்டுரை:

டெசோ: ஒரு பழைய தாத்தாவின் பல்லவிகள்!
யோ. கர்ணன்

ஆஷா: இனி...
ம. நவீன்



சினிமா பார்வை:

‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
மீனா


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 4
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

லிவிங் ஸ்மைல் வித்யா பதில்கள்
லிவிங் ஸ்மைல் வித்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

துரோணா

எம். ராஜா

சம்பு

ந. பெரியசாமி

இரா. சரவண தீர்த்தா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை

அண்மையில் டத்தோ அம்பிகா சீனிவாசனுடன் நான்கு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் பங்குபெற்ற உரையாடல் நிகழ்ச்சி மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் கா.ஆறுமுகம் இந்த உரையாடலை வழிநடத்த, திரு.காத்தையா டத்தோ அம்பிகா சீனிவாசனின் ஆங்கில விளக்கங்களைத் தமிழ்ப்படுத்தி பங்கேற்பாளர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் டத்தோ அம்பிகா சீனிவாசன் தனது கருத்துகளைத் திட்டவட்டமாகப் பதிவு செய்தது அவர் தான் இயங்கும் தளத்தில் எவ்வளவு தீவிரம் கொண்டுள்ளார் என்பதைப் பறைச்சாற்றியது.

அவரிடம் எல்லாவற்றுக்கும் ஆழமான பதில்கள் இருந்தன. பெரும்பாலான நேரங்களில் சிரித்துக்கொண்டுதான் இருந்தார். எளிய, உச்சரிப்பு மழுங்காத ஆங்கிலம்.

அது நிச்சயமாக ஓர் அற்புத தினம்தான். ஒவ்வொரு திசையில்; ஒவ்வொரு அரசியல் பின்புலத்துடன் இயங்கும் பத்திரிகை ஆசிரியர்கள் நால்வரும் ஒரே இடத்தில் ஒற்றை நிலைபாட்டுடன் கூடியிருந்தனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 'நம்நாடு' தினசரியிருந்து மட்டும் அப்பத்திரிகை ஆசிரியர் வரவில்லை. முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் ஆதரவால் நடத்தப்படும் பத்திரிகை என்ற குற்றச்சாட்டை இதில் கலந்துகொள்வதன் மூலமாவது 'நம்நாடு' அகற்றியிருக்கலாம். 'செ...செ... அப்படியெல்லாம் இல்ல... இது நடு நிலையான பத்திரிக... ஜாலியா நடத்துறோம்' என அதன் ஆசிரியர் வித்யாசாகர் சிரித்துக்கொண்டே 'உண்மையை மட்டுமே' சொல்லக்கூடும் என்பதால் இப்போதைக்கு அப்பத்திரிகையின் புறக்கணிப்பை ஓர் ஓரமாக வைத்துவிடலாம்.

பொதுவாகவே இந்நாட்டுத் தமிழர்களுக்கு பிரச்னை ஏற்படும் போதெல்லாம் தமிழ் தினசரிகள் தங்களால் இயன்ற பங்காற்றியுள்ளதை மறுப்பதற்கு இல்லை. கோ.சாரங்கபாணி காலம் தொட்டே அவர் சார்ந்த பத்திரிகை இனத்துக்கும் மொழிக்கும் நிறையவே போராடியுள்ளது. இன்று ஒரு வாசகனாக சில பத்திரிகைகள் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் முக்கியமான நிகழ்வுக்காக அவை ஒன்றினைந்ததற்காக முதலில் பாராட்டி விடலாம்.

சிறிய அறிமுகத்துக்குப் பின் 'மலேசிய நண்பன்' ஆசிரியர் மலையாண்டி, 'மக்கள் ஓசை' ஆசிரியர் எம். ராஜன், 'தமிழ் நேசன்' ஆசிரியர் பத்மநாதன் மற்றும் 'தினக்குரல்' ஆசிரியர் பி.ஆர்.ராஜன் ஆகியோர் தங்கள் கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கினர்.

மலையாண்டி (மலேசிய நண்பன்): அரசியல் ரீதியில் இந்திய சமுதாயத்திற்கு ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாததும் அல்லது தலைமைத்துவத்திற்கான ஒரு வெற்றிடம் தோன்றியிருப்பதாகக் கூறப்படுவதையும் பற்றி தங்கள் கருத்து என்ன?

அம்பிகா சீனிவாசன்: வெற்றிடம் இந்தியர்களின் அரசியல் போக்கில் மட்டுமல்ல, மாறாக நமது நாட்டின் அரசியல் தலைமைத்துவத்திலேயே வெற்றிடம் இருப்பதாக உணர்கிறேன். இந்தியர்களின் பிரச்னைகள் அரசியல் ரீதியில் முறையாக அடையாளப் படுத்தப்படவில்லை. இந்தியர்கள் பிரச்னை குறித்து மிக சமீபத்தில் 'நியாட்' இயக்கம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிக முக்கியமானதும் முழுமையானதும் என இவ்வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். இந்த ஆய்வறிக்கையின் வழி வெறும் 8 சதவிகிதம் கொண்ட மலேசிய இந்தியர்களின் மக்கள் தொகையில் 35% குற்றச்செயல்களில் பங்கு வகிக்கிறோம் என்பது புலனாகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி இந்தச் சிக்கலில் வேரை களையாத தலைவர்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய அரசியலில் வெற்றிடம் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இப்போது நமக்குத் தேவை அரசியல் முதிர்ச்சி கொண்ட தலைவர்கள். துங்கு அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் இருந்த காலம் அது போன்றதுதான். அவர் அனைவருமே இந்நாட்டின் குடிமக்கள் என்றார். இன்றைய தலைவர்களின் நோக்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெருவது மட்டுமே. அதற்காக மட்டுமே அவர்கள் இயங்குகின்றனர்.

எம்.இராஜன் (மக்கள் ஓசை): உங்கள் பேச்சுக்கு இச்சமூகம் செவிசாய்க்கிறது. நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

அம்பிகா சீனிவாசன்: அரசியலுக்கு வரும் நோக்கம் எனக்கு இல்லை. நாம் நாகரீகமாக நடத்தப்படும் ஒரு சமுதாயமாக திகழ வேண்டும். அதுதான் நமது தேவை. அதை நோக்கிதான் நாங்கள் இயங்குகிறோம். ஒரு வேளை நான் அரசியலில் ஈடுபட்டால் அது 'பெர்சேவுக்கு' நான் செய்யும் துரோகமாகும்.

பத்மநாதன் (தமிழ் நேசன்): இருக்கட்சி அரசியல் முறையை மலேசியர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என நம்புகிறீர்களா? பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இருக்கட்சி ஆட்சி முறை எவ்வகையான நன்மையைக் கொண்டுவரும் என நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

அம்பிகா சீனிவாசன்: 2008 பொது தேர்தலுக்குப் பிறகு இருக்கட்சி ஆட்சி முறைதான் நடப்பில் உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் மறைக்கப்பட்ட பழைய உண்மை வெளிவர ஏதுவாகிறது. நாம் இருக்கட்சி ஆட்சி முறைக்குத் தயாராகி நெடுங்காலமாகிவிட்டது.இருக்கட்சி ஆட்சி முறை என்ன... இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகளின் ஆட்சிமுறை இருந்தாலும் வரவேற்கத் தக்கதுதான். நாம் எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு வழங்காமல் சுய கணிப்பின் வழி அவர்களின் ஆட்சி முறையை கற்பனையாக முடிவெடுக்கக் கூடாது. அப்படி அவர்களிடம் குறைபாடுகள் இருக்குமேயானால் அடுத்த தேர்தலில் அவர்களையும் நீக்கிவிடலாம். இங்கு நான் எதிர்க்கட்சி என்று குறிப்பிடுவதும் நமது அரசாங்கம்தான். அவர்களும் நான்கு மாநிலங்களை ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

பி.ஆர்.ராஜன் (தினக்குரல்): மஞ்சள் என்பது மங்களகரமானது. நமது நாட்டின் அரச நிறமும் கூட. ஆனால், பெர்சே பேரணியின் போது மஞ்சள் நிறம் தடை செய்யப்பட்டது போன்ற ஓர் நிலை உருவானது. பத்திரிகையில் நான் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தும் போது அரசு அதிகாரிகளால் இது ஒரு சிக்கலாகச் சொல்லப்பட்டது. மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமா? அல்லது அரச நிந்தனையா?

அம்பிகா சீனிவாசன்: சட்டத்தில் அதற்கான தடையில்லை. யாரும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். அண்மையில் நடந்த வழக்கில் 'பெர்சே' சட்டப்பூர்வமான ஓர் இயக்கம் என தீர்ப்பளிக்கப் பட்டது. எனவே மஞ்சள் உடை அணிவது மட்டுமல்ல, 'பெர்சே' என்ற சொல்லையும் நீங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்.

மலையாண்டி (மலேசிய நண்பன்): மலேசிய இந்தியர்கள் தொய்வுக்கு அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள். அதே சமயம் சிறுபான்மை சமூகம் என்பதால் நாம் ஒதுக்கப்படுகிறோமா? நம்முடைய ஜனத்தொகையை அதிகரிக்கும் அவசியம் உள்ளதென நீங்கள் கருதுகிறீர்களா?

அம்பிகா சீனிவாசன்: எல்லா கேள்விகளிடமும் என்னிடம் பதில்கள் இல்லை. இந்திய சமுதாயத்தில் பிரச்னைகள் குறித்து, ஹஜி தஸ்லிம் போன்றவர்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இருக்கலாம். நான் முன்பே சொன்னது போல 'நியாட்' வெளியிட்ட ஆய்வறிக்கையில் விரிவான விளக்கமான தீர்வுகள் உண்டு. சிறுபான்மை இனத்தில் பலவீனத்தை இதற்கு முன் இருந்த தலைவர்கள் உணரவில்லை; அதை களைய முனையவில்லை. ம.இ.காவும் மற்றும் மா.சி.சாவும் கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க மட்டுமே தயாராக உள்ளன. சிறுபான்மை இனமாக இருந்தாலும் இந்நாட்டு குடிமக்களான இந்தியர்கள் தங்கள் உரிமையைக் கேட்டுப் பெறதான் வேண்டும். சிறுபான்மை இனம் என்பது எதையும் கெஞ்சிப் பெரும் நிலையில் இருப்பதையே அதிகார வர்க்கம் விரும்புகிறது. என் பார்வையில் கடந்த காலங்களில் சிக்கல்கள் குறித்து விவாதித்துக்கொண்டிருக்காமல், நடப்பு பிரச்னைகான தீர்வுகளை கண்டறிய வேண்டும். புதிய அரசு உருவானால், அவர்களை சிறுபான்மை சமூகத்தின் பிரச்னைகளை கண்டறிந்து களைய நாம் உரிமையுடன் கேட்க வேண்டும். சிறுபான்மை இனம் என்று முன்பு நம்மை சொன்னார்கள் . அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இப்போது நான் அதை மறுக்கிறேன். நான் இந்நாட்டின் குடிமகள். எனக்கு எல்லா சம உரிமையும் உண்டு. அதை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

எம்.இராஜன் (மக்கள் ஓசை): பெர்சே பேரணிக்குப் பின்னர் உங்கள் வீட்டின் முன் 'பர்க்கர்' கடைகள், வினோத உடற்பயிற்சிகள் என சிலரிடமிருந்து எதிர்வினைகள் எழுந்தன. இதையெல்லாம் கண்டு பேசாமல் ஒரு வழக்கறிஞராகவே இருந்திருக்கலாமே... எதற்குப் போராட வந்தோம் என்ற எண்ணம் எப்போதாவது ஏற்பட்டதுண்டா?

அம்பிகா சீனிவாசன்: நான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்த போது பெர்சே இயக்கத்தினரால் உடன் இணைந்து போராட அழைக்கப்பட்டேன். அதன் எதிர்வினைகள் எவ்வாறு இருக்கும் என நான் அறிந்தே இருந்தேன். அந்த எதிர்ப்பை அனுபவித்த போதுதான் பெர்சேவின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். நீங்கள் அதிகார வர்க்கத்தால் எதிர்க்கப்பட்டால் உங்கள் நகர்ச்சி சரியான திசையில் செல்கின்றது எனப் பொருள். இந்தப் போராட்டத்தில் பங்குப் பெற்ற பலரையும் விட்டு விட்டு என்னைக் குறிவைத்தக் காரணம், நான் ஒரு இந்தியன் மற்றும் நான் ஒரு பெண். என் வீட்டின் முன் கொடுக்கப்பட்ட அறிக்கைகளில் என்னை இந்நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருந்தார்கள். நான் ஏன் வெளியேற வேண்டும்? இந்த என் நாடு. அதன் பின்னரும் என்னை முஸ்லிம் எதிர்ப்பாளராக அடையாளம் காட்டினார்கள். இது ஓர் இனவாத தாக்குதல் . இந்தச் சம்பவம் அவர்களுக்கே பாதகமாகும் என்பதை அவர்கள் உணரவில்லை. அந்தச் சம்பவத்துக்குப் பின் முஸ்லிம், கிருத்துவ, மற்றும் இந்து நண்பர்கள் என்வீட்டிற்குத் தொடர்ந்து வருகையளித்து எனக்காகப் பிராத்தனை செய்தார்கள். இந்த அன்பை பணத்தால் வாங்க முடியாது. நான் அரசாங்கத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். நீங்கள் இனியும் மக்களை முட்டாள்களாக்க முடியாது.

பத்மநாதன் (தமிழ் நேசன்): வாக்களர்கள் தங்கள் வேட்பாளர்களை நம்பியே ஓட்டு போடுகின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர் சில அரசியல்வாதிகள் கட்சி மாறுகின்றனர். இந்தச் செயலை கண்டிக்க சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியுமா?

அம்பிகா சீனிவாசன்: துரதிஷ்டவசமாக, மலேசிய அரசியல் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் கட்சியை விட்டு கட்சி தாவுதை அனுமதிக்கிறது. அது ஓர் அற மீரல். நான் அப்படி ஒரு முறை கட்சி தாவும் வேட்பாளரை எப்போதும் ஆதரிக்க மாட்டேன். உண்மையில் கட்சி மாறும் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் மீண்டும் தேர்தலில் நிர்க்க வேண்டும். மலேசியாவின் சிக்கல் என்னவென்றால், ஒருமுறை பதவியை ராஜினாமா செய்தால் மீண்டும் தேர்தலில் நிர்க்க ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் இதற்கு தீர்வு கிடைக்கலாம். எனக்குத் தெரிந்து மலேசியர்களில் 90 சதவிகிதத்தினர் கட்சி வேட்பாளரை அடையாளம் கண்டு ஓட்டிடுவதில்லை மாறாக கட்சியின் சின்னங்களையே அவர்கள் தேர்வு செய்கின்றனர்.

பி.ஆர்.ராஜன் (தினக்குரல்): இடைத்தேர்தல் காலத்தில் நடைபெறும் திடீர் மேம்பாட்டுத் திட்டங்கள், திடீர் உதவிகள், திடீர் கவனங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாக எடுத்துக்கொள்ளலாமா?

அம்பிகா சீனிவாசன்: உண்மையில் மலேசிய அரசியல் சட்டம் மிகக் கடுமையானது. ஆனால் அது ஒரு சிலரால் தளர்த்தப் படுகிறது. சமீப காலமாகத்தான் அரசாங்கம் மக்களுக்குத் திடீர் வரங்களை வழங்கிவருவதை அறிவீர்கள். தேர்தல் காலம் நெருங்கும்போது, அதை மக்களுக்குச் செய்வதாகவும் வேறு அறிவித்துக்கொள்கிறது. ஆனால், தேர்தல் வாரியச்சட்டம் உண்மையில் தீவிரமாக இயங்குமானால் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். சட்டத்தை உருவாக்குபவர்களே சட்டத்தை தவிர்க்கும் நிலை இங்கு தொடர்கிறது. இந்நாட்டில் ஆவி வாக்காளர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அதற்கான ஆதரங்களும் வீடியோ படங்களும் என்னிடம் உள்ளன. என்ன ஆதாரம் இருந்தாலும் தேர்தல் வாரியம் மற்றும் போலிஸ்காரர்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். இந்திய நாட்டின் தேர்தல் வாரியம் மிகக் கடுமையானது. வேட்பாளர்களும் தேர்தல் வாரியத்தைக் கண்டால் பயப்படுவார்கள். தகாத காரியத்தை அவ்வேட்பாளர் செய்யும் பட்சத்தில் உடனுக்குடன் விசாரிக்கப்படுவார். அப்படிப்பட்ட நிலையிலும் அங்குத் தேர்தல் வாரியத்தில் மீது புகார்கள் தொடுக்கப்படுகின்றன. அதன் முக்கியத்துவம் அப்படி. ஆக, இன்று நமக்குத் தேவையானது திடமான நேர்மையான தேர்தல் வாரியம்தான்.

மலையாண்டி (மலேசிய நண்பன்): நியாயமான தேர்தலுக்காக இதுவரை பெர்சே மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவு உங்களுக்குத் திருப்தியை ஏற்படுத்தியுள்ளதா?

அம்பிகா சீனிவாசன்: பெர்சே தனது இலக்குகளை அடைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். பெர்சே மூலமாகத்தான் நாடாளுமன்றது தேர்தலுக்கென்றே ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர ஆவண செய்தார்கள். இது ஒரு மலேசிய வரலாறு எனலாம். ஆனால், மக்களுக்குத் தேர்தலைப் பற்றிய விழிப்புணர்வு கிடைத்துள்ளதே மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். தாங்கள் ஏமாற்றப் படுவதை அவர்கள் முதன் முதலாக உணர்கிறார்கள். அதன் விளைவாக பல கேள்விகளைத் தொடுக்கவும் செய்கிறார்கள். பயம் என்பதை மக்கள் மனதிலிருந்து பெர்சே முழுமையாக அகற்றியது எனலாம். ஆனால், இன்று வரையில் பெர்சேவின் 8 கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; கவனிக்க மட்டுமே பட்டது. அது போதாது.

எம்.இராஜன் (மக்கள் ஓசை): நீங்கள் திடீரென வானிலிருந்து குதித்ததாக சில வயிற்றெரிச்சல் பேர்வளிகள் சொல்கிறார்கள். அது குறித்து உங்கள் கருத்து என்ன? மற்றது, நாளையே நீங்கள் பிரதமரானால், இந்நாட்டிற்கு ஏற்படுத்தும் சட்டங்கள் என்னவாக இருக்கும்?

அம்பிகா சீனிவாசன்: இதை நீங்கள் புகழ் என சொன்னால், அதற்கு காரணம் நமது அரசாங்கம்தான். நான் எளிமையானவள். விமர்சனங்கள் மூலம் அவர்கள் என்னை பிரபலப்படுத்தினார்கள்.

மற்றொரு கேள்வி நிதர்சனமாக வாய்ப்பில்லை என அறிவேன். ஆனால் ஒரு வேளை நான் பிரதமர் ஆனால் எனது புதிய அமைச்சரவையைக் கட்டமைப்பேன். முதலில் அனைவரும் மலேசியர் என்ற மனநிலையை ஏற்படுத்தி, சமய, மத பேதமற்ற ஒற்றுமையான மக்களை உருவாக்க முனைவேன். இரண்டாவது, ஊழல் என்பது என்னைப் பொறுத்தவரை முதல் சாத்தான். அதை ஒழிக்க சரியான திட்டங்களை அமைப்பேன். இறுதியாகப் பொதுசேவை துறையினரை மறு சீரமைப்புச் செய்வேன். அனைவரும் மலேசியர் என்ற மனநிலையை ஏற்படுத்த முயல்வேன். அதிகத் திட்டமுண்டு... ஆனால் இப்போதைக்கு மூன்றை மட்டும் சொல்லியுள்ளேன்.

பத்மநாதன் (தமிழ் நேசன்): அடுத்தப் பொது தேர்தலுக்குப் பின்னர் பெர்சேவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? உங்கள் போராட்டம் தொடருமா?

அம்பிகா சீனிவாசன்: பெர்சே எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. அதே சமயம் நாங்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அல்ல. ஜோம் பந்தாவ் (Jom Pantau) இயக்கத்தின் வழி தேர்தலில் நடைபெரும் முறைகேடுகள் ஆராய்கிறோம். அது தொடர்பான ஆதாரங்கள் இருக்குமாயின் அவ்வியக்கங்களிடம் ஒப்படைக்கலாம். பெர்சே தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். Jom 100% எனும் இயக்கத்தின் மூலம் வாக்களர்களை ஓட்டுப்போட ஊக்குவிக்கிறோம். அதன் முக்கியத்துவத்தை அறிவிக்கிறோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், இன்னும் மூன்று மில்லியம் மக்கள் வாக்காளர்களாகத் தங்களைப் பதிவு செய்துக்கொள்ளவில்லை. இதற்கு காரணம் பதிவிலாக்காவில் உள்ள குழறுபடிகள்.

பி.ஆர்.ராஜன் (தினக்குரல்): பெர்சே அம்சத்தில் எட்டு அம்ச கோரிக்கைகளை ஏற்க நடப்பு அரசாங்கள் தயங்குவது ஏன்?

அம்பிகா சீனிவாசன்: அந்த எட்டு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டால், அவர்கள் தேர்தலில் தோற்றுவிடுவார்கள் என்பதால்தான். அதிகார மோகத்தினால் தீய தேர்தலை நடைமுறைப்படுத்த அவர்கள் துணைநிர்க்க மறுக்கின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்களின் தலையீடுகளால் சட்டபூர்வமற்ற பதிவுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க இயலாமல் போகிறது. அந்நிய தொழிலாளர்களுக்கு குடியுறிமை வழங்குவது இப்போது சாதாரணமாகிவிட்டது. மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தச் செயல் நடைபெறுவதாகச் அரசாங்கம் காரணம் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே வாக்காளர் பட்டியலில் நடக்கும் ஊழலை கவனிக்க வேண்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில் நேர்மையைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்வதே இப்போதைக்கு முக்கிய செயல்பாடாகக் கருதுகிறேன்.


எழுத்து: ம. நவீன் / உதவி: காத்தையா

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768