முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 45
செப்டம்பர் 2012

  டெசோ: ஒரு பழைய தாத்தாவின் பல்லவிகள்!
யோ. கர்ணன்
 
 
       

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன் நிகழ்வு தொடர்பான கட்டுரைகள்:

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன்

டத்தோ அம்பிகா சீனிவாசனின் தலைமை உரை
வல்லினம் ஆசிரியர் குழு

இரு கேள்விகள்
வல்லினம் ஆசிரியர் குழு

கா. ஆறுமுகத்தில் அறிமுக உரை
வல்லினம் ஆசிரியர் குழு



கட்டுரை:

டெசோ: ஒரு பழைய தாத்தாவின் பல்லவிகள்!
யோ. கர்ணன்

ஆஷா: இனி...
ம. நவீன்



சினிமா பார்வை:

‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
மீனா


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 4
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

லிவிங் ஸ்மைல் வித்யா பதில்கள்
லிவிங் ஸ்மைல் வித்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

துரோணா

எம். ராஜா

சம்பு

ந. பெரியசாமி

இரா. சரவண தீர்த்தா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை

பலத்த வாதப்பிரதிவாதங்களுடன் டெசோ மாநாடு முடிவடைந்துள்ளது. மாநாடு நடைபெறுவதாக அறிவித்ததிலிருந்து தமிழ் ஊடகப்பரப்புப் பெரிய போர்க்களமாகவே காட்சியளித்தது. குறிப்பாக இணைய உலகம். இணையத்தில் சாத்தியமாகயிருந்த சுதந்திரம், இதனை கட்டற்ற போர்க்களமாகவே மாற்றியிருந்தது. இந்தக் களங்களில் டெசோவின் செயல் திறன் அல்லது அர்த்தம் குறித்தெல்லாம் விவாதிக்கப்படவில்லை. கருணாநிதி குறித்தே அதிகமும் விமர்சிக்கப்பட்டது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு அவருக்கு என்ன அருகதையுள்ளது என்பதே பெரும்பான்மையானவர்களின் வாதமாகயிருந்தது.

உண்மையில் இந்த மாநாடு குறித்த பிரமாண்டமான விளம்பரத்திற்கு மாநாட்டிற்கான எதிர்ப்புகள் பேருதவியாக அமைந்திருந்தன. இறுதி நேரத்தில் மாநாட்டைக் குழப்ப ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் மாநாடு குறித்த மிருதுவான பார்வையையும் உண்டாக்கியது. இந்த நாட்களில் டெசோ குறித்த கருத்து தெரிவித்திருக்காத ஒரு இணையப்பயன்பாட்டளர்கூட இருந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

டெசோவினால் எதனைச் சாதிக்க முடியும் அல்லது இதுவரை அந்த அமைப்பு எதனைச் செய்தது என்ற பிரமாண்டமான கேள்விகள் எதுவும் அலசப்படவில்லை. ‘சீரியஸான’ கட்டுரையெழுதும் ஓரிண்டு பேர் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதியிருந்தனர். மற்றும்படி கருணாநிதியின் வேட்டியை கழற்றிவிடுவதிலேயே எல்லோரும் குறியாக இருந்தனர். குறிப்பாக ‘இணையப்புலிகள்’. இலங்கைக்குப் போனவன், மிருகக்காட்சிச்சாலையில் ஒருநிமிடம் தரித்து நின்று சிங்கத்தைப்பார்த்தவன் என வாராவாரம் சகட்டுமேனிக்கு துரோகிகளை உருவாக்கி டவுசரைக் கழற்றிக் கொண்டிருந்தவர்களிடம் கருணாநிதி மாட்டுப்பட்டிருந்தார். இதுமாதிரியான காரியங்களில் அவர்களுக்கிருக்கும் அளவிற்கு மீறிய தொழில் தேர்ச்சி புலப்பட்டது.

டெசோவினால் என்ன நடக்கும் என்பதற்கப்பால், எல்லோருமே கருணாநிதியை எதிர்த்திருந்தார்கள். ஈழத்தில் கருணாநிதிமீது கடுமையான விமர்சனமிருந்தது. இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. பொதுவாகவே உணர்வுபூர்வமான விசயங்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் இதுமாதிரியான எதிர்விளைவுகள்தான் ஏற்படும். குறிப்பாக மிகையான உணர்ச்சிமயமான ஈழத்தமிழர்களும், உணர்வுபூர்வமான அவர்களது போராட்டமும் சம்மந்தப்பட்ட விடயமிது. ஈழத்தமிழ்ச் சூழலெனப்படுவது அடிப்படையில் உணர்வுமையத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவுமையத்தில் அது சுழல்வதேயில்லை. சின்னச் சின்ன தொடுகைகளிற்கெல்லாம் சிலிர்த்துக் கொள்ளத்தக்கது. கருணாநிதி தொட்டதும் இந்த இடத்தில்தான்.

தவிரவும், முக்கியமான இன்னொரு காரணமுமுண்டு. ஈழத்தமிழர்கள் தமது சக்திக்கு மீறிய உயிர்விலை கொடுத்து நடத்திய போராட்டம் அழிக்கப்பட்ட சூழலிது. பல தலைமுறைகளிற்கு குணமடையாத காயமாக இருக்கப்போகும் நினைவது. இந்த யுத்தகாலத்தில் மத்தியஅரசின் பங்காளியாக கருணாநிதியிருந்தார். ஈழப்போரின் தோல்விக்கு பிரதான காரணியாக கருணாநிதியைக் கட்டமைப்பதையும், ஆற்றாமைகளைக் கொட்டக் கிடைத்த வடிகாலாக பயன்படுத்துவதையும் ஒரு தொகுதி தமிழர்கள் செய்கிறார்கள்தான். அது நியாயமற்றது. ‘நாங்கள் சரியாகத்தானிருந்தோம். உலகமெங்களை அழித்துவிட்டதென்ற’ பார்வைகளுடன், கண்களின்மேல் கைவைத்து சுற்றவர தவறுகளைத் தேடுவதையும் தமிழர்கள் கைவிட வேண்டும்தான். கால்களின் கீழும் பள்ளங்களிருக்கலாம்.

கருணாநிதியினால் போரை நிறுத்தியிருக்கலாமா இல்லையா என்பதற்கப்பால், அந்தப்போரின் மீது தனது அரசியலைச் செய்தார் என்பதே பிரச்சனைக்குரியதாகியது. அடிப்படையிலேயே கருணாநிதி குறித்த ஒரு எதிர்மறையான மனப்பதிவே பெரும்பான்மையான ஈழத்தமிழர்களிடமிருக்கிறது. அதற்கு காரணமாக, எம்.ஜி.ஆர்- கருணாநிதி அரசியல்மோதல் காரணமாக இருந்திருக்கலாம். எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளை ஆதரித்திருந்தார். கருணாநிதிக்கும் விடுதலைப்புலிகளிற்குமான உறவு எப்பொழுதும் நல்லநிலையில் இருந்திருக்கவில்லை. எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளிற்கு பணம் கொடுத்ததைத் தொடர்ந்து, கருணாநிதியும் விடுதலையியக்கங்களிற்குப் பணம் வழங்க முன்வந்திருந்தார். எம்.ஜி.ஆர் மீதான விசுவாசம், அல்லது நட்பு காரணமாக அந்த உதவியை புலிகள் ஏற்றுக்கொள்வில்லை. அதன் பின்னான காலத்தில் இரண்டு தரப்பும் கிட்டத்தட்ட எதிர்நிலையில் இருந்து கொண்டதற்கு இந்தச் சம்பவம் காரணமாகியது.

இப்படியான சூழலில்தான் டெசோ நடந்தது. பலவருடங்களின் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட டெசோ இன்றுவரை எதனைச்சாதித்தது என்ற பெரிய கேள்வியிருந்து கொண்டுதானிருக்கிறது. உறங்குநிலையிலிருந்த அந்த அமைப்பை இப்பொழுது எதற்காக தூசிதட்டி எடுக்கப்பட்டது என்பதற்கான பதில் மிக வெளிப்படையானதுதான்.

ஈழத்தமிழர்களின் நலன்களின் எதிர்த்திசையிலேயே இதுவரையிருந்து வந்த ஜெயலலிதா, கருணாநிதி அசந்திருந்த சந்தர்ப்பம் பார்த்து ஈழ ஆதரவை கையிலெடுத்துவிட்டார். இப்பொழுது மீண்டும் அதனை முழுமையாக அல்லது ஒரு பகுதியையாவது பறித்தெடுத்துவிட வேண்டும். இதன்மூலம் அ.தி.மு.கவை விடவும் கீழ்நிலையிலுள்ள தனது கட்சியின் செல்வாக்குத்தளத்தை மீளெழச் செய்யலாமெனக் கருதுகிறார்.

கருணாநிதியின் ஈழ ஆதரவென்பது ஆத்மார்த்தமான ஒன்றாக அல்லாமல், காரணகாரியங்களிற்காக எடுக்கப்பட்ட ஒன்றென்பதே ஈழத்தமிழர்களின் பரவலான அபிப்பிராயம். அதற்கு வலுவான காரணமுள்ளது. அவரது ஈழஆதரவு உண்மையானதெனில், அவர் செயலில் இறங்கியிருக்க வேண்டிய தருணமிதல்ல. மூன்று வருடங்களின் முன்னர் செயற்பட்டிருக்க வேண்டும்.

கருணாநிதியையும் ஒரு மீட்பராக ஈழத்தமிழர்கள் துதித்த காலமொன்றிருந்ததுதான். மூன்று வருடங்களின் முன்னர், வேர்கள் அறுபட்டு அகதியாக ஓடிக்கொண்டிருந்த காலத்தில், பற்றுவதற்கு ஒரு சிறுதுரும்பாவது கிட்டாதா என இந்த பூமிபந்தின் திசைகளெல்லாம் கைளையளைந்து அந்தரித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்தான்; கண்களில் தென்பட்டார். அது அவராகக் கொடுத்த தரிசனமென்பதையும் குறிப்பிட வேண்டும். மனிதச்சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட அவரது செயற்பாடுகள்தான் அந்த நாட்களில் பெரும்பாலானவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. அவரால் இந்தப்போரை நிறுத்த முடியுமென யுத்தவலயத்திலிருந்த கணிசமானவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

யுத்த வலயத்தில் அதிகமும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகவும் அவரது பெயரிந்தது. ஒருகட்டத்தில் இனி விடுதலைப்புலிகளினால் எதுவுமே செய்ய முடியாதென்பதை உணர்ந்த பலர், அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள்;. அந்த நேரத்தில் இது எனக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கிய ஒன்று. எல்லாம் கைதவறிய பின்னர் பற்றிய சிறு துரும்பிலும் நம்பிக்கை வைப்பதையொத்திருந்தாலும், அப்பொழுது கடவுளாளேயே கைவிடப்பட்டவர்கள் கருணாநிதியிடம் கையேந்தி நின்றார்கள்.

அப்பொழுது ஈழத்தமிழர்கள் அவரை வருந்தியழைத்திருந்தனர். தந்தையின் முன்னால் பிள்ளைகளும், பிள்ளைகளின் முன்னாலும் தாய்மாரும், சகோதரனின் முன்னால் சகோதரிகளுமாக அவர்கள்; கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த நாட்கள் அவை. உயிருடனிருந்த பிணங்களிற்கும், உயிரற்ற பிணங்களிற்குமிடையில் பேதங்களோ, அர்த்த வித்தியாசங்களோ இருக்கவில்லை. சிறியதொரு நிலத்துண்டிற்குள் முற்றுகையிட்டுவிட்டு, மரணம் அவர்களது உயிர் கேட்டு விளையாடிக் கொண்டிருந்த நாட்களவை. அப்பொழுதுதான் கருணாநிதி உண்ணாவிரதமிருந்தார்.

அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, இலங்கையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டதென அறிவித்த செய்தியை பதுங்குழிக்குள்ளிருந்து வானொலிப்பெட்டியில் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தச் செய்தியைக்கூட சரியாகக் கேட்க முடியாமல், எல்லாநாட்களையும் போலவே கடுமையான எறிகணைத்தாக்குதலும், விமானக்குண்டுவீச்சும் நடந்து கொண்டிருந்தன. சிலவேளைகளில், இந்தச் செய்தியை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்த யாரேனும் இறந்திருக்கவும்கூடும். வழமைபோலவே ஒவ்வொன்றும் இருநூற்றைம்பது கிலோகிராம் நிறையுடைய குண்டுகளை ‘கிபீர்’ விமானங்கள் அந்த செய்தியறிக்கை நேரத்திலும், அதன் பின்னரும் வீசின. நம்பிக்கைகள் பொய்த்துப்போனதை பலரும் தெளிவாகவே உணர்ந்திருக்கக்கூடும்.

அதன் பின்னான நாட்களில் கனரக ஆயுதப் பயன்பாட்டை நிறுத்துவதாக இலங்கையரசு அறிவித்தது. இலங்கையரசு அறிவித்ததன் நோக்கம், உலகை ஏமாற்றுவதல்ல. தொலைதூரங்களிலிருந்து இயக்கவல்ல கனரக ஆயுதங்ளை அங்கு பயன்படுத்த முடியாத நிலையேற்பட்டுவிட்டது. எழுநூறு மீற்றர் அகலமும், நான்கு கிலோமீற்றர்கள் நீளமுமான பகுதியில் மக்களடைபட்டிருந்தனர். நந்திக்கடற்கரையிலிருந்த இராணுவத்தினர் சாதாரண ஏ.கே துப்பாக்கியினால் சுட்ட தோட்டாக்கள் மறுகரையான இந்துசமுத்திர கடற்கரையோரத்தை கடந்து போனது. (ஒரு ஏ.கே துப்பாக்கியின் தூரவீச்சு 900 மீற்றர்கள்) இந்தச்சூழலில் கனரக ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தச் சொல்லி ஒருவர் கேட்பாரெனில், எவ்வளவ பெரிய அபத்தமது?

வரவேண்டிய நேரத்தில் கரக்டாக வரவில்லை. இப்பொழுது மீண்டும் வந்திருக்கிறார்- ஈழத்தமிழர்கள் அழைக்காமலேயே. இதனர்த்தம் இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதல்ல. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் ஓர் இராணுவத்தினன் கண்காணிக்கிறான்தான். எங்கள் பேச்சுக்கும், மூச்சுக்கும் எல்லைகள் உண்டுதான். ஆனால், அடுத்து என்ன செய்யலாமென்ற சிந்தனைக்கான அவகாசமுள்ளது. மனிதர்களின் இருப்பும், செயலும் அர்த்தப்படுவது, சரியானதை சரியானவர்கள் சரியான நேரத்தில் செய்வதனால்தான். ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதியதனைச் செய்யவில்லை. அதனால்த்தான் இவ்வளவு வில்லங்கங்களும்.

ஈழத்தமிழர்களிற்கான இந்திய ஆதரவுத்தளமென்பது அமைப்பு ரீதியான ஒன்றாக உருமாறுவது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்றுதான். அது காலத்தின் கட்டாயமும்கூட. களத்திற்கு வெளியே நமது ஆதரவுமையங்கள் உருவாவது அவசியமானது. இந்த ஆரவுமையத்தின் துணை கொண்டாவது மத்தியரசின் கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்த முயலலாம். ஈழத்தமிழர்களிற்கு எஞ்சியுள்ள சாத்தியமான பேராட்ட வழிமுறைகளிலொன்றாக இதுவுமுள்ளது. அந்த உருவாக்கத்திற்காக நாம் பாடுபட வேண்டும்தான். அதற்காக தமிழக தேர்தல் அரசியல் இழுபறிக்குள் நமது இரத்தத்தை விற்பனைப் பொருளாக்கி விடாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்.

தி.மு.கவின் டெசோ, அ.தி.மு.கவின் தமிழக சட்டப்பேரவை தீர்மானம் என இரண்டு சம்பவங்கள் ஈழத்தமிழர்களிற்காக நடந்துள்ள போதும், யதார்த்தம் என்னவெனில், இந்தவகையான அரசியல்ப் போக்குகள் ஒருதுளியளவு பலனையேனும் ஈழத்தமிழர்களிற்கு தரப்போவதில்லை. ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இயக்கங்கள் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியின் பின்பாக அணிதிரண்டதையொத்த சம்பவங்கள்தான் நிகழலாம். கருணாநிதி டெசோவை நிகழ்த்தியதனால், அடுத்த மாதமே தனித்தமிழீழம் வேண்டி ஜெயலலிதாவுமொரு மாநாடு கூட்டலாம். கருணாநிதியின் மாநாட்டில் கலந்து கொண்டர்களிற்கு நிச்சயம் அழைப்பிருக்காது. அதற்கடுத்த டெசோவில் ஜெயலலிதாவின் கூட்டத்திற்குச் சென்றவர்களிற்கு அழைப்பிருக்காது. உண்மையான பிரச்சனைகளாக எதுவோ இருக்க நமது தலைவர்களும் இந்த அழுகுணியாட்டத்தில் மூக்கைச் சிந்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

உண்மையிலேயே ஈழத்திற்குத் தேவையானது, தமிழகத்திலெழும் ஈழ ஆதரவில் கருணாநிதியினதோ, ஜெயலலிதாவினதோ பங்கென்பதையே. மாறாக, கருணாநிதிக்கான அல்லது ஜெயலலிதாவிற்கான ஈழ ஆதரவையல்ல. இது அவர்களிற்கு மட்டுமல்ல, சீமான் வகையறாக்களிற்கும் பொருந்தும்.

ஆனால் துரதிஸ்டவசமாக தமிழக அரசியல் சூழல் அப்படியானதாக இல்லை. வெகுஜனச் சூழலில் ஓரளவு குறிப்பிடத்தக்களவு ஆதரவுச் சூழல் இருக்கின்ற போதும், அது செல்வாக்குச் செலுத்தத்தக்க அளவாகவும், அமைப்பு ரீதியாகவும் உருமாற வேண்டியிருக்கிறது. ஈழ அரசியலை தமிழகத்தில் செய்யும் சக்திகளிற்குள்ள மிகப்பெரிய பொறுப்பது. அதனை அவர்கள் செய்யாத வரையில், ஆளாளுக்கு ஒவ்வொரு சீமான்களாக இருந்துவிட்டுப் போகலாம். ஈழத்தமிழர்களும் ஒவ்வொரு முகங்களிலும் முதலிட்டுவிட்டு, முதலுமில்லை லாபமுமில்லையென்ற கணக்கில் இருக்க வேண்டியதுதான்.

இந்தியா எனும் அரசியல், பொருளாதார, கலாச்சார வல்லரசின் சமீபமாக அமைந்துள்ள நாடுகளிற்குள்ள பொதுவிதியிது. விரும்பியோ விரும்பாமலோ நாம் இந்தியப் பிம்பங்களாகத்தான் வாழ வேண்டியிருக்கிறது. நாம் வாழ்வதென்றாலும் இந்திய நலன்களைக் குறுக்காறுக்காமல்தான் வாழவேண்டியிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் என்ன வகையான அரசியலை முன்னெடுப்பதென்பதை தீர்மானிக்கும் சக்தியாக இந்தியாதானுள்ளது. இலங்கையிலுள்ள தமிழ்ப்பத்திரிகை ஆசிரியர்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் இந்தியாதான் இருக்கிறது.

தமிழக அரசியல்ச்சூழலின் தேர்தல் துரும்புச்சீட்டாகத்தான் நாங்கள் இருக்கின்றோம் என்று தெளிவாகத் தெரிந்தும், மீண்டும் மீண்டும் அந்தக்களத்திலேயே நம்பிக்கை வைக்கவும், முரண்டு பிடிக்க முயாமல் அனுசரித்துப்போகவும் வேண்டித்தானிருக்கிறது. இந்திய மத்திய அரசில் என்றாவதொரு நாள் இவர்கள் செல்வாக்குச் செலுத்துபவர்களாக மாறலாமென்ற எதிர்பார்ப்பன்றி வெறென்ன?

கடந்த முப்பது வருடங்களிற்கு மேலாக பேராடியும் ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளெதனையும் பெறவில்லை குறிப்பாக, இந்திய அச்சில் சுழலாமல் சுயாதீனமாக இயங்கவல்ல தளத்தை இத்தனை வருடங்களாகியும் நம்மால் உருவாக்க முடியவில்லையென்பது துரதிஸ்டவசமானது. ஆக, நமது நாட்டியங்களிற்கு இன்றும் இந்தியாதான் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கிறது.

ஈழ ஆதரவுத்தளம் அமைப்பு ரீதியிலானதாக உருமாறுவதன் ஒரு தொடக்கமாக டெசோவைக் கொள்ளலாமென்ற வாதமிருந்தாலும், டெசோவினால் ஈழத்தமிழர்களிடம் நெருங்கிச் செல்ல முடியவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல கருணாநிதி மீதான எதிர்ப்புணர்வினால் தமிழர்கள் மத்தியில் அதனர்த்தம் சுருங்கிவிட்டது. ஆனாலும் கருணாநிதி சளைக்காமல் டெசோவை நடத்திக்காட்டிவிட்டார்.

தேசம், சுயநிர்ணயம் போன்ற வசனங்களெதுவுமே தவறியும் மாநாட்டில் உச்சரிக்கப்படவில்லை. தமிழர்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளெதுவும் பேசப்படவேயில்லை. மாறாக தமிழர்கள் விரும்பும் தீர்வென்ற பொதுவான வசனமொன்று உச்சரிக்கப்பட்டுள்ளது. மத்தியரசிற்கும் சங்கடம் வராமல், ஈழத்தமிழர்களிற்கும் எரிச்சல் வராமல் இரண்டிற்கும் நடுவினால் மாநாட்டுத் தீர்மானங்களைக் கொண்டு போவதற்கு கருணாநிதி தனது மொழிப்புலமையிடம் தஞ்சமடைந்திருக்கிறார்.

கசப்பான யதார்த்தம் என்னவெனில், மொழியினால் ஆடப்படும் இந்தச் சித்துவிளையாட்டுக்கள் எந்தப் பிரச்சனைகளிற்கும் தீர்வைத் தரப்போவதில்லை. தற்காலிகமான அரசியல் தேவைகளிற்கு மட்டுமே உதவலாம். ஏனெனில் மாநாட்டை நடத்துவதிலும், தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் மத்திய அரசிற்கு சங்கடம் ஏற்படாத வகையிலும், இலங்கைப் பிரச்சனை தொடர்பான அதன் நிலைப்பாடுகளை மேவாத வகையிலும் நடந்து கொண்டதிலிருந்தே டெசோவின் நோக்கமும் வரையறையும் தெளிவாகிறது. தவிரவும், மாநாட்டில் கருணாநிதி ஆற்றிய உரையும், ஈழத்தில் அவர் குறித்திருக்கும் சித்திரத்தை மாற்ற உதவவில்லை. யுத்தத்தை நிறுத்தக்கோரிய அவரது உண்ணாவிரதத்தின் கதையை இந்தச்சமயத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கதையைக் கேட்க, இந்த உலகமெல்லாம் சேர்ந்து அந்த மனிதரை இப்படி ஏமாற்றியிருக்கிறதே என இரக்கமே தோன்றுகிறது.

உண்ணாவிரதத்தை தொடங்கியதையடுத்து, இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாகவும், கனரக ஆயுதப்பயன்பாடு நிறுத்தப்பட்டதாகவும் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும்;, இலங்கையரசு ஏமாற்றிவிட்டதெனவும் குறைபட்டுக் கொண்டுள்ளார். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களிற்குட்படாத வயதானவரொருவர் இப்படியான நிலையிலிருந்தது ஆச்சரியமான சங்கதியில்லைத்தான். யுத்தத்தின் முடிவில் பிரபாகரன் இறந்து, விடுதலைப்புலிகளியக்கமும் அழிந்து பெருமளவு மக்களும் கொல்லப்பட்ட கதைகளையாவது தெரிந்து கொண்டாரே என்றளவில் நாம் சந்தோசப்படலாம். இல்லையென்றால் டெசோ மேடையில் வைத்து, இலங்கை சென்று வந்த திருமாவளன் தகவலைச் சொல்ல, அவர் மூர்ச்சையடைவது மாதிரியான அவலக்காட்சிகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.

டெசோவினால் நம்பிக்கையான எந்த மாற்றமும் ஏற்படுமென்று நம்பவில்லை. கருணாநிதியும் டெசோவும் தாங்கள் வரையறுக்கப்பட்டவர்கள் தானென்பதை உணர்த்துவதுடன், ஈழம் தொடர்பாக தமிழகத்தில் இதுவரையிருந்து வந்த செயற்பாட்டு முறையில்; எந்த மாற்றமுமில்லையென்பதும் தெளிவாகிறது. உண்மையான அரசியல் அர்த்தத்தில், டெசோ ஈழத்தமிழர்களிற்குப் பெரியளவில் உதவிகளெதனையும் செய்துவிடவில்லை. அவர்களிற்கு விசேடமான செய்திகளெதனையும் சொல்லியுமிருக்கவில்லை. ஆனாலும், பிரச்சனையை சர்வதேசக் கவனத்திற்கு கொண்டு செல்ல எடுத்த முடிவை வரவேற்கலாம்.

தீர்மானங்களை பான் கீ மூனிடம் கையளிப்பது மட்டுமே தனது கடமையென கருணாநிதி நினைத்தால், டெசோவில் துளிர்த்த சிறு தளிரும் கருகிவிடும். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து எப்படி முன்னகர்த்துகிறார்கள் என்பதிலேயே தீர்மானங்களினதும், டெசோவினதும் எதிர்காலம் தங்கியுள்ளது. டேசோவினால் மிகச்சிறிதான அரசியல் அசைவுகளைத்தான் உண்டாக்க முடியுமெனிலும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஏனெனில் இவற்றைவிட பெரிய அசைவுகள் ஏற்பட்ட சமயங்களில்க் கூட, ஈழப்பிரச்சனையில் நல்ல மாற்றங்களெதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. செயற்றிறன் மிக்க பெரிய அசைவகளே அவசியமானவை.

தி.மு.க மாதிரியான பெரிய கட்சியொன்றிடமிருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதும் இதையல்ல. முன்னரே குறிப்பிட்டது போல, உபகண்டத்தில் தீர்மானமிக்க சக்தியாக ஈழ ஆதரவுத்தளமொன்று உருவாவதே மிக அத்தியாசியமான தேவை. தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் இதுவரையில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதில்லை. சிக்கலான தமிழக அரசியலச் சூழலில் பிரதான இரண்டு கட்சிகளுமே ஒன்றிணைய வேண்டுமென எதிர்பார்ப்பது அபத்தம்தான். குறைந்தபட்சம் ஈழவிவகாரமென்ற ஒன்றிலாவது ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு. ஏட்டிக்குப் போட்டியான நகர்வுகளினால் இதுவரையில் எதைத்தான் கண்டோம்?

இந்தச் செயற்பாடுகள் சாதாரணமானவையல்ல. ஈடுபாடும், அர்ப்பணிப்பும் மிகுந்திருந்தால் மட்டுமே சாத்தியம். தேர்தல் நிகழ்ச்சி நிரல்களிற்குள் மட்டும் ஈழப்பிரச்சனையை வைத்திருந்தால், அடுத்த வருடமோ அதற்கடுத்த வருடமோ இன்னொரு மகஜரை ஐ.நாவிற்கு அனுப்பலாம். என்ன, இப்பொழுது பான் கீ மூனிருக்கிறார். அப்பொழுது வேறொருவர் இருப்பர். அவ்வளவுதான் மாற்றம்.

கருணாநிதியின் இலக்கு தேர்தல் அரசியல் மட்டும்தானெனில், இது போன்ற நடவடிக்கைளே போதுமானவை. வுசதியைப் பொறுத்து இன்னும் சற்று முறுகலாம். மாறாக ஈழத்தமிழர்களின் மீது அக்கறையுடையவரெனில் அவர் பயணிக்க வேண்டிய தூரம் மிக மிக அதிகமானது. அப்படியேதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் தவிர இலங்கையிலிருக்கும் தமிழ்த்தேசிய சக்திகள் அவருடன் பகிரங்கமானதும், மகிழ்ச்சியானதுமான கூட்டு வைத்துக்கொள்ளத் தயங்கும். இம்முறை மாநாட்டில் இந்த சக்திகளெதுவும் கலந்து கொள்ளவில்லையென்பதை கவனிக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல, ஈழத்தமிழர்களிடமிருந்த டெசோவிற்கெதிராக மனநிலையென்பது, டெசோ இதுவரை என்ன செய்தது என்பதாலல்ல. அது கருணாநிதியைக் குறித்தது. தமது வல்லமைக்கும் மிஞ்சிய பேரழிவொன்றை சந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் தங்களின் பிணங்களை வைத்து அவர் பகடையாடியதான உணர்வே இன்றுவரை எல்லோரிடமுமிருக்கிறது. அந்தப் பேரழிவின் காயங்கள் மாறும்வரை அந்த எண்ணமும் இருந்து கொண்டேயிருக்கும்.

டெசோ அமைப்பின் முன்னுள்ள பெரிய சவால் எதுவெனக் கேட்டால், தமிழீழத்தையோ தமிழர்களிற்கான கௌரவமிக்க பிறிதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதோ அல்ல. மாறாக, எந்த மக்களிற்காக டெசோ உருவானதோ, அந்த மக்களிடமே அமைப்பின்; தலைவரான கருணாநிதி குறித்த சாதகமான மனநிலையை ஏற்படுத்துவதுதான் மிகக்கடினமான பணியாக இருக்கப்போகிறது ஏனெனில்; ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, பிரபாகரன் இறப்பதற்கு ஒரு மாதத்தின் முன்னரே கருணாநிதியும் இறந்துவிட்டார்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768