|
|
மனித உரிமைகள் தொடர்பாக இப்போது மிகவும் தவறாக விளங்கிக்கொள்ளப் படுகிறது.
ஒருவர் சொன்னார், 'மனித உரிமைகள் என்பது ஒரு புதிய சமயம் போன்றது' என. அது
ஆபத்தானது என்றும் சொல்கிறார். அவர் யாரென்று நான் சொல்ல விரும்பவில்லை.
உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர் எதைப் புரிந்துகொள்ள வில்லை
என்றால், நாம் விளக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகள் என்பது அனைவராலும்
அனுபவிக்கப்படுவது. மனிதராகப் பிறந்ததினாலேயே நாம் அனைவரும்
அனுபவிப்பதுதான் மனித உரிமைகள். நீங்கள் மனிதர் என்பதால் மனித உரிமைகளை
அனுபவிக்கிறீர்கள். யாரும் உங்களுக்கு அதைக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால்
உங்களிடம் இருந்து அதைப் பறித்துக்கொள்ளலாம். அதைத்தான் நாம் தடுத்து
நிறுத்த வேண்டும்.
மனித உரிமைகள் என்றால் என்ன?
மனித உரிமைகள் என்பது அனைவரிடத்திலும் நியாயமாக நடந்துகொள்வது;
மனிதத்தன்மையுடன் நடந்துகொள்வது; நம்மைச் சுற்றியுள்ளவர்களை
அடிமைப்படுத்தாமல் இருப்பது; பெரும்பான்மையினத்தவரை நடத்துவதற்கு சமமமாக
சிறுபான்மையினத்தவரையும் நடத்துவது.
மனித உரிமைகள் நமது அரசியல் சாசனத்தில் உள்ளது. பலர் இதை மறந்து
விடுகிறார்கள். அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளின் கீழ் இவை
வழங்கப்பட்டுள்ளன.
அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்கீழ் வருகிறது
பேச்சு உரிமை. இதில்தான் பத்திரிகைகளின் உரிமையும் அடங்கியுள்ளது. அதே போல
பொது மக்கள் கூடுவதற்கான உரிமையும் உண்டு. இந்தச் சுதந்திரத்தின்
அடிப்படையில்தான் பெர்சேவும் இயங்கியது. மேலும், அமைப்புகள் ஒன்று
சேர்வதற்கு உரிமையுள்ளது. அதனடிப்படையிலேயே அரசு சாரா சமூக அமைப்புகளும்
ஒன்றிணைகின்றன... இவற்றுடன் மற்ற அடிப்படைச் சுதந்திரங்களும் உங்களுக்கு
உண்டு.
பேச்சு உரிமை என்றால் எல்லையற்ற சுதந்திரம் என்று பொருளல்ல. எல்லாரும்
யாரையும் பற்றியும் எது வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்பதல்ல இதன் பொருள்.
எது பேசுவதானாலும் நீங்கள் பொறுப்புடன் பேச வேண்டும். அப்படிச்
செய்யாவிட்டால் உங்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர முடியும்.
சீர்குலைவுச் சட்டம் என நம் நாட்டில் உள்ளது. அது நம் நாட்டுக்குத்
தேவையில்லாத ஒன்று. 50 ஆண்டுகளுக்கு முன்னர் இது நம் நாட்டுக்குத்
தேவைப்பட்ட சட்டம். இப்போது தேவையில்லாததாகிவிட்டது. இது கேலிக்கூத்தான ஒரு
சட்டம்.
எனினும் இன்றைய இணைய உலகில் இதுபோன்ற பல சட்டங்கள் அர்த்தமற்றதாகி விட்டன.
ஆனால் அரசாங்கம் இணையத்தைக் கட்டுப்படுத்த பல பல புதிய சட்டங்களை இயற்றி
வருகிறது.சாட்சிகள் சட்டத்தில் கொண்டு வரப்படும் நகைப்புக்குரிய சட்டத்
திருத்தங்களை ஆளும் அம்னோ கட்சி உறுப்பினர்களே எதிர்க்கின்றனர்.
புதிய பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புச்
சட்டத்திற்குப் பதிலா இது இயற்றப்பட்டுள்ளது. இதில் அரசைத் தூக்கி எறிவது,
மன்னருக்கு எதிராகப் போர் தொடுப்பது போன்றவற்றிற்கான சட்டங்கள் உள்ளன. இதன்
அர்த்தம் என்னவென்றால், இந்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்தை
எதிர்ப்பவர்களை விசாரணையின்றித் தடுப்புக் காவலில் வைக்க முடியும். யார்
தொடர்பும் இல்லாமல் 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்க முடியும்.
அடுத்தது சட்டத்தின் மாட்சிமை. இதில் இரு வேறுபாடுகள் உண்டு. சட்டத்தின்
மாட்சிமை ஒன்று, சட்டத்தின் படி ஆட்சி மற்றது. நமது அரசியல்வாதிகள் இவை
யாவும் நம் சட்டங்கள், நாம் சட்டத்தின்படிதான் ஆட்சி நடந்துகொள்கிறோம்
என்பார்கள்.
சட்டத்தின் மாட்சிமை என்பது சட்டம் நியாயமாக இருக்க வேண்டும், அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எடுத்துக்காட்டாக பாதுகாப்புக் குற்றங்கள்
சட்டம். இதில் சட்டத்தின் மாட்சிமை இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது.
மூன்றாவது சுதந்திரமான நியாயமான தேர்தல். ஏன் நாங்கள் இதற்காகப்
போராடுகிறோம்? அடிப்படையில் அதிகாரத்தை மக்களிடம் வழங்க வேண்டும்
என்பதற்காகத்தான். உங்கள் வாக்குக்கும் எனது வாக்குக்கும் ஒரே
மதிப்புத்தான்.
எடுத்துக்காட்டாக, ஒரு தொகுதியில் 150,000 பேர் இருக்கலாம், வேறு ஒரு
தொகுதியில் 30,000 பேர் இருக்கலாம். ஆனால் அதற்காக 150,000 பேர் உள்ள
தொகுதியாளரின் வாக்கு, 30,000 பேர் உள்ள தொகுதியாளரின் வாக்கு ஐந்தில் ஒரு
பங்குதான் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியல்
சாசனத்தில் தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான
வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால் அரசாங்கம் அதைப் பின்பற்றுவதில்லை. அவர்கள்
பின்பற்றாததால் பொதுமக்கள் 17% ஆதரவைப்பெற்ற நிலையிலேயே சாதாரண
பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சி செய்யலாம்.
உங்களுக்கும் நமது அரசாங்கத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிடிக்கவில்லை
என்றால் அவர்களைத் தோற்கடிக்கக்கூடிய உரிமை நமக்கு வேண்டும். நமக்கு என்ன
வேண்டுமோ அதைப் பெறும் உரிமை நமக்கு இருக்க வேண்டும். அதுதான் நியாயமான
முறை. அதிகாரம் பொது மக்களிடம் இருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்தவர்கள்
சரியாகச் செயல்படாவிட்டால் அவர்களை நாம் விலக்கிவிட முடியும் என்பது
அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதுதான் ஜனநாயக முறைப்படி செயல்படுவது.
சுதந்திரமான நியாயமான ஊடகங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அவர்களுக்கு
நிறைய அதிகாரம் உள்ளது. அதனால்தான் அவர்களுக்கு அதிக பொறுப்புள்ளது.
பேனாவின் சக்தி பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. கருத்துகளைத்
தடுக்கலாம், வெளிப்படுத்தலாம். உங்களது சிந்தனையை மாற்றக்கூடிய கருத்துகளை
அவர்கள் எழுத முடியும். தொலைக்காட்சி செய்தியின்போது கவனித்திருப்பீர்கள்.
எடுத்துக்காட்டாக சி.என்.என் . கிறிஸ்டின் அவென்கோ நாம் மிகவும் கவனமாகப்
பேச வேண்டும் என்று மிகக் கவனமாக இருப்பார். தம்மால் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்த முடியும் என்பது அவருக்குத் தெரியும். நான் மிகவும் கவனமாக
இருக்கிறேன். அதனால் நான் மிகவும் பொறுப்பாக உணர்கிறேன் என்று அவர்
சொல்வார்.
நம் நாட்டில் நியாயமான, சுதந்திரமான முக்கிய பத்திரிகை உள்ளனவா? எல்லா
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தப் பத்திரிகைகள் இடம்கொடுக்கின்றனவா?
சில பத்திரிகைகளைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. இதில் சில நேர்மையாகவும்
நியாயமாக நடந்துகொள்வதில்லை என்பது வெளிப்படையாகத் தெரியும். சில
அரசாங்கத்தின் ஊதுகுழலாகவே செயல்படுகின்றன. ஆனால் மற்ற பத்திரிகைகளிடம்
இருந்து நாம் அதிகம் எதிர்ப்பார்க்கிறோம்.
குறிப்பாக பெர்சே பேரணிக்குப் பிறகு. பெர்சே கலகம் என்றே வர்ணித்தார்கள்.
இந்த வார்த்தைகள் இலைமறைகாயாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். டிவி 3
மற்றும் சில தொலைக்காட்சிகளும் பெர்சேயின் மோசமான ஒரு பக்கத்தை மட்டுமே
திரும்பத் திரும்பக் காட்டினார்கள். இது சிலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்
கூடும். எனினும் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படும் பத்திரிகைகளை பல
மலேசியர்கள் உண்மையிலே வெறுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
பெர்சேயின் கோரிக்கைகளில் ஒன்று சுதந்திரமான, நியாயமான பத்திரிகைகள்.
பெர்சே இயக்கத்தின்போது, தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு உட்பட்ட
முன்பதிவு செய்யப்பட்ட கொள்கை அறிக்கையை வெளியிடலாம் என்றது அரசாங்கம். இது
எப்படிப்பட்ட ஊடக சுதந்திரம்? அவர்கள் கேலிச்சித்திரத்தையும் தேர்தலின்போது
அனுமதிக்கப்போவதில்லை. எந்தவிதமான நகைச்சுவை உணர்வும் அவர்களுக்கு இல்லை.
நீங்கள் நியாயமான தேர்தல், ஜனநாயகம், சம உரிமை பற்றிப் பேசும்போது இவை
யாவும் இருக்க வேண்டியவை. இந்தப் அடிப்படை அம்சங்கள் உங்களிடம் இருக்க
வேண்டும்.
சில அரசியல்கள்வாதிகள் முட்டாள்தனமாகப் பேசும் போது நீங்கள் அவர்களைக்
குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். மனித உரிமைகள் ஆபத்தானவை என்று ஒருவர்
சொல்லும்போது, நீங்கள் உடனே மனித உரிமைகள் என்றால், நீங்கள் என்ன பொருள்
கொள்கிறீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். நான் சொல்கிறேன் அவருக்குத்
தெரிந்திருக்காது.
இந்த அடிப்படைகள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் எனக்குத் தெரியும் மிகச் சிறந்த செய்தியார்கள் சிலர் இந்நாட்டில்
உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எழுத்துகள் அடையாளம் தெரியாத அளவுக்கு
ஆசிரியர்களால் திருத்தியமைக்கப்படுகின்றன.
நான் என்ன விரும்புகிறேன் என்றால் தரமான பத்திரிகைகள். இது சாத்தியமானதே.
இது அனுமதிக்கப்பட்டால் செய்தியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக
இருப்பார்கள். நாங்கள் தேசிய செய்தியாளர்கள் சங்கத்தை ஆதரிக்க வேண்டும்.
அது ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
செய்தியாளர்கள் எழுதுவதை வெட்டித் திருத்துவதை நிறுத்துமாறு பத்திரிகை
ஆசிரியர்களுக்கு மனு அனுப்பப்போவதாகக் கூறினார்கள். அனுப்பினார்களா
தெரியவில்லை.
தைரியமாகக் கருத்துகளைச் எழுதும் செய்தியாளர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு.
பயப்படாதீர்கள். மற்றவரிடம் வேலை செய்கிறீர்கள் என்பதற்காக உங்கள் ஆத்மாவை
விற்று விடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்யத் தேவையில்லை. நீங்கள்
சரியானதைச் செய்யும்போது, நான் உறுதி தருகிறேன், நான் உங்களுக்கு
ஆதரவளிப்பேன்.
நன்றி.
|
|