|
|
நான்கு பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் இறுதியில் அம்பிகா
சீனிவாசன் இரு கேள்விகளை நிகழ்வின் இறுதியில் பத்திரிகை ஆசிரியர்களிடம்
முன்வைத்தார்.
டத்தோ அம்பிகா சீனிவாசன்: எனது கேள்வி இரு நிலைகளில் இருந்தாலும் அவை
இரண்டுமே ஒன்றை அடிப்படையாகக் கொண்டதுதான். முதலாவது, இப்போது நடைமுறையில்
உள்ள ஊடகச் சுதந்திரம் குறித்து உங்கள் நால்வருக்கும் திருப்தி உண்டா?
மற்றது, இப்போதைய அரசாங்கம் உங்களுக்கு உத்தரவிட்டுள்ளபடி, நீங்கள் பதிவு
செய்யவிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களை அவர்கள் பார்வைக்கு அனுப்பி வைத்து
அது வெளியிடத் தகுதியானது என அவர்கள் அனுமதித்தப் பின்னரே வெளியிட வேண்டும்
எனக்கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
மலையாண்டி (மலேசிய நண்பன்): திருப்தி உண்டா இல்லையா என்ற கேள்விக்கு இங்கு
இடம் இல்லை. மாற்றம் நடப்பதை உறுதி செய்வதே முக்கியம். இரண்டாவது
கேள்வியைப் பொறுத்தமட்டில், ஊடகச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இந்நிலை
ஆரோக்கியமானதல்ல. இது தொடரக்கூடாது என விரும்புகிறேன்.
எம். இராஜன் (மக்கள் ஓசை): நாட்டில் ஒரு தமிழ் நாளிதழின் ஆசிரியராக
இருப்பது போன்றதொரு கொடுமை வேறெந்த துறையிலும் இல்லை. நாங்கள் வாங்குகின்ற
அடிகளும், ஏச்சுகளும், பேச்சுகளும் பேசாமல் குப்பைக் கூட்டச் சென்று
விடலாமா என சிந்திக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனாலும், ஊடகத்துறையைப்
பொறுத்தவரை எனக்கென்று சில கொள்கைகள் உண்டு. யாருடைய செய்தியையும்
இருட்டடிப்பு செய்யக்கூடாது. அனைத்து கருத்துகளுக்கும் எதிர்க்கருத்துகள்
உண்டு. அக்கருத்து சரியோ தவறோ அதை கண்டிப்பாக வெளியிடுவதென்பது எனது
கொள்கை. இப்போது, டத்தோ கேட்ட கேள்விக்கு வருகிறேன். மக்களுக்கு உண்மையானத்
தகவல்களைக் கொண்டுச் சேர்க்கும் இப்பணியில் நான் மகிழ்ச்சியாகவே
இருக்கிறேன். என் தராசு எப்போது நியாயத்தின் பக்கத்தில் இருக்கும்
பட்சத்தில் எனக்கு மகிழ்ச்சியே.
இரண்டாவது கேள்வியைப் பொறுத்தவரை, எனக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் பதில்.
ஒரு நாளிதழாளரை இவ்வாரெல்லாம் அடக்குவது கொடுமை. ஒரு நாளிதழ் ஆசிரியருக்கு
செய்தியை எப்படி வெளியிட வேண்டும் எனத்தெரியும். அதை யாரும் போதிக்கத்
தேவையில்லை.
பத்மநாதன் (தமிழ்நேசன்): முதல் கேள்வி ஊடகச் சுதந்திரம் குறித்தது. ஊடகச்
சுதந்திரம் எவ்வாறு செயல்பட்டது என 2008 இன் தேர்தல் முடிவுகளைப்
பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். ஒருவேளை நாங்கள் மிகவும்
அடக்கப்பட்டிருந்தால் எதிர்க்கட்சி ஐந்து மாநிலங்களைப் பிடித்து வெற்றிப்
பெற்றிருக்க முடியாது. இந்த இரண்டு மூன்று ஆண்டு காலக்கட்டங்களில் பெர்சே
பேரணி மற்றும் இண்ட்ராப் பேரணி குறித்த தகவல்களை நாங்கள் அதிக
முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகிறோம். இன்றையக் காலத்தில்
அனைத்துமே விரல் நுனியில் உள்ளது. மலேசியா கினி, மலேசியா இன்சைடர், பிரி
மலேசியா, போன்ற இணைய இதழ்கள் உடனுக்குடன் செய்திகளை தருகின்றன. இந்நிலையில்
அச்சு நாளிதழ்கள் என்னதான் செய்தியை இருட்டடிப்புச் செய்தாலும் உண்மையை
மறைக்கவே முடியாது. எங்களைப் பொருத்தவரை மக்களுக்கு நாங்கள் தர வேண்டிய
செய்திகளைக் கொடுக்கிறோம். அதை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியது மக்கள்
பொறுப்பு.
அதே போல செய்தியை அரசின் பார்வைக்கு அனுப்பிய பின்னரே வெளியிட வேண்டும்
என்பது தவறான செயல். நான் ஒன்றை மட்டும் அரசிடம் கேட்பேன். உங்களிடம்
போலிஸ் உள்ளது, இராணுவம் உள்ளது, இன்றைய ஆட்சி உங்களுடையது, ஐம்பது
ஆண்டுகள் ஆண்டுவிட்டீர்கள்... அப்படியிருக்க ஏன் பயப்படுகிறீர்கள்? உங்கள்
பயத்தின் காரணம் என்ன? இதற்கெல்லாம் காரணம் மக்கள் சக்தி. மக்கள் சக்திக்கு
முன் எந்த அரசும் பயந்தே தீர வேண்டியுள்ளது.
பி.ஆர். இராஜன் (தினக்குரல்): தினக்குரல் வெளிவந்து கடந்த ஆறு மாதங்களே
ஆகின்றன. இந்த ஆறு மாதத்தில் எவ்வளவு உண்மைகள் மக்கள் முன் நாங்கள்
வைத்திருக்கிறோம் என்பதை வாசிப்பவர்கள் அறிவார்கள். எனக்குத் தெரிந்து ஒரு
தமிழ் நாளிதழ் புள்ளி விவரத்துடன் ஆதாரம் தரும் தரவாக இருக்கும் சாத்தியம்
தினக்குரல் மூலம் நிகழ்ந்துள்ளது. மற்ற மொழி நாளிதழ்களைவிட எங்களுக்குக்
கிடைக்கும் அங்கீகாரமும் பொருளாதார வசதிகளும் மூன்றில் ஒரு பகுதிதான்.
ஆனால், சமுதாயத்திற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் நாங்கள்
போராடிக்கொண்டிருக்கிறோம்.
காலையில் வரும் தொலைபேசி அழைப்பு எண் இறுதியில் 888 என இருந்தால் அன்று ஏதோ
அரசாங்க விவகாரத்தில் மாட்டியுள்ளோம் என புரிந்துகொள்ள வேண்டியதுதான்.
அன்றையக் காலை சிக்கலுடன்தான் தொடங்கும். தலைவர்கள்தான் பொய்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாமாவது உண்மையைச் சொல்வோமே என்ற மன
நிலையில்தான் இத்தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்கிறோம். நிறைய வாசகர்கள் நாம்
சொல்லும் உண்மையால் நம்மீது அக்கறைக் காட்டுவதைக் காணும்போதுதான் இன்னும்
இச்சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அக்கறை அதிகமாகின்றது.
ஒரு காலத்தில் தமிழ் நாளிதழ்களில் பழைய செய்திகள் வந்தன. இப்போது நிலை
மாறியுள்ளது. ஒருவருக்கொருவர் சளைக்காமல் செய்திகளை வழங்கி வருகிறோம்.
இனியும் அறிக்கை கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை.
உருப்படியாகச் சொல்ல எதுவும் இருந்தால் சொல்லட்டும். பெர்சே போன்ற உண்மையான
போராட்டத்திற்கு துணை நிற்பது எங்களுக்குப் பெருமையே. இந்நிலையில்
அறிக்கைகளை அரசின் பார்வைக்கு அனுப்புவதெல்லாம் கொடுமையானது. நாங்கள்
சுதந்திரமானவர்கள். எங்களுக்கு நீங்கள் நாளிதழ் நடத்த போதிக்காதீர்கள்.
நாங்கள் உங்களுக்கு ஈடனவர்கள். நாங்கள் குழந்தைகள் அல்ல. உங்களைப் போல
நாங்களும் திறன் பெற்றவர்களே. நாங்கள் உங்களுடன் மேடையில் பொது
விவாதத்திற்கும் தயாராக உள்ளோம். எனவே எங்களையும் உங்களுக்குச் சமமாக
நடத்துங்கள் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு எங்கள் பணியைச்
செவ்வனே செய்யத் தெரியும்.
டத்தோ அம்பிகா சீனிவாசன்: முதலில் நான்கு நாளிதழ் ஆசிரியர்களுக்கும் என்
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பார்வையில் அவர்கள் தங்களுடைய
நாளிதழ்களில் நியாயமான இடத்தை பெர்சேவுக்கு வழங்கியுள்ளனர். இந்த
விடயத்தில் ம.இ.கா மௌனம் காத்திருந்தாலும் நாளிதழ்கள் தங்கள் பங்களிப்பை
வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நான் அதற்காக மீண்டும் நன்றி சொல்கிறேன்.
அவர்கள் தெரிவித்த கருத்து எனக்கு மன நிறைவைக் கொடுக்கிறது. இனி நாம்
மாற்றத்துக்காக எதிர்ப்பார்த்துக் காத்திருப்போம்.
|
|